திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 9 முதல் 10 வரை
மாற்கு நற்செய்தி (Mark)
தொகுஅதிகாரங்கள் 9 முதல் 10 வரை
அதிகாரம் 9
தொகு
1 மேலும் அவர் அவர்களிடம்,
"இங்கே இருப்பவர்களுள் சிலர்
இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன்
சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
இயேசு தோற்றம் மாறுதல்
தொகு(மத் 17:1-13; லூக் 9:28-36)
2 ஆறு நாள்களுக்குப் பின்பு,
இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து,
ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.
3 அவருடைய ஆடைகள்
இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு
வெள்ளை வெளேரென ஒளிவீசின.
4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர்.
இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
5 பேதுரு இயேசுவைப் பார்த்து,
"ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது.
உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக
மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார்.
6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை.
ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.
7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட
அந்த மேகத்தினின்று,
"என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்"
என்று ஒரு குரல் ஒலித்தது. [1] [2]
8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.
தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர்,
"மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை,
நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது" என்று
அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
10 அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி,
'இறந்து உயிர்த்தெழுதல்' என்றால் என்னவென்று
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.
11 அவர்கள் அவரிடம்,
"எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?"
என்று கேட்டார்கள். [3]
12 அதற்கு அவர்,
"எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார்
என்று கூறுவது உண்மையே.
ஆனால் மானிட மகன் பல துன்பங்கள் படவும்
இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று
அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
13 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
எலியா வந்துவிட்டார்.
அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்.
அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன" என்றார்.
தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல்
தொகு(மத் 17:14-20; லூக் 9:37-43அ)
14 அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது,
பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும்
மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.
15 மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று
அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.
16 அவர் அவர்களை நோக்கி,
"நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?" என்று கேட்டார்.
17 அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து,
"போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை
உம்மிடம் கொண்டு வந்தேன்.
18 அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே
அவனைக் கீழே தள்ளுகிறது.
அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்;
உடம்பும் விறைத்துப்போகிறது.
அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்;
அவர்களால் இயலவில்லை" என்று கூறினார்.
19 அதற்கு அவர் அவர்களிடம்,
"நம்பிக்கையற்ற தலைமுறையினரே.
எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்?
எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்?
அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்.
20 அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க,
அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.
21 அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து,
"இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது.
22 இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும்
பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு.
உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு
எங்களுக்கு உதவி செய்யும்" என்றார்.
23 இயேசு அவரை நோக்கி,
"இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்றார்.
24 உடனே அச்சிறுவனின் தந்தை,
"நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்" என்று கதறினார்.
25 அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு,
அந்தத் தீய ஆவியை அதட்டி,
"ஊமைச் செவிட்டு ஆவியே,உனக்குக் கட்டளையிடுகிறேன்:
இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே" என்றார்.
26 அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது.
அச்சிறுவன் செத்தவன் போலானான்.
ஆகவே அவர்களுள் பலர், "அவன் இறந்துவிட்டான்" என்றனர்.
27 இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.
28 அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து,
"அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?" என்று கேட்டனர்.
29 அதற்கு அவர், "இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் [நோன்பினாலும்] [4] அன்றி
வேறு எதனாலும் வெளியேறாது" என்றார்.
இயேசு தம் சாவை இரண்டாம் முறை முன்னறிவித்தல்
தொகு(மத் 17:22-23; லூக் 9:23ஆ-25)
30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள்.
அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.
31 ஏனெனில், "மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்;
அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்.
கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று
அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.
32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.
அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.
யார் மிகப் பெரியவர்?
தொகு(மத் 18:1-5; லூக் 9:46-48)
33 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள்.
அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு,
"வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?" என்று
அவர்களிடம் கேட்டார்.
34 அவர்கள் பேசாதிருந்தார்கள்.
ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி
வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். [5]
35 அப்பொழுது அவர் அமர்ந்து,
பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம்,
"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால்
அவர் அனைவரிலும் கடைசியானவராகவும்
அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார். [6]
36 பிறகு அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து,
அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,
37 "இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை
என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும்
என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல,
என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார். [7]
இயேசுவின் பெயரால் பேய் ஓட்டியவர்
தொகு(லூக் 9:49-50)
38 அப்பொழுது யோவான் இயேசுவிடம்,
"போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு,
நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம்.
ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்" என்றார்.
39 அதற்கு இயேசு கூறியது: "தடுக்க வேண்டாம்.
ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர்
அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.
40 ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். [8]
41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு
ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர்
கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்." [9]
பாவத்தில் விழச்செய்தல்
தொகு(மத் 18:6-9; லூக் 17:1-2)
42 "என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது
பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில்
ஓர் எந்திரக் கல்லைக் கட்டி,
கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்
அதை வெட்டி விடுங்கள்.
நீங்கள் இரு கையுடையவராய்
அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட,
கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. [10]
[44]. [11]
45 உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்
அதை வெட்டி விடுங்கள்.
நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட
கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.
[46]. [12]
47 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால்,
அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.
நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட
ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. [13]
48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது. [14]
49 ஏனெனில் பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல்
ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்.
50 உப்பு நல்லது. ஆனால் அது உவர்ப்பற்றுப் போனால்
எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்?
நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள்.
ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள். [15]
- குறிப்புகள்
[1] 9:2-7 = 2 பேது 1:17,18.
[2] 9:7 = மத் 3:17; மாற் 1:11; லூக் 3:22.
[3] 9:11 = மலா 4:5; மத் 11:14.
[4] 9:29 - அடைப்புக்குறிக்குள் உள்ள 'நோன்பினாலும்'
என்னும் சொல் சில முக்கியமில்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.
[5] 9:34 = லூக் 22:24.
[6] 9:35 = மத் 20:26,27.
[7] 9:37 = மத் 10:40; லூக் 10:16; யோவா 13:20.
[8] 9:40 = மத் 12:30; லூக் 11:23.
[9] 9:41 = மத் 10:42.
[10] 9:43 = மத் 5:30.
[11] 9:44, [12] 9:46 - "நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது"
என்னும் வசனங்கள் சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.
[13] 9:47 = மத் 5:29.
[14] 9:48 = எசா 66:24.
[15] 9:50 = மத் 5:13; லூக் 14:34,35.
அதிகாரம் 10
தொகுமண விலக்கு
தொகு(மத் 19:1-12)
1 இயேசு அங்கிருந்து புறப்பட்டு
யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார்.
மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர்.
அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
2 பரிசேயர் அவரை அணுகி,
"கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா?"
என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.
3 அவர் அவர்களிடம் மறுமொழியாக,
"மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன?" என்று கேட்டார்.
4 அவர்கள், "மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி
அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார்" என்று கூறினார்கள். [1]
5 அதற்கு இயேசு அவரிகளிடம்,
"உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே
அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்.
6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்,
'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். [2]
7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத்
தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.
8 இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.'[3]
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.
9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.
10 பின்னர் வீட்டில் இதைப் பற்றி மீண்டும் சீடர் அவரைக் கேட்டனர்.
11 இயேசு அவர்களை நோக்கி,
"தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும்
அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான்.
12 தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும்
விபசாரம் செய்கிறாள்" என்றார். [4]
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
தொகு(மத் 19:13-15; லூக் 18:15-17)
13 சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று
அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர்.
சீடரோ அவர்களை அதட்டினர்.
14 இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு,
"சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள்.
அவர்களைத் தடுக்காதீர்கள்.
ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
15 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர்
அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். [5]
16 பிறகு அவர் அவர்களை அரவணைத்து,
தம் கைகளை அவர்கள்மீது வைத்து ஆசி வழங்கினார்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
தொகு(மத் 19:16-30; லூக் 18:18-30)
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது
வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு,
"நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்?" என்று அவரைக் கேட்டார்.
18 அதற்கு இயேசு அவரிடம்,
"நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்?
கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
19 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?
'கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே;
களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே;
வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட'"
என்றார். [6]
20 அவர் இயேசுவிடம்,
"போதகரே, இவை அனைத்தையும் நான்
என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்" என்று கூறினார்.
21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி,
"உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது.
நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.
அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.
பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார்.
22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி
வருத்தத்தோடு சென்று விட்டார்.
ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம்,
"செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார்.
24 சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள்.
மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து,
"பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்.
25 அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
26 சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய்,
"பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?" என்று
தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
27 இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி,
"மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல,
கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.
28 அப்போது பேதுரு அவரிடம்,
"பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு
உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று சொன்னார்.
29 அதற்கு இயேசு,
"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும்
வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ,
தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ,
நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும்
30 இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும்
சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும்
நிலபுலன்களையும்,
இவற்றோடு கூட இன்னல்களையும்
மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.
31 முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்;
கடைசியானோர் முதன்மை ஆவர்" என்றார். [7]
இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்
தொகு(மத் 20:17-19; லூக் 18:31-34)
32 அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள்.
இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார்.
சீடர் திகைப்புற்றிருக்க,
அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர்.
அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத்
தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். [8]
33 அவர், "இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்.
மானிட மகன் தலைமைக் குருக்களிடமும்
மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்;
அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து
அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்;
34 அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி,
சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள்.
மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்" என்று
அவர்களிடம் கூறினார்.
செபதேயுவின் மக்களது வேண்டுகோள்
தொகு(மத் 20:20-28)
35 செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும்
அவரை அணுகிச் சென்று அவரிடம்,
"போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும்
என விரும்புகிறோம்" என்றார்கள்.
36 அவர் அவர்களிடம்,
"நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்.
37 அவர்கள் அவரை நோக்கி,
"நீர் அரியணையில் இருக்கும் போது
எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும்
இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள
எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர்.
38 இயேசுவோ அவர்களிடம்,
"நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை.
நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?
நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?" என்று கேட்டார். [9]
39 அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல,
இயேசு அவர்களை நோக்கி,
"நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்.
நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள்.
40 ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது
எனது செயல் அல்ல;
மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ
அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார்.
41 இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும்
யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர்.
42 இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம்,
"பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள்
மக்களை அடக்கி ஆளுகிறார்கள்.
அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது
தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.
43 ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது.
உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்
உங்கள் தொண்டராய் இருக்கட்டும்.
44 உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர்,
அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்.
45 ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல,
மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய [10] மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார். [11]
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்
தொகு(மத் 20:29-34; லூக் 18:35-43)
46 இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர்.
அவர்களும் திரளான மக்கள் கூட்டமும்
எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது,
திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார்.
பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
47 நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு,
"இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று
கத்தத் தொடங்கினார்.
48 பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்;
ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று
இன்னும் உரக்கக் கத்தினார்.
49 இயேசு நின்று, "அவரைக் கூப்பிடுங்கள்" என்று கூறினார்.
அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு,
"துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்" என்றார்கள்.
50 அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு,
குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
51 இயேசு அவரைப் பார்த்து,
"உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?" என்று கேட்டார்.
பார்வையற்றவர் அவரிடம்,
"ரபூணி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்" என்றார்.
52 இயேசு அவரிடம், "நீர் போகலாம்;
உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார்.
உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று,
அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
- குறிப்புகள்
[1] 10:4 = இச 24:1-4; மத் 5:31.
[2] 10:6 = தொநூ 1:27; 5:2.
[3] 10:7-8 = தொநூ 2:24.
[4] 10:11,12 = மத் 5:32; லூக் 16:18; 1 கொரி 10:11.
[5] 10:15 = மத் 18:3.
[6] 10:19 = விப 20:12-16; இச 5:16-20; 24:14.
[7] 10:31 = மத் 20:16; லூக் 13:30.
[8] 10:32 = யோவா 11:16.
[9] 10:38 = லூக் 12:50.
[10] 10:45 - இதன் கிரேக்கச் சொல்லை சிலர் "எல்லாருடைய" என மொழிபெயர்க்கின்றனர்.
[11] 10:42-45 = மத் 20:24-28; லூக் 22:24-27.
(தொடர்ச்சி): மாற்கு நற்செய்தி: அதிகாரங்கள் 11 முதல் 12 வரை