திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

யோசுவாவும் காலேபும் (யோசுவா 14). விவிலிய அட்டை வரைவோவியம். ஆண்டு: 1901.

யோசுவா

தொகு

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13

தொகு

யோசுவாவுக்கு ஆண்டவர் இட்ட கட்டளை

தொகு


1 யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம், "உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது.
2 எஞ்சியுள்ள நிலங்கள் இவையே: பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள்,
3 எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கானானியருடையதாகக் கருதப்பட்ட காசா, அஸ்தோத்து, அஸ்கலோன், காத்து, எக்ரோன் ஆகிய பகுதிகளின் ஐந்து பெலிஸ்திய மன்னர்கள், மற்றும் அவ்வாயர்,
4 தெற்கிலிருந்து கானான் நாடு முழுவதும்; சீதோனியருக்குச் சொந்தமான மெயாரா, அபேக்கு வரையிலும், எமோரியரின் எல்லை வரையிலும் உள்ள பகுதிகள்,
5 கெபாலியரின் நாடு, லெபனோன் முழுவதும், எர்மோன் மலையின்கீழ் கதிரவன் உதிக்கும் பாகால்காதிலிருந்து ஆமாத்துக் கணவாய் வரை உள்ள பகுதியும்.
6 லெபனோனிலிருந்து மிஸ்ரபோத்துமயிம் வரை உள்ள அனைத்து மலைவாழ் மக்கள், அனைத்து சீரோனியர் - இவர்களை இஸ்ரயேல் முன்னிலையில் நானே வெளியேற்றுவேன். நான் உனக்குக் கட்டளையிட்டபடி நீயும் அதை இஸ்ரயேலுக்கு உடைமையாகக் கொடு. [1]
7 இப்போது இந்த நாட்டை ஒன்பது குலங்களுக்கும் மனாசேயின் பாதிக் குலத்திற்கும் உடைமையாகக் குறித்துக்கொடு" என்றார்.

யோர்தானுக்குக் கிழக்கே உள்ள பகுதியைப் பங்கிடல்

தொகு


8 அத்துடன் ரூபன், காத்து மக்களுக்கும், மனாசேயின் பாதிக் குலத்திற்கும் யோர்தானுக்கு கிழக்கே ஆண்டவரின் ஊழியர் மோசே குறித்துக் கொடுத்தவாறே உடைமையாக்கப் பெற்றவை: [2]
9 அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையில் உள்ள அரோயேரிலிருந்து பள்ளத்தாக்கின் நடுவில் உள்ள நகர்வரையிலும் மெதபா சமவெளி முழுவதும், தீபோன் வரையிலும்,
10 எஸ்போனில் ஆட்சிசெய்த எமோரியரின் மன்னன் சீகோனின் நகரங்கள் அனைத்தும், அம்மோனியரின் எல்லை வரையிலும்,
11 கிலயாத்து, கெசூரியர், மாக்காத்தியரின் எல்லைகள், எர்மோன்மலை முழுவதும், சால்காவரை பாசான் முழுவதும்;
12 இரபாத்தியரில் எஞ்சியிருந்தவனும், பாசானில் இருந்து அஸ்தரோத்தையும் எதிரேயியையும் ஆட்சி செய்தவனுமாகிய ஓகின் பகுதி முழுவதும், மோசே அவர்களைத் தாக்கிக் கைப்பற்றியிருந்தார்.
13 கெசூரியர், மாக்காத்தியரின் நாடுகளையோ இஸ்ரயேலர் கைப்பற்றவில்லை. கெசூரியரும் மாக்காத்தியரும் இந்நாள்வரை இஸ்ரயேலர் இடையே வாழ்கின்றனர்.
14 லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை. அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும். [3]

ரூபனுக்கு அளிக்கப்பட்ட பகுதி

தொகு


15 ரூபனின் குலத்திற்கு அவர்களின் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன:
16 அவர்களது எல்லை அர்னோன் பள்ளத்தாக்கின் ஓரத்தில் அரோயேரிலிருந்து சமவெளியின் நடுவில் உள்ள நகர்வரை, மற்றும் மேதபாவில் உள்ள சமவெளி முழுவதும்;
17 சமவெளியில் உள்ள எஸ்போனும் அதன் எல்லா நகர்களும், தீபோன் பாமோத்துபாகால், பெத்பாகால்மெகோன்;
18 யாகசு, கெதமோத்து, மேபாத்து;
19 கிரியத்தாயிம், சிப்மா, கர் சமவெளியில் உள்ள செரெத்துசாகர்;
20 பெத்பெகோர், பிஸ்கா பள்ளத்தாக்கு, பெத்தசிமோத்து;
21 அதாவது, சமவெளியில் உள்ள எல்லா நகர்களும்; எஸ்போனில் ஆண்டு வந்த எமோரிய அரசன் சீகோனின் எல்லா அரசுகளும். மோசே அவனையும், மிதியான், ஏவி, இரக்கேம், சூர், கூர், இரபா ஆகியவற்றின் தலைவர்களையும், அந்நாட்டில் வாழ்ந்த சீகோன் தலைவர்களையும் தாக்கினார்.
22 இஸ்ரயேல் மக்கள் வாளால் கொன்றவர்களில் நிமித்திகன் பெகோரின் மகன் பிலயாமும் ஒருவன்.
23 ரூபன் மக்களின் எல்லை யோர்தான் நதிக்கரை. அப்பகுதியின் நகர்களும், குடியிருப்புகளும், அவர்கள் குடும்பங்களுக்கேற்ப ரூபன் மக்களின் உடைமையாகியது.

காத்துக்கு அளிக்கப்பட்ட பகுதி

தொகு


24 காத்தின் குலத்தைச் சார்ந்த மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன:
25 யாசேர், கிலயாதின் எல்லா நகர்கள், இரபாவின் கிழக்கில் அரோயேர்வரை, அம்மோனியரின் நிலத்தில் பாதி,
26 எஸ்போனிலிருந்து இராமத்து மிட்சப்பே வரை, பெத்தோனிம்-மகனயிம் இவற்றிலிருந்து தெபீரின் எல்லைவரை.
27 பெத்தோராம் பள்ளத்தாக்கில் பேத்நிம்ரா, சுக்கோத்து, சாபோன், எஸ்போனின் மன்னன் சீகோனின் எஞ்சியிருந்த அரசுகள், யோர்தான் எல்லையாக கினரேத்துக் கடல் முடிவு வரை. யோர்தானுக்கு அப்பால் கிழக்குவரை உள்ள பகுதிகள்.
28 காத்தின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி இப்பகுதி நகர்களும் குடியிருப்புகளும் உடைமையாயின.

மனாசேக்கு அளிக்கப்பட்ட பகுதி

தொகு


29 மனாசேயின் பாதிக் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி மோசே அளித்த பகுதிகளாவன:
30 அவர்களுடைய எல்லை, மகனயிமிலிருந்து பாசான் முழுவதும், பாசானின் அரசன் ஓகின் அரசு முழுவதும், பாசானில் உள்ள அறுபது நகர்களும் யாயிரின் குடியிருப்புகள் முழுவதும்;
31 கிலயாதில் பாதி, அஸ்தரோத்து, எதிரேயி, பாசானில் இருந்த ஓகின் அரசு நகர்கள். இவை மனாசேயின் மகன் மாக்கிருக்கும், மாக்கிரின் பாதி மக்களுக்கும் அவர்கள் குடும்பங்களுக்கும் அளிக்கப்பட்டன.
32 எரிகோவிற்குக் கிழக்கே யோர்தானுக்கு அப்பால் மோவாபுச் சமவெளியில் இருந்தபோது, மோசே இப்பகுதிகளை உடைமையாகக் கொடுத்தார்.
33 ஆனால், லேவியர் குலத்திற்கு மோசே உடைமை அளிக்கவில்லை. அவர்களுக்கு அவர் கூறியபடி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே அவர்களின் உடைமை. [4]

குறிப்புகள்

[1] 13:6 = எண் 33:54.
[2] 13:8 = எண் 32:33; இச 3:12.
[3] 13:14 = இச 18:1.
[4] 13:33 = எண் 18:20; இச 18:2.

அதிகாரம் 14

தொகு

யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதியைப் பங்கிடல்

தொகு


1 கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே. இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர்.
2 மோசேயின் மூலம் ஆண்டவர் கட்டளையிட்டபடி ஒன்பது குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் திருவுளச்சீட்டு மூலம் உடைமை அளிக்கப்பட்டது. [1]
3 மோசே இரண்டு குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் யோர்தானுக்கு அப்பால் உடைமை அளித்தார். லேவியர்களுக்கும் அவர்கள் நடுவில் உடைமை அளிக்கவில்லை. [2]
4 யோசேப்பின் புதல்வர் மனாசே, எப்ராயிம் என்று இரண்டு குலங்களாக இருந்தனர். லேவியருக்கு நிலத்தில் பங்கு தரப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்குவதற்கு நகர்களும் அவர்களின் கால்நடைகளுக்கும் மற்ற உடைமைகளுக்கும் மேய்ச்சல் நிலங்களும் தரப்பட்டன.
5 ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்து நிலத்தைப் பகிர்ந்து கொண்டனர்.


6 யூதாவின் மக்கள் கில்காலில் யோசுவாவிடம் வந்தனர். கெனிசியனும் எபுன்னேயின் மகனுமான காலேபு அவரிடம், "ஆண்டவர் கடவுளின் மனிதரான மோசேயிடம் காதேசு-பர்னேயாவில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் கூறிய வார்த்தை என்ன என்று உனக்குத் தெரியும். [3]
7 நான் நாற்பது வயதாக இருக்கும்போது ஆண்டவரின் ஊழியராகிய மோசே என்னைக் காதேசு-பர்னேயாவிலிருந்து நாட்டை உளவறிய அனுப்பினார். திரும்பி வந்து என் மனத்திற்குப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன். [4]
8 என்னுடன் வந்த என் சகோதரர் மக்களின் இதயத்தை அச்சத்தால் நடுங்கச் செய்தனர். நான் முற்றிலும் என் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றினேன்.
9 மோசே அந்நாளில், "நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன்" என்று எனக்கு ஆணையிட்டுக் கூறினார். [5]
10 இதோ! அவர் கூறியது போல் நாற்பது ஆண்டுகளாக இதுவரை ஆண்டவர் என்னை உயிருடன் வைத்துள்ளார். இதை ஆண்டவர் மோசேயிடம் கூறியபொழுது இஸ்ரயேலர் பாலைநிலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இப்போது இதோ நான் எண்பத்தைந்து வயதானவன்.
11 மோசே என்னை அனுப்பிய நாளன்று வலிமையுடன் இருந்ததுபோல் மீண்டும் போர் புரிவதற்கும் போவதற்கும் வருவதற்கும் வலிமையுடன் இருக்கின்றேன்.
12 ஆண்டவர் அந்நாளில் கூறியதுபோல் இப்பொழுது எனக்கு இந்த மலைநாட்டைக் கொடு. ஏனெனில் அங்கே ஆனாக்கியர் இருக்கின்றனர். அவர்கள் அரண்சூழ்ந்த மாநகர்களில் வாழ்கின்றனர் என்று நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். ஆண்டவர் என்னோடு இருக்கக்கூடும். ஆண்டவர் கூறியபடி அவர்களைத் துரத்தியடிப்பேன்" என்றார்.


13 யோசுவா எபுன்னேயின் மகன் காலேபுக்கு ஆசி வழங்கி எபிரோனை உடைமையாக அளித்தார்.
14 இந்நாள்வரை எபிரோன் கெனிசியனான எபுன்னேயின் மகன் காலேபின் உடைமையாக உள்ளது. ஏனெனில் அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினார்.
15 முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.

குறிப்புகள்

[1] 14:2 = எண் 26:52-56; 34:13.
[2] 14:3 = எண் 32:33; 34:14-15; இச 3:12-17.
[3] 14:6 = எண் 14:30.
[4] 14:7 = எண் 13:1-30.
[5] 14:9 = எண் 14:24.

(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை