திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை
விடுதலைப் பயணம் (The Book of Exodus)
தொகுஅதிகாரங்கள் 19 முதல் 20 வரை
அதிகாரம் 19
தொகுசீனாய் மலையருகில் இஸ்ரயேலர்
தொகு
1 எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த மூன்றாம் மாதம் முதல் நாளில்
இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தைச் சென்றடைந்தனர்.
2 இரபிதிமிலிருந்து பயணம் மேற்கொண்ட அவர்கள்
சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து,
பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.
அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர்.
3 ஆனால் மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார்.
அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து,
"யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்லவேண்டியது -
இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது - இதுவே:
4 "நான் எகிப்திற்குச் செய்ததையும்,
கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி
என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
5 நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து
என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால்
அனைத்துலகும் என் உடைமையேயெனினும்,
நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். [1]
6 மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும்,
தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.
இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை" என்றார். [2] [3]
7 மோசே வந்து, மக்களின் தலைவர்களை வரவழைத்து,
ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட
இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
8 மக்கள் அனைவரும் ஒரே குரலாக,
"ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்"
என்று மறுமொழி கூறினர்.
மக்களின் பதிலை மோசே ஆண்டவரிடம் சமர்ப்பித்தார்.
9 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"இதோ! நான் உன்னோடு பேசுவதை மக்கள் கேட்கும்படியும்
என்றென்றும் உன்னை நம்பும்படியும்
நான் கார் மேகத்தில் உன்னிடம் வருவேன்" என்றார்.
மோசேயும் மக்களின் வார்த்தைகளை ஆண்டவருக்கு அறிவித்தார்.
10 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"நீ மக்களிடம் போய் அவர்களை இன்றும் நாளையும் தூய்மைப்படுத்து.
அவர்கள் தம் துணிகளைத் துவைத்துக் கொள்ளட்டும்.
11 இவ்வாறு மூன்றாம் நாளுக்காகத் தயாராகட்டும்.
ஏனெனில், மூன்றாம் நாள் மக்கள் அனைவர்க்கும் முன்பாக
ஆண்டவர் சீனாய் மலைமேல் இறங்கிவருவார்.
12 மலையைச் சுற்றிலும் மக்களுக்கான
எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு.
உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும்,
அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்.
மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி.
13 அத்தகையவரை யாரும் கையால் தொடாமல்,
கல்லால் எறிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட கால்நடையோ மனிதரோ சாகவேண்டும்
என்று அவர்களுக்குச் சொல்.
எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள் [4]
மலைமேல் ஏறிவரட்டும்" என்றார். [5]
14 மோசே மலையை விட்டிறங்கி மக்களிடம் சென்றார்.
மக்களைத் தூய்மைப்படுத்தினார்.
அவர்களும் தம் துணிகளைத் துவைத்துக் கொண்டார்கள்.
15 அவர் மக்களை நோக்கி,
"மூன்றாம் நாளுக்காகத் தயாராக இருங்கள்.
மனைவியோடு கூடாதிருங்கள்" என்றார்.
16 மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில்
பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது.
மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது.
எக்காளப் பேரொலி எழுந்தது.
இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். [6]
17 கடவுளைச் சந்திப்பதற்காக மோசே
மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார்.
அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள்.
18 சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது.
ஏனெனில் ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார்.
அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது.
மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. [7]
19 எக்காள முழக்கம் எழும்பி வரவர மிகுதியாயிற்று.
மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார்.
20 ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார்.
அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க,
மோசே மேலே ஏறிச்சென்றார்.
21 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"இறங்கிச் செல்.
மக்கள் ஆண்டவரைப் பார்க்க விரும்பி எல்லை மீறி வராதபடியும்,
அவ்வாறு வந்து பலர் சாகாதபடியும் அவர்களை எச்சரிக்கை செய்.
22 அவ்வாறே ஆண்டவரை அணுகிச் செல்லும் குருக்களும்
தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளட்டும்.
இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்" என்று சொன்னார்.
23 மோசே ஆண்டவரிடம்,
"சீனாய் மலைமேல் மக்கள் ஏறிவரமாட்டார்கள்.
ஏனெனில், 'மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து'
என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்" என்றார்.
24 ஆண்டவர் அவரை நோக்கி,
"நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா.
குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக
எல்லை மீற வேண்டாம்;
இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்" என்றார்.
25 மோசே கீழே இறங்கி,
மக்களிடம் இதுபற்றிக் கூறினார்.
- குறிப்புகள்
[1] 19:5 = இச 4:20; 7:6; 14:2; 26:18; தீத் 2:14.
[2] 19:5-6 = 1 பேது 2:9.
[3] 19:6 = திவெ 1:6; 5:10.
[4] 19:13 - 'குறிப்பிட்டவர்கள்' - 'அவர்கள்' என்பது எபிரேய மூலம்.
[5] 19:12-13 = எபி 12:18-20.
[6] 19:16 = திவெ 4:5.
[7] 19:16-18 = இச 4:11-12.
அதிகாரம் 20
தொகுகடவுள் தந்த கட்டளைகள்
தொகு(இச 5:1-21)
1 கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:
2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்;
அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.
3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.
4 மேலே விண்வெளியில்,
கீழே மண்ணுலகில்,
பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள
யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ
நீ உருவாக்க வேண்டாம்.
5 நீ அவைகளை வழிபடவோ
அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம்.
ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான்
இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்;
என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப்
பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும்
தண்டித்துத் தீர்ப்பேன். [1]
6 மாறாக என்மீது அன்புகூர்ந்து
என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன். [2]
7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை
வீணாகப் பயன்படுத்தாதே;
ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை
ஆண்டவர் தண்டியாது விடார். [3]
8 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. [4]
9 ஆறு நாள்கள் நீ உழைத்து
உன் அனைத்து வேலையையும் செய்வாய்.
10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள்.
எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும்
உன் அடிமையும் அடிமைப்பெண்ணும்
உன் கால்நடைகளும்
உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும்
யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். [5]
11 ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும்,
கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்.
இவ்வாறு ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி
அதனைப் புனிதப்படுத்தினார். [6]
12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில்
உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி,
உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. [7]
13 கொலை செய்யாதே. [8]
14 விபசாரம் செய்யாதே. [9]
15 களவு செய்யாதே. [10]
16 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. [11]
17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே;
பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண்,
மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. [12]
மக்களின் அச்சம்
தொகு(இச 5:22-33)
18 மக்கள் அனைவரும் இடி மின்னல்களையும்
எக்காள முழக்கத்தையும்
புகையையும் மலையையும் கண்டனர்;
கண்டு, மக்கள் நடுநடுங்கித் தூரத்தில் நின்று கொண்டு,
19 மோசேயை நோக்கி,
"நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம்.
கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம்.
ஏனெனில் நாங்கள் செத்துப் போவோம்" என்றனர். [13]
20 மோசே மக்களை நோக்கி,
"அஞ்சாதீர்கள்;
கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று
உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்" என்றார்.
21 மக்கள் தொலையில் நின்றுகொண்டிருக்க
மோசே கடவுள் இருந்த காரிருளை அணுகினார்.
பலி பீடம் பற்றிய சட்டங்கள்
தொகு
22 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு உரைத்தார்:
இவ்வாறு நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்:
"நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்பதை நீங்கள் கண்டீர்கள்.
23 எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும்,
பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.
24 எனக்கென்று மண்ணால் பீடம் அமைத்து,
உன் ஆடுகளையும் மாடுகளையும் அதன்மேல் எரி பலிகளாகவும்,
நல்லுறவுப் பலிகளாகவும் செலுத்து.
நான் என் பெயரை நினைவுபடுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும்,
நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
25 எனக்காகக் கற்பீடம் அமைத்தால்,
செதுக்கிய கற்கள் கொண்டு கட்டவேண்டாம்.
ஏனெனில், உனது உளி அதன்மேல் பட்டால், நீ அதனைத் தீட்டுப்படுத்துவாய். [14]
26 உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்து விடாதபடி,
படிகள் வழியாய் அதன்மேல் ஏறிச்செல்ல வேண்டாம்.
- குறிப்புகள்
[1] 20:4-5 = விப 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 27:15.
[2] 20:5-6 = விப 34:6-7; எண் 14:18; இச 7:9-10.
[3] 20:7 = லேவி 19:12.
[4] 20:8 = விப 16:23-30; 31:12-14.
[5] 20:9-10 = விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23:3.
[6] 20:11 = தொநூ 2:1-3; விப 31:17.
[7] 20:12 = இச 27:16; மத் 15:4; 19:19; மாற் 7:10; 10:19; லூக் 18:20; எபே 6:2-3.
[8] 20:13 = தொநூ 9:6; லேவி 24:17; மத் 5:21; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11.
[9] 20:14 = லேவி 20:10; மத் 5:27; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11.
[10] 20:15 = லேவி 19:11; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9.
[11] 20:16 = விப 23:1; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20.
[12] 20:17 = உரோ 7:7; 13:9.
[13] 20:18-19 = எபி 12:18-19.
[14] 20:25 = இச 27:5-7; யோசு 8:31.
(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 21 முதல் 23 வரை