திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 38 முதல் 39 வரை

போத்திபாரின் மனைவி யோசேப்பைத் தம் ஆசைக்கு இணங்க அழைக்கிறார் (தொநூ 39). ஓவியர்: குயிதோ ரேனி (1575-1642). காப்பிடம்: அமெரிக்கா.

அதிகாரம் 38

தொகு

யூதாவும் தாமாரும்

தொகு


1 அக்காலத்தில் யூதா தம் சகோதரர்களை விட்டுப் பிரிந்து
ஈரா என்ற பெயருடைய அதுல்லாமியனிடம் சென்றார்.
2 அங்கே சூவா என்ற கானானியன் ஒருவனின் மகளைக் கண்டு,
அவளை மணமுடித்து, அவளோடு கூடி வாழ்ந்தார்.
3 அவள் கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்து,
அவனுக்கு ஏர் என்று பெயரிட்டாள்.
4 அவள் மீண்டும் கருவுற்று,
ஒரு மகனைப் பெற்றெடுத்து,
அவனுக்கு ஓனான் என்று பெயரிட்டான்.
5 கருவளம் மிகுதியாயிருந்ததால்
அவள் மேலும் ஒரு மகனைப் பெற்றெடுத்து
அவனுக்குச் சேலா என்று பெயரிட்டாள்.
அவனைப் பெற்றெடுத்தபோது அவள் கெசீபில் இருந்தாள்.
6 யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத்
தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.
7 யூதாவின் தலைமகன் ஏர்
ஆண்டவர் முன்னிலையில் கொடியவனாய் இருந்ததால்,
ஆண்டவர் அவனைச் சாகடித்தார்.
8 அப்போது யூதா தம் மகன் ஓனானை நோக்கி,
"நீ உன் சகோதரன் மனைவியோடு கூடி வாழ்.
சகோதரனுக்குரிய கடமையைச் செய்து,
உன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றச் செய்" என்றார்.
9 அந்த வழிமரபு தனக்குரியதாய் இராதென்று அறிந்து,
ஓனான் அவளோடு உடலுறவு கொள்கையில்,
தன் சகோதரனுக்கு வழிமரபு தோன்றாதவாறு
தன் விந்தைத் தரையில் சிந்திவந்தான்.
10 அவன் செய்தது தம் பார்வையில் தீயதாய் இருந்ததால்,
ஆண்டவர் அவனையும் சாகடித்தார்.
11 ஆதலால் யூதா தம் மருமகள் தாமாரை நோக்கி,
"என் மகன் சேலா பெரியவனாகும் வரை
உன் தந்தை வீட்டில் விதவையாய்த் தங்கியிரு" என்றார்.
ஏனெனில் அவனும் தன் சகோதரரைப் போல் சாவானோ என்று அஞ்சினர்.
தாமாரும் அவ்விதமே தம் தந்தை வீட்டிற்குச் சென்று அங்குத் தங்கியிருந்தார்.


12 பல நாள்களுக்குப்பின்,
சூவாவின் மகளான யூதாவின் மனைவி இறந்தாள்.
யூதா அவளுக்காகத் துக்கம் கழித்தபின்,
தம் மந்தைக்கு உரோமம் கத்தரிப்பவர்கள் இருந்த திம்னாவுக்குத்
தம் அதுல்லாமிய நண்பன் ஈராவுடன் சென்றார்.
13 அப்போது "உன் மாமனார்
தம் ஆடுகளுக்கு உரோமம் கத்தரிக்கத்
திம்னாவுக்குப் போகிறார்"
என்று தாமாருக்குச் செய்தி அறிவிக்கப்பட்டது.
14 சேலா பெரியவனாகியும்
தம்மை அவனுக்கு மனைவியாகக் கொடுக்கவில்லை என்று
அவர் கண்டு தமது கைம்மைக் கோலத்தைக் களைந்துவிட்டு,
முக்காடிட்டுத் தம்மை மறைத்துக்கொண்டு
திம்னாவுக்குச் செல்லும் பாதையில் இருந்த
ஏனயிம் நகர்வாயிலில் அமர்ந்துகொண்டார்.
15 யூதா அவரைக் கண்டபோது,
அவர் முகம் மூடியிருந்ததால்
அவர் ஒரு விலைமாது என்று நினைத்தார்.
16 அவர் திரும்பிப் பாதையோரம் அவரிடம் சென்று,
அவர் தம் மருமகளென்று அறியாமல்
தம்முடன் உடலுறவு கொள்ளுமாறு அழைத்தார்.
அதற்கு அவர், "என்னோடு உடலுறவு கொள்வதற்கு என்ன தருவீர்?" என்று கேட்டார்.
17 அவர், "என் மந்தையிலிருந்து உனக்கு
ஒரு வெள்ளாட்டுக் கிடாய் அனுப்புகிறேன்" என்றார்.
அதற்கு அவர், "நீர் அதை அனுப்புமட்டும் எனக்கு
ஓர் அடைமானம் தருவீரா?" என்று கேட்டார்.
18 "அடைமானமாக உனக்கு நான் என்ன தர வேண்டும்?" என்று அவர் கேட்க,
அவர் 'உம்முடைய முத்திரை மோதிரத்தையும்
இடைவாரையும் கைக்கோலையும் தரவேண்டும்' என்றார்.
அவருக்கு அவற்றைக் கொடுத்த பின்
அவருடன் உடலுறவு கொண்டார். அவரும் கருவுற்றார்.
19 பின்பு, அவர் எழுந்துபோய்,
தம் முக்காட்டை எடுத்துவிட்டு
விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டார்.


20 அவரிடம் தாம் கொடுத்திருந்த அடைமானத்தைத் திரும்பப் பெறுமாறு,
யூதா தம் அதுல்லாமிய நண்பன் மூலம்
ஒரு வெள்ளாட்டுக் கிடாயை அனுப்பினார்.
அவனோ அவரைக் காணவில்லை.
21 அங்கிருந்த ஆள்களை நோக்கி,
'ஏனயிம் அருகே வழியில் இருந்த விலைமாது எங்கே?' என்று கேட்க,
அவர்கள், 'இங்கே விலைமாது எவளுமில்லை' என்றனர்.
22 அவன் யூதாவிடம் திரும்பி வந்து,
"நான் அவளைக் காணவில்லை.
மேலும் அங்கிருந்த ஆள்கள்,
'இங்கு விலைமாது எவளுமில்லை' என்றனர்" என்று சொன்னான்.
23 யூதா, 'அவளே வைத்துக்கொள்ளட்டும்;
இல்லையேல் நம்மைப் பார்த்துப் பிறர் சிரிப்பர்.
நானும் இந்த ஆட்டுக்கிடாயை அவளுக்கு அனுப்பி வைத்தேன்.
உன்னாலும், அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை' என்றார்.


24 மூன்று மாதம் சென்றபின்னர்,
"உம் மருமகளாகிய தாமார் வேசித்தனம் பண்ணினாள்.
வேசித்தனத்தினால் கருவுற்றிருக்கிறாள்"
என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது.
அப்பொழுது அவர்,
'அவளை இழுத்துக் கொண்டு வாருங்கள்;
அவள் எரிக்கப்பட வேண்டும்' என்றார்.
25 அவ்வாறே அவரை இழுத்துக்கொண்டு வருகையில்,
அவர் தம் மாமனாருக்கு,
"இந்தப் பொருள்கள் எவனுடையவையோ
அவனாலேயே நான் கருவுற்றிருக்கிறேன்.
இந்த முத்திரை மோதிரமும் இடைவாரும்
கைக்கோலும் யாருடையவை என்று பாரும்"
என்று சொல்லியனுப்பினார்.
26 யூதா அவற்றைப் பார்த்தறிந்து,
"அவள் என்னைக் காட்டிலும் நேர்மையானவள்.
அவளை நான் என் மகன் சேலாவுக்கு மணமுடிக்காமல் போனேனே!" என்றார்.
ஆயினும், அதற்குப்பின் அவர் அவரோடு உடலுறவு கொள்ளவில்லை.


27 தாமாருக்குப் பேறுகாலம் வந்தபோது,
அவர் வயிற்றில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
28 அவர் பிள்ளை பெறுகிற வேளையில்
ஒரு பிள்ளை கையை வெளியே நீட்டியது.
மருத்துவப்பெண் அதன் மணிக்கட்டில் கருஞ்சிவப்பு நூலைக் கட்டி
'இதுவே முதலில் வந்தது' என்றாள்.
29 ஆனால், அது தன் கையைத் திரும்ப உள்ளே இழுத்துக்கொண்டபின்,
மற்ற பிள்ளை வெளிப்பட்டது.
அப்பொழுது அவள் 'நீ கருப்பையைக் கிழித்துக் கொண்டு வந்தவன் அல்லவா!' என்று சொன்னாள்.
எனவே அவனுக்குப் 'பெரேட்சு' [1] என்று பெயரிடப்பட்டது.
30 பின் கருஞ்சிவப்பு நூல் கையில் கட்டப்பெற்ற
அவன் சகோதரன் வெளிப்பட,
அவனுக்கு 'செராகு' [2] என்று பெயரிடப்பட்டது.


குறிப்புகள்

[1] 38:29 எபிரேயத்தில், 'கிழித்தல்' என்பது பொருள்.
[2] 38:30 எபிரேயத்தில், 'கருஞ்சிவப்பு' என்பது பொருள்.


அதிகாரம் 39

தொகு

போத்திபாரின் வீட்டில் யோசேப்பு

தொகு


1 யோசேப்பு எகிப்து நாட்டிற்கு கொண்டு போகப்பட்டபோது,
பார்வோனின் மெய்க்காப்பாளர் தலைவனும்
படைத்தலைவனுமான போத்திபார் என்ற எகிப்தியன் அவரை,
அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மயேலரிடமிருந்து விலைக்கு வாங்கினான்.
2 ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார்.
எனவே, அவர் சிறப்புற்றவராகத்
தம் எகிப்தியத் தலைவனின் இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.
3 ஆண்டவர் அவரோடு இருந்ததையும்
அவர் தொட்ட காரியமனைத்தையும் ஆண்டவர்
துலங்கச் செய்ததையும் அவர் தலைவன் கண்டான்.
4 எனவே அவனுடைய தயை யோசேப்புக்குக் கிடைத்தது.
அவன் அவரைத் தன் சிறப்புப் பணியாளராகவும்
வீட்டின் மேலாளராகவும் நியமித்து,
தனக்கிருந்த அனைத்தையும் அவர் பொறுப்பில் ஒப்படைத்தான்.
5 இவ்வாறு தன் வீட்டையும் தனக்கிருந்த அனைத்தையும்
அவர் பொறுப்பில் விட்டதிலிருந்து,
எகிப்தியனின் வீட்டுக்கு யோசேப்பின் பொருட்டு
ஆண்டவர் ஆசி வழங்கினார்.
வீட்டிலும் வயல்வெளியிலும் அவனுக்கிருந்த
அனைத்தின்மீதும் ஆண்டவர் ஆசி பொழிந்தார்.
6 இவ்வாறு யோசேப்பின் பொறுப்பில்
தனக்கிருந்த அனைத்தையும் ஒப்படைத்த பின்,
தான் உண்ணும் உணவைத் தவிர
வேறெதைப் பற்றியும் அவன் விசாரிக்கவில்லை.
யோசேப்பு நல்ல உடற்கட்டும் அழகிய தோற்றமும் கொண்டிருந்தார்.


7 சில நாள்கள் சென்றபின்,
யோசேப்பின் மீது கண்வைத்திருந்த
அந்தத் தலைவனின் மனைவி அவரிடம்,
"என்னோடு படு" என்றாள்.
8 அவர் அதற்கு இணங்க மறுத்து,
தம் தலைவரின் மனைவியை நோக்கி,
"என் தலைவர் எல்லாவற்றையும்
என் பொறுப்பில் ஒப்படைத்து விட்டார்.
வீட்டிலுள்ள எதைப்பற்றியும் அவர் விசாரிப்பதுகூட இல்லை.
9 இந்த வீட்டில் என்னைவிட அதிகாரம் பெற்றவர் ஒருவருமில்லை.
நீங்கள் அவருடைய மனைவியாயிருப்பதால்,
உங்களைத் தவிர வேறெதையும்
அவர் என்னிடம் ஒப்படைக்காமல் இருக்கவில்லை.
இந்த மாபெரும் தீச்செயலைச் செய்து,
கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்யலாமா?" என்றார்.
10 அவள் நாள்தோறும் வற்புறுத்தியபோதிலும்,
யோசேப்பு அவளோடு படுக்கவோ இருக்கவோ இணங்கவில்லை.
11 இவ்வாறிருக்க,
ஒருநாள் யோசேப்பு தம் வேலையை முன்னிட்டு வீட்டுக்குள் சென்றார்.
உள்ளே வீட்டைச் சார்ந்தவர் வேறு எவரும் இல்லை.
12 அவள் அவரது மேலாடையைப் பற்றி இழுத்து,
"என்னோடு படு" என்றாள்.
உடனே அவர் அவள் கையில் தம் மேலாடையை விட்டுவிட்டு
வெளியே தப்பியோடினார்.
13 அவர் தம் மேலாடையை அவள் கையில் விட்டுவிட்டு
வெளியே ஓடியதைக் கண்டு,
14 அவள் தன் வீட்டு ஆள்களைக் கூப்பிட்டு:
"என் கணவர் நம்மை அவமானப்படுத்துவதற்காகவா
இந்த எபிரேயனை வீட்டிற்குக் கொண்டுவந்தார்?
இதோ இவன் என்னோடு படுப்பதற்காக என்னிடம் வந்தான்.
உடனே நான் பெரும் கூச்சலிட்டுக் கத்தினேன்.
15 ஆனால் நான் கூச்சலிட்டதைக் கண்டு
அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு
வெளியே ஓடிப்போய் விட்டான்" என்றாள்.
16 மேலும் அவள்,
அவருடைய மேலாடையைத்
தன் கணவன் வீட்டுக்குத் திரும்பி வரும்வரை வைத்திருந்து அவனிடம்,
17 "நீர் நம்மிடம் அழைத்து வந்துள்ள
எபிரேய அடிமை என்னோடு சரசம் பண்ணும்படி என்னிடம் வந்தான்.
18 அப்போது நான் கூச்சலிட்டுக் கத்தியதும்,
அவன் தன் மேலாடையை என்னருகே போட்டுவிட்டு
வெளியே ஓடிப்போய்விட்டான்" என்று கதை கட்டினாள்.


19 'உம் அடிமை எனக்கு இப்படிச் செய்துவிட்டான்'
என்று தன் மனைவி சொல்லக் கேட்ட அவர் தலைவன்,
கடுஞ்சினம் கொண்டான்.
20 யோசேப்பின் தலைவன்,
அரசக் கைதிகள் காவலில் வைக்கப்பட்டிருந்த அதே சிறைச்சாலைக்கு
அவரை இழுத்துச் சென்று அடைத்து வைத்தான்.
21 ஆண்டவர் யோசேப்புடன் இருந்து,
அவர்மீது பேரன்பு காட்டி,
சிறை மேலாளன் பார்வையில் அவருக்குத் தயை கிடைக்கும்படி செய்தார்.
22 எனவே சிறைமேலாளன்
சிறையிலிருந்த கைதிகள் அனைவரையும்,
அங்குச் செய்யப்பட்ட வேலைகள் அனைத்தையும்,
யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான்.
23 அவர் பொறுப்பில் விடப்பட்ட எதைப்பற்றியும்
சிறைமேலாளன் விசாரிக்கவில்லை.
ஏனெனில், ஆண்டவர் யோசேப்புடன் இருந்தார்.
அவர் செய்த யாவற்றிலும் வெற்றி அளித்தார்.


(தொடர்ச்சி): தொடக்க நூல்:அதிகாரங்கள் 40 முதல் 41 வரை