திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 79 முதல் 80 வரை

"எகிப்தினின்று திராட்சைச்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்" - திபா 80:8.

திருப்பாடல் 79

தொகு

நாட்டின் விடுதலைக்காக மன்றாடல்

தொகு

(ஆசாபின் புகழ்ப்பா)


1 கடவுளே,
வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்;
உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்;
எருசலேமைப் பாழடையச் செய்தனர். [*]


2 உம் ஊழியரின் சடலங்களை
வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும்
உம் பற்றுமிகு அடியாரின் உடல்களைக்
காட்டு விலங்குகளுக்கு உணவாகவும்
அவர்கள் அளித்துள்ளார்கள்;


3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென
எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்;
அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.


4 எங்களை அடுத்து வாழ்வோரின்
பழிச்சொல்லுக்கு இலக்கானோம்;
எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும்
ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.


5 ஆண்டவரே!
இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்?
என்றென்றுமா?
உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ?


6 உம்மை அறியாத வேற்று நாட்டினர்மீது,
உமது பெயரைத் தொழாத அரசர்கள் மீது
உம் சினத்தைக் கொட்டியருளும்.


7 ஏனெனில், அவர்கள் யாக்கோபை விழுங்கிவிட்டார்கள்;
அவரது உறைவிடத்தைப் பாழாக்கி விட்டார்கள்.


8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்!
உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக!
நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.


9 எங்கள் மீட்பராகிய கடவுளே!
உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு
எங்களுக்கு உதவி செய்தருளும்;
உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்;
எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.


10 'அவர்களின் கடவுள் எங்கே?' என்று
அண்டை நாட்டினர் ஏன் சொல்லவேண்டும்?
உம்முடைய ஊழியரின் இரத்தத்தைச் சிந்தியதற்காக
நீர் அவர்களை, என் கண்ணெதிரே,
பழிதீர்த்தருளும்.


11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக!
கொலைத் தீர்ப்புப் பெற்றோரை
உம் புயவலிமை காப்பதாக.


12 ஆண்டவரே, எம் அண்டை நாட்டார்
உம்மைப் பழித்துரைத்த இழிச்சொல்லுக்காக,
ஏழு மடங்கு தண்டனை
அவர்கள் மடியில் விழச்செய்யும்.


13 அப்பொழுது உம் மக்களும்,
உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள்
என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்!
தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம்.


குறிப்பு

[*] 79:1 = 2 அர 25:8-10; 2 குறி 36:17-19; எரே 52:12-14.


திருப்பாடல் 80

தொகு

நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்

தொகு

(பாடகர் தலைவர்க்கு;
'சான்றுபகர் லீலிமலர்' என்ற மெட்டு;
ஆசாபின் புகழ்ப்பா)


1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்!
யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! [1]


2 எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில்
உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து
எம்மை மீட்க வாரும்!


3 கடவுளே,
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!
எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!


4 படைகளின் கடவுளாம் ஆண்டவரே!
உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக
எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?


5 கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்;
கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர்;


6 எங்கள் அண்டை நாட்டாருக்கு
எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்;
எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள்.


7 படைகளின் கடவுளே!
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;
எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.


8 எகிப்தினின்று திராட்சைச்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்;
வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.


9 அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;
அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது.


10 அதன் நிழல் மலைகளையும்
அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.


11 அதன் கொடிகள் கடல்வரையும்
அதன் தளிர்கள் பேராறுவரையும் பரவின. [2]


12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?
அவ்வழிச்செல்வோர் அனைவரும்
அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!


13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன;
வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன.


14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!
விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;
இந்த திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!


15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,
உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!


16 அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;
அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;
உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,
அவர்கள் அழிந்துபோவார்களாக!


17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை
உமது கை காப்பதாக!
உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த
மானிட மைந்தரைக் காப்பதாக!


18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்;
எமக்கு வாழ்வு அளித்தருளும்;
நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.


19 படைகளின் கடவுளான ஆண்டவரே!
எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்!
நாங்கள் விடுதலை பெறுமாறு
உமது முக ஒளியைக் காட்டியருளும்!


குறிப்புகள்

[1] 80:1 = விப 25:22.
[2] 80:11 "கடல்" என்பது மத்திய தரைக் கடலையும்,
"பேராறு" என்பது யூப்பிரத்தீசு ஆற்றையும் குறிக்கும்.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 81 முதல் 82 வரை