திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

"திருச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகிறீர்களே, அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா? ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர். ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்; மற்றவன் உரிமைப்பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது. அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்; உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். இது ஒரு தொடர் உருவகம். இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர். ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை. அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது. அரேபியாவிலுள்ள சீனாய் மலை இப்பொழுதிருக்கும் எருசலேமுக்கு அடையாளம். ஏனெனில் இந்த எருசலேம் தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது. மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்; நமக்கு அன்னை." (கலாத்தியர் 4:21-26)

கலாத்தியர் (Galatians)

தொகு

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3

தொகு

3. கொள்கைப் பகுதி

தொகு

நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆதல்

தொகு


1 அறிவிலிகளான காலத்தியரே, உங்களை மயக்கியோர் யார்?
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டவராய்
உங்கள் கண்முன் படம் பிடித்துக் காட்டப்படவில்லையா?
2 உங்களிடம் ஒன்றுமட்டும் கேட்டறிய விரும்புகிறேன்:
நீங்கள் தூய ஆவியை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்?
திருச்சட்டம் சார்ந்த செயல்களாலா?
அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
3 தூய ஆவியால் நீங்கள் தொடங்கிய வாழ்க்கையை
இப்பொழுது வெறும் மனிதமுயற்சியால் நிறைவுசெய்யப் போகிறீர்களா?
அந்த அளவுக்கு நீங்கள் அறிவிலிகளா?
4 நீங்கள் பட்டறிந்த அனைத்தும் வீண்தானா?
வீணாகத் தான் முடியுமா?
5 உங்களுக்குத் தூய ஆவியை அளித்து
உங்களிடயே வல்ல செயல்களை ஆற்றுபவர்
எதை முன்னிட்டு அவ்வாறு செய்கிறார்?
நீங்கள் சட்டம் சார்ந்த செயல்களைச் செய்வதாலா?
அல்லது நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொண்டதாலா?
6 ஆபிரகாமைப் பாருங்கள்!


"அவர் கடவுள்மீது நம்பிக்கை கொண்டார்;
அதைக் கடவுள் அவருக்கு நீதியாகக் கருதினார்." [1]


7 ஆகவே நம்பிக்கைகொண்டு வாழ்பவர்களே
ஆபிரகாமின் மக்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். [2]
8 நம்பிக்கை கொள்ளும் பிற இனத்தாரையும்
கடவுள் தமக்கு ஏற்புடையவராக்குவார் என்பதை முன்னறிந்துதான் மறைநூல்,


"உன் வழியாக மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்"


என்னும் நற்செய்தியை ஆபிரகாமுக்கு முன்னுரைத்தது. [3]
9 ஆகவே நம்பிக்கை கொண்ட ஆபிரகாம் பெற்ற அதே ஆசியில்
நம்பிக்கை கொள்வோரும் பங்குபெறுவர்.

சட்டத்தின் விளைவு: சாபம்

தொகு


10 திருச்சட்டம் சார்ந்த செயல்களையே நம்பியிருப்பவர்கள்
சாபத்துக்கு ஆளானவர்கள்; ஏனெனில்,


"திருச்சட்டத்தின் வார்த்தைகளை எல்லாம் கடைப்பிடித்து
நடவாதோர் சபிக்கப்படட்டும்!"


என்று எழுதியுள்ளது. [4]


11 சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் கடவுள் முன்னிலையில்
ஏற்புடையவர் ஆவதில்லை என்பதும் தெளிவு.
ஏனெனில், "நேர்மையுடையோர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்." [5]
12 திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக,


"சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர்
அவற்றால் வாழ்வு பெறுவர்"


என்று எழுதியுள்ளது. [6]


13 "மரத்தில் தொங்கவிடப்பட்டோர் சபிக்கப்பட்டோர்"


என்று எழுதியுள்ளவாறு நமக்காகக் கிறிஸ்து சாபத்துக்கு உள்ளாகி
நம்மைச் சட்டத்தின் சாபத்தினின்று மீட்டுக் கொண்டார். [7]
14 ஆபிரகாமுக்குக் கிடைத்த ஆசி இயேசு கிறிஸ்துவின் வழியாய்ப்
பிற இனத்தார்க்கும் கிடைக்கவும்
வாக்களிக்கப்பட்ட தூய ஆவியை
நாம் நம்பிக்கையின் வழியாய்ப் பெற்றுக் கொள்ளவுமே இவ்வாறு செய்தார்.

திருச்சட்டமும் வாக்குறுதியும்

தொகு


15 சகோதர சகோதரிகளே,
உலக வழக்கிலிருந்து ஓர் எடுத்துக் காட்டுத் தருகிறேன்.
மனிதர் முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை
யாரும் செல்லாததாக்கவோ அதனுடன் எதையும் சேர்க்கவோ முடியாது.
16 வாக்குறுதிகள்ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் தரப்பட்டன.
பலரைக் குறிக்கும் முறையில் 'வழி மரபினர்களுக்கு' என்று இல்லாமல்
ஒருவரையே குறிக்கும் முறையில் 'உன் மரபினருக்கு' என்று உள்ளது.
அந்த மரபினர் கிறிஸ்துவே. [8]
17 என் கருத்து இதுவே:
கடவுள் ஏற்கெனவே முறைப்படி செய்து முடித்த உடன்படிக்கையை
நானூற்று முப்பது ஆண்டுகளுக்குப்பின் வந்த திருச்சட்டம்
செல்லாததாக்கிவிட முடியாது;
அவரது வாக்குறுதியைப் பொருளற்றதாக்கி விடவும் முடியாது. [9]
18 திருச்சட்டம் சார்ந்த செயல்களால் உரிமைப்பேறு கிடைப்பதாய் இருந்தால்
அது வாக்குறுதியால் தரப்படுவது இல்லை என்றாகிறது.
ஆனால் கடவுள் அதை ஆபிரகாமுக்கு வாக்குறுதியின் வழியாகவே அருளினார். [10]


19 அப்படியானால் திருச்சட்டத்தின் பயன் என்ன?
குற்றங்களை எடுத்துக்காட்ட அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது.
வாக்குறுதிக்கு உரியவரான வழிமரபினர் வரும்வரை அது நீடிக்க வேண்டியிருந்தது.
வானதூதர்கள் மூலம் அச்சட்டம் இணைப்பாளர் ஒருவர் வழியாய்க் கொடுக்கப்பட்டது.
20 நேரிடையாய் ஒருவர் செயலாற்றும்போது இணைப்பாளருக்கு இடமில்லை.
வாக்குறுதி அருளியபோது கடவுள் ஒருவரே நேரிடையாய்ச் செயல்பட்டார்.

அடிமைகளும் உரிமை மக்களும்

தொகு


21 அப்படியானால், திருச்சட்டம் கடவுளின் வாக்குறுதிகளுக்கு முரணானதா?
ஒருபோதும் இல்லை.
வாழ்வு அளிக்க வல்லதொரு சட்டம் தரப்பட்டிருந்தால்
அந்தச் சட்டத்தின் வழியாகவே மனிதர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகியிருக்கலாம்.
22 ஆனால், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்வோருக்கு
வாக்களிக்கப்பட்டவை நம்பிக்கையால் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே
அனைத்தும் பாவத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது என மறைநூல் கூறுகிறது.


23 நாம் நம்பிக்கை கொள்வதற்கு முன்
சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தோம்.
வெளிப்பட இருந்த அந்த நம்பிக்கையை நாம் பெறும்வரை இந்நிலை நீடித்தது.
24 இவ்வாறு, நம்பிக்கையின் அடிப்படையில்
நாம் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்கப்படுவதற்காக
நம்மைக் கிறிஸ்துவிடம் கூட்டிச்செல்லும் வழித்துணையாய்த் திருச்சட்டம் செயல்பட்டது.
25 இப்பொழுது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதால்
இனி நாம் வழித்துணைவரின் பொறுப்பில் இல்லை.


26 ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்
நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள்.
27 அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி
திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள்.
28 இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும்,
அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை;
ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை;
கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்.
29 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்களும்
ஆபிரகாமின் வழித் தோன்றல்களுமாய் இருக்கிறீர்கள்.
வாக்குறுதியின் அடிப்படையில் உரிமைப்பேறு உடையவர்களாயும் இருக்கிறீர்கள். [11]


குறிப்புகள்

[1] 3:6 = தொநூ 15:6; உரோ 4:3.
[2] 3:7 = உரோ 4:16.
[3] 3:8 = தொநூ 12:3.
[4] 3:10 = இச 27:26.
[5] 3:11 = அப 2:4; உரோ 1:17.
[6] 3:12 = லேவி 18:5.
[7] 3:13 = இச 21:23.
[8] 3:16 = தொநூ 12:7.
[9] 3:17 = விப 12:40.
[10] 3:18 = உரோ 4:14.
[11] 3:29 = உரோ 4:13.

அதிகாரம் 4

தொகு


1 நான் சொல்வது இதுவே:
தந்தையின் சொத்து அனைத்துக்கும் உரிமையுடையோர் சிறுவராய் இருக்கும்வரை
அவர்களுக்கும் அடிமைகளுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை;
2 தந்தை குறித்த நாள் வரும்வரை அவர்கள்
மேற்பார்வையாளர்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்கிறார்கள்.
3 அவ்வாறே, நாமும் சிறுவர்களாய் இருந்தபோது
உலகின் பஞ்சபூதங்களுக்கு அடிமைப்பட்டிருந்தோம்.
4 ஆனால் காலம் நிறைவேறியபோது
திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு
5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும்
திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.


6 நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால்
கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் [1] உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்;
அந்த ஆவி 'அப்பா, தந்தையே', எனக் கூப்பிடுகிறது.
7 ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம்;
பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள்.
இது கடவுளின் செயலே. [2]

கலாத்தியரைப் பற்றிய கவலை

தொகு


8 ஒரு காலத்தில் நீங்கள் கடவுளை அறியாதிருந்தீர்கள்;
அப்போது கடவுள் அல்லாதவற்றுக்கு அடிமைகளாய் இருந்தீர்கள்.
9 ஆனால் இப்பொழுது நீங்கள் கடவுளை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்;
உண்மையில், கடவுளே உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
அப்படியிருக்க வலுவற்றவையும் வறியவையுமான
பஞ்சபூதங்களிடம் திரும்பிப் போய்
அவற்றுக்கு மீண்டும் அடிமைகள் ஆவதற்கு நீங்கள் விரும்புவது ஏன்?
10 நாள், மாதம், காலம், ஆண்டு என்று பார்க்கிறீர்கள்!
11 உங்களுக்காக நான் பாடுபட்டு உழைத்தது வீண்தானா என அஞ்சவேண்டியிருக்கிறது.

பழைய நினைவுகள்

தொகு


12 சகோதர சகோதரிகளே, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்:
நீங்கள் என்னைப்போல ஆகுங்கள்;
நான் உங்களைப்போல ஆனேன் அல்லவா?
நீங்கள் எனக்கு அநீதி ஒன்றும் இழைக்கவில்லை.
13 என் உடல்நலக் குறைவு தான் உங்களுக்கு முதன் முதல்
நற்செய்தி அறிவிக்க எனக்கு வாய்ப்பு அளித்தது.
இது உங்களுக்குத் தெரியுமே.
14 என் உடல்நிலையை முன்னிட்டு என்னைப் புறக்கணித்து
வெறுத்து ஒதுக்கும் சோதனை உங்களுக்கு வரவில்லை.
அதற்கு மாறாக, கடவுளின் தூதரை ஏற்றுக்கொள்வதுபோல் ஏன்,
கிறிஸ்து இயேசுவையே ஏற்றுக் கொள்வது போல், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்.
15 என்னை ஏற்றுக் கொள்வது ஒரு பெரும் பேறு என்றும் கருதினீர்கள்.
அந்த மனநிலை இப்பொழுது எங்கே?
முடிந்திருந்தால் உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுத்திருப்பீர்கள்!
உங்களைப்பற்றி நான் இதை உறுதியாகச் சொல்லமுடியும்.
16 இப்போது உங்களுக்கு உண்மையைச் சொன்னதால் உங்கள் பகைவன் ஆனேனா?


17 முன்பு நான் குறிப்பிட்டவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானது அல்ல;
நீங்களும் அதே ஆர்வம் காட்ட வேண்டுமென்று
அவர்கள் உங்களை என்னிடமிருந்து பிரிக்க விரும்புகிறார்கள்.
18 உங்கள் நடுவில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
மற்றவர்கள் உங்கள்மேல் ஆர்வம் காட்டுவது எப்பொழுதும் நல்லதே;
ஆனால் அந்த ஆர்வம் நேர்மையானதாய் இருத்தல் வேண்டும்.
19 என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை
உங்களுக்காக மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்.
20 உங்களைப் பொறுத்த மட்டில் எனக்கு ஒரே குழப்பமாய் இருக்கிறது.
இப்பொழுது உங்களோடு இருந்து
வேறுவகையாய்ப் பேசிப் பார்த்ததால் நலமாயிருக்கும்!

ஆகாரும் சாராவும்

தொகு


21 திருச்சட்டத்திற்கு உட்பட்டிருக்க விரும்புகிறீர்களே,
அச்சட்டம் சொல்வதை நீங்கள் கேட்டதில்லையா?
22 ஆபிரகாமுக்கு மக்கள் இருவர் இருந்தனர்.
ஒருவன் அடிமைப் பெண்ணிடம் பிறந்தவன்;
மற்றவன் உரிமைப்பெண்ணிடம் பிறந்தவன் என்று எழுதியுள்ளது. [3]
23 அடிமைப் பெண்ணின் மகன் இயல்பான முறைப்படி பிறந்தவன்;
உரிமைப் பெண்ணின் மகனோ வாக்குறுதியின் பயனாய்ப் பிறந்தவன். [4]
24 இது ஒரு தொடர் உருவகம்.
இந்தப் பெண்கள் இருவரும் இரண்டு உடன்படிக்கைகளைக் குறிக்கின்றனர்.
ஒன்று ஆகார் குறிக்கும் சீனாய் மலையில் செய்யப்பட்ட உடன்படிக்கை.
அது அடிமை நிலையில் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறது.
25 அரேபியாவிலுள்ள சீனாய் மலை இப்பொழுதிருக்கும் எருசலேமுக்கு அடையாளம்.
ஏனெனில் இந்த எருசலேம் தன் மக்களுடன் அடிமையாய் இருக்கிறது.
26 மேலே உள்ள எருசலேமோ உரிமைப்பெண்; நமக்கு அன்னை.
27 ஏனெனில்,


"பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு!


பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு!
ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள்


கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்"


என்று மறைநூலில் எழுதியுள்ளது. [5]


28 ஆகவே சகோதர சகோதரிகளே,
நீங்களும் ஈசாக்கைப்போல வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகள்.
29 ஆனால் இயல்பான முறைப்படி பிறந்தவன்
தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவனை
அன்று துன்புறுத்தியவாறே இன்றும் நடக்கிறது. [6]
30 எனினும் மறைநூல் கூறுவதென்ன?
"இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் துரத்தி விடும்;
ஏனெனில் அடிமைப் பெண்ணின் மகன்
உரிமைப் பெண்ணின் பங்காளியாக இருக்கக்கூடாது." [7]
31 ஆகவே சகோதர சகோதரிகளே,
நம் அடிமைப் பெண்ணின் மக்கள் அல்ல; உரிமைப் பெண்ணின் மக்கள்.


குறிப்புகள்

[1] 4:6 - "உங்கள்" என்னும் சொல் "நம்" என
பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.
[2] 4:5-7 = உரோ 8:15-17.
[3] 4:22 = தொநூ 16:15; 21:2.
[4] 4:23 = தொநூ 17:16.
[5] 4:27 = எசா 54:1.
[6] 4:29 = தொநூ 21:9.
[7] 4:30 = தொநூ 21:10.


(தொடர்ச்சி):கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை