திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/எபேசியருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

எபேசியர் திருமுகம் மிகவும் சிறந்த கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது; திருச்சபை பற்றிய அழகான உருவகங்களை நமக்குத் தருகிறது. கடவுளின் திட்டம் என்பது மனித குலத்தை மட்டுமல்ல, படைப்பு அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் கடவுளுடன் ஒப்புரவாக்குவது என்னும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துரைக்கிறது; குடும்ப வாழ்வு பற்றிச் சிறந்த அறிவுரைகளையும் வழங்குகிறது. இது கொலோசையர் திருமுகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பலர் இதனைக் கொலோசையர் திருமுகத்தின் விளக்கமாகக் கருதுகின்றனர்.

"எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி, ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது. நீங்களும் அவரோடு இணைந்து தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள்." (எபேசியர் 2:19-22)

எபேசியருக்கு எழுதிய திருமுகம் (Ephesians) [1]

தொகு

முன்னுரை

ஆசிரியர்

தொகு

இத்திருமுகத்தைப் பவுல் எழுதினார் என்பது மரபு நம்பிக்கையாக இருந்தாலும், அண்மைக் காலத்தில் சில மாற்றுக் கருத்துக்களும் தோன்றியுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு மேல் எபேசில் தங்கிப் பணிபுரிந்த ஆசிரியர் (திப 18:23-19:4) எபேசு மக்களுடன் கொண்டிருந்த உறவைத் திருமுகம் காட்டவில்லை (1:15; 3:2); வழக்கமான வாழ்த்துக்களும் இதில் இல்லை.

இதன் கருத்தோட்டமும் நடையும் சொற்களும்கூட பவுல் எழுதிய கடிதங்களினின்று மாறியிருக்கின்றன. திருச்சபையைக் கிறிஸ்துவின் மறையுடலாகச் சித்தரிக்கும் ஆழமான இறையியல் கருத்துக்கள் பிற்காலத்தவை. இத்தகைய பல காரணங்களின் அடிப்படையில் இது கி.பி. 80க்குப் பின் வேறொருவரால் எழுதப்பட்ட மடல் எனப் பலர் கூறுவர். இது லவோதோக்கியருக்கு எழுதப்பட்ட மடல் என்பர் வேறு சிலர்.

எனினும் இது ஒரு மடல் என்பதைவிட ஆழமான இறையியல் கட்டுரை எனக் கொள்வதே சிறப்பு. பல சபைகளுக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் எபேசு நகரப் பிரதி இது எனக் கருதலாம். எனவே தனிப்பட்ட செய்திகள் இதில் இடம் பெறவில்லை. இதனைப் பவுலின் சீடர் ஒருவர் பவுலினது கண்ணோட்டத்தில், அவரது பெயரில் எழுதியிருக்க வேண்டும். இவ்வாறு எழுதுவது அக்காலத்தில் முறையாகக் கருதப்பட்டது.

உள்ளடக்கம்

தொகு

இத்திருமுகத்தின் முதற்பகுதியில் ஒற்றுமை பற்றிய மையக் கருத்தை ஆசிரியர் விளக்குகின்றார்; தந்தையாம் கடவுள் தம் மக்களை எப்படி அழைத்துள்ளார் என்றும், அவர்கள் எவ்வாறு தம் மகன் இயேசு கிறிஸ்துவினால் மன்னிக்கப்பெற்று, பாவத்திலிருந்து விடுதலை பெற்றார்கள் என்று, கடவுளின் தூய ஆவியால் எவ்வாறு உறுதிப்படுத்தப்படுகின்றார்கள் என்றும் கூறுகிறார் (1-3).

இரண்டாம் பகுதியில் வாசகர்கள் கிறிஸ்துவுடன் கொண்டுள்ள உறவைத் தங்கள் வாழ்வில் காட்ட வேண்டும் என்கிறார் ஆசிரியர். பொதுவான சமூக அன்பு வாழ்வும், குடும்ப அன்பு வாழ்வும் இந்த ஒற்றுமையை எடுத்துக் காட்ட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றார்.

இத்திருமுகத்தில் பல உருவகங்கள் இடம் பெறுகின்றன. திருச்சபை உடலாகவும் கட்டடமாகவும் மணமகளாகவும், கிறிஸ்து தலையாகவும் மூலைக்கல்லாகவும் மணமகனாகவும் உருவகிக்கப்படுவதைக் காண்கிறோம்.

கிறிஸ்துவுடன் இணைந்து வாழ்தல் பற்றிப் பலமுறை சொல்லப்படுகிறது; கடவுளின் அருள் வலியுறுத்தப்படுகின்றது. அனைத்தும் கிறிஸ்துவின் அன்பு, தியாகம், மன்னிப்பு, அருள், தூய்மை என்னும் அடிப்படையில் பார்க்கப்படுகின்றன.

எபேசியர்

தொகு

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரையும் வாழ்த்தும் 1:1-2 357
2. கிறிஸ்துவும் திருச்சபையும் 1:3 - 3:21 357 - 360
3. கிறிஸ்தவப் புது வாழ்வு 4:1 - 6:20 360 - 364
4. இறுதி வாழ்த்தும் முடிவுரையும் 6:21-24 364


எபேசியர் (Ephesians)

தொகு

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1

தொகு

1. முன்னுரையும் வாழ்த்தும்

தொகு


1 இயேசு கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டு வாழும்
எபேசு [1] நகர இறைமக்களுக்கு,
கடவுளின் திருவுளத்தால் திருத்தூதனாயிருக்கும் பவுல் எழுதுவது: [2]


2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும்
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

2. கிறிஸ்துவும் திருச்சபையும்

தொகு

மீட்பின் திட்டம்

தொகு


3 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி!
அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும்
கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.
4 நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி,
உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.


5-6 அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம்
தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள
அன்பினால் முன்குறித்துவைத்தார்.
இதுவே அவரது விருப்பம்; இதுவே அவரது திருவுளம்.
இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக
நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால்
அவரது புகழைப் பாடுகிறோம்.
7 கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப
நமக்கு மீட்பு அளித்துள்ளார்;
இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். [3]
8 அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து,
அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார்.
9 அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம்.
10 கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே
கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்.


11 கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார்.
அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு,
கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம்.
12 இவ்வாறு கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள்
கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார்.


13 நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு,
அவர்மீது நம்பிக்கை கொண்டு,
வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள்.
14 அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம்
என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது.
இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

இறை வேண்டல்

தொகு


15 ஆகவே, ஆண்டவராகிய இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும்
இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று,
16 நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவுகூர்ந்து
உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை.
17 நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர்
அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு
ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!
18-19 கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும்,
இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும்,
அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை
எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு
உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!
கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை,
20 கிறிஸ்துவிடம் செயல்படுத்தி,
இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து,
விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். [4]
21 அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர்,
வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர்
ஆகிய அனைவருக்கும் [5] மேலாகவும் அவரை உயர்த்தினார்;
இவ்வுலகில் மட்டும் அல்ல;
வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார்.
22 அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து,
அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார்.
23 திருச்சபையே அவரது உடல்.
எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது. [6]


குறிப்புகள்

[1] 1:1 - "எபேசு" என்னும் சொல் சில முக்கிய கையெழுத்துப்படிகளில் இல்லை.
[2] 1:1 = திப 18:19-21; 19:1.
[3] 1:7 = கொலோ 1:14.
[4] 1:20 = திபா 110:1.
[5] 1:21 - இவர்கள் யூத கிரேக்கச் சிந்தனையில் வானதூதர்களாக,
வானுலக ஆற்றல்களாகக் கருதப்பட்டனர்.
[6] 1:22,23 = கொலோ 1:18.


அதிகாரம் 2

தொகு

சாவின் நிலையிலிருந்து வாழ்வின் நிலையடைதல்

தொகு


1 உங்களுடைய குற்றங்களையும் பாவங்களையும் முன்னிட்டு
நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள்.
2 அப்பொழுது நீங்கள் இவ்வுலகப்போக்கின்படி,
வான்வெளியில் அதிகாரம் செலுத்தும் தலைவனுக்கு ஏற்ப வாழ்ந்து வந்தீர்கள்.
கடவுளுக்குக் கீழ்ப்படியாத மக்களிடையே இப்போது செயலாற்றும் தீய ஆற்றலுக்குப்
பணிந்து நடந்தீர்கள்.
3 இந்நிலையில்தான் ஒரு காலத்தில் நாம் எல்லாரும் இருந்தோம்.
நம்முடைய ஊனியல்பின் தீயநாட்டங்களின்படி வாழ்ந்து,
உடலும் மனமும் விரும்பியவாறு செயல்பட்டு,
மற்றவர்களைப் போலவே நாமும் இயல்பாகக் கடவுளின் சினத்துக்கு ஆளானோம்.


4 ஆனால் கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர்.
அவர் நம்மீது மிகுந்த அன்புகொண்டுள்ளார்.
5 குற்றங்களின் காரணமாய் இறந்தவர்களாயிருந்த நாம்
அவ்வன்பின் மூலம் இணைந்து உயிர் பெறச் செய்தார். [1]
நீங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்த அருளாலேயே.
6 இயேசு கிறிஸ்துவோடு இணைந்த நிலையில் நாம் அவரோடு உயிர்த்தெழவும்
விண்ணுலகில் அவரோடு அமரவும் செய்தார்.
7 கிறிஸ்து இயேசு வழியாகக் கடவுள் நமக்குச் செய்த நன்மையையும்
அவரது ஒப்புயர்வற்ற அருள் வளத்தையும்
இனிவரும் காலங்களிலும் எடுத்துக் காட்டுவதற்காகவே இவ்வாறு செய்தார்.
8 நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள்.
இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை.
9 இது மனிதச் செயல்களால் ஆனது அல்ல.
எனவே எவரும் பெருமை பாராட்ட இயலாது.
10 ஏனெனில் நாம் கடவுளின் கைவேலைப்பாடு;
நற்செயல்கள் புரிவதற்கென்றே
கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு நற்செயல்கள் புரிந்து வாழும்படி
கடவுள் முன்கூட்டியே ஏற்பாடு செய்திருக்கிறார்.

கிறிஸ்து அருளும் ஒற்றுமை

தொகு


11 எனவே, பிறப்பால் பிற இனத்தாராய் இருந்த நீங்கள்,
உங்கள் முன்னைய நிலையை நினைவில் கொள்ளுங்கள்.
உடலில் கையால் விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள்
உங்களை விருத்தசேதனம் செய்யாதோர் எனக் கூறி இகழ்ந்தார்கள்.
12 அக்காலத்தில் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும்,
இஸ்ரயேலரின் சமுதாயத்துக்குப் புறம்பானவர்களாகவும்,
வாக்குறுதியைக் கொண்டிருந்த உடன்படிக்கைக்கு அன்னியர்களாகவும்,
எதிர்நோக்கு இல்லாதவர்களாகவும் இவ்வுலகில் இருந்தீர்கள்.
13 ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள்
இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து,
அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.
14 ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர்.
அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை,
தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து,
அவர்களை ஒன்றுபடுத்தினார்.
15 பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார்.
இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து
அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். [2]
16 தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார்.
சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக்
கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். [3]
17 அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும்,
அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். [4]
18 அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம்
ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.


19 எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல.
இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
20 திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும்,
கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்.
21 கிறிஸ்துவின் உறவில் கட்டடம் முழுவதும் இசைவாகப் பொருந்தி,
ஆண்டவருக்கென்று தூய கோவிலாக வளர்ச்சி பெறுகிறது.
22 நீங்களும் அவரோடு இணைந்து
தூய ஆவி வழியாகக் கடவுளின் உறைவிடமாகக் கட்டப்பட்டு வருகிறீர்கள். [5]


குறிப்புகள்

[1] 2:5 = கொலோ 2:13.
[2] 2:15 = கொலோ 2:14.
[3] 2:16 = கொலோ 1:20.
[4] 2:17 = எசா 57:19.
[5] 2:22 = 1 பேது 2:5.


(தொடர்ச்சி): எபேசியருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை