திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை
யோபு (The Book of Job)
தொகுஅதிகாரங்கள் 25 முதல் 26 வரை
அதிகாரம் 25
தொகுகடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்
தொகு
1 பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:
2 ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;
அமைதியை உன்னதங்களில் அவரே நிலைநாட்டுவார்.
3 அளவிட முடியுமா அவர்தம் படைகளை?
எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?
4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியராய் இருக்க முடியும்?
அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?
5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே!
விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!
6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்!
பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!
அதிகாரம் 26
தொகு"பில்தாத்தின் சொற்கள் வீணே"
தொகு
1 அதற்கு யோபு கூறிய பதில்:
2 என்போன்ற வலிமையற்றவர்க்கு எத்துணைத் துணைபுரிந்தீர்!
ஆற்றலற்ற தோளுக்கு எவ்வளவு துணைநின்றீர்!
3 என் போன்ற அறிவற்றவர்க்கு எவ்வளவு அறிவுரை கூறினீர்!
நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!
4 எவர் துணைகொண்டு இயம்பினீர் இம்மொழிகளை?
எவர்தம் ஏவுதல் உம்மிடமிருந்து வெளிப்பட்டது?
5 கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;
நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும் அஞ்சுகின்றன.
6 பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;
படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.
7 வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;
காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.
8 நீரினை மேகத்துள் பொதிந்துள்ளார்;
அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.
9 தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;
முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.
10 நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,
இருளுக்கும் ஒளிக்குமிடையில் எல்லை அமைத்தார்.
11 விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;
அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.
12 ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;
இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.
13 தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;
தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார்.
14 ஓ! இவையாவும் அவர்தம் செயல்களின் விளிம்புகளே!
எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.
அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய யாரால் இயலும்?
(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை