திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 51 முதல் 52 வரை

தாவீது அரசர் உரியாவுக்குக் கடிதம் கொடுத்தனுப்புகிறார் (2 சாமுவேல் 11). தாம் செய்த பாவத்துக்கு மனம் வருந்தி தாவீது "கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்" (திபா 51:1) என வேண்டுகிறார். விவிலிய ஓவிய நூல். இலத்தீன் அணியெழுத்து. காலம்: 15ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஷாந்தீயி, பிரான்சு.

திருப்பாடல் 51

தொகு

பாவ மன்னிப்புக்காக மன்றாடல்

தொகு

(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா.
தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்த பின்
இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது
அவர் பாடியது)
[1]



1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைத் துடைத்தருளும்.


2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி
என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி
என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;


3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது.


4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன்;
எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;
உம் தண்டனைத் தீர்ப்பில்
நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். [2]


5 இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்;
பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள்.


6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே;
மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.


7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்;
நான் தூய்மையாவேன்;
என்னைக் கழுவியருளும்;
உறைபனியிலும் வெண்மையாவேன்.


8 மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்;
நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக!


9 என் பாவங்களைப் பாராதபடி
உம் முகத்தை மறைத்துக்கொள்ளும்;
என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும்.


10 கடவுளே!
தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை,
என்னுள்ளே உருவாக்கியருளும்.


11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.


12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;
தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.


13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்;
பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.


14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே!
இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்;
அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.


15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.


16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.


17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய,
குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.


18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்;
எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக!


19 அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்
முறையான பலிகளை விரும்புவீர்;
மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்
பலியாகச் செலுத்தப்படும்.


குறிப்புகள்

[1] திபா 51: தலைப்பு: 2 சாமு 12:1-8.
[2] 51:4 = உரோ 3:4.


திருப்பாடல் 52

தொகு

இறைவனின் தீர்ப்பும் திருவருளும்

தொகு

(பாடகர் தலைவர்க்கு;
அகிமெலெக்கின் வீட்டுக்குத்
தாவீது போனாரென்று
ஏதோமியன் தோவேகு சவுலுக்கு அறிவித்தபோது
தாவீது பாடிய அறப்பாடல்)
[*]



1 வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கின்றாய்?
இறைவனின் பேரன்பு எந்நாளும் உள்ளது.


2 கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்;
உனது நா தீட்டிய கத்தி போன்றது;
வஞ்சகத்தில் தேர்ந்தோன் நீ அன்றோ!


3 நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய்;
உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். (சேலா)


4 நரம்பில்லா நாவுடையோனே!
நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே!


5 ஆகவே! கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கிவிடுவார்;
உன்னைத் தூக்கி எறிவார்;
கூடாரத்தினின்று உன்னைப் பிடுங்கி எறிவார்;
உயிர் வாழ்வோரின் உலகினின்று
உன்னை வேரோடு களைந்துவிடுவார். (சேலா)


6 நேர்மையாளர் அதன் கடுமையைக் கண்டு திகிலடைவர்;
மேலும், உன்னை எள்ளி நகையாடிக் கூறுவர்:


7 'இதோ! பாருங்கள்;
இவன் தான் கடவுளைத் தன் புகலிடமாய்க் கொள்ளாதவன்;
தன் செல்வப் பெருக்கில் நம்பிக்கை வைத்தவன்;
அழிவுச் செயலையே புகலிடமாய்க் கொண்டவன்!'


8 நானோ, கடவுளின் இல்லத்தில்
பச்சை ஒலிவமரக்கன்றுபோல் இருக்கின்றேன்;
கடவுளின் பேரன்பில் எப்போதும்
நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.


9 கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால்
உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;
உம் அன்பரின் முன்னிலையில்
உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்;
இதுவே நன்று.


குறிப்பு

[*] திபா 52: தலைப்பு = 1 சாமு 22:2-9.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 53 முதல் 54 வரை