திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 41 முதல் 42 வரை

"கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது" (திபா 42:1). விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

இரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 41 முதல் 42 வரை

திருப்பாடல் 41 தொகு

நோயுற்றவரின் மன்றாட்டு தொகு

(பாடகர் தலைவர்க்கு;
தாவீதின் புகழ்ப்பா)


1 எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்;
துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார்.


2 ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்;
நெடுங்காலம் வாழவைப்பார்;
நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்;
எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார்.


3 படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில்
ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்;
நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்.


4 'ஆண்டவரே, எனக்கு இரங்கும்;
என்னைக் குணப்படுத்தும்;
உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்' என்று மன்றாடினேன்.


5 என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி,
'அவன் எப்போது சாவான்?
அவன் பெயர் எப்போது ஒழியும்' என்கின்றனர்.


6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால்,
நயவஞ்சகமாகப் பேசுகின்றான்;
என்னைப்பற்றிய தவறான செய்திகளை சேகரித்துக்கொண்டு,
வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான்.


7 என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி
எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர்.
எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்.


8 'தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது;
படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்' என்று சொல்கின்றனர்.


9 என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன்,
என் உணவை உண்டவன்,
எனக்கு இரண்டகமாகத் தன் குதிகாலைத் தூக்குகின்றான். [1]


10 ஆண்டவரே! என் மீது இரங்கி,
நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும்.


11 என் எதிரி என்னை வென்று ஆர்ப்பரிக்கப் போவதில்லை;
இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன்.


12 நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்;
நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்;
உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.


13 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவராக!
ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவராக!
ஆமென்! ஆமென்! [2]


குறிப்புகள்

[1] 41:9 = மத் 26:23; மாற் 14:18; லூக் 22:21; யோவா 13:18.
[2] 41:13 = திபா 106:48.

திருப்பாடல்கள்: இரண்டாம் பகுதி தொகு


திருப்பாடல்கள் 42 முதல் 72 வரை


திருப்பாடல் 42 தொகு

நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு தொகு

(பாடகர் தலைவர்க்கு;
கோராகியரின் அறப்பாடல்)


1 கலைமான் நீரோடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல்
கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது.


2 என் நெஞ்சம் கடவுள்மீது,
உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது;
எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப்போகின்றேன்?


3 இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று;
'உன் கடவுள் எங்கே?' என்று என்னிடம் தீயோர் கேட்கின்றனர். [*]


4 மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து
பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே!
ஆர்ப்பரிப்பும் நன்றிப்பாடல்களும் முழங்க
விழாக்கூட்டத்தில் நடந்தேனே!
இவற்றையெல்லாம் நான் நினைக்கும்போது,
என் உள்ளம் வெகுவாய் வெதும்புகின்றது.


5 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?
நீ கலக்கமுறுவது ஏன்? கடவுளையே நம்பியிரு;
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு
இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.


6 என் நெஞ்சம் மிகவும் தளர்ந்துள்ளது;
ஆகவே யோர்தான் நிலப்பகுதியிலும்,
எர்மோன், மீசார் மலைப்பகுதிகளிலும்
உம்மை நான் நினைத்துக்கொண்டேன்.


7 உம் அருவிகள் இடியென முழங்கிட
ஆழ்கடல் ஆழ்கடலை அழைக்கின்றது;
உம் சிற்றலைகளும் பேரலைகளும் என்மீது புரண்டோகின்றன.


8 நாள்தோறும் ஆண்டவர் தமது பேரன்பைப் பொழிகின்றார்;
இரவுதோறும் நான் அவரைப் பாடுவேன்;
எனக்கு வாழ்வளிக்கும் இறைவனை நோக்கி மன்றாடுவேன்.


9 என் கற்பாறையாகிய இறைவனிடம் 'ஏன் என்னை மறந்தீர்;
எதிரியால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்' என்கின்றேன்.


10 'உன் கடவுள் எங்கே?' என்று
என் பகைவர் நாள்தோறும் என்னைக் கேட்பது,
என் எலும்புகளை ஊடுருவும் வாள்போல என்னைத் தாக்குகின்றது.


11 என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?
நீ கலக்கமுறுவது ஏன்?
கடவுளையே நம்பியிரு.
என் மீட்பராம் கடவுளை இன்னும் நான் போற்றுவேன்.
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு
இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்.


குறிப்பு

[*] 42:3 'தீயோர் கேட்கின்றனர்' என்பது எபிரேய பாடத்தில் 'அவன் கேட்கிறான்' என்றுள்ளது.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 43 முதல் 44 வரை