திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 47 முதல் 48 வரை
திருப்பாடல்கள்
தொகுஇரண்டாம் பகுதி (42-72)
திருப்பாடல்கள் 47 முதல் 48 வரை
திருப்பாடல் 47
தொகுஆண்டவரே உலகின் அரசர்
தொகு(பாடகர் தலைவர்க்கு;
கோராகியரின் புகழ்ப்பா)
1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்;
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்;
உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே;
3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்;
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார்.
4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)
5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்;
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.
7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்;
அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8 கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்;
அவர் தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.
9 மக்களினங்களின் தலைவர்கள்
ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்;
ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும்
கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;
கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.
திருப்பாடல் 48
தொகுகடவுளின் திருநகர்
தொகு(கோராகியரின் புகழ்ப்பாடல்)
1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்;
நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில்
மிகுந்த புகழுக்கு உரியவர்.
2 தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை
அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியாய் இலங்குகின்றது;
மாவேந்தரின் நகரும் அதுவே. [*]
3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து,
தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.
4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்;
அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;
5 அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்;
திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.
6 அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது;
பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர்.
7 தர்சீசுக் கப்பல்களைக்
கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர்.
8 கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்;
படைகளின் ஆண்டவரது நகரில்,
ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;
கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)
9 கடவுளே! உமது கோவிலின் நடுவில்
உம் பேரன்பை நினைந்து உருகினோம்.
10 கடவுளே! உமது பெயரைப் போலவே
உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது;
உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது.
11 சீயோன் மலை மகிழ்வதாக!
யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக!
12 சீயோனை வலம் வாருங்கள்;
அதைச்சுற்றி நடைபோடுங்கள்;
அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள்.
13 அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்;
அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்;
அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு
இதை உங்களால் விவரிக்க இயலும்.
14 'இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்;
அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்.'
- குறிப்பு
[*] 48:2 = மத் 5:35.
(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 49 முதல் 50 வரை
[[பகுப்பு:இறை வ்