திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொலோசையருக்கு எழுதிய திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

"புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்." (கொலோசையர் 3:11)


அதிகாரம் 3

தொகு

4. கிறிஸ்தவ வாழ்வு

தொகு

புதுப்பிக்கப்படும் மனித இயல்பு

தொகு


1 நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்.
அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். [1]
2 இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல,
மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.
3 ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள்.
உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.
4 கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்.
அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு
மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.


5 ஆகவே உலகப்போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை,
ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு,
தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.
6 இவையே கீழ்ப்படியா மக்கள்மீது கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன.
7 இத்தகையவர்களோடு நீங்கள் வாழ்ந்தபோது
நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள்.


8 ஆனால் இப்பொழுது நீங்கள் சினம், சீற்றம்,
தீமை ஆகிய அனைத்தையும் அகற்றி விடுங்கள்.
பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும்
உங்கள் வாயினின்று வரக்கூடாது.
9 ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள்.
ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும்
அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, [2]
10 புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள்.
அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின்
சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது.
இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும். [3]
11 புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும்,
விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும்,
நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும்,
அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடில்லை.
கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாயிருப்பார்.


12 நீங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்,
அவரது அன்பிற்குரிய இறைமக்கள்.
எனவே அதற்கிசைய பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை,
கனிவு, பொறுமை, ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள்.
13 ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள்.
ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள்.
ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். [4]
14 இவையனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள்.
அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்.
15 கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக!
இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள்.
நன்றியுள்ளவர்களாயிருங்கள்.
16 கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக!
முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள்.
திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும்
நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள்.
17 எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும்
அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து
அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். [5]

குடும்ப ஒழுக்கம்

தொகு


18 திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள்.
ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். [6]


19 திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்.
அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள். [7]


20 பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்கு முற்றிலும் கீழ்ப்படியுங்கள்.
ஆண்டவரைச் சார்ந்தவர்களுக்கு இதுவே தகும். [8]


21 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள்.
அப்படிச் செய்தால் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள். [9]


22 அடிமைகளே, இவ்வுலகில் உள்ள உங்கள் தலைவர்களுக்கு,
முற்றிலும் கீழ்ப்படியுங்கள்.
மனிதர்களுக்கு உகந்தவர்களாகுமாறு வேலை செய்வதாகக் காட்டிக்கொள்ளாமல்,
ஆண்டவருக்கு அஞ்சி முழுமனத்தோடு வேலை செய்யுங்கள்.
23 நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல;
ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். [10]
24 அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு
உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா?
நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள்.
25 ஏனெனில், ஆள்பார்த்துச் செயல்படாத கடவுள்
நேர்மையற்றவருக்கு அவரது நேர்மையற்ற செயலுக்கேற்ற
பயனையே கைம்மாறாக அளிப்பார். [11]


குறிப்புகள்

[1] 3:1 = திபா 110:1.
[2] 3:9 = எபே 4:24.
[3] 3:10 = தொநூ 1:26; எபே 4:24.
[4] 3:12,13 = எபே 4:32.
[5] 3:16,17 = எபே 5:19,20.
[6] 3:18 = எபே 5:22; 1 பேது 3:1.
[7] 3:19 = எபே 5:25; 1 பேது 3:7.
[8] 3:20 = எபே 6:1.
[9] 3:21 = எபே 6:4.
[10] 3:22,23 = எபே 6:5-8.
[11] 3:25 = இச 10:17; எபே 6:9.


அதிகாரம் 4

தொகு


1 தலைவர்களே, உங்கள் அடிமைகளை உங்களுக்கு இணையாகக் கருதி
நேர்மையோடு நடத்துங்கள்.
உங்களுக்கும் விண்ணகத்தில் ஆண்டவர் ஒருவர் உண்டு
என்பதை நினைவிற்கொள்ளுங்கள். [1]

அறிவுரை

தொகு


2 தொடர்ந்து இறைவனிடம் வேண்டுங்கள்.
விழிப்போடும் நன்றி உணர்வோடும் அதில் ஈடுபடுங்கள்.
3 நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பைக்
கடவுள் உருவாக்கித் தருமாறு அவரிடம் எங்களுக்காகவும் வேண்டுங்கள்.
அப்பொழுது கிறிஸ்துவைப் பற்றிய மறைபொருளை நாங்கள் எடுத்துரைக்க முடியும்.
இம்மறைபொருளின் பொருட்டே நான் சிறைப்பட்டிருக்கிறேன்.
4 நான் பேசவேண்டிய முறையில் பேசி
இம்மறை பொருளை வெளிப்படுத்தும் ஆற்றலைப் பெற எனக்காக வேண்டுங்கள்.
5 திருச்சபையைச் சேராதவர்களிடம் ஞானத்தோடு நடந்துகொள்ளுங்கள்.
காலத்தை நன்கு பயன்படுத்துங்கள். [2]
6 உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக!
ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்.

5. முடிவுரை

தொகு

தம்மைப் பற்றிய செய்திகள்

தொகு


7 என்னைப்பற்றிய செய்திகளையெல்லாம்
அன்பார்ந்த சகோதரர் திக்கிக்கு உங்களுக்குத் தெரிவிப்பார்.
அவர் ஆண்டவரது பணியில் என் உடன்பணியாளர்,
நம்பிக்கைக்குரிய திருத்தொண்டர்.
8 எங்களைப்பற்றிய செய்திகளை உங்களுக்குத் தெரிவித்து
உங்கள் உள்ளங்களை ஊக்குவிக்கவே அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். [3]
9 நம்பிக்கைக்குரிய அன்பார்ந்த சகோதரர் ஒனேசிமுவையும்
அவரோடு அனுப்பிவைக்கிறேன்.
அவர் உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவர்.
அவர்கள் இங்கு நடப்பவை அனைத்தையும் உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.

இறுதி வாழ்த்து

தொகு


10 என் உடன்கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்கு உங்களை வாழ்த்துகிறார்.
பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்.
இவருக்கு நீங்கள் செய்ய வேண்டிவைபற்றி ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளோம்.
இவர் உங்களிடம் வந்தால் வரவேற்பு அளியுங்கள்.
11 யுஸ்து என்னும் இயேசுவும் உங்களை வாழ்த்துகிறார்.
விருத்தசேதனம் பெற்றவர்களுள் இவர்கள் மட்டுமே
இறையாட்சிக்காக என்னுடன் உழைப்பவர்கள்.
இவர்கள் எனக்கு ஆறுதலாயிருந்து வருகின்றார்கள்.


12 கிறிஸ்து இயேசுவின் பணியாளரும்
உங்கள் திருச்சபையைச் சேர்ந்தவருமான எப்பப்பிரா உங்களை வாழ்த்துகிறார்.
எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் திருவுளத்தை
முழுமையாக நிறைவேற்றுவதில் நீங்கள் தேர்ச்சிபெற்றவர்களாயும்
நிலைத்து நிற்பவர்களாயும் இருக்கவேண்டுமென
இவர் எப்போதும் உங்களுக்காக இறைவனிடம் வருந்தி வேண்டி வருகிறார்.
13 இவர் உங்களுக்காகவும்
லவோதிக்கேயா, எராப்பொலி நகரத்தைச் சேர்ந்தவர்களுக்காகவும்
கடுமையாக உழைக்கிறார் என்பதற்கு நான் சாட்சி.


14 அன்பார்ந்த மருத்துவர் லூக்காவும்,
தேமாவும் உங்களை வாழ்த்துகின்றனர்.


15 லவோதிக்கேயாவிலுள்ள சகோதரர் சகோதரிகளுக்கும்
நிம்பாவுக்கும் அச்சகோதரி வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துக் கூறுங்கள்.
16 இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு
லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும்
திருமுகத்தையும் நீங்கள் வாசியுங்கள்.
17 ஆண்டவரது பணியில் தாம் பெற்றுள்ள திருத்தொண்டை
நிறைவேற்றி முடிக்கக் கவனமாயிருக்குமாறு அர்க்கிப்பிடம் சொல்லுங்கள்.


18 பவுலாகிய நான் இவ்வாழ்த்தை என் கைப்பட எழுதுகிறேன்.
சிறைப்பட்டிருக்கும் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்.


இறையருள் உங்களோடிருப்பதாக!


குறிப்புகள்

[1] 4:1 = எபே 6:9.
[2] 4:5 = எபே 5:16.
[3] 4:7,8 = எபே 6:21,22.


(கொலோசையருக்கு எழுதிய திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை