திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

யோபின் நண்பர்களும் அவரைச் சூழ்ந்து நிற்கின்றனர். விவிலிய ஓவியம். ஓவியர்: ஷெஹான் ஃபூக்கே. ஆண்டு: 1867. பாரிசு.

யோபு (The Book of Job)

தொகு

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

அதிகாரம் 13

தொகு


1 இதோ! இவை என் கண்களே கண்டவை;
என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.


2 நீங்கள் அறிந்திருப்பதை நானும் அறிந்திருக்கின்றேன்;
நான் உங்களுக்கு எதிலும் இளைத்தவன் இல்லை.


3 ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு சொல்லாடுவேன்;
கடவுளோடு வழக்காட விழைகின்றேன்.


4 நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்;
நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.


5 ஐயோ! பேசாது அனைவரும் அமைதியாக இருங்கள்;
அதுவே உங்களுக்கு ஞானமாகும்.


6 இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்;
என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.


7 இறைவன் பொருட்டு முறைகேடாய்ப் பேசுவீர்களா?
அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?


8 கடவுள் பொருட்டு ஒரு சார்பாகப் பேசுவீர்களா?
அல்லது அவர்க்காக வாதாடுவீர்களா?


9 அவர் உங்களை ஆராய்ந்தால், உங்களில் நல்லதைக் காண்பாரா?
அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல, அவரையும் வஞ்சிப்பீர்களா?


10 நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்
உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.


11 அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா?
அவருடைய அச்சுறுத்தல் உங்கள் மீது விழாதா?


12 உங்களுடைய மூதுரைகள் சாம்பலையொத்த முதுமொழிகள்;
உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில் களிமண்ணையொத்த வாதங்கள்.


13 பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;
எனக்கு எது வந்தாலும் வரட்டும்.


14 என் சதையை என் பற்களிடையே ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?
என் உயிரை என் கைகளால் ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்?


15 அவர் என்னைக் கொன்றாலும் கொல்லட்டும்;
இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என எடுத்துரைப்பதில் நான் தளரேன்.


16 இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்;
ஏனெனில், இறைப்பற்றில்லாதார் அவர்முன் வர முடியாது.


17 என் வார்த்தையைக் கவனித்துக் கேளுங்கள்;
என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.


18 இதோ! இப்பொழுது என் வழக்கை வகைப்படுத்தி வைத்தேன்;
குற்றமற்றவன் என மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.


19 இறைவா! நீர்தாமோ எனக்கெதிராய் வழக்காடுவது?
அவ்வாறாயின், இப்போதே வாய்பொத்தி உயிர் நீப்பேன்.


20 எனக்கு இரண்டு செயல்களை மட்டும் செய்யும்;
அப்போது உமது முகத்திலிருந்து ஒளியமாட்டேன்.


21 உமது கையை என்னிடமிருந்து எடுத்துவிடும்;
உம்மைப்பற்றிய திகில் என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.


22 பின்னர் என்னைக் கூப்பிடும்; நான் விடையளிப்பேன்;
அல்லது என்னைப் பேசவிடும்; பின் நீர் மறுமொழி அருளும்.


23 என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை?
என் மீறுதலையும் தீமையையும் எனக்குணர்த்தும்.


24 உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்?
பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?


25 காற்றடித்த சருகைப் பறக்கடிப்பீரோ?
காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?


26 கசப்பானவற்றை எனக்கெதிராய் எழுதுகின்றீர்;
என் இளமையின் குற்றங்களை எனக்கு உடைமையாக்குகின்றீர்.


27 என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்;
கண் வைத்தீர் என் பாதை எல்லாம்;
காலடிக்கு எல்லை குறித்துக் குழிதோண்டினீர். [*]


28 மனிதர் உளுத்தமரம்போல் விழுந்து விடுகின்றனர்;
அந்துப்பூச்சி அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.


குறிப்பு

[*] 13:27 = யோபு 33:11.


அதிகாரம் 14

தொகு


1 பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; அ
வருத்தமோ மிகுதி.


2 மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்;
நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.


3 இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?
தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?


4 அழுக்குற்றதினின்று அழுக்கற்றதைக் கொணர முடியுமா?
யாராலும் முடியவே முடியாது.


5 அவர்களுடைய நாள்கள் உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை உம்மிடம் உள்ளது;
அவர்கள் கடக்க இயலாத எல்லையைக் குறித்தீர்.


6 எனவே அவர்களிடமிருந்து உம் பார்வையைத் திருப்பும்;
அப்பொழுது, கூலியாள்கள் தம் நாள் முடிவில் இருப்பது போல்,
அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.


7 மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;
அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;
அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.


8 அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,
அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,


9 தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;
இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.


10 ஆனால், மனிதர் மடிகின்றனர்;
மண்ணில் மறைகின்றனர்;
உயிர் போனபின் எங்கே அவர்கள்?


11 ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;
ஆறும் வறண்டு காய்ந்துபோம்.


12 மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;
வானங்கள் அழியும்வரை அவர்கள் எழுவதில்லை;
அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.


13 ஓ! என்னைப் பாதாளத்தில் ஒளித்து வைக்கமாட்டீரா?
உமது சீற்றம் தணியும்வரை மறைத்து வைக்கமாட்டீரா?
என்னை நினைக்க ஒருநேரம் குறிக்கமாட்டீரா?


14 மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?
எனக்கு விடிவு வரும்வரை,
என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன்.


15 நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;
உம் கைவினையாம் என்னைக் காண விழைவீர்;


16 அப்பொழுது, என் காலடிகளைக் கணக்கிடுவீர்;
என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.


17 என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;
என் குற்றத்தை மூடி மறைத்தீர்.


18 ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;
பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.


19 கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;
நிலத்தின் மண்ணை வெள்ளம் அடித்துப்போகும்;
இவ்வாறே ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.


20 ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்; ஒழிந்துபோவான் அவனும்;
அவனது முகத்தை உருக்குலைத்து, விரட்டியடிப்பீர்.


21 புதல்வர்கள் புகழ்பெறினும் அவன் அறிந்தான் இல்லை;
கதியிழந்தாலும் அதை அவன் கண்டான் இல்லை.


22 அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;
அவன் புலம்புவது தன் பொருட்டே.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 15 முதல் 16 வரை