திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

"நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்." (2 கொரிந்தியர் 8:9)


அதிகாரம் 7 தொகு


1 அன்பார்ந்தவர்களே,
இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றுள்ள நாம்
உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப்படுத்துவோம்.
கடவுளுக்கு அஞ்சித் தூய வாழ்வில் நிறைவடைவோம்.

5. பவுலின் ஆறுதலும் மகிழ்ச்சியும் தொகு


2 உங்கள் இதயத்தில் எங்களுக்கோர் இடம் வேண்டும்.
நாங்கள் யாருக்கும் தீங்கிழைக்கவில்லை; யாரையும் வஞ்சிக்கவில்லை.
3 நீங்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதற்காக நான் இவ்வாறு கூறவில்லை;
நான் ஏற்கெனவே கூறியவாறு நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கிறீர்கள்.
நாம் செத்தால் ஒன்றாய்ச் சாவோம்; வாழ்ந்தால் ஒன்றாய் வாழ்வோம்.
4 உங்கள் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
உங்களைக் குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
எல்லா இன்னல்களுக்கு இடையேயும் என் உள்ளத்தில் ஆறுதல் நிறைந்திருக்கிறது.
மகிழ்ச்சி பொங்கிவழிகிறது.


5 மாசிதோனியாவிற்கு வந்து சேர்ந்தபோது எங்களிடம் மன அமைதியே இல்லை.
வெளியே போராட்டம், உள்ளே அச்சம்;
இவ்வாறு எல்லா வகையிலும் துன்புற்றோம். [1]
6 தாழ்ந்தோருக்கு ஆறுதல் அளிக்கும் கடவுள்
தீத்துவின் வரவால் எங்களுக்கும் ஆறுதல் அளித்தார்.
7 அவரது வருகையால் மட்டும் அல்ல;
நீங்கள் தீத்துவுக்கு அளித்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதல் அடைந்தோம்.
எங்களைக் காண நீங்கள் கொண்டிருந்த ஏக்கத்தையும்
நீங்கள் அடைந்த துயரத்தையும் நீங்கள் என்னிடம் காட்டிய ஆர்வத்தையும் பற்றி
அவர் எங்களிடம் சொன்னபோது நாங்கள் மிகுதியான மகிழ்ச்சி அடைந்தோம்.


8 நான் எழுதிய திருமுகம் உங்களை மனவருத்தப்படுத்தியது என்பதை
அறிந்தபோது அதுபற்றி நான் வருந்தவில்லை.
அத்திருமுகம் உங்களைச் சிறிது காலத்துக்கு
மனவருத்தப்படுத்தியது என்பது உண்மைதான்.
முதலில் அதுபற்றி நான் வருத்தப்பட்டாலும்,
9 இப்போது எனக்கு மகிழ்ச்சிதான்.
நீங்கள் மனவருத்தம் அடைந்தீர்கள் என்பதற்காக அல்ல,
மாறாக உங்கள் மனவருத்தம் மனம்மாறச் செய்தது
என்பதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன்.
நீங்கள் கடவுளுக்கு ஏற்புடைய முறையில்
அந்த மனவருத்தத்தைத் தாங்கிக் கொண்டீர்கள்.
ஆகவே நாங்கள் உங்களுக்கு எந்த இழப்பையும் வருவிக்கவில்லை. [2]
10 கடவுளுக்கு ஏற்புடைய முறையில் தாங்கிக் கொள்ளப்படும் மனவருத்தம்
மீட்பு தரும் மனம்மாற்றத்தை விளைவிக்கிறது.
இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஆனால் உலகப் போக்கிலான மனவருத்தம் சாவை விளைவிக்கும்.
11 கடவுளுக்கு ஏற்புடையமுறையில் நீங்கள் தாங்கிக் கொண்ட மனவருத்தம்
உங்களுக்கு எத்துணை ஊக்கத்தை அளித்தது பார்த்தீர்களா?
அதுமட்டுமா? நேர்மையைக் காட்ட உங்களுக்கு எத்துணை ஆவல்!
எத்துணை உள்ளக் கொதிப்பு!
என் மீது எத்துணை அச்சம்!
என்னைக் காண எத்துணை ஏக்கம்! எத்துணை ஆர்வம்!
எனக்கு மனவருத்தம் அளித்தவனிடம் எத்துணைக் கண்டிப்பு!
இவ்வாறு உங்கள் செயல்கள் அனைத்திலும்
நீங்கள் நேர்மையாளர்கள் எனக்காட்டிக் கொண்டீர்கள்.


12 ஆக, தீங்கிழைத்தவரை முன்னிட்டோ,
தீங்குக்கு உள்ளானவரை முன்னிட்டோ
நான் அத்திருமுகத்தை எழுதவில்லை;
மாறாகக் கடவுள் திருமுன் நீங்கள் எங்கள் மேல் கொண்டுள்ள ஆர்வம்
வெளிப்படுமாறே அதை உங்களுக்கு எழுதினேன்.
13அ அதனால் நாங்கள் ஆறுதல் அடைந்தோம்.


13 ஆ நாங்கள் ஆறுதல் அடைந்தது மட்டுமல்ல,
தீத்துவின் மகிழ்ச்சியைக் கண்டபோது மேலும் மிகுதியாக மகிழ்ச்சி அடைந்தோம்.
ஏனெனில் நீங்கள் அவருக்குப் புத்தெழுச்சி ஊட்டினீர்கள்.
14 நான் உங்களைக் குறித்துத் தீத்துவிடம்
பெருமையாய்ப் பேசியது பற்றி வெட்கமடையவில்லை.
நாங்கள் உங்களிடம் பேசியதெல்லாம் உண்மையாய் இருப்பதுபோல
நாங்கள் தீத்துவிடம் உங்களைக் குறித்துப் பெருமையாய்ப் பேசியதும்
உண்மையெனத் தெளிவாயிற்று.
15 நீங்கள் அனைவரும் அவருக்குக் கீழ்படிந்து
அவரை அச்சத்தோடும் நடுக்கத்தோடும் ஏற்றுக் கொண்ட முறையை
அவர் நினைவு கூரும்போது அவரது உள்ளம் உங்களுக்காக மிகுதியாய் உருகுகிறது.
16 உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை உண்டு.
அதனால் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


குறிப்புகள்

[1] 7:5 = 2 கொரி 2:13.
[2] 7:8,9 = எபி 12:11.


அதிகாரம் 8 தொகு

6. யூதேயாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு நன்கொடை திரட்டுதல் தொகு


1 சகோதர சகோதரிகளே,
மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி
உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
2 அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களால் கடுமையாகச் சோதிக்கப்பட்ட போதும்
அவர்கள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் இருந்தார்கள்.
அவர்கள் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு வாரி வழங்கினார்கள்.
3 அவர்கள் தங்களால் இயன்ற அளவுக்குத் தாங்களாகவே கொடுத்தார்கள்.
ஏன், அளவுக்கு மீறியே கொடுத்தார்கள். இதற்கு நானே சாட்சி.
4 இறைமக்களுக்குச் செய்யும் அறப்பணியில் பங்குபெறும் பேறு
தங்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். [1]
5 நாங்கள் எதிர்பார்த்ததற்கு மேலாக அவர்கள் தங்களை
முதன்மையாக ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்;
நாங்கள் கடவுளின் திருவுளப்படி செயல்படுவதால்,
எங்களுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.
6 எனவே இந்த அறப்பணியைத் தொடங்கிய தீத்துவே
அப்பணியை முடிக்க வேண்டும் என
நாங்கள் அவரை வேண்டிக் கொண்டோம்.
7 நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம்
ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள்.
எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது.
அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.


8 நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை.
மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி
உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன்.
9 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே!
அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார்.
அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்.
10 இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவே:
இது உங்களுக்குப் பயனளிக்கும்.
கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்;
அது மட்டுமல்ல; இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே.
11 அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள்.
ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து,
ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள்.
12 ஆர்வத்தோடு கொடுத்தால்,
தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும்
அது இறைவனுக்கு ஏற்புடையதாகும்.
தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை.


13 மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக
நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.
மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம்.
14 இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது;
அவர்களுடைய குறையை நீக்குங்கள்.
அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது
உங்கள் குறையை நீக்குவார்கள்.
இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.


15 "மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை;


குறைவாகச் சேகரித்தவருக்கும்


எதுவும் குறைவுபடவில்லை"


என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! [2]

தீத்துவும் அவருடைய உடன் உழைப்பாளர்களும் தொகு


16 எங்களுக்கு உங்கள் பேரில் உள்ள அதே ஆர்வத்தைத்
தீத்துவின் உள்ளத்திலும் தூண்டியெழுப்பிய கடவுளுக்கு நன்றி உரித்தாகுக!
17 நாங்கள் விடுத்த வேண்டுகோளை முன்னிட்டு மட்டும் அல்ல,
அவரே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் அவராக உங்களிடம் புறப்பட்டு வருகிறார்.
18 அவரோடு மற்றொரு சகோதரரையும் அனுப்புகிறோம்.
அவர் நற்செய்தி அறிவித்து எல்லாத் திருச்சபைகளிலும் புகழ்பெற்று விளங்குபவர்.
19 அது மட்டும் அல்ல,
நாங்கள் செய்யும் அறப்பணிப் பயணத்தில் வழித்துணைவராகத்
திருச்சபையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே.
ஆண்டவரின் மாட்சி இலங்கவும் எங்கள் ஆர்வம் விளங்கவுமே
நாங்கள் இவ்வறப் பணியை மேற்கொண்டுள்ளோம்.


20 இந்தப் பெருந்தொகையைக் கையாளும் முறைபற்றி
எங்கள் மீது எவரும் குறை கூறாவண்ணம் கவனமாயிருக்கிறோம்.
21 ஆண்டவர் முன்னிலையில் மட்டுமல்ல,
மனிதர் முன்னிலையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதே எங்கள் நோக்கம். [3]
22 அவர்களோடு வேறொரு சகோதரரையும் அனுப்பி வைக்கிறோம்.
இவரது ஆர்வத்தைப் பலவற்றில் பலவேளைகளில்
நாங்கள் சோதித்து அறிந்திருக்கிறோம்.
அவர் உங்களிடம் உறுதியான நம்பிக்கை மிகக் கொண்டிருப்பதால்
இன்னும் மிகுதியாக ஆர்வம் காட்டுகிறார்.
23 தீத்துவைப் பற்றிக் கூற வேண்டுமென்றால்
அவர் என் பணியில் பங்காளியும் உடன் உழைப்பாளரும் ஆவார்.
மற்ற சகோதரர்கள் திருச்சபைகளால் அனுப்பப்பட்ட தூதர்கள்.
கிறிஸ்துவைப் போற்றிப் புகழும் முறையில் வாழ்பவர்கள்.
24 ஆகவே அவர்களுக்கு உங்கள் அன்பைக் காட்டி,
நாங்கள் உங்களைக் குறித்து அவர்களிடம் பெருமையாய்ப் பேசியது சரியே என்று
எல்லாத் திருச்சபைகளுக்கும் எடுத்துக் காட்டுங்கள்.


குறிப்புகள்

[1] 8:1-4 = உரோ 15:26.
[2] 8:15 = விப 16:18.
[3] 8:21 = உரோ 12:17.


(தொடர்ச்சி): கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை