திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

லோத்து தம் குடும்பத்தோடு சோதோமை விட்டு வெளியேறுகிறார் (தொநூ 19). ஓவியர்: பீட்டர் பவுல் ரூபன்சு (1577-1640). காப்பிடம்: செருமனி.

அதிகாரம் 19

தொகு

சோதோமின் தீச்செயல்

தொகு


1 மாலை வேளையில் ஆண்டவரின் தூதர் இருவர்
சோதோமுக்கு வந்தனர்.
அப்பொழுது நகரின் நுழை வாயிலில் லோத்து உட்கார்ந்திருந்தார்.
அவர் அவர்களைக் கண்டவுடன் எழுந்து
சந்திக்கச் சென்று தரைமட்டும் தாழ்ந்து அவர்களை வணங்கினார்.
2 பிறகு, "என் தலைவர்களே,
அருள்கூர்ந்து உங்கள் அடியானின் இல்லத்திற்கு வாருங்கள்.
உங்கள் கால்களைக் கழுவி, இரவு தங்குங்கள்.
காலையில் எழுந்து உங்கள் வழிப்பயணத்தைத் தொடருங்கள்" என்று சொன்னார்.
அவர்களோ, "வேண்டாம், பொதுவிடத்தில் நாங்கள் இரவு தங்குவோம்"
என்று மறுமொழி சொன்னார்கள்.
3 அவர் அவர்களை மிகவும் வற்புறுத்தவே,
அவர்களும் உடன் சென்று அவரது இல்லத்தினுள் நுழைந்தார்கள்.
அவர் புளிப்பற்ற அப்பம் சுட்டு அவர்களுக்கு விருந்தளிக்க,
அவர்களும் உண்டார்கள்.
4 பின் அவர்கள் உறங்கச் செல்லுமுன்,
சோதோம் நகரின் மக்களுள் இளைஞர் முதல் கிழவர் ஈறாக
எல்லா ஆண்களும் அவ்வீட்டைச் சூழ்ந்து கொண்டனர்.
5 பிறகு லோத்தைக் கூப்பிட்டு,
"இன்று இரவு உன்னிடம் வந்த ஆடவர் எங்கே?
நாங்கள் அவர்களோடு உறவு கொள்ளுமாறு
அவர்களை எங்களிடம் கொண்டு வா" என்றனர்.
6 லோத்து வீட்டிற்கு வெளியே வந்து,
தனக்குப் பின் கதவை மூடிக்கொண்டு,
7 "என் சகோதரரே, தீச்செயல் செய்யாதிருங்கள்.
8 "ஆண் தொடர்பு அறியாத புதல்வியர் இருவர் எனக்கு உள்ளனர்.
உங்களிடம் நான் அவர்களை அழைத்து வருகிறேன்.
உங்கள் விருப்பப்படி அவர்களுடன் நடந்து கொள்ளலாம்.
ஆனால் எனது இல்லத்தின் பாதுகாப்பைப் பெற்றிருக்கும்
இந்த ஆடவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாம்" என்றார். [1]
9 அதற்கு அவர்களோ, "அப்பாலே போ" என்றனர்.
மேலும் அவர்கள் "அயல்நாட்டிலிருந்து வந்த இவனா நமக்கு நியாயம் கூறுவது?"
என்று சொல்லிக்கொண்டு,
"அவர்களுக்குச் செய்யவிருப்பதைவிட
இப்பொழுது உனக்கு அதிகத் தீங்கு செய்வோம்" என்றனர்.
பிறகு லோத்தைக் கடுமையாய்த் தாக்கிக் கதவை உடைக்க நெருங்கிச் சென்றனர்.
10 அவ்வேளையில் அந்த ஆடவர் தம் கைகளை நீட்டி
லோத்தைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்துக் கதவைப் பூட்டிக் கொண்டனர்.
11 கதவருகே நின்று கொண்டிருந்த சிறியோர்,
பெரியோர்களாகிய அம்மனிதர்களை அவர்கள் குருடராக்கினர்.
அவர்களால் கதவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. [2]

சோதோமை விட்டு லோத்து வெளியேறல்

தொகு


12 மேலும், அந்த மனிதர்கள் லோத்தை நோக்கி:
"இங்கே உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் உளரோ?
மருமகனோ, புதல்வரோ, புதல்வியரோ
உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் இந்நகரில் இருந்தால்,
அவர்களை இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக் கொண்டு போய்விடு.
13 இந்த இடத்தின் மக்களுக்கு எதிராகப்
பெருங் கண்டனக்குரல் ஆண்டவர் திருமுன் எழுந்துள்ளதால்,
நாங்கள் இந்த இடத்தை அழிக்கும்படி எங்களை அவர் அனுப்பியுள்ளார்" என்றனர்.
14 உடனே லோத்து வெளியே போய்த்
தம் புதல்வியருக்கு மண ஒப்பந்தமாகியிருந்த மருமக்களோடு பேசி,
"நீங்கள் எழுந்து இவ்விடத்தை விட்டுப் புறப்படுங்கள்.
ஏனெனில் ஆண்டவர் இந்நகரை அழிக்கப் போகிறார்" என்றார்.
அவருடைய மருமக்களுக்கு இது நகைப்புக்குரியதாய்த் தோன்றியது.
15 பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி,
"நீ எழுந்திரு!
உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ!
இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்"
என்று வற்புறுத்திக் கூறினார்கள்.
16 அவர் காலந்தாழ்த்தினார்.
ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால்,
அந்த மனிதர்கள் அவரது கையையும்,
அவர் மனைவியின் கையையும்,
அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய்
நகருக்கு வெளியே விட்டார்கள். [3]
17 அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன்
அந்த மனிதர்கள் அவரை நோக்கி,
"நீ உயிர்தப்புமாறு ஓடிப்போ;
திரும்பிப் பார்க்காதே;
சமவெளி எங்கேயும் தங்காதே;
மலையை நோக்கித் தப்பி ஓடு;
இல்லையேல் அழிந்து போவாய்" என்றார்கள்.


18 லோத்து அவர்களை நோக்கி:
"என் தலைவர்களே, வேண்டாம்.
19 உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது.
என் உயிரைக் காக்கும் பொருட்டு
நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது.
ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது.
ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப்போவேன்.
20 எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக,
இதோ ஒரு நகர் அருகிலுள்ளது.
அது சிறியதாய் இருக்கிறது.
அதற்குள் ஓடிப்போக விடுங்கள்.
அது சிறிய நகர் தானே?
நானும் உயிர் பிழைப்பேன்" என்றார்.
21 அதற்கு தூதர் ஒருவர்,
"நல்லது, அப்படியே ஆகட்டும்.
இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன்.
நீ கேட்டபடி அந்நகரை நான் அழிக்க மாட்டேன்.
22 நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள்.
நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்றார்.
இதனால் அந்த நகருக்குச் "சோவார்" [4] என்னும் பெயர் வழங்கிற்று.

சோதோம் கொமோராவின் அழிவு

தொகு


23 லோத்து சோவாரை அடைந்த போது
கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான்.
24 அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து
சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.
25 அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார்.
நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். [5]
26 அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள்.
உடனே உப்புத் தூணாக மாறினாள். [6]


27 ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து,
தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார்.
28 அவர் சோதோமையும் கொமோராவையும்
சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது
சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார்.


29 கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது,
ஆபிரகாமை நினைவு கூர்ந்தார்.
எனவே லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது
கடவுள் அவரைக் காப்பாற்றினார்.

மோவாபியர், அம்மோனியரின் தோற்றம்

தொகு


30 லோத்து சோவாரைவிட்டு வெளியேறி
மலைக்குச் சென்று குடியேறினார்.
சோவாரில் குடியிருக்க அஞ்சியதால்
தம் இரு புதல்வியருடன் ஒரு குகையில் வாழ்ந்து வந்தார்.
31 அப்பொழுது மூத்தவள் இளையவளை நோக்கி,
"நம் தந்தை வயது முதிர்ந்தவர்.
உலகெங்கும் உள்ள வழக்கிற்கேற்ப
நம்மை மணந்து நம்முடன் உறவு கொள்ளுமாறு
இப்பகுதியில் வேறு ஆடவர் எவரும் இல்லை.
32 "வா; நம் தந்தையைத் திராட்சை மது குடிக்க வைத்து,
அவருடன் உறவுகொள்வோம்.
இவ்வாறு நம் தந்தையின் மூலம் வழிமரபைக் காத்துக் கொள்வோம்" என்றாள்.
33 அவ்வாறே அன்றிரவு தங்கள் தந்தையைத் திராட்சை மது குடிக்கவைத்தார்கள்.
பிறகு மூத்தவள் உள்ளே நுழைந்து
தன் தந்தையுடன் படுத்துக் கொண்டதோ,
அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
34 மறுநாள் மூத்தவள் இளையவளை நோக்கி,
"நேற்றிரவு என் தந்தையோடு நான் படுத்துக்கொண்டேன்.
இன்றிரவும் அவ்வாறே அவரைத் திராட்சை மது குடிக்கவைப்போம்.
நீ சென்று அவருடன் படுத்துக்கொள்.
இவ்வண்ணமாக நம் தந்தையின் மூலம்
வழிமரபைக் காத்துக்கொள்வோம்" என்றாள்.
35 அவ்வாறே அன்றிரவும் தங்கள் தந்தையைத்
திராட்சை மது குடிக்க வைத்தார்கள்.
இம்முறையும் அவள் படுத்துக்கொண்டதோ
அவள் எழுந்து சென்றதோ அவருக்குத் தெரியாது.
36 இவ்வாறு லோத்தின் புதல்வியர் இருவரும்
தம் தந்தையின் மூலம் கருத்தரித்தனர்.
37 பின் மூத்தவள் ஒரு மகனைப் பெற்று
அவனுக்கு "மோவாபு" [7] என்று பெயரிட்டாள்.
அவன் இன்றுவரை இருக்கிற மோவாபியருக்குத் தந்தை.
38 இளையவள் ஒரு மகனைப் பெற்று,
அவனுக்குப் "பென் அம்மி" [8] என்னும் பெயரைச் சூட்டினாள்.
அவன் இன்றுவரை இருக்கிற அம்மோனியரின் தந்தை.


குறிப்புகள்

[1] 19:5-8 = நீதி 19:22-24.
[2] 19:11 = 2 அர 6:18.
[3] 19:16 = 2 பேது 2:7.
[4] 19:22 எபிரேயத்தில் சிறியது என்பது பொருள்.
[5] 19:24-25 = மத் 10:15; 11:23-24; லூக் 10:12; 17:29; 2 பேது 2:6; யூதா 7.
[6] 19:26 = லூக் 17:32.
[7] 19:37 எபிரேயத்தில் தந்தையின் மூலமாக என்பது பொருள்.
[8] 19:38 எபிரேயத்தில் என் இனத்தின் மகன் என்பது பொருள்.


அதிகாரம் 20

தொகு

ஆபிரகாமும் அபிமெலக்கும்

தொகு


1 ஆபிரகாம் அங்கிருந்து புறப்பட்டு
நெகேபுக்குச் சென்று காதேசுக்கும் சூருக்கும்
இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து, பின்னர் கெராரில் தங்கினார்.
2 அப்போது ஆபிரகாம் தம் மனைவி சாராவைத்
தம் சகோதரி என்று சொல்லிக் கொண்டமையால்,
கெரார் மன்னனாகிய அபிமெலக்கு ஆளனுப்பி அவரை அழைத்துவரச் செய்தான். [*]
3 இரவில் ஆண்டவர் அபிமெலக்குக்குக் கனவில் தோன்றி,
"இதோ, நீ அழைத்துவரச் செய்த பெண்ணின் பொருட்டு
நீ சாகப் போகிறாய்.
ஏனெனில் அவள் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்" என்று அவனிடம் கூறினார்.
4 அதுவரை அவரைத் தொடாதிருந்த
அபிமெலக்கு அது கேட்டு மறுமொழியாக,
"என் தலைவரே,
உண்மையாகவே நேர்மைமிக்க இனத்தவரை நீர் அழிப்பீரோ?
5 அவன் அவளைத் தன் சகோதரி என்றும்
அவள் அவனைத் தன் சகோதரன் என்றும் அறிமுகப்படுத்தவில்லையா?
நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும் இதைச் செய்தேன்" என்றான்.
6 கடவுள், கனவில் தோன்றி, அவனை நோக்கி,
"நீ நேரிய இதயத்தோடு அப்படிச் செய்தாயென்று அறிவேன்.
அதனால்தான் எனக்கு எதிராகப் பாவம் செய்யாத உன்னைக் காப்பாற்றி,
அவளைத் தொடவிடவில்லை.
7 உடனே அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு.
ஏனெனில் அவன் ஓர் இறைவாக்கினன்.
அவன் உனக்காக மன்றாடினால் நீ பிழைப்பாய்.
அவளை நீ அனுப்பாவிடில் நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும்
செத்து மடிவீர்கள் என்பது உறுதி" என்றார்.


8 அபிமெலக்கு அதிகாலையில் எழுந்து
தன் வேலைக்காரர் அனைவரையும் அழைத்து,
அந்த வார்த்தைகளை எல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்.
அதைக் கேட்டு அவர்கள் மிகவும் அச்சமுற்றனர்.
9 பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து,
"நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர்?
எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி
நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன்?
செய்திருக்கக் கூடாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீரே!
10 நீர் எக்காரணத்தைக் கொண்டு இக்காரியம் செய்தீர்?" என்று அவரிடம் வினவினான்.
11 ஆபிரகாம் மறுமொழியாக,
"இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும்
என் மனைவியை அடையும்பொருட்டு
என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன்.
12 மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே;
இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள்.
ஆனால் என் தாயின் மகள் அல்ல;
அவளை நான் மணந்து கொண்டேன்.
13 மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக்
கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது,
"நீ எனக்குப் பேருதவி செய்ய வேண்டும்;
நாம் செல்லுமிடமெல்லாம்,
நான் உன் சகோதரன் என்று சொல்" என்று
அவளிடம் நான் கூறியிருந்தேன்" என்றார்.
14 அப்பொழுது அபிமெலக்கு ஆடு மாடுகளையும்,
வேலைக்காரர், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்ததுமன்றி,
அவர் மனைவி சாராவையும் அவரிடம் ஒப்படைத்தான்.
15 மேலும் அபிமெலக்கு,
"இதோ உமக்கு முன்பாக எனது நாடு இருக்கிறது.
உமக்கு எங்கு விருப்பமோ அங்கு நீர் வாழலாம்" என்றான்.
16 மேலும் சாராவை நோக்கி,
"இதோ உன் சகோதரருக்கு ஆயிரம் வெள்ளிக்காக கொடுத்துள்ளேன்.
உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து
அது மறைக்கும் திரையாக அமையட்டும்.
அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது" என்றான்.
17 ஆபிரகாம் கடவுளிடம் மன்றாடவே,
கடவுளும் அபிமெலக்கையும் அவன் மனைவியையும்
அடிமைப் பெண்களையும் குணமாக்கி
அவர்களுக்குப் பிள்ளைப்பேறு அளித்தார்.
18 ஏனென்றால், ஆபிரகாமின் மனைவி சாராவை முன்னிட்டு
ஆண்டவர் அபிமெலக்கு வீட்டிலிருந்த பெண்களை மலடிகளாக்கியிருந்தார்.


குறிப்பு

[*] 20:2 = தொநூ 12:13; 26:7.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை