திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை
யோபு (The Book of Job)
தொகுஅதிகாரங்கள் 17 முதல் 18 வரை
அதிகாரம் 17
தொகு
1 என் உயிர் ஊசலாடுகின்றது;
என் நாள்கள் முடிந்துவிட்டன;
கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.
2 உண்மையாகவே, எள்ளி நகைப்போர் என்னைச் சூழ்ந்துள்ளனர்;
என் கண்முன் அவர்தம் பகைமையே நிற்கின்றது.
3 நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக!
வேறுயார் எனக்குக் கையடித்து உறுதியளிப்பார்?
4 அறியமுடியாதபடி அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்;
அதனால் அவர்கள் மேன்மையடைய விடமாட்டீர்.
5 கைம்மாறு கருதி நண்பர்க்கு எதிராய்ப்
புறங்கூறுவோரின் பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.
6 என் இனத்தார்க்கு அவர் என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்;
என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.
7 கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன;
என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.
8 இதைக்கண்டு நேர்மையானவர் திகைக்கின்றனர்;
குற்றமற்றோர் இறைப்பற்று இல்லார் மேல் சீற்றமடைகின்றனர்.
9 நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்;
கறையற்ற கையினர் இன்னும் வலிமை அடைவர்.
10 ஆனால், இப்பொழுது நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள்.
வந்தாலும் ஞானமுள்ள எவரையும் உங்களில் காணமாட்டேன்.
11 கடந்தன என் நாள்கள்; தகர்ந்தன என் திட்டங்கள்;
அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.
12 அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்;
ஒளி இருளுக்கு அண்மையில் உளது என்கின்றனர்.
13 இருள் உலகையே என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில்,
என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,
14 படுகுழியை நோக்கி 'என் தந்தையே' என்றும்,
புழுவை நோக்கி 'என் தாயே, என் தமக்கையே என்றும் புகல்வேனாகில்,
15 பின் எங்கே என் நம்பிக்கை?
என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?
16 நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது,
இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?
அதிகாரம் 18
தொகுதீயோரின் தவிர்க்க முடியாத முடிவு
தொகு
1 அதற்குச் சூகாவியனான பில்தாது சொன்ன பதில்:
2 எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்?
சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.
3 மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?
மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?
4 சீற்றத்தில் உம்மையே நீர் கீறிக்கொள்வதனால்,
உம்பொருட்டு உலகம் கைவிடப்பட வேண்டுமா?
பாறையும் தன் இடம்விட்டு நகர்த்தப்படவேண்டுமா?
5 தீயவரின் ஒளி அணைந்துபோம்;
அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.
6 அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்;
அவர்கள்மீது ஒளிரும் விளக்கு அணைந்துபோம். [*]
7 அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்;
அவர்களின் திட்டமே அவர்களைக் கவிழ்க்கும்.
8 அவர்களின் கால்களே அவர்களை வலைக்குள் தள்ளும்;
அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.
9 கண்ணி அவர்களின் குதிகாலைச் சிக்கிப்பிடிக்கும்;
சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.
10 மண்மீது அவர்களுக்குச் சுருக்கும்,
பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.
11 எப்பக்கமும் திகில் அவர்களை நடுங்க வைக்கும்;
கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.
12 பட்டினி அவர்களின் வலிமையை விழுங்கிடும்;
தீங்கு அவர்களின் வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.
13 நோய் அவர்களின் தோலைத் தின்னும்;
சாவின் தலைப்பேறு அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.
14 அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று பிடுங்கப்படுவர்;
அச்சம்தரும் அரசன்முன் கொணரப்படுவர்.
15 அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது;
அவர்களின் உறைவிடங்களில் கந்தகம் தூவப்படுகின்றது.
16 கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;
மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.
17 அவர்களின் நினைவே அவனியில் இல்லாதுபோம்;
மண்ணின் முகத்தே அவர்களுக்குப் பெயரே இல்லாது போம்.
18 ஒளியிலிருந்து இருளுக்குள் அவர்கள் தள்ளப்படுவர்;
உலகிலிருந்தே அவர்கள் துரத்தப்படுவர்.
19 அவர்களின் இனத்தாரிடையே அவர்களுக்கு
வழிமரபும் வழித்தோன்றலுமில்லை;
அவர்கள் வாழ்ந்த இடத்தில் அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.
20 அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது மேற்றிசை;
திகிலுற்றது கீழ்த்திசை.
21 கொடியவரின் குடியிருப்பெல்லாம் இத்தகையதே;
இறைவனை அறியாதவரின் நிலையும் இதுவே.
- குறிப்பு
[*] 18:5-6 = யோபு 21:17.
(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 19 முதல் 20 வரை