திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

துன்புறும் யோபு. சிரிய மொழி விவிலியப் பிரதி. காப்பிடம்: பாரிசு.

அதிகாரம் 3

தொகு

யோபு தாம் பிறந்த நாளைச் சபித்தல்

தொகு


1 இதன்பிறகு யோபு வாய்திறந்து,
தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார்.


2 யோபு கூறியது:


3 "ஒழிக நான் பிறந்த அந்த நாளே!
ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்
சொல்லிய அந்த இரவே!


4 அந்த நாள் இருளாகட்டும்;
மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்;
ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்.


5 காரிருளும் சாவிருட்டும்
அதைக் கவ்விக்கொள்ளட்டும்;
கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்;
பகலை இருளாக்குபவை அதனை அச்சுறுத்தட்டும்.


6 அவ்விரவைப் பேயிருட்டு பிடிப்பதாக!
ஆண்டின் நாள்கணக்கினின்று அது அகற்றப்படுக!
திங்கள் எண்ணிக்கையிலும் அது சேராதொழிக!


7 அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்;
மகிழ்ச்சியொலி ஒன்றும் அதில் எழாதிருக்கட்டும்;


8 பகலைப் பழிப்போரும்
லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும்
அதனைப் பழிக்கட்டும்.


9 அதன் விடியற்காலை விண்மீன்கள்
இருண்டு போகட்டும்;
அது விடியலொளிக்குக் காத்திருக்க
அதுவும் இல்லாமற்போகட்டும்;
அது வைகறையின் கண்விழிப்பைக் காணாதிருக்கட்டும்.


10 ஏனெனில் என் தாயின் கருப்பையை
அவ்விரவு அடைக்காமற்போயிற்றே!
என் கண்களினின்று வேதனையை
அது மறைக்காமற் போயிற்றே!


11 கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?
கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?


12 என்னை ஏந்த முழங்கால்கள் முன் வந்ததேன்?
நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?


13 இல்லாதிருந்திருந்தால்,
நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன்.


14 பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட
மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும்


15 அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு,
வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின
உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன்.


16 அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும்
ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.


17 அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.
களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.


18 சிறைப்பட்டோர் அங்கு நிம்மதியாகக் கூடியிருப்பர்;
ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.


19 சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்;
அடிமை தன் ஆண்டான் பிடியில் இரான். [1]


20 உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?
உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்?


21 சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;
அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். [2]
ஆனால் அதுவோ வந்த பாடில்லை.


22 கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு,
வாழ்வு வழங்கப்படுவதேன்?


23 எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,
எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,
அவருக்கு ஒளியால் என்ன பயன்?


24 பெருமூச்சு எனக்கு உணவாயிற்று;
வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.


25 ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ
அதுவே எனக்கு நேர்ந்தது;
திகிலுற்றது எதுவோ
அதுவே என்மேல் விழுந்தது.


26 எனக்கு நிம்மதி இல்லை;
ஓய்வு இல்லை; அமைதி இல்லை;
அல்லலே வந்துற்றது."


குறிப்புகள்

[1] 3:1-19 = எரே 20:14-18.
[2] 3:21 = திவெ 9:6.


அதிகாரம் 4

தொகு

கடவுள் மீது நம்பிக்கை

தொகு

(4:1-14:22)


1 அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்:


2 "ஒன்று சொன்னால் உமக்குப் பொறுக்குமோ?
சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?


3 பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்!
தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!


4 உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத் தாங்கியுள்ளன;
தள்ளாடும் கால்களை உறுதியாக்கியுள்ளன.


5 ஆனால் இப்பொழுதோ, ஒன்று உமக்கு வந்துற்றதும் வருந்துகின்றீர்;
அது உம்மைத் தாக்கியதும் கலங்குகின்றீர்.


6 இறையச்சம் அல்லவா உமது உறுதி?
நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?


7 நினைத்துப்பாரும்!
குற்றமற்றவர் எவராவது அழிந்ததுண்டா?
நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?


8 நான் பார்த்த அளவில்,
தீவினையை உழுது,
தீங்கினை விதைத்தவர் அறுப்பது அதையே!


9 கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்;
அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.


10 அரியின் முழக்கமும்
கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்;
குருளையின் பற்களும் உடைபடும்.


11 இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்;
குலைந்துபோம் பெண்சிங்கத்தின் குட்டிகள்.


12 எனக்கொரு வார்த்தை மறைவாய் வந்தது;
அதன் மெல்லிய ஓசை என் செவிக்கு எட்டியது.


13 ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில்,
இரவுக் காட்சியின் சிந்தனைகளில், [*]


14 அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள,
என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.


15 ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது;
என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.


16 ஆவி நின்றது; ஆனால், அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை;
உருவொன்று என் கண்முன் நின்றது; அமைதி நிலவிற்று;
குரலொன்றைக் கேட்டேன்.


17 கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?
படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?


18 அவர் தம் தொண்டர்களிலே நம்பிக்கை வைக்கவில்லையெனில்,
அவருடைய வான தூதரிடமே அவர் குறைகாண்கின்றாரெனில்,


19 புழுதியைக் கால்கோளாகக்கொண்டு,
மண் குடிசையில் வாழ்ந்து,
அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும் மனிதர் எம்மாத்திரம்?


20 காலைமுதல் மாலைவரையில் அவர்கள் ஒழிக்கப்படுவர்;
ஈவு இன்றி என்றென்றும் அழிக்கப்படுவர்.


21 அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட,
அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?


குறிப்பு

[*] 4:13 = யோபு 33:15.

(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை