திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/மீக்கா/அதிகாரங்கள் 5 முதல் 7 வரை

"ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும்
பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும்
ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?...ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?" - மீக்கா 6:7,8.

அதிகாரம் 5

தொகு


1 அரண்சூழ் நகரில் வாழும் மக்களே!
உங்கள் மதில்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளுங்கள்;
உங்களுக்கு எதிராக முற்றுகையிடப்பட்டுள்ளது;
இஸ்ரயேலின் ஆளுநன் கோலால் கன்னத்தில் அடி பெறுவான்.

ஆட்சி செலுத்துபவர் பெத்லெகேமிலிருந்து தோன்றுவார்

தொகு


2 நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே!
யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்!
ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர்
உன்னிடமிருந்தே தோன்றுவார்;
அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும். [1]


3 ஆதலால், பேறுகால வேதனையில் இருப்பவள்
பிள்ளை பெறும்வரை அவர் அவர்களைக் கைவிட்டு விடுவார்;
அதன் பின்னர் அவருடைய இனத்தாருள் எஞ்சியிருப்போர்
இஸ்ரயேல் மக்களிடம் திரும்பி வருவார்கள்.


4 அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும்
தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித்
தம் மந்தையை மேய்ப்பார்;
அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்;
ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை
அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்;
5 அவரே அமைதியை அருள்வார்.

விடுதலையும் தண்டனைத் தீர்ப்பும்

தொகு


அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும்போதும்,
நம் அரண்களை அழித்தொழிக்கும்போதும்
அவர்களுக்கு எதிராக மேய்ப்பர் எழுவரையும்
மக்கள் தலைவர் எண்மரையும் நாம் கிளர்ந்தெழச் செய்வோம்.


6 அவர்கள் அசீரியா நாடு முழுவதையும்
நிம்ரோது நாட்டை அதன் நுழைவாயில்கள் வரையிலும்
தங்கள் வாளுக்கு இரையாக்குவார்கள்;
அசீரியர் நம் நாட்டிற்குள் படையெடுத்து வரும் போதும்,
நம் எல்லைகளைக் கடந்து வரும்போதும்,
நம்மை அவர்களிடமிருந்து விடுவிப்பார்கள். [2]


7 அப்போது யாக்கோபில் எஞ்சியிருப்போர்
ஆண்டவரிடமிருந்து வரும் பனியைப் போலவும்
மனிதருக்காக காத்திராமலும் மானிடர்க்காகத் தாமதிக்காமலும்,
புல்மேல் பெய்கின்ற மழைத்துளிகள் போலவும்,
பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.


8 மேலும், யாக்கோபிலே எஞ்சியிருப்போர்
காட்டு விலங்குகளிடையே இருக்கும் சிங்கம் போலவும்,
ஆட்டு மந்தைக்குள் நுழைந்து யாரும் விடுவிக்க இயலாத நிலையில்
அவற்றை மிதித்துத் துண்டு துண்டாய்க் கிழித்துப் போடும்
சிங்கக் குட்டி போலவும்,
பல மக்களினங்களிடையே இருப்பார்கள்.


9 உனது கை உன்னுடைய பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்;
உன்னுடைய எதிரிகள் அனைவரும் அழிந்தொழிவார்கள்.


10 அந்நாளில், "நான் உன்னிடமுள்ள
உன் குதிரைகளை வெட்டி வீழ்த்துவேன்;
உன் தேர்ப்படையை அழித்தொழிப்பேன்" என்கிறார் ஆண்டவர்.


11 "உன் நாட்டிலுள்ள நகர்களைத் தகர்த்தெறிவேன்;
உன் அரண்கள் அனைத்தையும் தரைமட்டமாக்குவேன்.


12 உன்னுடைய மாயவித்தைக்காரர்களை ஒழித்துக்கட்டுவேன்;
குறிசொல்லுவோர் உன்னிடம் இல்லாதொழிவர்.


13 நீ செய்து வைத்திருக்கும் சிலைகளையும்
படிமங்களையும் உடைத்தெறிவேன்;
உன் கைவினைப் பொருள்கள்முன் இனி நீ
தலைவணங்கி நிற்கமாட்டாய்.


14 நீ நிறுத்தியிருக்கும் கம்பங்களைப் பிடுங்கி எறிவேன்;
உன் நகரங்களை அழித்தொழிப்பேன்.


15 எனக்குச் செவி கொடாத வேற்றினத்தார்மேல்
சினத்துடனும் கடும் சீற்றத்துடனும் பழிதீர்த்துக் கொள்வேன்."


குறிப்புகள்

[1] 5:2 = மத் 2:6; யோவா 7:42.
[2] 5:6 = தொநூ 10:8-11.

அதிகாரம் 6

தொகு

இஸ்ரயேல் மீது ஆண்டவரின் வழக்கு

தொகு


1 ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்:
நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்;
குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும்.


2 மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே,
ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்;
ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு;
இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார்.


3 என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்?
எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்?
எனக்கு மறுமொழி கூறுங்கள்.


4 நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்;
அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்;
உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும்,
மிரியாமையும் அனுப்பிவைத்தேன். [1]


5 என் மக்களே, மோவாபு அரசன் பாலாக்கு வகுத்த
திட்டத்தை நினைத்துப் பாருங்கள்;
பெயோரின் மகன் பிலயாம் அவனுக்குக் கூறிய மறுமொழியையும்,
சித்திமுக்கும் கில்காலுக்கும் இடையே நடந்தவற்றையும் எண்ணிப்பாருங்கள்;
அப்போது ஆண்டவரின் மீட்புச் செயல்களை அறிந்து கொள்வீர்கள். [2]

ஆண்டவர் விரும்புவது

தொகு


6 ஆண்டவரின் திருமுன் வரும்போது
உன்னதரான கடவுளாகிய அவருக்கு
எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்?
எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும்
அவர் முன்னிலையில் வரவேண்டுமா?


7 ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும்
பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும்
ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ?
என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும்,
என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும்
பலி கொடுக்க வேண்டுமா?


8 ஓ மானிடா,
நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே!
நேர்மையைக் கடைப்பிடித்தலையும்,
இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும்
உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர
வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?


9 ஆண்டவரின் குரல் நகரை நோக்கிக் கூக்குரலிடுகின்றது;
உம் பெயருக்கு அஞ்சி நடப்பதே உண்மையான ஞானம்.
நகரில் கூடியிருப்போரே! நான் கூறுவதைக் கேளுங்கள்;


10 "கொடியோரின் வீட்டில் தீய வழியால் சேர்க்கப்பட்ட களஞ்சியங்களையும்
சபிக்கப்பட்ட மரக்காலையும் நான் மறப்பேனோ?


11 கள்ளத் தராசையும் கள்ள எடைக் கற்களையும் கொண்ட
பையை வைத்திருப்போரை நேர்மையாளர் எனக் கொள்வேனோ?


12 உங்களிடையே உள்ள செல்வர்கள் கொடுமை நிறைந்தவர்கள்;
அங்கே குடியிருப்பவர்கள் பொய்யர்கள்;
அவர்கள் வாயிலிருந்து வஞ்சனையான பேச்சே வெளிப்படுத்துகின்றது.


13 ஆதலால், நான் உங்களை உங்கள் பாவங்களுக்காகத்
தண்டிக்கத் தொடங்கியுள்ளேன்; நீங்கள் பாழாய்ப் போவீர்கள்.


14 நீங்கள் உணவருந்தினாலும் நிறைவடைய மாட்டீர்கள்;
பசி உங்கள் வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும்;
நீங்கள் எதையும் பாதுகாப்பாக வைத்திருக்கமாட்டீர்கள்,
இழப்பீர்கள்; அப்படியே நீங்கள் எதையாவது
பாதுகாப்பாக வைத்தாலும் அதை நான் வாளுக்கு இரையாக்குவேன்.
15 நீங்கள் விதைப்பீர்கள்;


ஆனால், அறுவடை செய்யமாட்டீர்கள்;
ஒலிவக் கொட்டைகளை ஆலைக்குள் இட்டு ஆட்டுவீர்கள்,
ஆனால், உங்களுக்கு எண்ணெய் தடவிக்கொள்ளமாட்டீர்கள்;
திராட்சைப் பழம் பிழிவீர்கள்;
ஆனால், திராட்சை இரசத்தைச் சுவைக்கமாட்டீர்கள்.


16 ஏனெனில், நீங்கள் ஒம்ரியின் கட்டளைகளைக் கடைப்பிடித்தீர்கள்;
ஆகாசு குடும்பத்தாரின் செயல்கள் அனைத்தையும் பின்பற்றினீர்கள்,
அவர்களின் திட்டங்களைப் பின்பற்றி நடந்தீர்கள்;
ஆதலால், நான் உங்களை அழிவுக்குக் கையளிப்பேன்;
உங்களிடையே குடியிருப்போர் இகழ்ச்சிக்கு உள்ளாவர்;
மக்களினங்களின் நிந்தைக்கு ஆளாவீர்கள். [3]


குறிப்புகள்

[1] 6:4 = விப 4:10-16; 12:50-51; 15:20.
[2] 6:5 = எண் 22:24:25; யோசு 3:1-4:19.
[3] 6:16 = 1 அர 16:23-34; 21:25-26.


அதிகாரம் 7

தொகு

இஸ்ரயேலின் நெறிகேடு

தொகு


1 ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக்
கொய்வதற்குச் சென்றவனைப் போலானேன்;
திராட்சை பறித்து முடிந்தபின் பழம் பறிக்கச் சென்றவனைப் போலானேன்;
அப்பொழுது தின்பதற்கு ஒரு திராட்சைக் குலையும் இல்லை;
என் உள்ளம் விரும்பும் முதலில் பழுத்த அத்திப் பழம்கூட இல்லை;


2 நாட்டில் இறைப்பற்றுள்ளோர் அற்றுப்போனார்;
மனிதருள் நேர்மையானவர் எவருமே இல்லை.
அவர்கள் அனைவரும் இரத்தப் பழிவாங்கப் பதுங்கிக் காத்திருக்கின்றனர்;
ஒருவர் ஒருவரைப் பிடிக்கக் கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.


3 தீமை செய்வதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்;
தலைவனும் நீதிபதியும் கையூட்டுக் கேட்கின்றனர்;
பெரிய மனிதர் தாம் விரும்பியதை வாய்விட்டுக் கூறுகின்றனர்;
இவ்வாறு நெறிதவறி நடக்கின்றனர்.


4 அவர்களுள் சிறந்தவர் முட்செடி போன்றவர்!
அவர்களுள் நேர்மையாளர் வேலிமுள் போன்றவர்!
அவர்களுடைய காவலர்கள் அறிவித்த தீர்ப்பின் நாள் வந்துவிட்டது;
இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.


5 அடுத்திருப்பவன்மீது நம்பிக்கை கொள்ளவேண்டாம்;
தோழனிடத்திலும் நம்பிக்கை வைக்க வேண்டாம்.
உம் மார்பில் சாய்ந்திருக்கிற மனைவி முன்பும்
உன் வாய்க்குப் பூட்டுப்போடு!


6 ஏனெனில், மகன் தன் தந்தையை அவமதிக்கின்றான்;
மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகின்றாள்,
மருமகள், தன் மாமியாரை எதிர்க்கின்றாள்;
ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். [*]


7 நானோ, ஆண்டவரை விழிப்புடன் நோக்கியிருப்பேன்;
என்னை மீட்கும் என் கடவுளுக்காகக் காத்திருப்பேன்.
என் கடவுள் எனக்குச் செவிசாய்த்தருள்வார்.

ஆண்டவர் அளிக்கும் விடுதலை

தொகு


8 என் பகைவனே,
என்னைக் குறித்துக் களிப்படையாதே;
ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும் எழுச்சிபெறுவேன்.
நான் இருளில் குடியிருந்தாலும் ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.


9 நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன்;
ஆதலால், அவரது கடும் சினத்தை,
அவர் எனக்காக வழக்காடி
எனக்கு நீதி வழங்கும்வரை, தாங்கிக்கொள்வேன்;
அவர் என்னை ஒளிக்குள் கொண்டு வருவார்;
அவரது நீதியை நான் காண்பேன்.


10 அப்போது, என்னோடு பகைமைகொண்டவர்கள்
அதைக் காண்பார்கள்;
"உன் கடவுளாகிய ஆண்டவர் எங்கே?" என்று
என்னிடம் கேட்டவள் வெட்கம் அடைவாள்;
என் கண்கள் அவளைக் கண்டு களிகூரும்.
அப்பொழுது, தெருச் சேற்றைப்போல அவள் மிதிபடுவாள்.


11 உன் மதில்களைத் திரும்பக் கட்டும் நாள் வருகின்றது;
அந்நாளில், நாட்டின் எல்லை வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.


12 அந்நாளில், அசீரியாவிலிருந்து எகிப்திலுள்ள நகர்கள் வரை,
எகிப்திலிருந்து பேராறு வரை,
ஒரு கடல்முதல் மறுகடல் வரை,
ஒரு மலைமுதல் மறு மலைவரை உள்ள மக்கள் அனைவரும்
உன்னிடம் திரும்புவார்கள்.


13 நிலவுலகம் அங்குக் குடியிருப்போரின்
செயல்களின் விளைவால் பாழடைந்து போகும்.


14 ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும்
மந்தையாகிய உம்முடைய மக்களை
உமது கோலினால் மேய்த்தருளும்!
அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே!
முற்காலத்தில் நடந்ததுபோல
அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்!


15 எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டுவந்த நாளில் நடந்ததுபோல
நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன்.


16 வேற்றினத்தார் இதைப் பார்த்துத்
தங்கள் ஆற்றல் அனைத்தையும் குறித்து நாணமடைவர்;
அவர்கள் தங்கள் வாயைக் கையால் மூடிக்கொள்வார்கள்;
அவர்களுடைய காதுகள் செவிடாய்ப் போகும்.


17 அவர்கள் பாம்பைப் போலவும்
நிலத்தில் ஊர்வன போலவும் மண்ணை நக்குவார்கள்;
தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து நடுநடுங்கி வெளியே வருவார்கள்;
நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அஞ்சி நடுங்குவார்கள்.
உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.


18 உமக்கு நிகரான இறைவன் யார்?
எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து
நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின்
தீச்செயலை மன்னிக்கின்றீர்;
உமக்கு நிகரானவர் யார்?
அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்;
ஏனெனில், அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்;


19 அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்;
நம் தீச்செயல்களை மிதித்துப்போடுவார்;
நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார்.


20 பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு
நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல
யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும்
ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.


குறிப்பு

[*] 7:6 = மத் 10:35-36; லூக் 12:53.


(மீக்கா நூல் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): நாகூம்:அதிகாரம் 1