திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/தொடக்க நூல் (ஆதியாகமம்)/அதிகாரங்கள் 48 முதல் 50 வரை
தொடக்க நூல் (The Book of Genesis)
தொகுஅதிகாரங்கள் 48 முதல் 50 வரை
அதிகாரம் 48
தொகு
1 இந்நிகழ்ச்சிகளுக்குப்பின்,
'உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்' என்று
யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது.
உடனே அவர்,
தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும்
அழைத்துக் கொண்டு சென்றார்.
2 'இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார்'
என்று அறிவிக்கப்பட்டவுடன்,
யாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
3 யாக்கோபு யோசேப்பை நோக்கி,
"எல்லாம் வல்ல இறைவன்
கானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில்
எனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி,
4 'நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்.
உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன்.
இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும்
என்றுமுள உடைமையாகத் தருவேன்' என்று வாக்களித்தார். [1]
5 ஆகையால், நான் எகிப்திற்கு வந்து
உன்னிடம் சேர்வதற்கு முன்பே
உனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும்
என் புதல்வர்களாய் இருப்பார்கள்.
ரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.
6 இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் ஏனைய புதல்வர்கள்
உன்னுடையவர்களாகவே இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் மூத்த சகோதரர்களின் பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டு,
அவர்களது உரிமையில் பங்கு பெறுவர்.
7 ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது,
வழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து
என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள்.
அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன்.
எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில்
அவளை அடக்கம் செய்தேன்" என்றார். [2]
8 பின் அவர் யோசேப்பின் புதல்வர்களைக் கண்டு,
"இவர்கள் யார்?" என்று கேட்டார்.
9 யோசேப்பு தம் தந்தையிடம்,
'இந்நாட்டில் கடவுள் எனக்குத் தந்தருளின மைந்தர்கள் இவர்கள்தாம்' என்று சொல்ல,
அவர், 'அவர்களை என் அருகில் கொண்டு வா;
நான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன்' என்றார்.
10 ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக,
அவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார்.
யோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன்
அவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார்.
11 பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி,
"உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்;
ஆனால் உன் வழிமரபையும் கூட
நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்" என்றார்.
12 பின்னர் யோசேப்பு அவர் மடியிலிருந்த
தம் பிள்ளைகளை இறக்கிவிட்டு,
தரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார்.
13 பின்பு யோசேப்பு
எப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும்,
மனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும்
இருக்கும்படி அழைத்து வந்து
இருவரையும் அவர் அருகில் நிறுத்தினார்.
14 ஆனால் இஸ்ரயேல் தம் கைகளைக் குறுக்காக நீட்டி
வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும்
இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.
15 அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது:
"என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும்
எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ
அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும்
எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.
16 அந்தக் கடவுள், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட தூதர்,
இச்சிறுவர்களுக்கு ஆசி வழங்குவாராக!
மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும்
இவர்கள் மூலம் நிலைநிற்பனவாக!
மண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப் பல்குவார்களாக!"
17 தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது
யோசேப்புக்குப் பிடிக்கவில்லை.
எனவே அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை
மனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார்.
18 யோசேப்பு தம் தந்தையை நோக்கி,
"தந்தையே! இது சரியன்று;
இவன் தான் தலைமகன்.
இவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்" என்றார்.
19 ஆனால் அவர் தந்தை மறுத்து,
"தெரியும் மகனே, எனக்குத் தெரியும்.
இவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான்.
ஆனால் இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான்.
அவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்" என்று கூறினார்.
20 மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:
"'எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக' என்று
உங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்."
இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார். [3]
21 பின்பு இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி,
"இதோ நான் சாகப் போகிறேன்.
கடவுள் உங்களோடு இருப்பார்.
உங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர்
திரும்பவும் நடத்திச் செல்வார்.
22 நான் என் வாளாலும் வில்லாலும்
எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை,
உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில்,
உனக்கே தருகிறேன்" என்றார்.
- குறிப்புகள்
[1] 48:3-4 = தொநூ 28:13-14.
[2] 48:7 = தொநூ 35:16-19.
[3] 48:20 = எபி 11:21.
அதிகாரம் 49
தொகு
1 யாக்கோபு தம் புதல்வர்களை வரவழைத்துக் கூறியது:
என்னைச் சுற்றி நில்லுங்கள்.
வரவிருக்கும் நாள்களில் உங்களுக்கு நிகழவிருப்பதை
நான் அறிவிக்கப் போகிறேன்.
2 கூடிவந்து உற்றுக்கேளுங்கள்;
யாக்கோபின் புதல்வர்களே!
உங்கள் தந்தையாகிய இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.
3 ரூபன்! நீயே என் தலைமகன்;
என் ஆற்றல் நீயே; என் ஆண்மையின் முதற்கனி நீயே;
மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே!
4 ஆனால், நீரைப்போல் நிலையற்றவனாய்,
முதன்மையைப் பெறமாட்டாய்.
ஏனெனில் உன் தந்தையின் மஞ்சத்தில் ஏறினாய்;
ஆம், என் படுக்கையைத் தீட்டுப்படுத்தினாய்.
5 சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன் பிறப்புகளே!
அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்!
6 மனமே, அவர்களது மன்றத்தினுள் நுழையாதிரு!
மாண்பே, அவர்களது அவையினுள் அமராதிரு!
ஏனெனில் கோப வெறி கொண்டு அவர்கள் மனிதர்களைக் கொன்று குவித்தார்கள்.
வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்.
7 அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும்.
அவர்களது கொடுமையான கோபம் சபிக்கப்படும்.
அவர்களை யாக்கோபினின்று பிரிந்து போகச் செய்வேன்.
அவர்களை இஸ்ரயேலினின்று சிதறடிப்பேன்.
8 யூதா! உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர்.
உன் கை உன் எதிரிகளின் கழுத்தில் இருக்கும்.
உன் தந்தையின் புதல்வர் உன்னை வணங்குவர்.
9 யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி,
என் மகனே, இரை கவர்ந்து வந்துள்ளாய்!
ஆண் சிங்கமென, பெண் சிங்கமென,
அவன் கால் மடக்கிப் படுப்பான்;
அவன் துயில் கலைக்கத் துணிந்தவன் எவன்? [1]
10 அரசுரிமை உடையவர் வரும்வரையில்
மக்களினங்கள் அவருக்குப் பணிந்திடும் வரையில்,
யூதாவைவிட்டுச் செங்கோல் நீங்காது;
அவன் மரபை விட்டுக் கொற்றம் மறையாது.
11 அவன் திராட்சைக் செடியில் தன் கழுதையையும்,
செழுமையான திராட்சைக் கொடியில்
தன் கழுதைக் குட்டியையும் கட்டுவான்.
திராட்சை இரசத்தில் தன் உடையையும்
திராட்சைச் சாற்றில் தன் மேலாடையையும் தோய்த்திடுவான்.
12 அவன் கண்கள் திராட்சை இரசத்தினும் ஒளியுள்ளவை;
அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை.
13 செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்;
அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்;
அவனது எல்லை சீதோன் வரை பரவியிருக்கும்.
14 இசக்கார், இரு பொதியின் நடுவே படுத்திருக்கும்
வலிமைமிகு கழுதை போன்றவன்.
15 அவன் இளைப்பாறும் இடம் நல்லதென்றும்
நாடு மிக வசதியானதென்றும் காண்பான்;
எனவே சுமை தூக்கத் தோள் சாய்ப்பான்.
அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.
16 தாண், இஸ்ரயேலின் குலங்களில் ஒன்றாக,
தன் மக்களுக்கு நீதி வழங்குவான்.
17 தாண், வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்;
அவன் பாதையில் தென்படும் நாகம் போல,
குதிரைமேல் இருப்பவன் மல்லாந்து விழும்படி
அதன் குதிங்காலைக் கடித்திடுவான்.
18 ஆண்டவரே! உமது மீட்பிற்காகக் காத்திருக்கிறேன்.
19 காத்து, கொள்ளைக் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாவான்.
அவனும் அவர்களைத் துரத்தித் தாக்கிடுவான்.
20 ஆசேரின் நிலம் ஊட்ட மிக்க உணவளிக்கும்.
மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்.
21 நப்தலி, அழகிய மான்குட்டிகளை ஈனும்
கட்டவிழ்ந்த பெண்மான் ஆவான்.
22 யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்;
நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனி தருவான்.
23 அவனுக்கு வில்லில் வல்லார் தொல்லை கொடுத்தார்;
அவன்மீது அம்பெய்தார்;
அவனிடம் பகை வளர்த்தார்.
24 ஆனால், அவனது வில் உறுதியாய் நின்றது;
அவனுடைய புயங்கள் துடிப்புடன் இயங்கின;
ஏனெனில், யாக்கோபின் வலியவர் கைகொடுத்தார்.
இஸ்ரயேலின் பாறையே ஆயராய் இருந்தார்.
25 உன் தந்தையின் இறைவனே உனக்குத் துணையிருப்பார்;
எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்;
மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும்
கீழே ஆழத்தினின்று வரும் ஆசியாலும்
கொங்கைகளுக்கும் கருப்பைகளுக்கும் உரிய ஆசியாலும்
அவர் உனக்கு ஆசி வழங்குவார்.
26 உன் தந்தையின் ஆசிகள்,
பழம் பெரும் மலைகளின் ஆசியிலும்,
என்றுமுள குன்றுகளின் வள்ளன்மையிலும், வலியவை;
இவை அனைத்தும் யோசேப்பின் மீது இறங்கிடுக!
தன் சகோதரரின் இளவரசனாய்த் திகழ்வோனின் நெற்றியில் அவை துலங்கிடுக!
27 பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்;
காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்;
மாலையில், கொள்ளைப் பொருளைப் பங்கிட்டுக் கொள்வான்".
28 இவர்கள் அனைவரும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தார் ஆவர்.
இவற்றை மொழிந்து இவர்களின் தந்தை
இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய ஆசியை அளித்து
வாழ்த்துரை வழங்கினார்.
யாக்கோபின் இறப்பு
தொகு
29 மேலும் அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது:
"இதோ நான் என் இனத்தவரோடு சேர்க்கப்படவிருக்கிறேன்.
என்னை என் தந்தையருடன்
இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.
30 அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள
மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது.
ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து
அந்த நிலத்தைக் கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார். [2]
31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்;
அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்.
அங்கே தான் நானும் லேயாவை அடக்கம் செய்துள்ளேன். [3]
32 அந்நிலமும் அக்கல்லறையும்
இத்தியரிடமிருந்து விலைக்கு வாங்கப்பெற்றவை."
33 யாக்கோபு தம் புதல்வர்களுக்குக் கட்டளைகளை வழங்கி முடித்தபின்,
தம் கால்களைப் படுக்கையினுள் மடக்கிக்கொண்டு உயிர் நீத்து,
தம் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார். [4]
- குறிப்புகள்
[1] 49:9 = எண் 24:9; திவெ 5:5.
[2] 49:30 = தொநூ 23:3-20.
[3] 49:31 = தொநூ 25:9-10; 35:29.
[4] 49:33 = திப 7:15.
அதிகாரம் 50
தொகு
1 அப்பொழுது யோசேப்பு,
தம் தந்தையின் முகத்தின் மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்.
2 பின்பு, தம் தந்தையின் உடலை
மருத்துவ முறையில் பாதுகாப்புச் செய்யும்படி
தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார்.
அவர்களும் அப்படியே செய்தனர்.
3 இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன.
ஏனெனில் ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய
நாற்பது நாள்கள் தேவைப்படும்.
எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.
4 துக்க நாள்கள் முடிந்த பின்,
யோசேப்பு பார்வோன் வீட்டாரிடம்,
"உங்கள் பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருக்கிறது என்றால்,
பார்வோனின் செவிகளில் இவ்வாறு சொல்லுங்கள்:
5 என் தந்தை, 'நான் சாகும் வேளை வந்துவிட்டது.
ஆகவே, நான் எனக்காகக் கானான் நாட்டில் வெட்டி வைத்துள்ள
கல்லறையில் என்னை நீ அடக்கம் செய்'
என்று சொல்லி என்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டார்.
ஆகவே, இப்பொழுது நான் அங்கே போய்
என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர
எனக்கு விடை கொடுங்கள்" என்றார். [1]
6 பார்வோன், "நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே
உம் தந்தையை அடக்கம் செய்யப் போய்வாரும்" என்றான்.
7 ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில்,
பார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர்,
எகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர்.
8 யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர்,
அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர்.
அவர்கள் தங்கள் குழந்தைகளையும் கால்நடைகளையும் மட்டும்
கோசேன் பகுதியில் விட்டுச் சென்றனர்.
9 தேர்களும் குதிரை வீரர்களும் அவருடன் சென்றார்கள்.
இப்படியாக மிகப்பெரிய பரிவாரம் அவரைப் புடை சூழ்ந்து சென்றது.
10 அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த
கோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும்
அங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர்.
யோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார்.
11 அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள்
கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு,
"இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு" என்றனர்.
ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு
'ஆபேல் மிஸ்ராயிம்' என்ற பெயர் வழங்கலாயிற்று.
12 இப்படியாக அவருடைய புதல்வர்
அவர் கட்டளைப்படியே அவருக்குச் செய்ய வேண்டியது எல்லாம் செய்தனர்.
13 அவருடைய புதல்வர் அவரைக் கானான் நாட்டிற்கு எடுத்துச் சென்று
மம்ரேக்கு எதிரில் மக்பேலா என்ற நிலத்தில் இருந்த குகையில் அடக்கம் செய்தனர்.
இந்த இடத்தை ஆபிரகாம் தமக்கென்று கல்லறை நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக
எப்ரோன் என்ற இத்தியனிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார். [2]
14 யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்தபின்,
அவரும் அவர் சகோதரரும்
அவருடன் அவர் தந்தையை அடக்கம் செய்யச்
சென்றிருந்த அனைவரும் எகிப்திற்குத் திரும்பினர்.
யோசேப்பு தம் சகோதரருக்கு அளித்த உறுதிமொழி
தொகு
15 அப்பொழுது, யோசேப்பின் சகோதரர்
தங்கள் தந்தை இறந்துவிட்டதைக் கண்டு,
"யோசேப்பு நாம் அவருக்குச் செய்த அனைத்துத் தீமைகளையும் கருதி,
இப்பொழுது நம்மை வெறுத்து உறுதியாகப் பழி வாங்குவர்" என்று எண்ணினர்.
16 எனவே அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்:
"உம் தந்தை இறப்பதற்குமுன்,
'உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும்,
பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்'
என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
17 ஆகவே, இப்பொழுது உம் தந்தையின் கடவுளுடைய
அடியார்களாகிய எங்களின் குற்றப்பழியை மன்னித்தருளும்."
அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்தபோது யோசேப்பு அழுதார்.
18 அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து,
'நாங்கள் உம் அடிமைகள்' என்றனர்.
19 யோசேப்பு அவர்களிடம்,
"அஞ்சாதீர்கள்; நான் கடவுளுக்கு இணையானவனா?
20 நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள்.
ஆனால் கடவுள் அதை இன்று நடப்பது போல்,
திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு
நன்மையாக மாற்றிவிட்டார்.
21 ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம்.
உங்களையும் உங்கள் குழந்தைகளையும்
நான் பேணிக்காப்பேன்" என்றார்.
இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்;
அவர்களுடன் இதமாகப் பேசிவந்தார்.
யோசேப்பின் இறப்பு
தொகு
22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும்
எகிப்தில் குடியிருந்தனர்.
யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.
23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும்
மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள்
தம் மடியில் விளையாடும் வரையிலும்
யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.
24 யோசேப்பு தம் சகோதரரிடம்,
"நான் சாகும் வேளை வந்துவிட்டது.
ஆனால் கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்.
ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபுக்குத்
தாம் கொடுப்பதாக வாக்களித்த நாட்டிற்கு
இந்த நாட்டிலிருந்து அவர் உங்களை அழைத்துச் செல்வார்" என்றார்.
25 மீண்டும் யோசேப்பு
"கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்.
அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்"
என்று சொல்லி,
இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். [3]
26 யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார்.
அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து
எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர்.
- குறிப்புகள்
[1] 50:5 = தொநூ 47:29-31.
[2] 50:13 = திப 7:16.
[3] 50:25 = விப 13:19; யோசு 24:33; எபி 11:22.
(தொடக்க நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி):விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை