திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

"வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார். வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்." (திருவெளிப்பாடு 12:1-5)


அதிகாரம் 11

தொகு

இரு சாட்சிகள்

தொகு


1 பின்பு குச்சிபோன்ற ஓர் அளவுகோல் என்னிடம் கொடுக்கப்பட்டது.
"எழுந்து, கடவுளின் கோவிலையும் பலிபீடத்தையும் அளவிடு;
அங்கு வழிபடுவோரைக் கணக்கிடு.
2 ஆனால் கோவிலுக்கு வெளியே உள்ள முற்றத்தை அளக்காமல் விட்டுவிடு;
ஏனெனில் அது வேற்றினத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
திருநகரை அவர்கள் நாற்பத்திரண்டு மாதம் மிதித்துச் சீரழிப்பார்கள்.
3 நான் என் சாட்சிகளுள் இருவரை அனுப்புவேன்.
அவர்கள் சாக்கு உடை உடுத்தி,
ஆயிரத்து இருநூற்று அறுபது நாளும் இறைவாக்குரைப்பார்கள்"
என்று எனக்குச் சொல்லப்பட்டது.


4 மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவமரங்களும்
இரண்டு விளக்குத்தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள்.
5 யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால்
அவர்களது வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும்.
அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி.
6 தாங்கள் இறைவாக்குரைக்கும் காலத்தில்
மழை பொழியாதவாறு வானத்தை அடைத்து விட
அவர்களுக்கு அதிகாரம் உண்டு;
தாங்கள் விரும்பும்பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும்,
மண்ணுலகை எல்லாவகை வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.


7 அவர்கள் சான்று பகர்ந்து முடித்தபின்
படுகுழியிலிருந்து வெளியே வரும் விலங்கு அவர்களோடு போர் தொடுத்து,
அவர்களை வென்று கொன்றுவிடும்.
8 சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும்
அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும்.
அங்கேதான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார்.
9 பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர்,
நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்;
அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள்.
10 மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்;
ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்;
ஏனெனில் இந்த இரண்டு இறைவாக்கினரும்
மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர்.
11 அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு
அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள்.
அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது.
12 அப்பொழுது விண்ணத்திலிருந்து எழுந்த ஓர் உரத்தகுரல்,
"இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்" என்று தங்களுக்குச் சொன்னதை
அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள்.
அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க
அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள். [1]
13 அந்நேரத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நகரின் பத்தில் ஒரு பகுதி வீழ்ந்தது.
அதனால் ஏழாயிரம் பேர் இறந்தனர்.
எஞ்சினோர், அச்சம் மேலிட்டவர்களாய்
விண்ணகக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். [2]


14 இவ்வாறு இரண்டாவது கேடு கடந்து விட்டது;
இதோ, மூன்றாவது கேடு விரைவில் வரவிருக்கிறது.

ஏழாவது எக்காளம்

தொகு


15 பின்னர் ஏழாவது வானதூதர் எக்காளம் முழக்கினார்.
உடனே விண்ணகத்தில் உரத்த குரல் ஒன்று எழுந்தது:


"உலகின் ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும்


அவருடைய மெசியாவுக்கும் உரியதாயிற்று.


அவரே என்றென்றும் ஆட்சி புரிவார்"


என்று முழக்கம் கேட்டது. [3]
16 கடவுள் திருமுன் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருந்த
இருபத்துநான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள்.


17 "கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே,


இருக்கின்றவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்;
ஏனெனில் நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்தலானீர்.
18 வேற்றினத்தார் சினந்தெழுந்தனர்.
உமது சினமும் வெளிப்பட்டது.
இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும்
உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள், இறைமக்கள்,
உமக்கு அஞ்சும் சிறியோர், பெரியோர்
ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும்


உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்து விட்டது"


என்று பாடினார்கள். [4]
19 அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது.
அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது.
மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும்
நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின. [5]


குறிப்புகள்

[1] 11:12 = 2 அர 2:11.
[2] 11:13 = திவெ 6:12; 16:18.
[3] 11:15 = விப 15:18; தானி 2:44; 7:14,27.
[4] 11:18 = திபா 2:5; 110:5; 115:13.
[5] 11:19 = திவெ 8:5; 16:18,21.


அதிகாரம் 12

தொகு

5. அரக்கப் பாம்பும் இரு விலங்குகளும்

தொகு

பெண்ணும் அரக்கப் பாம்பும்

தொகு


1 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது;
பெண் ஒருவர் காணப்பட்டார்;
அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்;
நிலா அவருடைய காலடியில் இருந்தது;
அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.
2 அவர் கருவுற்றிருந்தார்;
பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்.
3 வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; [1]
இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது.
அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.
அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன.
4 அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை
நிலத்தின்மீது இழுத்துப் போட்டது.
பேறுகால வேதனையிலிருந்த அப்பெண்
பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு
அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது. [2]
5 எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த
ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.
அக்குழந்தையோ கடவுளிடம்
அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. [3]
6 அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்;
அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு
கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.


7 பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது.
மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்;
அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். [4]
8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது.
விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று.
9 அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது.
அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே
தொடக்கத்தில் தோன்றிய பாம்பு.
உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது;
அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள். [5]


10 பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன்.
அது சொன்னது:


"இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி,


அவருடைய மெசியாவின் அதிகாரம்
ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.
நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன்,
நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும்
அவர்கள்மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். [6]
11 ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும்
தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள்.
அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை;
இறக்கவும் தயங்கவில்லை.
12 இதன்பொருட்டு விண்ணுலகே,
அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள்.
மண்ணுலகே, கடலே, ஐயோ! உங்களுக்குக் கேடு!
தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது
என்பதை அலகை அறிந்துள்ளது;


அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது."


13 தான் மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு
ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது.
14 ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப்
பாலைநிலத்தில் அவருக்கெனக் குறிக்கப்பட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு,
பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன.
அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார். [7]
15 அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு,
அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து
ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது.
16 ஆனால் நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது.
அது தன் வாயைத் திறந்து,
அரக்கப்பாம்பின் வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது.
17 இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு,
அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது.
அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து
இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள். [8]
18 அரக்கப்பாம்பு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது. [9]


குறிப்புகள்

[1] 12:3 = தானி 7:7.
[2] 12:4 = தானி 8:10.
[3] 12:5 = எசா 66:7; திபா 2:9.
[4] 12:7 = தானி 10:13; 12:1; யூதா 9.
[5] 12:9 = தொநூ 3:1; லூக் 10:18.
[6] 12:10 = யோபு 1:9-11; செக் 3:1.
[7] 12:14 = தானி 7:25; 12:7.
[8] 12:17 - "இயேசு அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்"
என்றும் மொழிபெயர்க்கலாம்.
[9] 12:18 - "நான் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன்"
என்னும் பாடம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது.
இவ்வாறு இவ்வசனம் 13:1 உடன் தொடர்புப் படுத்தப்படுகிறது.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை