திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/புலம்பல்/அதிகாரங்கள் 3 முதல் 5 வரை
புலம்பல் (The Book of Lamentations)
தொகுஅதிகாரங்கள் 3 முதல் 5 வரை
அதிகாரம் 3
தொகுதண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும்
தொகு
1 ஆண்டவரது சினத்தின் கோலால்
வேதனை அனுபவித்த ஒருவன் நான்!
2 அவர் என்னைத் துரத்தியடித்து,
ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார்!
3 உண்மையில் அவர் என்மீது தம் கையை ஓங்குகிறார்!
நாள் முழுதும் ஓங்குகிறார்!
மீண்டும் மீண்டும் என்னை வதைக்கிறார்!
4 அவர் என் சதையையும் தோலையும் சிதைத்துவிட்டார்!
என் எலும்புகளை நொறுக்கி விட்டார்!
5 அவர் கசப்பாலும் துயராலும்
என்னை முற்றுகையிட்டு வளைத்துக்கொண்டார்!
6 பண்டைக் காலத்தில் இறந்தோர் போல,
இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்!
7 நான் தப்பிச் செல்ல இயலாதவாறு
என்னைச் சுற்றிலும் அவர் மதில் எழுப்பினார்!
பளுவான தளைகளால் என்னைக் கட்டினார்!
8 துணை வேண்டி நான் கூக்குரல் எழுப்பியபோதும்,
அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுத்துவிட்டார்!
9 செதுக்கிய கற்களால் என் வழிகளில்
தடைச் சுவர் எழுப்பினார்!
என் பாதைகளைக் கோணாலாக்கினார்!
10 பதுங்கியிருக்கும் கரடி போன்றும்
மறைந்திருக்கும் சிங்கம் போன்றும்,
அவர் எனக்கு ஆனார்!
11 என் வழிகளினின்று இழுத்துச் சென்று,
என்னைப் பீறிக் கிழித்தார்!
என்னை முற்றிலும் பாழாக்கினார்!
12 அவர் தமது வில்லை நாணேற்றினார்!
அவர் தமது அம்புக்கு என்னை இலக்கு ஆக்கினார்!
13 அவர் தமது அம்புக் கூட்டின் அம்புகளை
என் நெஞ்சுள் பாய்ச்சினார்!
14 நாள் முழுதும் நான் என் மக்கள் அனைவரின்
நகைப்புக்கு உள்ளானேன்!
அவர்களது வசைப்பாடலின் பொருள் ஆனேன்!
15 அவர் கசப்புணவால் என்னை நிரப்பினார்!
எட்டிக் காடியால் எனக்கு வெறியூட்டினார்!
16 கற்களால் என் பற்களை நொறுக்கினார்!
என்னைப் புழுதியில் போட்டு அவர் மிதித்தார்!
17 அமைதியை நான் இழக்கச் செய்தீர்!
நலமென்பதையே நான் மறந்துவிட்டேன்!
18 'என் வலிமையும் ஆண்டவர்மீது நான் கொண்டிருந்த
நம்பிக்கையும் மறைந்துபோயின!'
என்று நான் சொல்லிக் கொண்டேன்.
19 என் துயரத்தையும் அலைச்சலையும்,
எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்!
20 அதை நினைந்து நினைந்து
என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!
21 இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்;
எனவே நான் நம்பிக்கை கொள்கின்றேன்.
22 'ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை!
அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
23 காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன!
நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!'
24 'ஆண்டவரே என் பங்கு' என்று
என் மனம் சொல்கின்றது!
எனவே நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.
25 ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும்,
அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்!
26 ஆண்டவர் அருளும் மீட்புக்காக
அமைதியுடன் காத்திருப்பதே நலம்!
27 இளமையில் நுகம் சுமப்பது
மனிதருக்கு நலமானது!
28 அவரே அதை அவர்கள்மேல் வைத்தார்;
எனவே, தனிமையில் அமைதியாய் அவர்கள் அமரட்டும்.
29 அவர்களின் வாய் புழுதியைக் கவ்வட்டும்;
நம்பிக்கைக்கு இன்னும் இடம் இருக்கலாம்!
30 தங்களை அறைபவர்களுக்குக் கன்னத்தைக் காட்டட்டும்!
அவர்கள் நிந்தைகளால் நிரப்பப்படட்டும்!
31 என் தலைவர்
என்றுமே கைவிட மாட்டார்!
32 அவர் வருத்தினாலும்,
தம் பேரன்பால் இரக்கம் காட்டுவார்.
33 மனமார அவர் மானிடரை வருத்துவதுமில்லை;
துன்புறுத்துவதுமில்லை.
34 நாட்டில் சிறைப்பட்டோர் அனைவரும்
காலால் மிதிக்கப்படுவதையோ,
35 உன்னதரின் திருமுன்
மனிதருக்கு நீதி மறுக்கப்படுவதையோ,
36 வழக்கில் ஒருவர் வஞ்சிக்கப்படுவதையோ,
என் தலைவர் காணாது இருப்பாரோ?
37 என் தலைவர் கட்டளையிடாமல்,
யார் தாம் சொல்லியரை நிறைவேற்றக்கூடும்?
38 நன்மையும் தீமையும் புறப்படுவது,
உன்னதரின் வாயினின்று அன்றோ?
39 உயிருள்ள மனிதர் முறையிடுவது ஏன்?
மானிடர் அடைவது தம் பாவத்தின் விளைவை அன்றோ?
40 நம் வழிகளை ஆய்ந்தறிவோம்!
ஆண்டவரிடம் திரும்புவோம்!
41 விண்ணக இறைவனை நோக்கி
நம் இதயத்தையும் கைகளையும் உயர்த்துவோம்!
42 நாங்கள் குற்றம் புரிந்து கலகம் செய்தோம்!
நீரோ எம்மை மன்னிக்கவில்லை!
43 நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு
எம்மைப் பின்தொடர்ந்தீர்!
இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்!
44 எங்கள் மன்றாட்டு உம்மை வந்தடையாதபடி,
மேகத்தால் உம்மை மூடிக்கொண்டீர்!
45 மக்களினங்கள் இடையே
எம்மை குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!
46 எங்கள் பகைவர் அனைவரும்
எங்களுக்கு எதிராக வாய் திறந்தனர்!
47 திகிலும் படுகுழியும் எம்முன் உள்ளன!
சிதைவும் சீரழிவும் எம்மேல் வந்தன!
48 என் மக்களாகிய மகளின் அழிவைக் கண்டு
என் கண்கள் குளமாயின!
49 வற்றாத ஓடையென
என் கண்கள் நீர் சொரிகின்றன;
50 ஆண்டவர் வானினின்று கண்ணோக்கும் வரை,
ஓய்வின்றிக் கண்ணீர் சொரிகின்றன!
51 என் நகரின் புதல்வியர் அனைவர் நிலை கண்டு,
என் உள்ளம் புலம்புகின்றது!
52 காரணமின்றி என் பகைவர்,
பறவையை வேட்டையாடுவது போன்று,
என்னை வேட்டையாடினர்!
53 உயிரோடு என்னைக் குழியில் தள்ளி,
என்மேல் கற்களை எறிந்தார்கள்!
54 வெள்ளம் என் தலைக்குமேல் போயிற்று!
'நான் தொலைந்தேன்' என்றேன்.
55 படுகுழியினின்று ஆண்டவரே!
உம் திருப்பெயரைக் கூவியழைத்தேன்.
56 என் குரலை நீர் கேட்டீர்;
என் விம்மலுக்கும் வேண்டுதலுக்கும்
உம் செவியை மூடிக்கொள்ளாதீர்!
57 உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில்,
என்னை அணுகி, 'அஞ்சாதே' என்றீர்!
58 என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்!
என் உயிரை மீட்டருளினீர்!
59 ஆண்டவரே!
எனக்கு இழைக்கப்பட்ட தீங்கைக் கண்டீர்!
எனக்கு நீதி வழங்கும்!
60 அவர்களின் பழிவாங்கும் திட்டத்தையும்
எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கண்டீர்!
61 ஆண்டவரே!
அவர்களின் வசைமொழிகளையும்
எனக்கு எதிரான அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டீர்!
62 என் பகைவர் நாள் முழுவதும் எனக்கெதிராக,
முணுமுணுத்துத் திட்டமிடுகின்றனர்.
63 பாரும்! அவர்கள் அமர்ந்தாலும் எழுந்தாலும்
என்னைப் பற்றியே வசைபாடுகிறார்கள்!
64 ஆண்டவரே!
அவர்களின் செயல்களுக்கேற்ப
அவர்களுக்குக் கைம்மாறு அளித்தருளும்!
65 நீர் அவர்கள் மனதைக் கடினப்படுத்தும்!
உம் சாபம் அவர்கள்மேல் விழச் செய்யும்!
66 ஆண்டவரே,
சினம் கொண்டு அவர்களைப் பின்தொடரும்!
வானத்தின்கீழ் இல்லாதவாறு அவர்களை அழித்தொழியும்!
அதிகாரம் 4
தொகுவீழ்ச்சியுற்ற எருசலேம்
தொகு
1 ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே!
பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து போயிற்றே!
திருத்தலக் கற்கள் தெருமுனை எங்கும்
சிதறிக் கிடக்கின்றனவே!
2 பசும்பொன்னுக்கு இணையான
சீயோனின் அருமை மைந்தர்
இன்று குயவனின் கைவினையாம்
மண்பாண்டம் ஆயினரே!
3 குள்ளநரிகளும் பாலூட்டித்
தம் குட்டிகளைப் பேணிக்காக்கும்!
பாலைநிலத் தீக்கோழியென
என் மக்களாம் மகள் கொடியவள் ஆயினளே!
4 பால்குடி மறவாத மழலைகளின் நாவு
தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்!
பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற
உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்!
5 சுவையுணவு அருந்தினோர்
நடுத்தெருவில் நலிகின்றனர்!
பட்டுடுத்தி வளர்ந்தோர்
குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!
6 ஒருவரும் கை வைக்காமல்
நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற
சோதோமின் பாவத்தைவிட,
என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!
7 அவள் இளவரசர்
பனியினும் தூயவராய்ப்
பாலினும் வெண்மையராய்ப்
பவளத்தினும் சிவந்த மேனியராய்
நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!
8 இப்பொழுதோ,
அவர்கள் தோற்றம் கரியினும் கருமை ஆனது;
அவர்களைத் தெருக்களில்
அடையாளம் காண இயலவில்லை!
அவர்கள் தோல் எலும்போடு ஒட்டியிருந்தது.
காய்ந்த மரம்போல் அது உலர்ந்து போனது!
9 பசியினால் மாண்டவர்களினும்
வாளினால் மாண்டோர் நற்பேறு பெற்றோர்!
ஏனெனில், முன்னையோர்
வயல் தரும் விளைச்சலின்றிக்
குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!
10 இரங்கும் பெண்டிரின் கைகள்
தம் குழந்தைகளை வேகவைத்தன!
என் மக்களாகிய மகள் அழிவுற்றபோது
பிள்ளைகளே அன்னையர்க்கு உணவாயினர்!
11 ஆண்டவர் தம் சீற்றத்தைத் தீர்த்துக் கொண்டார்;
தம் கோபக் கனலைக் கொட்டினார்;
சீயோனில் நெருப்பை மூட்டினார்;
அது அதன் அடித்தளங்களை விழுங்கிற்று.
12 பகைவரும் எதிரிகளும்
எருசலேம் வாயில்களில் நுழைவர் என்று
மண்ணுலகின் மன்னரோ
பூவுலகில் வாழ்வோரோ நம்பவில்லை.
13 நகரின் நடுவே நீதிமானின் இரத்தம் சிந்திய
இறைவாக்கினரின் பாவமும்
குருக்களின் குற்றமுமே இதற்குக் காரணமாம்!
14 அவர்கள் குருடரெனத்
தெருக்களில் தடுமாறினர்;
அவர்கள்மீது இரத்தக் கறை
எவ்வளவு படிந்திருந்ததெனில்,
அவர்கள் ஆடைகளைக்கூட
எவராலும் தொட இயலவில்லை.
15 விலங்குகள்! தீட்டு!
விலகுங்கள்! தொடாதீர்கள்! என்று
அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்;
அவர்கள் அகதிகளாய் அலைந்து திரிந்தார்கள்.
'இனி நம்மிடம் குடியிரார்,'
'இனி எம்மிடையே தங்கக்கூடாது'
என்று வேற்றினத்தார் கூறினர்.
16 ஆண்டவரே தம் முன்னிலையினின்று
அவர்களைச் சிதறடித்தார்;
இனி அவர்களைக் கண்ணோக்கமாட்டார்.
குருவை மதிப்பார் இல்லை;
முதியோர்க்கு இரங்குவார் இல்லை.
17 உதவியை வீணில் எதிர்பார்த்து
எம் கண்கள் பூத்துப்போயின!
எம்மை விடுவிக்க இயலாத நாட்டினர்க்காய்க்
கண் விழித்துக் காத்திருந்தோம்!
18 எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது;
எம் தெருக்களில் கூட எம்மால் நடக்க முடியவில்லை;
எம் முடிவு நெருங்கிவிட்டது;
எம் நாள்கள் முடிந்துவிட்டன;
எம் முடிவு வந்து விட்டது.
19 வானத்துப் பருந்துகளிலும் விரைவாய்
எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்;
மலைகளில் எங்களைத் துரத்தி வந்தார்கள்;
பாலையில் எங்களுக்காய்ப் பதுங்கி இருந்தார்கள்.
20 ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று
எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர்,
அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்!
'அவரது நிழலில்
வேற்றினத்தார் நடுவில் நாம் வாழ்வோம்' என்று
அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!
21 ஊசு நாட்டில் வாழும் மகளே!
ஏதோம்! அகமகிழ்ந்து அக்களித்திடு!
கிண்ணம் உன்னையும் வந்தடையும்!
நீ குடிவெறி கொண்டு ஆடையின்றிக் கிடப்பாய்!
22 மகளே! சீயோன்!
உன் குற்றப்பழி நீங்கிவிட்டது;
உன் அடிமைத்தனம் இனியும் தொடராது;
மகளே! ஏதோம்!
உன் குற்றத்திற்காக நீ தண்டிக்கப்படுவாய்!
உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!
- குறிப்புகள்
[1] 4:6 = தொநூ 19:24.
[2] 4:24 = இச 28:57; எசே 5:10.
அதிகாரம் 5
தொகுஇறைவனின் இரக்கத்திற்காக வேண்டல்
தொகு
1 ஆண்டவரே,
எங்களுக்கு நேரிட்டதை நினைந்தருளும்!
எங்கள் அவமானத்தைக் கவனித்துப் பாரும்.
2 எங்கள் உரிமைச்சொத்து
அன்னியர்கைவசம் ஆயிற்று;
வீடுகள் வேற்று நாட்டினர் கைக்கு மாறிற்று.
3 நாங்கள் தந்தையற்ற அனாதைகள் ஆனோம்!
எங்கள் அன்னையர் கைம்பெண்டிர் ஆயினர்!
4 நாங்கள் தண்ணீரை
விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம்!
விறகையும் பணம் கொடுத்தே வாங்குகிறோம்!
5 கழுத்தில் நுகத்தோடு விரட்டப்படுகிறோம்!
சோர்ந்துபோனோம்!
எங்களுக்கு ஓய்வே இல்லை!
6 உணவால் நிறைவு பெற,
எம் கையை எகிப்தியர்,
அசீரியரிடம் நீட்டினோம்!
7 பாவம் செய்த எம் தந்தையர்
மடிந்து போயினர்!
நாங்களோ அவர்கள் குற்றப்பழியைச்
சுமக்கின்றோம்!
8 அடிமைகள் எங்களை ஆளுகின்றார்கள்!
எங்களை அவர்கள் கையினின்று விடுவிப்பர்
எவரும் இல்லை!
9 பாலைநில வாளை முன்னிட்டு,
உயிரைப் பணயம் வைத்து
எங்கள் உணவைப் பெறுகிறோம்!
10 பஞ்சத்தின் கொடுந்தணலால்
எங்கள் மேனி அடுப்பெனக் கனன்றது!
11 சீயோன் மங்கையர் கெடுக்கப்பட்டனர்!
நகர்களின் கன்னியர் கற்பழிக்கப்பட்டனர்!
12 தலைவர்கள் பகைவர் கையால்
தூக்கிலிடப்பட்டனர்!
முதியோர்களையும் அவர்கள் மதிக்கவில்லை!
13 இளைஞர் இயந்திரக் கல்லை இழுக்கின்றனர்!
சிறுவர் விறகு சுமந்து தள்ளாடுகின்றனர்!
14 முதியோர் நுழைவாயிலில் அமர்வதைக் கைவிட்டனர்!
இளையோர் இசை மீட்டலைத் துறந்துவிட்டனர்!
15 எங்கள் இதயத்தின் மகிழ்ச்சி ஒழிந்தது!
எங்கள் நடனம் புலம்பலாக மாறியது!
16 எங்கள் தலையினின்று மணிமுடி வீழ்ந்தது!
நாங்கள் பாவம் செய்தோம்!
எங்களுக்கு ஐயோ கேடு!
17 இதனால் எங்கள் இதயம்
தளர்ந்து போயிற்று;
எங்கள் கண்கள் இருண்டுபோயின.
18 சீயோன் மலை
பாழடைந்து கிடக்கின்றது;
நரிகள் அங்கே நடமாடுகின்றன.
19 நீரோ ஆண்டவரே,
என்றென்றும் வாழ்கின்றீர்!
உமது அரியணை
தலைமுறை தலைமுறையாய் உளதாமே!
20 ஆண்டவரே!
தொடர்ந்து எங்களைக் கைவிட்டது ஏன்?
இத்துணைக் காலமாய் எங்களைக் கைவிட்டது ஏன்?
21 ஆண்டவரே!
எம்மை உம்பால் திருப்பியருளும்!
நாங்களும் உம்மிடம் திரும்புவோம்!
முற்காலத்தே இருந்ததுபோல!
எம் நாள்களைப் புதுப்பித்தருளும்!
22 எங்களை முற்றிலும் தள்ளிவிட்டீரோ!
எங்கள் மேல் இத்துணை வெஞ்சினம் கொண்டீரே!
(புலம்பல் நூல் நிறைவுற்றது)
(தொடர்ச்சி): எசேக்கியேல்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை