திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை
திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். 'நாங்கள் பயணம் செய்தோம்', 'நாங்கள் தங்கியிருந்தோம்', 'நாங்கள் போதித்தோம்' போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன (16:10-17; 20:5-15; 21:1-18; 27:1-28:16). (ஆசிரியரைப் பற்றிய பிற குறிப்புகளை லூக்கா நற்செய்தி நூல் முன்னுரையில் காண்க).
ஆசிரியர்
தொகுசூழல்
தொகுகிறிஸ்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கமளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தேர்ந்துகொள்ளப்பட்ட பவுல் யூதருக்கு எதிராகப் பெருந் தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை ஆசிரியர் எழுதுகிறார். இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறைவார்த்தைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. ஆவியார் துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் பவுலும் - எவ்வாறு திருத்தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே நூலின் முடிவுரையாக அமைகின்றது.
உள்ளடக்கம்
தொகு"தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" (1:8) என்னும் உயிர்த்தெழுந்த ஆண்டவரின் கூற்றே இந்நூலுக்கு மையச் செய்தியாக அமைகின்றது. யூதரும் சமாரியரும் கிரேக்கரும் பிற இனத்தவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு ஆண்டவரின் சாட்சிகளாகின்றனர். இறைவார்த்தைப் பணி வளர்ந்து பெருக, எங்கும் திருச்சபைகள் நிறுவப்படுகின்றன. எனவே இந்நூலைத் "தூய ஆவியின் பணிகள்" எனவும் அழைக்கலாம். பேதுரு, ஸ்தேவான், பவுல் ஆகியோரின் அருளுரைகள் இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்தியல் விளக்கங்களை அளிக்கின்றன. பேதுரு, பவுல் ஆகியோரின் மனமாற்ற அனுபவங்களும், எருசலேம் சங்கமும் உலகெங்கும் உருவாகும் பொதுவான திருச்சபைக்கு வித்திடுகின்றன. கிறிஸ்தவர்களைப் பற்றித் தொகுத்துக் கூறுமிடங்களில் நட்புறவு, அப்பம் பிடுதல், இறைவேண்டல், சான்றுபகர்தல், தொண்டாற்றுதல், அன்புப் பகிர்வு (1:27-30; 2:42-47; 4:32-37) போன்றவற்றைச் சீடர்களின் தனித்தன்மைகளாக இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
திருத்தூதர் பணிகள்
தொகுநூலின் பிரிவுகள்
பொருளடக்கம் | நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. முன்னுரை (விண்ணேற்றம்) | 1:1-11 | 214 |
2. எருசலேமின் சான்று பகர்தல் | 1:12 - 8:3 | 214 - 227 |
3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல் | 8:4 - 12:25 | 227 - 237 |
4. உலகின் கடையெல்லைவரை சான்று பகர்தல் | 13:1 - 28:31 | 237 - 268 |
திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)
தொகுஅதிகாரங்கள் 1 முதல் 2 வரை
அதிகாரம் 1
தொகு1. முன்னுரை
தொகுதூய ஆவியைப் பற்றிய வாக்குறுதி
தொகு
1 தெயோபில் அவர்களே,
இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு
அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.
2 விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து
எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.
3 இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி,
இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்;
பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.
4 அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம்,
"நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம்.
என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். [1]
5 யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்.
நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்" என்று கூறினார். [2]
இயேசுவின் விண்ணேற்றம்
தொகு
6 பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம்,
"ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?"
என்று கேட்டார்கள்.
7 அதற்கு அவர்,
"என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும்
காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல;
8 ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது
நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று
எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும்
உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்" என்றார். [3]
9 இவற்றைச் சொன்னபின்பு,
அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. [4]
10 அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, [5]
11 "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்?
இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா?
அவ்வாறே அவர் மீண்டும் வருவார்" என்றனர்.
2. எருசலேமில் சான்று பகர்தல்
தொகுமத்தியா தெரிந்தெடுக்கப்படுதல்
தொகு
12 பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் [6] உள்ளது.
13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா,
பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன்,
யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின்
தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள். [7]
14 அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும்,
அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து
ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்.
15 அப்போது ஒருநாள், ஏறக்குறைய நூற்றிருபது சகோதரர் சகோதரிகள்
ஒரே இடத்தில் கூடியிருக்கும்போது
பேதுரு அவர்கள் நடுவே எழுந்து நின்று கூறியது:
16 "அன்பர்களே, இயேசுவைக் கைது செய்தவர்களுக்கு வழிகாட்டிய யூதாசைக் குறித்து
தூய ஆவியார் தாவீதின் வாயிலாக முன்னுரைத்த
மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டியிருந்தது.
17 அவன் நம்மில் ஒருவனாய் எண்ணப்பட்டு
நாம் ஆற்றும் பணியில் பங்கு பெற்றிருந்தான்.
18 அவன் தனது நேர்மையற்ற செயலுக்குக் கிடைத்த
கூலியைக் கொண்டு ஒரு நிலத்தை வாங்கினான்.
பின்பு அவன் தலைகீழாய் விழ, வயிறு வெடித்து, குடலெல்லாம் சிதறிப்போயின. [8]
19 இது எருசலேமில் குடியிருக்கும் அனைவருக்கும் தெரியவந்தது.
அதனால் அந்த நிலத்தை அவர்கள் தம் மொழியில் "அக்கலிதமா" என வழங்குகின்றார்கள். அதற்கு "இரத்தநிலம்" என்பது பொருள்.
20 திருப்பாடல்கள் நூலில்,
'அவன் வீடு பாழாவதாக!
அதில் எவரும் குடிபுகாதிருப்பாராக!"
என்றும்
"அவனது பதவியை வேறொருவர் எடுத்துக்கொள்ளட்டும்!"
என்றும் எழுதப்பட்டுள்ளது. [9]
21-22 ஆகையால் ஆண்டவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாய் விளங்க,
அவர் நம்மிடையே செயல்பட்டக் காலத்தில்
நம்மோடு இருந்த ஒருவரைச் சேர்த்துக்கொள்ள
நாம் கூடி வரவேண்டியது தேவையாயிற்று.
யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த காலமுதல்
ஆண்டவர் இயேசு நம்மிடமிருந்து விண்ணேற்றமடைந்த நாள்வரை
அவர் நம்மோடு இருந்திருக்கவேண்டும்." [10]
23 அத்தகையோருள், இருவரை முன்னிறுத்தினார்கள்.
ஒருவர் யோசேப்பு என்னும் பெயர் கொண்ட பர்சபா.
இவருக்கு யுஸ்து என்னும் பெயரும் உண்டு.
மற்றவர் மத்தியா.
24 பின்பு அவர்கள் அனைவரும்,
"ஆண்டவரே, அனைவரின் உள்ளங்களையும் அறிபவரே,
யூதாசு திருத்தொண்டையும் திருத்தூதுப் பணியையும் விட்டகன்று
தனக்குரிய இடத்தை அடைந்துவிட்டான். [11]
25 அந்த யூதாசுக்குப் பதிலாக யாரைத் தெரிந்தெடுக்க வேண்டும் என
இந்த இருவருள் ஒருவரை எங்களுக்கு காண்பியும்"
என்று இறைவனிடம் வேண்டிக்கொண்டனர்.
26 அதன்பின் அவர்கள் சீட்டு குலுக்கினார்கள்.
சீட்டு மத்தியா பெயருக்கு விழவே
அவர் பதினொரு திருத்தூதர்களோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
- குறிப்புகள்
[1] 1:1-4 = லூக் 1:1-4; லூக் 24:29,51; 1 திமொ 3:16.
[2] 1:5 = மத் 3:11; மாற் 1:8; லூக் 3:16; யோவா 1:33.
[3] 1:8 = எசா 43:10; மத் 28:19; மாற் 16:15; லூக் 24:47.
[4] 1:9 = மாற் 16:19; லூக் 24:50,51.
[5] 1:10 = 1 பேது 3:22.
[6] 1:12 - ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலை.
[7] 1:13 = லூக் 6:14-16.
[8] 1:18 = மத் 27:3-10.
[9] 1:20 = திபா 69:25; யோவா 17:12; திபா 109:8.
[10] 1:22 = மத் 3:16; மாற் 1:9; லூக் 3:21.
[11] 1:24 = எரே 11:20; திவெ 2:23.
அதிகாரம் 2
தொகுதூய ஆவியின் வருகை
தொகு
1 பெந்தக்கோஸ்து [1] என்னும் நாள் வந்தபோது
அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். [2]
2 திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று
ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி,
அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது.
3 மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள்
ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள்.
4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.
தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும்
வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
5 அப்பொழுது வானத்தின் கீழுள்ள
அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள்
எருசலேமில் தங்கியிருந்தனர். [3]
6 அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும்
தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.
7 எல்லோரும் மலைத்துப்போய்,
"இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
8 அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில்
இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?" என வியந்தனர்.
9 பார்த்தரும், மேதியரும், எலாமியரும்,
மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து,
ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த
லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும்
உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,
11 யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும்,
அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை
இவர்கள் பேசக் கேட்கிறோமே!" என்றனர்.
12 எல்லாரும் மலைத்துப்போய்
இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு
மனம் குழம்பி நின்றனர்.
13 இவர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று
மற்றவர்கள் கிண்டல் செய்தனர்.
பெந்தக்கோஸ்து நாளில் பேதுருவின் அருளுரை
தொகு
14 அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து,
எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்:
"யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே,
இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள்.
15 நீங்கள் நினைப்பது போல் இவர்கள் குடிவெறியில் இருப்பவர்களல்ல.
இப்போது காலை ஒன்பது மணிதான் ஆகிறது.
16 நீங்கள் காணுகின்ற காட்சி இறைவாக்கினர் யோவேல் கூறிய நிகழ்ச்சியே.
17 அவர் மூலம் கடவுள் கூறியது:
'இறுதி நாள்களில் நான் மாந்தர் யாவர் மேலும்
என் ஆவியை பொழிந்தருள்வேன்.
உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்.
உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும்
உங்கள் முதியோர் கனவுகளையும் காண்பர்.
18 அந்நாள்களில் உங்கள் பணியாளர் பணிப்பெண்கள்மேலும்
என் ஆவியைப் பொழிந்தருள்வேன்.
அவர்களும் இறைவாக்கு உரைப்பர்.
19 இன்னும் மேலே வானத்தில் அருஞ்செயல்களையும்
கீழே வையகத்தில் இரத்தம், நெருப்பு, புகைப்படலம்
ஆகிய அடையாளங்களையும் கொடுப்பேன்.
20 ஒளிமயமான பெருநாளாகிய
ஆண்டவரின் நாள் வருமுன்னே
கதிரவன் இருண்டு போகும்;
நிலவோ இரத்த நிறமாக மாறும்.
21 அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்
சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப் பிழைப்பர்.' [4]
22 இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்.
கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக
உங்கள் நடுவில் வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும்
அடையாளங்களையும் செய்து,
அவரை இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார்.
இது நீங்கள் அறிந்ததே.
23 கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும்,
தம் முன்னறிவின்படியும்
இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார்.
நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம்
அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். [5]
24 ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து
உயிர்த்தெழச்செய்தார்.
ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. [6]
25 தாவீது அவரைக் குறித்துக் கூறியது:
'நான் ஆண்டவரை எப்போதும்
என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்;
எனவே நான் அசைவுறேன்.
26 இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது;
என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது.
என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும்.
27 ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்.
உம் தூயவனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.
28 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.' [7]
29 "சகோதர சகோதரிகளே,
நமது குல முதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள்.
அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது.
30 அவர் இறைவாக்கினர் என்பதால்,
தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று
கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். [8]
31 அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து,
'அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;
அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்'
என்று கூறியிருக்கிறார்.
32 கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார்.
இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்.
33 அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு,
வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து
பெற்றுப் பொழிந்தருளினார்.
நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.
34-35 விண்ணுலகிற்கு உயர்த்தப்பட்டவர் தாவீது அல்ல.
ஏனெனில்,
'ஆண்டவர் என் தலைவரிடம்,
"நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்" எனக் கூறினார்'
என்று அவரே சொல்கிறாரே. [9]
36 ஆகையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக்
கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை
இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்."
37 அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய்
பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து,
"சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
38 அதற்குப் பேதுரு, அவர்களிடம்,
"நீங்கள் மனம் மாறுங்கள்.
உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக
ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்.
அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள்.
39 ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும்
உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும்
ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார். [10]
40 மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி,
"நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து
உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார்.
41 அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள்.
அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.
நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை
தொகு
42 அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும்
நட்புறவிலும் அப்பம் பிடுவதலும் இறைவேண்டலிலும்
உறுதியாய் நிலைத்திருந்தார்கள்.
மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது.
43 திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன.
44 நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்;
எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். [11]
45 நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர்
அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர்.
46 ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு
கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்;
பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும்
வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள்.
47 அவர்கள் கடவுளைப் போற்றிவந்தார்கள்;
எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்;
ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை
நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.
- குறிப்புகள்
[1] 2:1 - "பெந்தக்கோஸ்து" என்னும் சொல்லுக்கு ஐம்பதாவது நாள் என்பது பொருள்.
இது அறுவடைக்காக நன்றி செலுத்தும் யூதத் திருவிழா.
பாஸ்காத் திருவிழாவுக்குப்பின் ஐம்பதாவது நாள் இது கொண்டாடப்பட்டது.
[2] 2:1 = லேவி 23:15-21; இச 16:9-11.
[3] 2:5 = மத் 28:19.
[4] 2:17-21 = 1 யோவே 2:28-32.
[5] 2:23 = மத் 27:35; மாற் 15:24; லூக் 23:33; யோவா 19:18; திப 4:10; 1 தெச 2:15.
[6] 2:24 = மத் 28:5,6; மாற் 16:6; லூக் 24:5.
[7] 2:25-28 = திபா 16:8-11.
[8] 2:30 = திபா 32:11; 2 சாமு 7:12,13.
[9] 2:34-35 = திபா 110:1.
[10] 2:39 = எசா 57:19.
[11] 2:44 = திப 4:32-35.
(தொடர்ச்சி): திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை