திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை
தொடக்க நூல்கள்
தொகுஅதிகாரங்கள் 25 முதல் 26 வரை
அதிகாரம் 25
தொகுஆபிரகாமின் ஏனைய வழிமரபினர்
தொகு1 (குறி 1:32-33)
1 ஆபிரகாம் கெற்றூரா என்ற பெயருடைய
வேறொரு பெண்ணை மணந்து கொண்டார்.
2 அவர் அவருக்குச் சிம்ரான், யோக்சான்,
மெதான், மிதியான், இசுபாக்கு,
சூவாகு என்பவர்களைப் பெற்றெடுத்தார்.
3 யோக்சான், சோபாவையும் தெதானையும் பெற்றான்.
தெதானின் புதல்வர் ஆசூரிம், லெத்தூசிம், இலயுமிம் ஆவர்.
4 மிதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், அனோக்கு, அபிதா, எல்தாயா ஆவர்.
இவர்கள் அனைவரும் கெற்றூராவின் புதல்வர்.
5 ஆபிரகாம் தம் மகன் ஈசாக்கிற்குத்
தமக்குரிய செல்வங்கள் அனைத்தையும் கொடுத்தார்.
6 ஆனால் அவருடைய மறுமனைவியின் பிள்ளைகளுக்கு
அன்பளிப்புக்களைக் கொடுத்துத்
தாம் உயிரோடிருக்கும்போதே
தம் மகன் ஈசாக்கிடமிருந்து பிரித்துக்
கீழ்த்திசை நாட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ஆபிரகாமின் இறப்பு
தொகு
7 ஆபிரகாம் நூற்றெழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தார்.
8 அவர் முதியவராகி நிறைந்த வாழ்நாள்களைக் கடந்து,
நல்ல நரைவயதில் இறந்து,
தம் மூதாதையரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
9 அவர் புதல்வர்களாகிய ஈசாக்கும் இஸ்மாயேலும்
மம்ரே நகருக்குக் கிழக்கே
இத்தியனா சோவாரின் மகன் எப்ரோனுடைய நிலத்தில் இருந்த
மகபேலா குகையில் அவரை அடக்கம் செய்தனர்.
10 அவர் அந்த நிலத்தைத்தான் இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்.
அதில் அவர் தம் மனைவி சாராவோடு அடக்கம் செய்யப்பட்டார். [1]
11 ஆபிரகாம் இறந்தபின் அவர் மகன் ஈசாக்கிற்குக் கடவுள் ஆசி வழங்கினார்.
பெயேர்லகாய்ரோயி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்.
இஸ்மயேலின் வழிமரபினர்
தொகு(1 குறி 1:28-31)
12 சாராவின் பணிப்பெண்ணும்
எகிப்தியளுமான ஆகார்
ஆபிரகாமுக்குப் பெற்ற மகனான இஸ்மயேலின் வழிமரபினர்
பின்வருபவர் ஆவர்:
13 பிறந்த வரிசையின்படி இஸ்மயேலின் புதல்வரின் பெயர்கள்:
இஸ்மயேலின் மூத்த மகன் நெபயோத்து, கேதார், அத்பியேல், மிப்சாம்,
14 மிசுமா, தூமா, மாசா,
15 அதாது, தேமா, எற்றூர், நாப்பிசு, கேதமா.
16 இவர்களே இஸ்மயேலின் புதல்வர்கள்.
பன்னிரு குலங்களின் தலைவர்களான இவர்கள்
தம் குடியிருப்புகளுக்கும் பாளையங்களுக்கும் தம் பெயர்களையே இட்டனர்.
17 இஸ்மயேல் மொத்தம் நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்;
அவர் இறந்து தம் இனத்தாரோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
18 அவர்கள் அவிலாவுக்கும் சூருக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இது எகிப்திற்குக் கிழக்கே அசீரியா வரை உள்ளது.
இவர்கள் தங்கள் சகோதரர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து வாழ்ந்தனர்.
ஏசா, யாக்கோபின் பிறப்பு
தொகு
19 ஆபிரகாமின் மகன் ஈசாக்கின் வழிமரபினர் பின்வருபவர் ஆவர்.
ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார்.
20 ஈசாக்கிற்கு நாற்பது வயதான போது
பதான் அராமைச் சார்ந்த அரமேயன் பெத்துவேலின் மகளும்
அரமேயன் லாபானின் சகோதரியுமான ரெபேக்காவை மணந்துகொண்டார்.
21 ஈசாக்கு மலடியாயிருந்த தம் மனைவிக்காக ஆண்டவரிடம் மன்றாடினார்.
ஆண்டவரும் அவர் மன்றாட்டைக் கேட்டருளினார்.
அவர் மனைவி ரெபேக்கா கருத்தரித்தார்.
22 ஆனால், அவருடைய கருப்பையில் இருந்த புதல்வர்கள்
தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டனர்.
அதை உணர்ந்த அவர் 'எனக்கு இப்படி நடப்பது ஏன்?' என்று
ஆண்டவரிடம் கேட்கச் சென்றார்.
23 ஆண்டவர் அவரை நோக்கி,
"உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன;
உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர்.
ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும்.
மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்" என்றார். [2]
24 அவருக்குப் பேறுகாலம் நிறைவுற்றபோது,
இரட்டைப் பிள்ளைகள் கருப்பையில் இருந்தன.
25 முதலாவது வெளிவந்த பிள்ளை செந்நிறமாகவும்
அவன் உடல் முழுவதும் முடிமயமாகவும் இருந்தது.
எனவே அவனுக்கு 'ஏசா' என்று பெயர் இட்டனர்.
26 இரண்டாவது பிள்ளை
தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக் கொண்டு வெளிவந்தான்.
எனவே அவனுக்கு 'யாக்கோபு' என்று பெயரிடப்பட்டது.
அவர்கள் பிறந்தபோது ஈசாக்கிற்கு வயது அறுபது.
ஏசா தலைமகனுரிமையை விற்றுவிடல்
தொகு
27 இருவரும் வளர்ந்து இளைஞரானபோது,
அவர்களுள் ஏசா வேட்டையில் வல்லவனாய்,
திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்துவந்தான்.
ஆனால் யாக்கோபு பண்புடையவனாய்,
கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.
28 ஏசா வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு
ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார்.
ரெபேக்காவோ யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.
29 ஒரு நாள் யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக்கொண்டிருந்த பொழுது,
ஏசா களைத்துப்போய் திறந்தவெளியிலிருந்து வந்தான்.
30 அவன் யாக்கோபிடம்,
"நான் களைப்பாய் இருக்கிறேன்.
இந்த செந்நிறச் சுவையான கூழில் எனக்குக் கொஞ்சம் கொடு," என்றான்.
அவனுக்கு 'ஏதோம்' என்னும் பெயர் வழங்கியதற்கு இதுவே காரணம்.
31 யாக்கோபு அவனை நோக்கி,
"உனது தலைமகனுரிமையை இப்போதே எனக்கு விற்றுவிடு" என்றான்.
32 அவன், "நானோ சாகப்போகிறேன்.
தலைமகனுரிமையால் எனக்கு என்ன பயன்?" என்றான்.
33 யாக்கோபு, "இப்போதே எனக்கு ஆணையிட்டுக் கொடு" என்றான்.
எனவே ஏசா ஆணையிட்டுத் தலைமகனுரிமையை யாக்கோபுக்கு விற்றுவிட்டான். [3]
34 யாக்கோபு, ஏசாவுக்குக் கொஞ்சம் அப்பமும்,
சுவையான பயிற்றங்கூழும் கொடுக்க,
அவனும் தன் வழியே சென்றான்.
- குறிப்புகள்
[1] 25:10 = தொநூ 23:3-16.
[2] 25:23 = உரோ 9:12.
[3] 25:33 = எபி 12:16.
அதிகாரம் 26
தொகுகெராரில் ஈசாக்கின் வாழ்க்கை
தொகு
1 முன்பு ஆபிரகாமின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைத் தவிர,
மேலும் ஒரு பஞ்சம் நாட்டில் உண்டாயிற்று.
ஈசாக்கு பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கைக் காணக் கெராருக்குச் சென்றார்.
2 அப்போது ஆண்டவர் அவருக்குத் தோன்றி,
"எகிப்து நாட்டிற்கு நீ போகாமல்,
நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு.
3 அந்நாட்டில் நீ அன்னியனாய் வாழ்வாய்.
நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும்
உன் வழிமரபினர்க்கும் தருவேன்.
உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.
4 உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன்.
உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன்.
உலகின் அனைத்து இனத்தாரும்
உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.
5 ஏனெனில், ஆபிரகாம் என் குரலுக்குச் செவிசாய்த்து
என் நியமங்களையும் கட்டளைகளையும்
விதிமுறைகளையும் சட்டங்களையும் கடைப்பிடித்தான்" என்றார்.
6 எனவே ஈசாக்கு கெராரிலேயே தங்கிவிட்டார்.
7 அங்குள்ளவர்கள் அவர் மனைவியைப்பற்றி அவரிடம் கேட்டபொழுது,
'அவள் என் சகோதரி' என்றார்.
ஏனெனில் ரெபேக்கா பார்வைக்கு அழகுள்ளவராய் இருந்ததால்,
அவ்விடத்து மனிதர் தம்மைக் கொல்வார்களென்று நினைத்து,
'அவள் என் மனைவி' என்று சொல்ல அஞ்சினார். [1]
8 பல நாள்கள் அவர் அங்கு வாழ்ந்த பின்
ஒருநாள் பெலிஸ்தியரின் மன்னன் அபிமெலக்கு
சாளரம் வழியாகப் பார்க்க நேர்ந்தபோது,
ஈசாக்கு தம் மனைவி ரெபேக்காவைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்.
9 உடனே அபிமெலக்கு
"அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே!
பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் சொன்னாய்?" என்று கேட்டான்.
அதற்கு அவர், "ஒரு வேளை அவளை முன்னிட்டு
நான் சாக நேரிடலாம் என்று நினைத்ததே காரணம்" என்று
அவனுக்குப் பதில் அளித்தார்.
10 அபிமெலக்கு, "நீ ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?
குடி மக்களுள் எவனாகிலும் உன் மனைவியோடு படுத்திருந்தால்,
பழி எங்கள் மீது அல்லவா விழச்செய்திருப்பாய்?" என்றான்.
11 மேலும், "இந்த மனிதனையோ அவன் மனைவியையோ
தொடுபவன் கொல்லப்படுவது உறுதி" என்று
அபிமெலக்கு தன் மக்கள் அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்தான்.
12 ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு
அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார்.
ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.
13 அவர் செல்வமுடையவர் ஆனார்.
செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்.
14 மேலும் அவருக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருந்தன.
வேலைக்காரர் பலர் இருந்தனர்.
எனவே பெலிஸ்தியர் அவர்மீது பொறாமை கொண்டனர்.
15 அவர் தந்தை ஆபிரகாமின் காலத்தில்
அவருடைய வேலையாள்கள் தோண்டிய கிணறுகளையெல்லாம்
பெலிஸ்தியர் மண்ணால் நிரப்பித் தூர்த்து விட்டனர்.
16 மேலும் அபிமெலக்கு ஈசாக்கை நோக்கி,
"நீ எங்களைவிட வலிமையுள்ளவனாய் இருப்பதால்,
எங்களை விட்டு அகன்று போ" என்றான்.
17 எனவே, ஈசாக்கு அங்கிருந்து வெளியேறிக்
கெரார் பள்ளத்தாக்கில் குடியேறி வாழலானார்.
18 அங்கே, தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு,
அவர் இறந்த பின் பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை
அவர் தோண்டித் தூரெடுத்தார்;
தம் தந்தை இட்டிருந்த அதே பெயர்களால் அவற்றை அழைத்தார்.
19 பின் அவருடைய வேலைக்காரர் நீர்ப்படுகையில் தோண்ட,
அங்கே பொங்கியெழும் நீரூற்றைக் கண்டனர்.
20 ஆனால், கெராரில் இருந்த மேய்ப்பர்கள்
"இந்தத் தண்ணீர் எங்களதே" என்று வாதாடினர்.
இவ்வாறு அவர்கள் அவரோடு தகராறு செய்ததால்
அந்தக் கிணற்றுக்கு அவர் 'ஏசேக்கு' என்று பெயரிட்டார்.
21 மீண்டும் அவர்கள் வேறொரு கிணறு தோண்டினர்.
முன்புபோல் அதைப் பற்றியும் வாக்குவாதம் ஏற்பட்டது.
எனவே அதற்குச் 'சித்னா' என்று அவர் பெயரிட்டார்.
22 அவர் அவ்விடத்தை விட்டகன்று,
வேறொரு கிணற்றைத் தோண்டினார்.
இம்முறை வாக்குவாதம் ஒன்றும் ஏற்படவில்லை.
அதன் பொருட்டு, "ஆண்டவர் நம் எல்லையை விரிவுபடுத்தியுள்ளார்.
நாட்டில் நாம் வளர்ச்சியுறுவோம்" என்று சொல்லி,
அதற்கு 'இரகபோத்து' என்று பெயரிட்டார்.
23 பின் அவர் அவ்விடத்திலிருந்து பெயேர்செபாவுக்குப் போனார்.
24 அன்றிரவு ஆண்டவர் அவருக்குத் தோன்றி,
"உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே, அஞ்சாதே.
ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன்.
உனக்கு ஆசி வழங்கி,
என் ஊழியன் ஆபிரகாமின் பொருட்டு
உனது வழிமரபைப் பெருகச் செய்வேன்" என்றார்.
25 எனவே ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் எழுப்பி,
ஆண்டவரது திருப்பெயரைப் போற்றினார்;
அங்கே கூடாரம் அடித்துத் தங்கினார்.
ஈசாக்கின் வேலைக்காரர் அங்கே ஒரு கிணறு வெட்டினர்.
ஈசாக்கு-அபிமெலக்கு உடன்படிக்கை
தொகு
26 அப்பொழுது கெராரிலிருந்து அபிமெலக்கு
தன் உற்ற நண்பன் அகுசாத்துடனும்
படைத்தலைவன் பிக்கோலுடனும் அவரிடம் வந்தான். [2]
27 அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி,
"நீங்கள் என்னை வெறுத்து உங்களிடமிருந்து விரட்டிவிட்டு,
இப்பொழுது என்னிடம் வருவது ஏன்?" என்றார்.
28 அவர்கள் மறுமொழியாக,
"ஆண்டவர் உம்மோடு இருக்கிறாரென்று தெளிவாகக் கண்டோம்.
ஆதலால் நமக்குள், எங்களுக்கும் உமக்குமிடையே,
ஓர் ஒப்பந்தம் செய்துகொள்வோம்.
நாங்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்வோம்.
29 நாங்கள் உமக்கு எவ்வித இடையூறும் செய்யவில்லை.
உம்மை நல்ல முறையில் நடத்தி, சமாதானமாய் அனுப்பி வைத்தோம்.
அதுபோல ஆண்டவரின் ஆசி பெற்ற நீரும்
எங்களுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பீர்" என்றனர்.
30 ஈசாக்கு அவர்களுக்கு விருந்து அளித்தார்.
அவர்களும் உண்டு குடித்தனர்.
31 அதிகாலையில் அவர்கள் எழுந்து,
ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்தனர்.
பின் ஈசாக்கு அவர்களை அனுப்பி வைத்தார்.
அவர்களும் அவரிடமிருந்து சமாதனமாய்ப் பிரிந்து சென்றனர்.
32 அதே நாளில் தாங்கள் தோண்டிய கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து
'தண்ணீர் கண்டோம்' என்றனர்.
33 ஆதலால் அவர் அதற்குச் 'சிபா' என்று பெயரிட்டார்.
எனவே அந்நகருக்கு பெயேர்செபா என்னும் பெயர் இன்றுவரை வழங்கி வருகிறது.
34 ஏசா நாற்பது வயதானபோது,
இத்தியன் பெயேரியின் மகள் யூதித்தையும்
இத்தியன் ஏலோனின் மகள் பாசமத்தையும் மணந்துகொண்டான்.
35 இவர்களால் ஈசாக்கும் ரெபேக்காவும் மனக்கசப்பு அடைந்தனர்.
- குறிப்புகள்
[1] 26:7 = தொநூ 12:13; 30:2.
[2] 26:26 = தொநூ 21:22.
(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை