திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை
யோசுவா
தொகுஅதிகாரங்கள் 7 முதல் 8 வரை
அதிகாரம் 7
தொகுஆக்கான் செய்த பாவம்
தொகு
1 இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது.
2 பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இருந்த ஆயி என்னும் நகருக்கு எரிகோவிலிருந்து யோசுவா ஆள்களை அனுப்பினார். அவர்களிடம், "சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்" என்றார். அவர்கள் சென்று ஆயி நகரை உளவறிந்தார்கள்.
3 அவர்கள் திரும்பி வந்து யோசுவாவிடம், "மக்கள் எல்லாரையும் அனுப்பவேண்டாம். இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் சென்று ஆயி நகரைத் தாக்கட்டும். மக்கள் எல்லாரும் அங்குச் சென்று களைப்படைய வேண்டாம். ஏனெனில் அங்குள்ளவர்கள் சிலரே" என்றனர்.
4 அவ்வாறே மக்களிலிருந்து மூவாயிரம் பேர் சென்றனர். ஆனாலும் அவர்கள் ஆயி நகரின் ஆள்களுக்குமுன் தோற்று ஓடினார்கள்.
5 ஆயி நகரின் ஆள்கள் நகரின் வாயிலிலிருந்து செபாரிம் வரை அவர்களைத் துரத்திச்சென்று மலைச்சரிவில் அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றார்கள். எனவே மக்களின் நெஞ்சம் உறுதி இழந்து தண்ணீர்போல் ஆனது.
6 யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொள்ள, அவரும் அவருடன் இஸ்ரயேலின் முதியோரும் ஆண்டவரின் பேழைக்குமுன் மாலைவரை தரையில் முகம்குப்புற விழுந்து கிடந்தனர். தம் தலைமீது புழுதியைப் போட்டுக் கொண்டனர்.
7 யோசுவா, "ஐயோ, என் தலைவராகிய ஆண்டவரே! மக்களை எமோரியர் கையில் ஒப்படைத்து, அழிப்பதற்காகவா யோர்தானைக் கடக்குமாறு செய்தீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்பாலேயே மனநிறைவோடு தங்கி இருந்திருக்க வேண்டும்.
8 என் ஆண்டவரே! இஸ்ரயேலர் தங்கள் எதிரிகளின்முன் புறமுதுகுகிட்டு ஓடிவிட்டார்களே! நான் இப்போது என்ன சொல்வேன்?
9 கானானியரும் நாட்டில் வாழும் அனைவரும் இதைக் கேட்டு எங்களைச் சூழ்ந்துகொண்டு எங்கள் பெயரை உலகிலிருந்தே அழித்துவிடுவார்களே? அப்போது உமது பெருமை மிக்க பெயரைக் காக்க என்ன செய்வீர்?" என்றார்.
10 ஆண்டவர் யோசுவாவிடம், "எழுந்திரு! ஏன் முகம்குப்புற விழுந்து கிடக்கின்றாய்?
11 இஸ்ரயேலர் பாவம் செய்தனர். நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டனர். அவர்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எடுத்துக்கொண்டனர்; களவுசெய்தனர்; வஞ்சித்தனர்; அவற்றைத் தங்கள் பொருள்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
12 ஆகவேதான் இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை; புறமுதுகிட்டு ஓடினர். அவர்கள் அழிவுக்குரியவர்கள். உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன்.
13 எழுந்திரு. மக்களைப் புனிதமாக்கு; 'நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று கூறு. ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இஸ்ரயேலரே! உங்களிடையே உள்ள அழிவுக்குரியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் விலக்கும்வரை உங்கள் எதிரிகளின்முன் உங்களால் நிற்க முடியாது.
14 காலையில் நீங்கள் உங்கள் குலங்களுக்கு அருகில் வருவீர்கள். எந்தக் குலத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரே அந்தக் குலம் குடும்பம் குடும்பமாக அருகில் வரும். எந்தக் குடும்பத்தைக் கடவுள் குறிப்பிடுகிறாரே, அந்தக் குடும்பம் வீடுவீடாக வரும். எந்த வீட்டைக் குறிப்பிடுகின்றாரோ, அந்த வீட்டார் ஆள் ஆளாக வருவர்.
15 அழிவுக்குரியவற்றுடன் பிடிபடுபவனும் அவனுடையதனைத்தும் நெருப்பில் எரிக்கப்படும். ஏனெனில் அவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ரயேலுக்குத் தீமை செய்தான்" என்றார்.
16 யோசுவா காலையில் எழுந்து இஸ்ரயேலைக் குலம் குலமாக முன்னே வரச்செய்தார். யூதா குலம் பிடிபட்டது.
17 எனவே அவர் யூதா குலத்தை முன்னே வரச்செய்தார். செராகின் குடும்பம் பிடிபட்டது. ஆகவே, அவர் செராகின் குடும்பத்தை வீடு வீடாக முன்னே வரச் செய்தார். சபதி வீடு பிடிபட்டது.
18 அவனது வீட்டாரை ஆள் ஆளாக முன்னே வரச்செய்தார். செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் பிடிபட்டான். அவன் யூதா குலத்தைச் சார்ந்தவன்.
19 யோசுவா ஆக்கானிடம், "என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை எனக்குச் சொல். என்னிடமிருந்து மறைக்காதே" என்றார்.
20 ஆக்கான் யோசுவாவுக்கு மறுமொழியாக, "உண்மையில் நான் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். நான் செய்தது இதுவே:
21 அழிவுக்குரியவற்றுள் ஓர் அழகான பாபிலோனிய மேலாடையையும், ஒரு கிலோ முந்நூறு கிராம் வெள்ளியையும், ஐந்நூற்று எழுபத்தைந்து கிராம் தங்கக் கட்டியையும் கண்டேன். அவற்றின்மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக்கொண்டேன். எனது கூடாரத்திற்குள் வெள்ளி அடிப்பகுதியில் இருக்க அவற்றைத் தரையில் புதைத்து வைத்துள்ளேன்" என்றான்.
22 யோசுவா தூதரை அனுப்பினார். அவர்கள் கூடாரத்திற்குள் விரைந்து சென்றனர். இதோ! வெள்ளி அடிப்பகுதியில் இருக்க, அவை அவனது கூடாரத்திற்குள் தரையில் புதைக்கப்பட்டிருந்தன.
23 அவர்கள் கூடாரத்திலிருந்து அவற்றைக் கைப்பற்றினர். அவர்கள் அவற்றை யோசுவாவிடமும் எல்லா இஸ்ரயேல் மக்களிடமும் கொண்டுவந்து ஆண்டவர் திருமுன் பரப்பி வைத்தனர்.
24 செராகின் மகன் ஆக்கான், வெள்ளி, மேலாடை, தங்கக்கட்டி, அவனுடைய புதல்வர், புதல்வியர், அவனுடைய மாடு, கழுதை, ஆடு, கூடாரம் ஆகிய அவனுக்கிருந்த அனைத்தையும் யோசுவா கைப்பற்றி அவர்களோடு எல்லா இஸ்ரயேல் மக்களையும் ஆக்கோர் பள்ளத்தாக்கிற்குக் கூட்டி வந்தார்.
25 யோசுவா, "ஏன் நீ எங்களுக்குத் தொல்லை வருவித்தாய்? இன்றே ஆண்டவரும் உனக்குத் தொல்லை வருவிப்பார்" என்றார். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் அவனைக் கல்லால் எறிந்து கொன்றனர். அப்பொருள்களைத் தீக்கிரையாக்கி அவனைச் சார்ந்தவர்களைக் கல்லால் எறிந்து கொன்றனர்.
26 அவன்மீது ஒரு பெரும் கற்குவியல் எழுப்பினர். அது இந்நாள்வரை உள்ளது. ஆண்டவர் தம் கடுஞ்சினத்தைத் தணித்துக்கொண்டார். ஆதலால், இந்நாள் வரை அவ்விடத்தின் பெயர் 'ஆக்கோர் பள்ளத்தாக்கு' என அழைக்கப்படுகின்றது. [*]
- குறிப்பு
[*] 7:26 எபிரேயத்தில், 'பேரிடர்' என்பது பொருள்.
அதிகாரம் 8
தொகுஆயி நகரைக் கைப்பற்றல்
தொகு
1 ஆண்டவர் யோசுவாவிடம், "அஞ்சாதே, கலங்காதே; உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள். ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்! இதோ! ஆயியின் மன்னனையும், அதன் மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன்.
2 எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்வாய்; கைப்பற்றப்பட்ட பொருள்களையும் கால்நடைகளையும் உங்களுக்கு வைத்துக் கொள்ளுங்கள். நகருக்குப் பின்புறத்தில் ஒரு பதுங்கிடம் அமை" என்றார்.
3 அவ்வாறே யோசுவாவும் எல்லாப் போர்வீரர்களும் ஆயிக்குப் புறப்படத் தயாராயினர். யோசுவா முப்பதாயிரம் வலிமை வாய்ந்த போர் வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை இரவில் அனுப்பினார்.
4 அவர்களிடம், "பாருங்கள், நீங்கள் அந்நகருக்குப் பின்புறம் பதுங்கி இருங்கள். நகரிலிருந்து மிகவும் தொலையில் போய்விடாதீர்கள். அனைவரும் தயாராக இருங்கள்.
5 நானும் என்னுடன் இருக்கும் மக்கள் எல்லாரும் நகருக்கு அருகில் வருவோம். நம்மைப் பிடிக்க முன்புபோல் அவர்கள் வெளியே வருவார்கள். அவர்கள்முன் நாங்கள் ஓடுவோம்.
6 அவர்கள் எங்கள்பின் வெளியே வருவார்கள். நகரிலிருந்து வெகுதூரம் வரும்வரை அவர்களைக் கொண்டுவந்து விடுவோம். அவர்கள் 'முன்புபோலத் தப்பி ஓடுகின்றார்கள்' என்று சொல்லிக்கொள்வார்கள். நாங்கள் அவர்கள் முன் ஓடுவோம்.
7 நீங்கள் பதுங்கிடத்திலிருந்து எழுந்து நகரைக் கைப்பற்றுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அதை உங்கள் கையில் கொடுப்பார்.
8 நீங்கள் நகரைக் கைப்பற்றியதும், அதை நெருப்பினால் எரியுங்கள். கடவுள் கூறியது போலவே செய்யுங்கள். உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கவனமாயிருங்கள்" என்றார்.
9 யோசுவா அவர்களை அனுப்ப, அவர்கள் பதுங்கிடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் ஆயிக்கு மேற்காகப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் பதுங்கிக்கொண்டனர். யோசுவா இரவில் மக்கள் நடுவே தங்கினார்.
10 யோசுவா வைகறையில் எழுந்து மக்களை எண்ணினார். அவரும் இஸ்ரயேலின் முதியோரும் மக்களுக்கு முன்னே ஆயிக்குச் சென்றனர்.
11 அவருடன் இருந்த போர்வீரர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்று, அந்நகருக்கு அருகில் வந்தனர். அவர்கள் ஆயிக்கு வடக்கே பாளையம் இறங்கினார்கள். அவர்களுக்கும் ஆயிக்கும் இடையில் ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12 யோசுவா ஏறக்குறைய ஐயாயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு சென்று பெத்தேலுக்கும் ஆயிக்கும் அடையில் நகருக்குக் கிழக்கே பதுங்கிடத்தில் தங்கச் செய்தார்.
13 மக்கள் நகருக்கு வடக்காகவும், பள்ளத்தாக்கிற்குக் கிழக்காகவும் இருந்த இடத்தில் பாளையம் இறங்கினார்கள். யோசுவா அவ்விரவைப் பள்ளத்தாக்கில் கழித்தார்.
14 ஆயியின் மன்னன் இதைக் கண்டதும், அந்நகர மக்கள் காலையில் விரைந்து எழுந்து இஸ்ரயேலுடன் போரிட வெளியே வந்தனர். அவனும் மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு, அராபாவுக்குமுன் வந்தனர். நகருக்குப் பின்புறம் எதிரிகள் பதுங்கியிருந்ததை அவன் அறியவில்லை.
15 யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் அவர்கள் முன் தோற்றவர்கள்போல் பாலைநிலம் நோக்கி ஓடினார்கள்.
16 நகரில் இருந்த மக்கள் எல்லாரும் ஒன்றுகூடி அவர்களைத் துரத்தினர். அவர்கள் யோசுவாவின்பின் ஓட, நகரிலிருந்து பிரிக்கப்பட்டனர்.
17 இஸ்ரயேலைத் துரத்தி ஆயி, பெத்தேல் இவற்றிலிருந்து வெளியே வராதவன் எவனும் இல்லை. அனைவரும் நகரைத் திறந்துவிட்டபடியே வெளியேறி இஸ்ரயேலின் பின்னே ஓடினர்.
18 ஆண்டவர் யோசுவாவிடம், "உன் கையிலுள்ள ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கு. ஏனெனில் நான் அதை உன் கையில் ஒப்படைப்பேன்" என்றார். அவ்வாறே யோசுவா தம் கையில் இருந்த ஈட்டியை ஆயியை நோக்கி ஓங்கினார்.
19 பதுங்கியிருந்தவர் வேகமாகத் தம் இடத்திலிருந்து எழுந்தனர். யோசுவா கையை ஓங்கியதும் அவர்கள் வேகமாக ஓடிவந்து நகரினுள் புகுந்து அதைக் கைப்பற்றி விரைவாக அந்நகரை நெருப்பால் எரித்தனர்.
20 ஆயியின் மக்கள் திரும்பிப் பார்த்தனர். இதோ நகரினின்று எழும்பிய புகை விண்ணை நோக்கிப் போவதைக் கண்டனர். எப்பக்கமும் தப்பியோட அவர்களுக்கு வாய்ப்பு இல்லை. பாலைநிலம் நோக்கி ஓடிய இஸ்ரயேல் மக்கள் தங்களைத் துரத்தியவர்மீது திரும்பிப் பாய்ந்தனர்.
21 பதுங்கியிருந்தவர்கள் நகரைக் கைப்பற்றியதையும் ஆயியின் புகை மேலே எழும்புவதையும் கண்ட யோசுவாவும் எல்லா இஸ்ரயேல் மக்களும் திரும்பிச்சென்று ஆயி மக்களைத் தாக்கினார்.
22 இந்நேரத்தில் பதுங்கியிருந்தோரும் நகரிலிருந்து வெளியே வந்து அவர்களைத் தாக்கினர். எனவே இருபக்கமும் இஸ்ரயேலருக்கு இடையே அவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களுள் ஒருவனும் உயிரோடு தப்பிக்காதபடி அவர்கள் தாக்கப்பட்டனர்.
23 இஸ்ரயேலர் ஆயியின் மன்னனை உயிருடன் பிடித்து யோசுவாவிடம் கொண்டுவந்தனர்.
24 இஸ்ரயேலர் ஆயி மக்கள் அனைவரையும் பாலை நிலத்தில் துரத்திச் சென்று கொன்றனர்; அனைவரையும் வாள் முனையில் அடியோடு அழித்தனர். பின்னர் இஸ்ரயேலர் அனைவரும் ஆயிக்குத் திரும்பி அதையும் வாள்முனைக்கு இரையாக்கினர்.
25 ஆண்களும் பெண்களுமாக அன்று இறந்தவர் பன்னிரண்டாயிரம் பேர். ஆயியின் ஆண்கள் எல்லாருமே அன்று வீழந்தனர்.
26 ஆயியின் எல்லா மக்களையும் கொல்லும் வரை, யோசுவா ஈட்டியுடன் ஓங்கிய கையை மடக்கவில்லை.
27 யோசுவாவுக்கு ஆண்டவர் கூறியபடியே, கால்நடையையும், நகரின் பொருள்களையும் மட்டும் இஸ்ரயேல் மக்கள் கொள்ளைப் பொருளாக எடுத்துக் கொண்டனர்.
28 யோசுவா ஆயியைத் தீக்கிரையாக்கி, அது என்றென்றும் அழிவின் மேடாக இருக்குமாறு செய்தார்.
29 அது இன்றுவரை அப்படியே உள்ளது. அவர் ஆயி மன்னனைத் தூக்கிலேற்றினார். கதிரவன் சாய்ந்தவுடன் யோசுவாவின் கட்டளைப்படி அவர்கள் அவன் உடலைத் தூக்கிலிருந்து இறக்கி, நகரின் நுழைவாயிலில் எறிந்தார்கள். அதன் மீது பெரும் கற்குவியலை எழுப்பினர். அது இன்றுவரை உள்ளது.
ஏபால் மலையில் திருச்சட்டம் வாசித்தல்
தொகு
30 இதன்பின் யோசுவா இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஏபால் மலையில் ஒரு பீடம் எழுப்பினார்.
31 அது ஆண்டவரின் ஊழியராகிய மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடி அமைந்தது. மோசேயின் திருச்சட்டநூலில் எழுதியுள்ளது: 'இரும்புக் கருவிகளைக் கொண்டு செதுக்காத முழுக் கற்களால் பீடம் அமைக்கப்பட வேண்டும்.' அவர்கள் அதன்மீது ஆண்டவருக்கு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக்கொடுத்தனர். [1]
32 அங்குக் கற்களின் மீது மோசேயின் கட்டளையை யோசுவா இஸ்ரயேலர் முன்னிலையில் எழுதினார். [2]
33 இஸ்ரயேல் மக்களும் வெளிநாட்டவரும் முதியோர்' அலுவலர், நீதிபதிகளுடன் பேழைக்கு முன்னே இருமருங்கிலும் நின்றுகொண்டிருந்தனர். லேவியக் குருக்கள் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஏந்திக்கொண்டிருந்தனர். பாதிப்பேர் கெரிசிம் மலை முன்பும், பாதிப்பேர் ஏபால் மலை முன்பும், கடவுளின் ஊழியராகிய மோசே ஏற்கெனவே கட்டளையிட்டபடி, இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி தர நின்றுகொண்டிருந்தனர்.
34 அதன்பின் திருச்சட்டநூலில் எழுதியுள்ள அனைத்து ஒழுங்குகளின்படி ஆசிகளையும், சாபங்களையும், சட்டத்தின் எல்லா நியமங்களையும் அவர் வாசித்தார்.
35 மோசே கட்டளையிட்ட எல்லாவற்றினின்றும் இஸ்ரயேல் சபைமுன் யோசுவா வாசிக்காதது எதுவுமில்லை. அப்போது பெண்கள், குழந்தைகள், அவர்களிடையே வாழ்ந்த அயலார் ஆகியோரும் உடன் இருந்தனர். [3]
- குறிப்புகள்
[1] 8:31 = விப 20:25.
[2] 8:30-32 = இச 27:2-8.
[3] 8:33-35 = இச 11:29; 27:11-14.
(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை