திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/விடுதலைப் பயணம் (யாத்திராகமம்)/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை
விடுதலைப் பயணம் (The Book of Exodus)
தொகுஅதிகாரங்கள் 9 முதல் 10 வரை
அதிகாரம் 9
தொகுகால்நடைகள் சாவு
தொகு
1 மீண்டும் ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்:
"நீ பார்வோனிடம் சென்று அவனிடம் சொல்;
எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
எனக்கு வழிபாடு செலுத்துவதற்காக என் மக்களைப் போகவிடு!
2 நீ அவர்களைப் போகவிடாமல் இன்னும் தடைசெய்தால்,
3 நாட்டிலுள்ள குதிரைகள், கழுதைகள், ஒட்டகங்கள்,
எருதுகள், ஆடுகள் ஆகிய உன் கால்நடைகள் மேல்
கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது.
4 ஆண்டவரும், இஸ்ரயேலரின் கால்நடைகளுக்கும்,
எகிப்தியரின் கால்நடைகளுக்கும் இடையே வேறுபாடு காட்டுவார்.
எனவே இஸ்ரயேல் மக்களுக்குரியவை அனைத்திலும் எவையுமே மடிந்துபோகா.
5 'நாளையதினமே ஆண்டவர் இதனை இந்நாட்டில் செயல்படுத்தப்போகிறார்'
என்று ஆண்டவரே ஒரு நேரத்தையும் குறித்துவிட்டார்."
6 அதன்படி எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன.
இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை.
7 பார்வோன் ஆளனுப்பி விசாரித்தான்.
இஸ்ரயேலரின் கால்நடைகளில் ஒன்றுகூடச் சாகவில்லை.
ஆயினும் பார்வோனின் மனம் கடினப்பட்டது.
மக்களை அவன் போகவிடவில்லை.
கொப்புளங்கள்
தொகு
8 மேலும் ஆண்டவர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி,
"அடுப்பிலிருந்து சாம்பலை உங்கள் கைகள் நிறைய வாரிக் கொள்ளுங்கள்.
பார்வோன் முன்னிலையில் மோசே அதனை வானத்தில் தூவட்டும்.
9 எகிப்து நாடெங்கும் அது மெல்லிய தூசியாகப் பரவி
மனிதர் மேலும் விலங்குகள் மேலும் கொப்புளங்களாகி வெடித்துப் புண்ணாகும்" என்றார்.
10 அவர்களும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு
பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர்.
மோசே வானத்தில் அதனைத் தூவினார்.
மனிதர் மேலும் விலங்குகள்மேலும் அது
வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று. [1]
11 கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள்
மோசேயின் முன் நிற்க இயலவில்லை.
ஏனெனில், மந்திரவாதிகள் மேலும்
எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.
12 ஆண்டவர் பார்வோனின் மனத்தைக் கடினப்படுத்தினார்.
ஆண்டவர் மோசேக்கு அறிவித்தபடியே அவர்களுக்கு அவன் செவிசாய்க்கவில்லை.
கல்மழை
தொகு
13 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம் பின்வருமாறு கூறினார்:
அதிகாலையில் எழுந்து பார்வோன் முன்னிலையில் வந்துநின்று
அவனை நோக்கிச் சொல்:
எபிரேயரின் கடவுளான ஆண்டவர் சொல்வது இதுவே.
எனக்கு வழிபாடு செய்வதற்காக என் மக்களைப் போகவிடு.
14 இல்லையெனில் இம்முறை கொள்ளைநோய்களை எல்லாம் உன்மேலும்
உன் அலுவலர்மேலும் உன் குடிமக்கள்மேலும் நானே ஏவி விடுவேன்.
இந்நாடெங்கும் எனக்கு நிகர் யாருமே இல்லை என்பதை
இதனால் நீ அறிந்து கொள்வாய்.
15 கையை ஓங்கி, உன்னையும் உன் குடிமக்களையும்
கொள்ளை நோய்களால் இதற்குள் தாக்கியிருப்பேன்.
நீயும் இந்நாட்டிலிருந்து ஒழிந்து போயிருப்பாய்.
16 எனினும், என் வல்லமையைக் காட்டவும்
என் பெயரை நாடெங்கும் அறிக்கையிடவுமே
நான் உன்னை நிலைக்கச் செய்தேன். [2]
17 நீயோ, என் மக்களைப் போகவிடாத அளவுக்கு
இன்னும் தலைதூக்கி நிற்கின்றாய்.
18 எகிப்து நிறுவப்பட்டது தொடங்கி இன்றுவரை
அங்கே இருந்திராத அளவுக்கு மிகக் கொடிய கல்மழையை
அதில் நாளையதினம் இந்நேரத்தில் பெய்யச் செய்வேன்.
19 எனவே, உன் கால்நடைகளையும்
வயல் வெளியில் உனக்குரிய எல்லாவற்றையும்
பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகச்செய்ய இப்போதே ஆளனுப்பிவிடு!
வீட்டிற்குக் கொண்டு சேர்க்கப்படாமல்
வயல்வெளியில் விடப்பட்ட மனிதர் அனைவர் மேலும்
விலங்குகள் அனைத்தின் மேலும் கல்மழை பெய்ய,
எல்லோரும் மடிவர்.
20 பார்வோனின் அலுவலரில் ஆண்டவரின் வார்த்தையை மதித்தவர்
தம் அடிமைகளையும், தம் கால்நடைகளையும்
வீடுகளுக்குள் ஓட்டிவிட்டனர்.
21 ஆண்டவர் வார்த்தையை மதிக்காதவர்
தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும்
வயல்வெளியில் விட்டுவிட்டனர்.
22 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"எகிப்து நாடெங்கும் -
எகிப்து நாட்டிலுள்ள மனிதர், விலங்கு,
வயல்வெளியிலுள்ள பயிர்பச்சை இவற்றின் மேல் -
கல்மழை பொழியுமாறு உன் கையை வானோக்கி நீட்டு" என்றார்.
23 மோசே தம்கோலை வானோக்கி நீட்டவே,
ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார்.
நிலத்தில் நெருப்பு பாய்ந்து வந்தது.
எகிப்து நாடெங்கும் கல்மழை பெய்வித்தார் ஆண்டவர்.
24 கல்மழை பெய்தது.
ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி
அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு
மிகக் கடுமையான கல்மழை பெய்ய
அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது. [3]
25 எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை
வயல்வெளியில் இருந்த அனைத்தையும்
கல்மழை தாக்கியது;
மேலும் வயல்வெளியில் பயிர்பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது;
வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.
26 இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த
கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.
27 பார்வோன் ஆளனுப்பி மோசேயையும் ஆரோனையும் கூப்பிட்டான்.
அவன் அவர்களை நோக்கி,
"நான் இம்முறை பாவம் செய்துவிட்டேன்.
ஆண்டவரே நீதியுள்ளவர். நானும் என் மக்களுமே தீயவர்.
28 எனவே ஆண்டவரிடம் மன்றாடுங்கள்.
இடிமுழக்கங்களையும் கல்மழையையும் கடவுள் அனுப்பியது போதும்;
நான் உங்களைப் போக விடுவேன்.
இனிமேல் நீங்கள் தங்கவே வேண்டாம்" என்றான்.
29 மோசே அவனை நோக்கி,
"நாளைக்கு வெளியே போனபின்,
நான் என் கைகளை ஆண்டவரை நோக்கி எழுப்புவேன்.
இடிமுழக்கங்கள் ஓய்ந்து போகும்.
கல்மழையும் நின்றுவிடும்.
இதனால் இந்நாடு ஆண்டவருடையது என்பதை நீர் அறிந்து கொள்வீர்.
30 ஆனால் உம்மையும் உம் அலுவலரையும் பொறுத்தமட்டில்,
இன்னும் நீங்கள் கடவுளாகிய ஆண்டவர் திருமுன்
அஞ்சிநடப்பதாகவே இல்லை என்பது எனக்குத் தெரியும்" என்றார்.
31 அப்போது சணல் பயிரும், வாற்கோதுமைப் பயிரும் அடிபட்டுப் போயின.
வாற்கோதுமை கதிர்விட்டிருந்தது. சணல் பூத்து இருந்தது.
32 ஆனால் கோதுமையும், மாக்கோதுமையும் அடிபட்டுப் போகவில்லை;
ஏனெனில் அவை பின்னர் கதிர்விடுவன.
33 மோசே பார்வோனை விட்டகன்று நகருக்கு வெளியே வந்தார்.
தம் கைகளை ஆண்டவர்பால் நீட்டினார்.
உடனே இடிமுழக்கங்களும் கல்மழையும் ஓய்ந்தன.
நாட்டில் மழை பெய்வதும் நின்றது.
34 மழையும் கல்மழையும் இடிமுழக்கங்களும்
ஓய்ந்து போனதைக் கண்டான் பார்வோன்.
ஆயினும் அவன் மேலும் தொடர்ந்து பாவம் செய்தான்;
தன் மனத்தைக் கடினப்படுத்திக் கொண்டான்.
அவனைப் போலவே அவனது அலுவலரும் நடந்து கொண்டனர்.
35 பார்வோனின் மனம் இறுகிவிட்டதால்,
மோசே வழியாய் ஆண்டவர் அறிவித்தபடியே
அவன் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
- குறிப்புகள்
[1] 9:10 = திவெ 16:2.
[2] 9:16 = உரோ 9:17
[3] 9:24 = திவெ 8:7; 16:21.
அதிகாரம் 10
தொகுவெட்டுக்கிளிகள்
தொகு
1 மேலும் ஆண்டவர் மோசேயை நோக்கி,
"நீ பார்வோனிடம் போ.
நான் அவன் மனத்தையும் அவன் அலுவலரின் மனத்தையும்
கடினப்படுத்தியதன் நோக்கம்,
2 என் அருஞ்செயல்களை அவன் முன்னிலையில் நிலைநாட்டுவதும்,
எகிப்துக்கு எதிராக நான் போராடி அவர்களிடையே
நான் செய்த அருஞ்செயல்கள் பற்றி
நீ உன் மக்களுக்கும் உன் மக்களின் மக்களுக்கும்
விவரித்துச் சொல்வதும் ஆகும்.
இதன் மூலம் நானே ஆண்டவர் என்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள்" என்றார்.
3 மோசேயும், ஆரோனும் பார்வோனிடம் சென்று அவனை நோக்கி,
"எபிரேயரின் கடவுளான ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
எவ்வளவு காலம் நீ எனக்குப் பணிய மறுப்பாய்?
எனக்கு வழிபாடு செய்யும்படி என் மக்களைப் போகவிடு.
4 ஏனெனில், நீ என் மக்களை அனுப்பிவிட மறுத்தால்,
5 நாளைய தினமே உன் எல்லைகளுக்குள் வெட்டுக்கிளிகள் வரச்செய்வேன்.
யாருமே தரையைப் பார்க்கமுடியாத அளவுக்கு அவை நாட்டை நிரப்பிவிடும்.
கல்மழைக்குத் தப்பி உங்களுக்கென எஞ்சி நிற்பதை அவை தின்று தீர்க்கும்.
வயல்வெளியில், தளிர்விடும் உங்கள் மரங்கள் அனைத்தையும் அவை தின்றழிக்கும்.
6 வீடுகளும், உன் அலுவலர் அனைவரின் வீடுகளும்,
எகிப்தியர் அனைவரின் வீடுகளும் அவற்றால் நிரம்பும்.
இது, உன் தந்தையரும் உன் தந்தையரின் தந்தையரும்
இந்நாட்டில் வாழத் தொடங்கிய நாள்முதல்
இன்று வரை கண்டிராத ஒன்றாகும்" என்றார்.
பின்னர் மோசே பார்வோனை விட்டகன்றார்.
7 பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி,
"எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ?
தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி
அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும்.
எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும்
உமக்குத் தெரியவில்லையா?" என்றனர்.
8 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர்.
அவன் அவர்களை நோக்கி,
"போங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.
ஆனால், போகவேண்டியவர் யார் யார்?" என்று கேட்டான்.
9 அதற்கு மோசே,
"எங்களிடையேயுள்ள இளைஞரோடும் முதியவரோடும் நாங்கள் போவோம்.
எங்கள் புதல்வரோடும் புதல்வியரோடும்,
எங்கள் ஆட்டுமந்தையோடும் எங்கள் மாட்டு மந்தையோடும் நாங்கள் போவோம்.
ஏனெனில் இது எங்களுக்கு 'ஆண்டவரின் திருவிழா' ஆகும்" என்றார்.
10 பார்வோன் அவர்களை நோக்கி,
"உங்களை உங்கள் குழந்தைகளோடு நான் அனுப்பி வைத்தால்,
ஆண்டவர் தாம் உங்களைக் காக்க வேண்டும்!
பாருங்கள், உங்கள்முன் உள்ளது தீமையே!
11 இதெல்லாம் வேண்டாம்.
உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.
நீங்கள் விரும்பியதும் இதுவே!" என்றான்.
இதன் பின் பார்வோன் அவர்களைத் தன் முன்னிலையிலிருந்து துரத்திவிட்டான்.
12 ஆண்டவர் மோசேயை நோக்கி,
"கல் மழைக்குத் தப்பி நாட்டில் நிற்கும் எல்லாப்
பயிர் பச்சைகளையும் தின்று தீர்க்க
எகிப்து நாடெங்கும் வெட்டுக்கிளிகள் வரும்படியாக
எகிப்து நாட்டின் மேல் உன் கையை நீட்டு" என்றார்.
13 மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே,
ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில்
கீழ்க்காற்று வீசச்செய்தார்.
காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.
14 மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி
எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின.
இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை.
15 அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று.
கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும்,
மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன.
எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும்
பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை. [1]
16 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அவசரமாக அழைத்து அவர்களை நோக்கி,
"உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகவும்
உங்களுக்கு எதிராகவும் தவறு செய்து விட்டேன்.
17 இந்த ஒருமுறையும் என் பிழையைப் பொறுத்துக்கொண்டு
இந்தச் சாவையும் என்னிடமிருந்து அகற்றிவிடும்படி
உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்" என்றான்.
18 மோசேயும் பார்வோனிடமிருந்து அகன்று ஆண்டவரிடம் மன்றாடினார்.
ஆண்டவரும் மிக வலுவான மேல்காற்று வீசச் செய்தார்.
19 அது வெட்டுக்கிளிகளை வாரிக்கொண்டு
அவற்றைச் செங்கடலில் [2] வீசியெறிந்தது.
வெட்டுக்கிளிகளில் ஒன்றைக்கூட அது
எகிப்தின் எல்லைகளுக்குள் விட்டுவைக்கவில்லை.
20 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப்போகச் செய்தார்.
அவனும் இஸ்ரயேல் மக்களைப் போகவிடவில்லை.
காரிருள்
தொகு
21 மீண்டும் ஆண்டவர் மோசேயிடம்,
"எகிப்து நாட்டின்மேல் இருள் ஏற்படவும் இருளில் அவர்கள் தடுமாறவும்
உன் கையை வானோக்கி நீட்டு" என்றார்.
22 மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார்.
மூன்று நாள்களாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது. [3]
23 மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.
தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை.
மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும்
அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.
24 பார்வோன் மோசேயை வரவழைத்து,
"நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள்.
உங்கள் ஆட்டு மந்தையையும் மாட்டு மந்தையையும் மட்டும்
விட்டுச் செல்லுங்கள்.
உங்களுடன் உங்கள் குழந்தைகளும்கூடப் போகலாம்" என்று சொன்னான்.
25 அதற்கு மோசே,
"எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் செலுத்துவதற்கான
பலிகளையும் எரிபலிகளையும் எங்கள் கையில் விட்டுவிடும்.
26 எங்கள் கால்நடைகள் எங்களோடு வரவேண்டும்;
ஒன்றுகூட இங்கே தங்கலாகாது.
எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செலுத்தத் தேவையானதை
நாங்கள் அவற்றிலிருந்து எடுத்துக் கொள்வோம்.
ஆண்டவருக்கு எப்படி வழிபாடு செலுத்துவோம் என்று
நாங்கள் அங்குச் செல்லும்வரை எங்களுக்கே தெரியாது" என்றார்.
27 ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிப் போகச் செய்ததால்,
அவன் அவர்களைப் போகவிட விரும்பவில்லை.
28 பார்வோன் மோசேயை நோக்கி,
"என்னிடமிருந்து போய்விடு.
இனிமேல் நீ என் முகத்தில் விழிக்காதபடி பார்த்துக்கொள்.
ஏனெனில், என் முகத்தில் விழிக்கும் நாளில் நீ சாவாய்" என்றான்.
29 அதற்கு மோசே,
"நீர் கூறியதற்கேற்ப நான் இனிமேல் உம் முகத்தில் விழிக்கப்போவதில்லை" என்றார்.
- குறிப்புகள்
[1] 10:14-15 = திவெ 9:2-3.
[2] 10:19 எபிரேயத்தில் , 'நாணற்கடல்' என்பது பொருள்.
[3] 10:12 = திபா 105:28; திவெ 16:10.
(தொடர்ச்சி): விடுதலைப் பயணம்: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை