திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)/திருப்பாடல்கள் 7 முதல் 8 வரை

தாவீது திருப்பாடல்களை எழுதுகிறார். ஓவியர்: ஜொவான்னி ஃபிரான்செஸ்கோ பர்பியேரி (1591-1666).

திருப்பாடல் 7

தொகு

நீதி வழங்குமாறு வேண்டல்

தொகு

(தாவீதின் புலம்பல்; பென்யமினியனான கூசின் சொற்களைக் கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது)


1 என் கடவுளாகிய ஆண்டவரே,
உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;
என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும்
என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.


2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல
என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;
விடுவிப்போர் எவரும் இரார்.


3 என் கடவுளாகிய ஆண்டவரே,
நான் இவற்றைச் செய்திருந்தால்
- என் கை தவறிழைத்திருந்தால்,


4 என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால்,
என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால் -


5 எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;
என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்;
என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா)


6 ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்;
என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்;
எனக்காக விழித்தெழும்;
ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே.


7 எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்;
அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும்.


8 ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்;
ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும்.


9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்;
நல்லாரை நிலைநிறுத்தும்;
நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்;
நீதி அருளும் கடவுள். [*]


10 கடவுளே என் கேடயம்;
நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார்.


11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;
நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன்.


12 பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,
அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;
வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.


13 கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;
அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;


14 ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;
அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,
பொய்ம்மையைப் பெற்றெடுக்கின்றனர்.


15 அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்;
அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்;


16 அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும்.
அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.


17 ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்;
உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப்பாடுவேன்.


குறிப்பு

[*] 7:9 = திவெ 2:23.


திருப்பாடல் 8

தொகு

இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்

தொகு

(பாடகர் தலைவர்க்கு; 'காத்து' நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா)


1 ஆண்டவரே! எங்கள் தலைவரே!
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!
உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது.


2 பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும்
வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்;
எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர். [1]


3 உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும்
அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும்
விண்மீன்களையும் நான் நோக்கும்போது,


4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? [2]
மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு
அவர்கள் எம்மாத்திரம்?


5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய [3] உமக்குச்
சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும்
அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.


6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;
எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். [4]


7 ஆடுமாடுகள்,
எல்லா வகையான காட்டு விலங்குகள்,


8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள்,
ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும்
அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்.


9 ஆண்டவரே, எங்கள் தலைவரே,
உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!


குறிப்புகள்

[1] 8:2 = மத் 21:16.
[2] 8:4 = யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8.
[3] 8:5 இங்கு வரும் "கடவுளுக்கு" என்னும் சொல்லை "வானதூதர்க்கு" என்றும் மொழி பெயர்க்கலாம்.
[4] 8:6 = 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8.


(தொடர்ச்சி): திருப்பாடல்கள்:திருப்பாடல்கள் 9 முதல் 10 வரை