திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 17 முதல் 18 வரை
லூக்கா நற்செய்தி (Luke)
தொகுஅதிகாரங்கள் 17 முதல் 18 வரை
அதிகாரம் 17
தொகுஇயேசுவின் அறிவுரைகள்
தொகு(மத் 18:6-7,21,22; மாற் 9:42)
1 இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது:
"பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது.
ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு!
2 அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வதைவிட
அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஒரு எந்திரக் கல்லைக் கட்டி
அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது.
3 எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்.
உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள்.
அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். [1]
4 ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து
ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, 'நான் மனம் மாறிவிட்டேன்' என்று சொல்வாரானால்
அவரை மன்னித்து விடுங்கள்."
5 திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்" என்று கேட்டார்கள்.
6 அதற்கு ஆண்டவர் கூறியது:
"கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த முசுக்கட்டை மரத்தை நோக்கி,
'நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால்
அது உங்களுக்குக் கீழ்ப்படியும். [2]
7 "உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ
வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம்,
'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா?
8 மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக்கொண்டு,
நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்;
அதன்பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வாரல்லவா?
9 தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?
10 அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின்,
'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்."
பத்துத் தொழுநோயாளர்கள் நோய் நீங்கப்பெறுதல்
தொகு
11 இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது
கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார்.
12 ஓர் ஊருக்குள் வந்தபொழுது,
பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து,
தூரத்தில் நின்று கொண்டே,
13 "ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்" என்று
உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். [3]
14 அவர் அவர்களைப் பார்த்து,
"நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்" என்றார்.
அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. [4]
15 அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு
உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்;
16 அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார்.
அவரோ ஒரு சமாரியர்.
17 இயேசு, அவரைப் பார்த்து,
"பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
18 கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர
வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!" என்றார்.
19 பின்பு அவரிடம், "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது" என்றார்.
இறையாட்சி வருதல்
தொகு(மத் 24:23-28,37-41)
20 இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர்.
அவர் மறுமொழியாக, "இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.
21 இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்லமுடியாது.
ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது" என்றார். [5]
22 பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது:
"ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண
நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள்.
23 அவர்கள் உங்களிடம், 'இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!' என்பார்கள்.
ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின் தொடரவும் வேண்டாம்.
24 வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல
மானிடமகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
25 ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு
இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.
26 நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். [6]
27 நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும்
உண்டும் குடித்தும் வந்தார்கள்.
வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது. [7]
28 அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது.
மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்;
நட்டார்கள், கட்டினார்கள்.
29 லோத்து சோதோமை விட்டுப்போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும்
எல்லாரையும் அழித்தன. [8]
30 மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.
31 "அந்நாளில் வீட்டின் மேல் தளத்தில் இருப்பவர்
வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம்.
அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம். [9]
32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். [10]
33 தம் உயிரைக் காக்க வழிதேடுவோர் அதை இழந்துவிடுவர்;
தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக் கொள்வர். [11]
34 நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர்.
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்.
35 இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர்.
ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.
36 [இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார்." ] [12]
37 அவர்கள் இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, இது எங்கே நிகழும்?" என்று கேட்டார்கள்.
அவர் அவர்களிடம், "பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்" என்றார்.
- குறிப்புகள்
[1] 17:3 = மத் 18:15.
[2] 17:6 = மத் 17:20; 21:21.
[3] 17:13 = லேவி 13:45,46.
[4] 17:14 = லேவி 14:1-32.
[5] 17:20,21 = மத் 4:17.
[6] 17:26 = தொநூ 6:5-8; மத் 24:37; 1 பேது 3:20.
[7] 17:27 = தொநூ 7:6-24.
[8] 17:28,29 = தொநூ 18:20; 19:25.
[9] 17:31 = மத் 24:17,18; மாற் 13:15,16.
[10] 17:32 = தொநூ 19:26.
[11] 17:33 = லூக் 9:24; யோவா 10:25.
[12] 17:36 - இவ்வசனம் பல முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
அதிகாரம் 18
தொகுநேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை
தொகு
1 அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு
இயேசு ஓர் உவமை சொன்னார். [1]
2 "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார்.
அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
3 அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார்.
அவர் நடுவரிடம் போய், 'என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று
கேட்டுக் கொண்டேயிருந்தார்.
4 நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை.
பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.
5 என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால்
நான் இவருக்கு நீதி வழங்குவேன்.
இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்'
என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்." [2]
6 பின் ஆண்டவர் அவர்களிடம்,
"நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால்,
7 தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது
கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?
அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? [3]
8 விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?" என்றார். [4]
பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை
தொகு
9 தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி
மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து
இயேசு இந்த உவமையைச் சொன்னார்: [5]
10 "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர்.
ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.
11 பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்:
'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர்,
விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ
இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்;
12 வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்;
என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்."
13 ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு
வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல்
தம் மார்பில் அடித்துக்கொண்டு,
'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்."
14 இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்.
ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்;
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார். [6]
சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல்
தொகு(மத் 19:13-15; மாற் 10:13-16)
15 குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று
அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர்.
16 ஆனால் இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து,
"சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்;
ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது.
17 இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர்
அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"
என்று சீடர்களிடம் கூறினார்.
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரான தலைவர்
தொகு(மத் 19:16-30; மாற் 10:17-31)
18 அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம்,
"நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள
நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
19 அதற்கு இயேசு அவரிடம்,
"நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்?
கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே!
20 உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?
விபசாரம் செய்யாதே. கொலை செய்யாதே.
களவு செய்யாதே. பொய்ச் சான்று சொல்லாதே.
உன் தாய் தந்தையை மதித்து நட"
என்றார். [7]
21 அவர், "இவை அனைத்தையும் நான் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வருகிறேன்" என்றார்.
22 இதைக் கேட்ட இயேசு அவரிடம், "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது.
உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடும்.
அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்றார்.
23 இவற்றைக் கேட்டு அவர் மிகவும் வருத்தமுற்றார்.
ஏனெனில் அவர் மிகுந்த செல்வம் உடையராய் இருந்தார்.
24 அவர் மிகவும் வருத்தமுற்றதைப் பார்த்த இயேசு,
"செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது எவ்வளவு கடினம்!
25 செல்வர் ஒருவர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
26 இதைக் கேட்டவர்கள், "பின் யார்தான் மீட்புப் பெற முடியும்?" என்று கேட்டார்கள்.
27 இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார்.
28 பேதுரு அவரிடம், "பாரும், எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு
நாங்கள் உம்மைப் பின்பற்றினோமே" என்றார்.
29 அதற்கு அவர் அவர்களிடம்,
"உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்:
இறையாட்சியின் பொருட்டு வீட்டையோ மனைவியையோ
சகோதரர் சகோதரிகளையோ பெற்றோரையோ பிள்ளைகளையோ விட்டுவிட்டவர் எவரும் [8]
30 இம்மையில் பன்மடங்கும் மறுமையில் நிலைவாழ்வும் பெறாமல் போகார்" என்றார்.
இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்
தொகு(மத் 20:17-19; மாற் 10:32-34)
31 இயேசு பன்னிருவரையும் தம் அருகில் அழைத்து, அவர்களிடம்,
"இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம்;
மானிடமகனைப் பற்றி இறைவாக்கினர் வாயிலாக எழுதப்பட்டவை யாவும் நிறைவேறும்.
32 அவர் பிற இனத்தவரிடம் ஒப்புவிக்கப்படுவார்.
அவர்கள் அவரை ஏளனம் செய்து அவமானப்படுத்தி அவர்மீது துப்புவார்கள்.
33 அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்துக் கொலை செய்வார்கள்.
ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுவார்" என்றார்.
34 இவற்றில் எதையும் அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
அவர் கூறியது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது.
ஏனெனில், அவர் சொன்னது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
பார்வையற்ற ஒருவர் பார்வை பெறுதல்
தொகு(மத் 20:29-34; மாற் 10:46-52)
35 இயேசு எரிகோவை நெருங்கி வந்தபோது,
பார்வையற்ற ஒருவர் வழியோரமாய் உட்கார்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார்.
36 மக்கள் கூட்டம் கடந்து போய்க்கொண்டிருந்ததைக் கவனித்த அவர்,
"இது என்ன?" என்று வினவினார்.
37 நாசரேத்து இயேசு போய்க் கொண்டிருக்கிறார் என்று அவருக்குத் தெரிவித்தார்கள்.
38 உடனே அவர், "இயேசுவே! தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று கூக்குரலிட்டார்.
39 முன்னே சென்று கொண்டிருந்தவர்கள் அமைதியாய் இருக்குமாறு அவரை அதட்டினார்கள்.
ஆனால் அவர், "தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
40 இயேசு நின்று, அவரைத் தம்மிடம் கூட்டிக் கொண்டு வரும்படி ஆணையிட்டார்.
அவர் நெருங்கி வந்ததும்,
41 "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்" என்று இயேசு கேட்டார்.
அதற்கு அவர், "ஆண்டவரே, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றார்.
42 இயேசு அவரிடம், "பார்வை பெறும்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று" என்றார்.
43 அவர் உடனே பார்வை பெற்று, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே
இயேசுவைப் பின்பற்றினார். இதைக் கண்ட மக்கள் யாவரும் கடவுளைப் புகழ்ந்தனர்.
- குறிப்புகள்
[1] 18:1 = லூக் 11:9-13.
[2] 18:5 = நீமொ 25:15.
[3] 18:7 = திவெ 6:9-11.
[4] 18:8 = மத் 24:12.
[5] 18:9 = லூக் 16:15; நீமொ 21:2; 28:13.
[6] 18:14 = மத் 23:12; லூக் 14:11.
[7] 18:20 = விப 20:12-16; இச 5:16-20.
[8] 18:29 = லூக் 14:26,27.
(தொடர்ச்சி): லூக்கா நற்செய்தி: அதிகாரங்கள் 19 முதல் 20 வரை