திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 11 முதல் 13 வரை

"பெருமை பாராட்டுதல் பயனற்றதே. ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால் ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன். கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான். அவன் உடலோடு அங்குச் சென்றானா, உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன். கடவுளே அதை அறிவார். ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான் என்பது எனக்குத் தெரியும். நான் மீண்டும் சொல்கிறேன்; அவன் உடலோடு அங்குச் சென்றானா அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன். கடவுளே அதை அறிவார். அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும் சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான். இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்." (2 கொரிந்தியர் 12:1-5)


அதிகாரம் 11

தொகு

பவுலும் போலித் தூதர்களும்

தொகு


1 என் அறிவீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக் கொள்ள வேண்டும்;
ஆம் சற்றே பொறுத்துக் கொள்ளுங்கள்.
2 உங்கள் மீது கடவுள் கொண்டுள்ள அதே அன்பார்வத்தை நானும் கொண்டுள்ளேன்.
கிறிஸ்து என்னும் ஒரே மணமகனுக்கும் உங்களுக்குமிடையே மண ஒப்பந்தம் செய்துள்ளேன்.
அவர்முன் உங்களைக் கற்புள்ள கன்னியாக நிறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். [1]
3 ஆனால் ஏவா பாம்பின் சூழ்ச்சியினால் ஏமாற்றப்பட்டதைப் போல
நீங்களும் உங்கள் எண்ணங்களைச் சீரழியவிட்டுக்
கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும் தூய்மையையும்
இழந்து விடுவீர்களோ என அஞ்சுகிறேன். [2]
4 உங்களிடம் யாராவது வந்து,
நாங்கள் அறிவித்த இயேசுவைத் தவிர வேறு ஓர் இயேசுவைப் பற்றி அறிவித்தால்,
அல்லது நீங்கள் பெற்ற தூய ஆவியைத் தவிர
வேறு ஓர் ஆவியைப்பற்றிப் பேசினால்,
அல்லது நீங்கள் ஏற்ற நற்செய்தியைத் தவிர
வேறு ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தால்
நீங்கள் அவர்களை எளிதாக ஏற்றுக் கொள்கிறீர்கள். [3]


5 இப்படிப்பட்ட 'மாபெரும்' திருத்தூதரை விட
நான் எதிலும் குறைந்தவன் அல்லேன் என்றே கருதுகிறேன்.
6 நான் நாவன்மையற்று இருக்கலாம்; ஆனால் அறிவு அற்றவன் அல்ல;
இதை எப்போதும் எல்லா வகையிலும் உங்களுக்குத் தெளிவுபடுத்தியே இருக்கிறோம்.


7 ஊதியம் எதுவும் எதிர்பார்க்காமல் நான் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தேன்.
நீங்கள் உயர்வுபெற நான் தாழ்வுற்றேன்.
இதுதான் நான் செய்த பாவமா?
8 நான் உங்களிடையே பணிபுரிந்தபோது
என் செலவுக்கு வேண்டியதை
மற்றத் திருச்சபைகளிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.
உங்களுக்காக அவர்களைக் கொள்ளையிட்டேன் என்றே சொல்லலாம்.
9 நான் உங்களோடு இருந்தபோது எனக்குப் பற்றாக்குறை இல்லாமல் இல்லை.
எனினும் நான் உங்களில் எவருக்கும் சுமையாய் இருந்ததில்லை.
மாசிதோனியாவிலிருந்து வந்த அன்பர்கள் என் பற்றாக்குறையைப் போக்கினார்கள்.
நான் எதிலும் உங்களுக்குச் சுமையாய் இருந்ததில்லை;
இனி இருக்கவும் மாட்டேன்.
10 கிறிஸ்துவின் உண்மையே என்னுள்ளும் இருப்பதால்
நான் பெருமைப்படுவதை அக்காயா பகுதியிலுள்ள யாரும் தடுக்க முடியாது.
11 ஏன் இப்படிச் சொல்கிறேன்?
உங்களிடம் எனக்கு அன்பே இல்லை என்பதாலா?
நான் உங்கள் மீது அன்புகொண்டவன் என்பது கடவுளுக்குத் தெரியும்.


12 எங்களைப் போன்று பணியாற்றுவதாகக் காட்டித்
தம் பணியில் பெருமையடைய சிலர் வாய்ப்புத் தேடுகின்றனர்.
அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காதிருக்க
நான் இப்போது செய்து வருவதையே தொடர்ந்து செய்வேன்.
13 ஏனெனில் இத்தகையோர் போலித் திருத்தூதர்;
வஞ்சக வேலையாள்கள்; கிறிஸ்துவின் திருத்தூதராக நடிப்பவர்கள். [4]
14 இதில் வியப்பு என்ன?
சாத்தான் கூட ஒளியைச் சார்ந்த தூதனாக நடிக்கிறானே?
15 ஆகவே அவனுடைய தொண்டர்கள்
கடவுளுக்கு ஏற்புடையவர்களாக நடிப்பதில் வியப்பு ஒன்றுமில்லை.
அவர்களது முடிவு அவர்களுடைய செயலுக்கு ஏற்பவே அமையும்.

பவுலின் துன்பங்கள்

தொகு


16 நான் மீண்டும் சொல்கிறேன்.
நான் ஒரு அறிவிலி என எவரும் எண்ண வேண்டாம்.
அவ்வாறு எண்ணினால், என்னை அறிவிலியாகவே வைத்துக் கொள்ளுங்கள்;
அப்படியானால் நானும் சற்றுப் பெருமையடித்துக்கொள்ளலாமே!
17 நான் இவ்வாறு பெருமையாய்ப் பேசுவது ஆண்டவரின் தூண்டுதலால் அல்ல;
மாறாக நான் ஓர் அறிவிலியாய் இருப்பதால் தான்.
18 பலர் உலகு சார்ந்த முறையில் பெருமையடித்துக் கொள்வதால்
நானும் அவ்வாறே செய்கிறேன்.
19 நீங்கள் அறிவுக்கூர்மையுள்ளவர்கள் அல்லவா?
அறிவிலிகளை மனமுவந்து பொறுத்துக் கொள்பவர்கள் ஆயிற்றே!
20 யாராவது உங்களை அடிமைப்படுத்தினாலும் சுரண்டினாலும்
உங்களுக்குக் கண்ணி வைத்தாலும்
உங்களிடம் இறுமாப்போடு நடந்து கொண்டாலும்
உங்களைக் கன்னத்தில் அறைந்தாலும் நீங்கள் பொறுத்துக் கொள்கிறீர்கள்!
21அ இப்படியெல்லாம் செய்ய நாங்கள் வலுவற்றவர்களே!
இது அவமானத்திற்குரிய ஒன்றுதான்!


21ஆ அவர்கள் எதில் பெருமை பாராட்டத் துணிகிறார்களோ
அதில் நானும் பெருமை பாராட்டத் துணிந்து நிற்கிறேன்.
இப்போதும் ஓர் அறிவிலியைப் போன்றே பேசுகிறேன்.
22 அவர்கள் எபிரேயரா? நானும் தான்;
அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்;
அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான்.
23 அவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்களா?
நான் அவர்களைவிடச் சிறந்த பணியாளனே.
இங்கும் நான் ஒரு மதியீனனாகவே பேசுகிறேன்.
நான் அவர்களை விட அதிகமாய்ப் பாடுபட்டு உழைத்தேன்;
பன்முறை சிறையில் அடைபட்டேன்;
கொடுமையாய் அடிபட்டேன்;
பன்முறை சாவின் வாயிலில் நின்றேன். [5]
24 ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால்
ஒன்று குறைய நாற்பது அடி அடித்தார்கள். [6]
25 மூன்றுமுறை தடியால் அடிபட்டேன்;
ஒருமுறை கல்லெறிபட்டேன்;
மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்;
ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன். [7]
26 பயணங்கள் பல செய்தேன்;
அவற்றில், ஆறுகளாலும் இடர்கள்,
கள்வராலும் இடர்கள்,
என் சொந்த மக்களாலும் இடர்கள்,
பிற மக்களாலும் இடர்கள்,
நாட்டிலும் இடர்கள்,
காட்டிலும் இடர்கள்,
கடலிலும் இடர்கள்,
போலித் திருத்தூதர்களாலும் இடர்கள்,
இப்படி எத்தனையோ இடர்களுக்கு ஆளானேன்.
27 பாடுபட்டு உழைத்தேன்;
பன்முறை கண்விழித்தேன்;
பசிதாகமுற்றேன்;
பட்டினி கிடந்தேன்;
குளிரில் வாடினேன்;
ஆடையின்றி இருந்தேன்.
28 இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை
எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது.
29 யாராவது வலுவற்றிருந்தால் நானும் அவரைப்போல் ஆவதில்லையா?
யாராவது பாவத்தில் விழ நேர்ந்தால் என் உள்ளம் கொதிப்பதில்லையா? [8]


30 நான் பெருமைபாராட்ட வேண்டுமென்றால்
என் வலுவின்மையைப் பற்றியேதான் நான் பெருமை பாராட்ட வேண்டும்.
31 நான் சொல்வது பொய் அல்ல.
இதை ஆண்டவர் இயேசுவின் தந்தையாம் கடவுளே அறிவார்.
அவர் என்றென்றும் போற்றப்பெறுக!
32 நான் தமஸ்கு நகரில் இருந்தபோது
அரசர் அரேத்தாவின் கீழிருந்த ஆளுநர் என்னைப் பிடிக்க
நகர வாயிலில் காவல் வைத்தார்.
33 ஆனால் நான் நகர மதிலில் இருந்த பலகணி வழியாகக்
கூடையில் வைத்து இறக்கப்பட்டு அவர் கைக்குத் தப்பினேன். [9]


குறிப்புகள்

[1] 11:2 = எபே 5:27.
[2] 11:3 = தொநூ 3:1-5,13.
[3] 11:4 = கலா 1:6-9.
[4] 11:13 = திவெ 2:2.
[5] 11:23 = திப 16:23.
[6] 11:24 = இச 25:3.
[7] 11:25 = திப 16:22.
[8] 11:29 = 1 கொரி 9:22.
[9] 11:32,33 = திப 9:24,25.


அதிகாரம் 12

தொகு

காட்சிகளும் வெளிப்பாடுகளும்

தொகு


1 பெருமை பாராட்டுதல் பயனற்றதே.
ஆயினும் பெருமை பாராட்ட வேண்டி இருப்பதால்
ஆண்டவர் அருளிய காட்சிகளையும் வெளிப்பாடுகளையும் குறித்துப் பேசப் போகிறேன்.
2 கிறிஸ்துவின் அடியான் ஒருவனை எனக்குத் தெரியும்.
அவன் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை
மூன்றாம் வானம் வரை எடுத்துச் செல்லப்பட்டான்.
அவன் உடலோடு அங்குச் சென்றானா,
உடலின்றி அங்குச் சென்றானா, யானறியேன்.
கடவுளே அதை அறிவார்.
3 ஆனால் அம்மனிதன் பேரின்ப வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டான்
என்பது எனக்குத் தெரியும்.
நான் மீண்டும் சொல்கிறேன்;
4 அவன் உடலோடு அங்குச் சென்றானா
அல்லது உடலின்றி அங்குச் சென்றானா யானறியேன்.
கடவுளே அதை அறிவார்.
அவன் அங்கே மனிதரால் உச்சரிக்கவும்
சொல்லவும் முடியாத வார்த்தைகளைச் சொல்லக் கேட்டான்.
5 இந்த ஆளைப் பற்றியே நான் பெருமை பாராட்டுவேன்.
என் வலுவின்மையே எனக்குப் பெருமை.
6 அப்படி நான் பெருமை பாராட்ட விரும்பினாலும்
அது அறிவீனமாய் இராது.
நான் பேசுவது உண்மையாகவே இருக்கும்.
ஆயினும் என்னிடம் காண்பதையும் கேட்பதையும் விட
உயர்வாக யாரும் என்னைக் கருதாதபடி
நான் பெருமை பாராட்டாது விடுகிறேன்.


7 எனக்கு அருளப்பட்ட ஒப்புயர்வற்ற வெளிப்பாடுகளால்
நான் இறுமாப்பு அடையாதவாறு
பெருங்குறை ஒன்று என் உடலில் தைத்த முள் போல்
என்னை வருத்திக் கொண்டே இருக்கிறது.
அது என்னைக் குத்திக் கொடுமைப்படுத்த
சாத்தான் அனுப்பிய தூதனைப் போல் இருக்கிறது.
நான் இறுமாப்படையாதிருக்கவே இவ்வாறு நடக்கிறது.
8 அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு
மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.
9 ஆனால் அவர் என்னிடம்,
"என் அருள் உனக்குப் போதும்;
வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" என்றார்.
ஆதலால் நான் என் வலுவின்மையைப் பற்றித்தான்
மனமுவந்து பெருமை பாராட்டுவேன்.
அப்போது கிறிஸ்துவின் வல்லமை என்னுள் தங்கும். [*]
10 ஆகவே என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும்
இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும்
கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கிறேன்.
ஏனெனில் நான் வலுவற்றிருக்கும்போது வல்லமை பெற்றவனாக இருக்கிறேன்.

கொரிந்துத் திருச்சபையின் மீது அக்கறை

தொகு


11 நான் ஓர் அறிவிலிபோல் பேசிவிட்டேன்.
என்னைப் பாராட்டி இருக்க வேண்டிய நீங்களே
என்னை அப்படிப் பேசவைத்து விட்டீர்கள்.
நான் ஒன்றுமில்லை.
எனினும் அந்த மாபெரும் திருத்தூதர்களை விட எதிலும் குறைந்தவனல்ல.
12 உங்களிடையே நான் கொண்டிருந்த மனஉறுதி,
நான் செய்த அரும் அடையாளங்கள், அருஞ்செயல்கள்,
வல்லசெயல்கள் ஆகியவையே ஒரு திருத்தூதருக்குரிய அறிகுறிகள்.
13 எந்த முறையில் மற்றத் திருச்சபைகளை விட
உங்களைத் தாழ்வாய் நடத்தினேன்?
உங்களுக்குச் சுமையாய் இராதது ஒரு குற்றமா?
அப்படியானால் அக்குற்றத்தை மன்னித்துக் கொள்ளுங்கள்.


14 இதோடு மூன்றாவது முறையாக நான் உங்களிடம் வரத் தயாராக இருக்கிறேன்.
ஆனால் உங்களுக்குச் சுமையாய் இருக்கமாட்டேன்.
உங்களுடைய உடைமைகளை அல்ல, உங்களையே நாடி வருகிறேன்.
பெற்றோருக்குப் பிள்ளைகள் செல்வம் சேமித்து வைக்க வேண்டியதில்லை.
மாறாக, பெற்றோரே பிள்ளைகளுக்காகச் சேமிக்க வேண்டும்.
15 நான் உங்களுக்காக எனக்குள்ளவற்றையும்,
ஏன் என்னையுமே மனமுவந்து அளித்திடுவேன்.
உங்கள் மீது நான் இத்துணை அன்பு கொண்டிருக்க
நீங்கள் என்மீது கொண்டுள்ள அன்பு குறையலாமா?


16 நான் உங்களுக்குச் சுமையாய் இல்லாதது குற்றமாகவே இருக்கட்டும்.
ஆனால் நான் உங்களைக் சூழ்ச்சியாய் வஞ்சித்தேன் என நினைக்கிறீர்களா?
17 நான் உங்களிடம் அனுப்பியவர் எவர் மூலமாவது ஆதாயம் தேடினேனா?
18 உங்களிடம் வருமாறு தீத்துவைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்;
மற்றொரு சகோதரரையும் அவரோடு அனுப்பிவைத்தேன்.
தீத்து உங்களிடம் ஆதாயம் தேடினாரா?
நாங்கள் ஒரே மனப்பாங்கோடு செயல்படவில்லையா?
ஒரே வழிமுறையைப் பின்பற்றவில்லையா?


19 நாங்கள் குற்றமற்றவர்கள் என உங்கள் முன் காட்டுவதாக
இதுவரை எண்ணியிருப்பீர்கள்.
அன்பார்ந்தவர்களே,
கடவுளின் திருமுன் கிறிஸ்து வழியாய் உங்களுக்குச் சொல்கிறேன்:
நான் செய்வதெல்லாம் உங்கள் வளர்ச்சிக்காகவே.
20 எனக்கு ஓர் அச்சம்!
நான் அங்கே வரும்போது நான் காணவிரும்பும் நிலையில்
நீங்கள் இருப்பீர்களோ என்னவோ!
ஒருவேளை நீங்கள் காண விரும்பாத நிலையில் நானும் இருக்கலாம்.
சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம்,
கட்சி மனப்பான்மை, அவதூறு பேசல், புறங்கூறல்,
இறுமாப்பு, குழப்பம் ஆகியவை உங்களிடம் இருக்கக் காண்பேனோ என்னவோ!
21 நான் மீண்டும் உங்களிடம் வரும்போது
என் கடவுள் உங்கள்முன் என்னைத் தலைகுனியச் செய்வாரோ என்னவோ!
முன்பு பாவம் செய்தவர்களுள் பலர் தங்களுடைய ஒழுக்கக்கேடு,
பரத்தைமை, காமவெறி ஆகியவற்றை விட்டு
மனம் மாறாமல் இருப்பதைக் கண்டு
துயருற்று அழவேண்டியிருக்குமோ என்னவோ!


குறிப்பு

[*] 12:9 = எசா 40:29.


அதிகாரம் 13

தொகு

இறுதி எச்சரிக்கையும் வாழ்த்தும்

தொகு


1 இதோடு மூன்றாம் முறையாக நான் உங்களிடம் வருகிறேன்.
இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தாலே
அனைத்துக் குற்றமும் உறுதி செய்யப்பட வேண்டும். [*]
2 முன்பு பாவம் செய்தோரையும் மற்ற எல்லாரையும் கூட
நான் ஏற்கெனவே எச்சரித்தது போலவே மீண்டும் எச்சரிக்கிறேன்.
இரண்டாம் முறை நான் உங்களிடம் வந்தபோது செய்தது போலவே
இப்போதும் நான் இங்கிருந்தே எச்சரிக்கிறேன்.
நான் மீண்டும் அங்கு வரும்போது
அவர்களை நான் எளிதாக விட்டுவிடப் போவதில்லை.
3 கிறிஸ்து என் மூலமாகப் பேசுகிறார் என்பதை
மெய்ப்பித்துக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் அல்லவா?
கிறிஸ்து உங்களிடையே என்னைப் போல வலுவற்றவராக இல்லை;
மாறாக அவர் வல்லமையோடு செயல்படுகிறார்.
4 ஏனென்றால், அவர் வலுவற்றவராய்ச் சிலுவையில் அறையப்பட்டார்.
ஆனால் கடவுளின் வல்லமையினால் அவர் உயிர் வாழ்கிறார்.
அவருடைய வலுவின்மையில் பங்கு பெறும் நாங்களும்
உங்கள் பொருட்டு கடவுளின் வல்லமையால் அவரோடு வாழ்வோம்.


5 நீங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கிறீர்களா
என உங்களையே சோதித்துப் பாருங்கள்.
உங்கள் நடத்தையைச் சீர்தூக்கிப் பாருங்கள்.
இயேசு கிறிஸ்து உங்களுள் செயலாற்றுகிறார் என
உணராமலா இருக்கிறீர்கள்?
நீங்கள் சீர்தூக்கிப் பார்த்தீர்கள் என்றால் அதை உணர்வீர்கள்.
6 நாங்கள் எங்கள் தகுதியை மெய்ப்பித்துக் காட்டியுள்ளோம்
என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன்.
7 நீங்கள் தீமை எதுவும் செய்யாதிருக்க
உங்களுக்காக நாங்கள் கடவுளிடம் வேண்டுகிறோம்.
எங்கள் தகைமையை எடுத்துக்காட்ட நாங்கள் விரும்பவில்லை.
நாங்கள் தகைமையற்றவர்களாகக் காணப்பட்டாலும்
நீங்கள் நன்மையையே செய்யவேண்டும் என்பதே எங்கள் வேண்டல்.
8 ஏனெனில் உண்மைக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்ய இயலாது.
உண்மையின் பொருட்டே அனைத்தையும் செய்கிறோம்.
9 நாங்கள் வலுவற்றவர்களாயிருப்பினும்
நீங்கள் வல்லமையுடையவர்களாய் இருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியே!
நீங்கள் நிறைவடைய வேண்டும் என்றே நாங்கள் இறைவனிடம் வேண்டுகிறோம்.
10 நான் இங்கிருந்தே இதையெல்லாம் எழுதுகிறேன்.
ஏனெனில் நான் உங்களிடம் வரும்போது
என் அதிகாரத்தைப் பயன்படுத்தி
உங்களிடம் கண்டிப்பாய் நடந்துகொள்ள விரும்பவில்லை.
உங்கள் அழிவுக்காக அல்ல,
உங்கள் வளர்ச்சிக்காகவே ஆண்டவர் இந்த அதிகாரத்தை எனக்கு அளித்துள்ளார்.

8. முடிவுரை

தொகு


11 சகோதர சகோதரிகளே,
இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது:
மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்;
என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்;
மன ஒற்றுமை கொண்டிருங்கள்;
அமைதியுடன் வாழுங்கள்;
அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
12 தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்.
இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.
13 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும்
கடவுளின் அன்பும்
தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!


குறிப்பு

[*] 13:1 = இச 17:6; 19:15; மத் 18:16; 1 திமொ 5:19.


(தொடர்ச்சி): கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை