திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
1 கொரிந்தியர் (1 Corinthians)
தொகுஅதிகாரங்கள் 15 முதல் 16 வரை
அதிகாரம் 15
தொகு6. உயிர்பெற்றெழுதல்
தொகுகிறிஸ்து உயிர்பெற்றெழுதல்
தொகு
1 சகோதர சகோதரிகளே,
உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன்.
அதை நீங்களும் ஏற்றுக் கொண்டீர்கள்; அதிலே நிலைத்தும் நிற்கிறீர்கள்.
2 நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தியை
நீங்கள் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால்
அதன் வழியாக மீட்பு அடைவீர்கள்;
இல்லையேல் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பொருளற்றதே.
3 நான் பெற்றுக்கொண்டதும் முதன்மையானது எனக் கருதி
உங்களிடம் ஒப்படைத்ததும் இதுவே:
மறைநூலில் எழுதியுள்ளவாறு கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, [1]
4 அடக்கம் செய்யப்பட்டார்.
மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார். [2]
5 பின்னர் அவர் கேபாவுக்கும் அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றினார். [3]
6 பின்பு ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார்.
அவர்களுள் பலர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர்; சிலர் இறந்து விட்டனர்.
7 பிறகு யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார்.
8 எல்லாருக்கும் கடைசியில் காலம் தப்பிப் பிறந்த குழந்தை போன்ற எனக்கும் தோன்றினார். [4]
9 நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன்.
திருத்தூதர் என அழைக்கப்பெறத் தகுதியற்றவன்.
ஏனெனில் கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்தினேன். [5]
10 ஆனால் இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால்தான்.
அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை.
திருத்தூதர்கள் எல்லாரையும்விட நான் மிகுதியாகப் பாடுபட்டு உழைத்தேன்.
உண்மையில் நானாக உழைக்கவில்லை;
என்னோடிருக்கும் கடவுளின் அருளே அவ்வாறு உழைக்கச் செய்தது.
11 நானோ மற்றத் திருத்தூதர்களோ யாராயிருந்தாலும்
இதையே பறைசாற்றுகிறோம். நீங்களும் இதையே நம்பினீர்கள்.
இறந்தோர் உயிர்பெற்றெழுதல்
தொகு
12 இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்க,
உங்களுள் சிலர் இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை எனச் சொல்வது ஏன்?
13 இறந்தோர் உயிர்த்தெழ மாட்டார் எனில்
கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.
14 கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால்
நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும்
நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்.
15 நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம்.
ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால்
கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை,
கடவுள்தான் உயிர்த்தெழச் செய்தார் என்று சான்று பகரும்போது
கடவுளுக்கு எதிராகச் சான்று கூறியவர்கள் ஆவோம் அல்லவா?
16 ஏனெனில் இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதில்லை என்றால்
கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை என்றாகிவிடும்.
17 கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால்
நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே.
நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.
18 அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு
இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள்.
19 கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு
இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால்
எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்.
20 ஆனால் இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்.
அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார்.
இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
21 ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்ததுபோல
ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.
22 ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக்
கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர்.
23 ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர்.
கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.
அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
24 அதன்பின்னர் முடிவு வரும்.
அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர்,
வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு,
தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார்.
25 எல்லாப் பகைவரையும் அடிபணியவைக்கும்வரை
அவர் ஆட்சி செய்தாக வேண்டும். [6]
26 சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.
27 ஏனெனில், "கடவுள் எல்லாவற்றையும் அவருக்கு அடிபணியச் செய்தார்."
ஆனால் எல்லாம் அடிபணிந்தன என்று சொல்லும்போது
அனைத்தையும் கிறிஸ்துவுக்கு அடிபணிய வைக்கும் கடவுளைத் தவிர
மற்றவை யாவும் அடிபணிந்தன என்பது தெளிவாகிறது. [7]
28 அனைத்துமே மகனுக்கு அடிபணியும்போது
தமக்கு அனைத்தையும் அடிபணியச் செய்த கடவுளுக்கு மகனும் அடிபணிவார்.
அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார்.
29 மேலும் இறந்தோருக்காகச் சிலர் திருமுழுக்குப் பெறுகிறார்களே!
ஏன் அப்படிச் செய்கிறார்கள்?
இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவது இல்லை என்றால்
அவர்களுக்காகத் திருமுழுக்குப் பெறுவானேன்?
30 நாங்களும் எந்நேரமும் ஆபத்திற்குள்ளாவதேன்?
31 நான் நாள்தோறும் சாவை எதிர்கொள்கிறேன்.
அன்பர்களே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அடியான்
என்னும் முறையில் நான் உங்கள்மேல் கொண்டுள்ள
பெருமையின்மீது ஆணையாக இதைச் சொல்கிறேன்.
32 நான் எபேசுவில் கொடிய விலங்குகளோடு போராடினேன்.
மனித முறையில் அதனால் எனக்கு வரும் பயன் என்ன?
இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையெனில்
"உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்" என்றிருக்கலாமே! [8]
33 நீங்கள் ஏமாந்துபோக வேண்டாம். தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.
34 அறிவுத்தெளிவுடன் இருங்கள்;
நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்;
பாவஞ் செய்யாதீர்கள்.
ஏனெனில் உங்களுள் சிலருக்குக் கடவுளைப்பற்றிய அறிவு இல்லை.
உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.
உடல் உயிர்பெற்றெழுதல்
தொகு
35 "இறந்தோர் எப்படி உயிருடன் எழுப்பப்படுவார்கள்?
எத்தகைய உடலோடு வருவார்கள்?" என ஒருவர் கேட்கலாம்.
36 அறிவிலியே, நீ விதைக்கும் விதை மடிந்தாலொழிய உயிர்பெறாது.
37 முளைத்த பயிராக நீ அதை விதைக்கவில்லை;
மாறாக வெறும் கோதுமை மணியையோ
மற்றெந்த விதையையோதான் விதைக்கிறாய்.
38 கடவுளோ தம் விருப்பப்படி அதற்கு ஓர் உருவைக் கொடுக்கிறார்;
ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவைக் கொடுக்கிறார்.
39 எல்லா ஊனும் ஒரே வகையான ஊன் அல்ல.
மானிடருக்கு ஒரு வகையான ஊனும்,
விலங்குகளுக்கு இன்னொரு வகையான ஊனும்,
பறவைகளுக்கு வேறொரு வகையான ஊனும்,
மீன்களுக்கு மற்றொரு வகையான ஊனும் உண்டு.
40 விண்ணைச் சார்ந்தவைகளுக்கு ஒரு வகையான உருவமும்
மண்ணைச் சார்ந்தவைகளுக்கு இன்னொரு வகையான உருவமும் உண்டு.
விண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு; மண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு.
41 கதிரவனின் சுடர் ஒன்று; நிலவின் சுடர் இன்னொன்று.
விண்மீன்கள் சுடர் மற்றொன்று;
விண்மீனுக்கு விண்மீன் சுடர் வேறுபடுகிறது.
42 இறந்தோர் உயிர்த்தெழும்போதும் இவ்வாறே இருக்கும்.
அழிவுக்குரியதாய் விதைக்கப்படுவது அழியாததாய் உயிர்பெற்று எழுகிறது.
43 மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது.
வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது.
44 மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது
ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது.
மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.
45 மறைநூலில் எழுதியுள்ளபடி,
முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்;
கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார். [9]
46 தூய ஆவிக்குரியது முந்தியது அல்ல;
மனித இயல்புக்குரியதே முந்தியது.
தூய ஆவிக்குரியது பிந்தியது.
47 முதல் மனிதர் களிமண்ணால் ஆனவர்;
அவர் மண்ணிலிருந்து வந்தவர்.
இரண்டாம் மனிதரோ விண்ணிலிருந்து வந்தவர்.
48 மண்ணைச் சார்ந்த மனிதர் போலவே
மண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
விண்ணைச் சார்ந்த மனிதர் போலவே
விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
49 எனவே நாம் மண்ணைச் சார்ந்தவரின் சாயலைக் கொண்டிருப்பதுபோல
விண்ணைக் சார்ந்தவரின் சாயலையும் கொண்டிருப்போம்.
50 அன்பர்களே, நான் சொல்வது இதுவே:
ஊனியல்புடைய மனிதர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைய முடியாது.
அழிவுக்குரியது அழியாமையை உரிமைப் பேறாக அடைய முடியாது.
51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்:
நாம் யாவரும் சாகமாட்டோம்; ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.
52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில்,
இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும்.
எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்;
நாமும் மாற்றுரு பெறுவோம். [10]
53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும்.
சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
54 அழிவுக்குரியது அழியாமையையும்,
சாவுக்குரியது சாகாமையையும் அணிந்து கொள்ளும்போது
மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்:
"சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. [11]
55 சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" [12]
56 பாவமே சாவின் கொடுக்கு.
பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே.
57 ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக
நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!
58 எனவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
உறுதியோடு இருங்கள்; நிலையாய் நில்லுங்கள்.
ஆண்டவருக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து
ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக எப்போதும் செய்யுங்கள்.
- குறிப்புகள்
[1] 15:3 = எசா 53:5-12.
[2] 15:4 = திபா 16:8-10; மத் 12:40; திப 2:24-32.
[3] 15:5 = லூக் 24:34,36; யோவா 20:19.
[4] 15:8 = திப 9:3-6.
[5] 15:9 = திப 8:3.
[6] 15:25 = திபா 110:1.
[7] 15:27 = திபா 8:6.
[8] 15:32 = எசா 22:13; லூக் 12:19.
[9] 15:45 = தொநூ 2:7.
[10] 15:51,52 = 1 தெச 4:15-17.
[11] 15:54 = எசா 25:8.
[12] 15:55 = ஓசே 13:14; திவெ 20:14.
அதிகாரம் 16
தொகு7. இறைமக்களுக்காக நன்கொடை திரட்டல்
தொகு
1 இப்போது இறைமக்களுக்கு வழங்கும் நன்கொடையைக் குறித்துப் பார்ப்போம். [1]
கலாத்திய திருச்சபைகளுக்கு நான் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள்.
2 நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில்
அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு
ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
அப்படிச் செய்தால் நான் அங்கு வந்தபின் நன்கொடை திரட்ட வேண்டியதிராது.
3 தகுதியுள்ளவர்கள் என நீங்கள் கருதுவோரிடம் நான் வரும்போது
அறிமுகக் கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்.
4 நானும் போவது நல்லது எனத் தோன்றினால் நானும் போவேன்;
அவர்கள் என்னோடு வரலாம்.
8. முடிவுரை
தொகுபயணத்திட்டம்
தொகு
5 நான் மாசிதோனியா வழியாகச் செல்லவிருக்கிறேன்.
மாசிதோனியாவைக் கடந்தபின் உங்களிடம் வருவேன். [2]
6 நான் ஒருவேளை உங்களோடு தங்கலாம்;
குளிர் காலத்தை அங்கே கழிக்கலாம்.
அப்போது நான் அடுத்ததாகப் போகுமிடத்திற்கு
நீங்கள் என்னை வழி அனுப்பி வைக்கலாம்.
7 போகிற போக்கில் உங்களைப் பார்த்துவிட்டுச் செல்ல நான் விரும்பவில்லை;
ஆண்டவர் அனுமதிப்பாரானால் சிறிது காலம் உங்களிடம் வந்து தங்கலாம் என நம்புகிறேன்.
8 பெந்தக்கோஸ்து விழா வரை எபேசில் தங்கியிருப்பேன்.
9 அங்கு எதிரிகள் பலர் இருந்தாலும்
பயனுள்ள முறையில் எபேசில் பணியாற்ற
நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. [3]
10 திமொத்தேயு உங்களிடம் வரும்போது
அவருக்கு எவ்விதக் குறையும் இராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில் அவரும் என்னைப் போலவே ஆண்டவருடைய வேலையைத்தான் செய்கிறார். [4]
11 ஆகையால் யாரும் அவரை இழிவாக நடத்தக் கூடாது.
அவர் என்னிடம் வந்து சேர நலமாய் வழி அனுப்பிவையுங்கள்.
ஏனெனில் நானும் இங்குள்ள சகோதரர்களும் அவருக்காகக் காத்திருக்கிறோம்.
12 நம் சகோதரராகிய அப்பொல்லோவைக் குறித்துக் கேட்டீர்களே!
அவர் மற்றச் சகோதரர்களுடன் உங்களிடம் வருமாறு
அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.
இப்போது உங்களிடம் வர அவருக்கு மனமேயில்லை.
ஆனால் தகுந்த நேரம் வரும்போது அவர் உங்களிடம் வருவார்.
இறுதி அறிவுரையும் வாழ்த்தும்
தொகு
13 விழிப்பாயிருங்கள்; நம்பிக்கையில் நிலைத்திருங்கள்;
துணிவுடன் நடந்து கொள்ளுங்கள்; வலிமையுடன் செயல்படுங்கள்.
14 அனைத்தையும் அன்போடு செய்யுங்கள்.
15 அன்பர்களே, இன்னுமொரு வேண்டுகோள்:
ஸ்தேவனா வீட்டாரை நீங்கள் அறிவீர்கள்.
அவர்கள் அக்காயா நாட்டில் முதன் முதல்
கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டவர்கள்.
இறை மக்களுக்குத் தொண்டு செய்யத் தங்களையே அர்ப்பணித்தவர்கள். [5]
16 இத்தகையோருக்கும் இவர்களுடன் இணைந்து செயல்படுவோர்,
பாடுபட்டு உழைப்போர் அனைவருக்கும் பணிந்திருங்கள்.
17 ஸ்தேவனா, பொர்த்துனாத்து, அக்காயிக்கு
ஆகியோர் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
நீங்கள் இங்கு இல்லாத குறையை அவர்கள் நீக்கினார்கள்.
18 அவர்கள் என் உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் புத்துயிர் ஊட்டினார்கள்.
இத்தகையோருக்கு மதிப்பு அளியுங்கள்.
19 ஆசியாவிலுள்ள திருச்சபைகள் உங்களை வாழ்த்துகின்றன.
அக்கிலாவும் பிரிஸ்காவும் தங்கள் வீட்டில் கூடும் திருச்சபையோடு சேர்ந்து
ஆண்டவரோடு இணைந்துவாழும் உங்களுக்கு வாழ்த்துகள் பல கூறுகிறார்கள். [6]
20 சகோதரர் சகோதரிகள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
21 இவ்வாழ்த்து பவுலாகிய நான் என் கைப்பட எழுதியது.
22 ஆண்டவரிடம் அன்பு செலுத்தாத எவரும் சபிக்கப்படுக! மாரனாத்தா! [7]
23 ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
24 கிறிஸ்து இயேசுவோடு இணைந்துவாழும் உங்களனைவருக்கும்
என் அன்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- குறிப்புகள்
[1] 16:1 = உரோ 15:25,26.
[2] 16:5 = திப 19:21.
[3] 16:8,9 = திப 19:8-10.
[4] 16:10 = 1 கொரி 4:17.
[5] 16:15 = 1 கொரி 1:16.
[6] 16:19 = திப 18:2.
[7] 16:22 - "மாரனாத்தா" என்பதற்கு "ஆண்டவரே வருக" என்பது பொருள்.
(கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் நிறைவுற்றது)
(தொடர்ச்சி):கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை