தில்லைப் பெருங்கோயில் வரலாறு/தில்லைத்திருப்பணி

7. தில்லைத் திருப்பணி

1. சோழர்

திருவானைக்காவில் தன் வாயின் நூலால் திருநிழற்பந்தர் செய்து வழிபட்ட சிலந்தியினைச் சிவபெருமான், சோழர் குலத்திற் கோச்செங்கணானாகப் பிறப்பித்தருளினார் என்பது வரலாறு. இதனைத் தேவார ஆசிரியர்கள் மூவரும் தம்பாடல்களிற் குறித்துப் போற்றியுள்ளார்கள். சங்ககாலச் சோழமன்னர்களுள் ஒருவராகிய கோச்செங்கண் சோழர் சோழ நாட்டில் அகநாடுகள் தோறும் சிவபெருமான் அமர்ந்தருளும் அழகிய மாடக்கோயில்களை அமைத்து அக்கோயில்களில் நாடோறும் நிகழும் பூசனைக்கு வேண்டிய அமுது படி முதலான படித்தரங்களுக்குப் பெரும்பொருள் வகுத்தார். சோழர் குலத் தோன்றலாகிய இவர் தமக்குரிய சோழநாட்டுடன் பாண்டியர்க்குரிய தென் புலமாகிய நாட்டினையும் தன்னகப்படுத்திப் பாண்டியர்க்குரிய அடையாள மாலையாகிய வேப்பமலர் மாலையினையும் சூடி ஆட்சி புரிந்தார் என்பது,

"தென்னவனாயுல காண்ட செங்கணாற் கடியேன்”

(திருத்தொண்டத்தொகை 11)

எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,

“நிம்பாறுங் தொங்கல் கோச்செங்கணான்”

(திருத்தொண்டர் திருவந்தாதி 82)

என நம்பியாண்டார் நம்பிகளும் இவ்வேந்தர் பெருமானைப் போற்றியுள்ளமையாற் புலனாகும்.

பெருவேந்தரும் சிறந்த சிவனடியாருமாகத் திகழ்ந்த கோச் செங்கட்சோழ நாயனார் எல்லாம் வல்ல சிவபெருமான் ஐந் தொழில் திருக்கூத்தியற்றியருளும் தில்லைப் பதியையடைந்து பொன்னம்பலவன் திருவடிகளை வணங்கித் தில்லையில் தங்கியிருந்து அகத் தொண்டுகள் பல புரிந்து அப்பெருமானைப் பூசனை புரியும் தில்லை வாழந்தணர்கள் தங்குதற்குரிய திருமாளிகைகளைக் கட்டுவித்தார். பின்னரும் பல திருப்பணிகளைச் செய்து தில்லயம்பலவன் திருவடி நீழலை அடைந்தார் என்பது வரலாறு. இச்செய்தியினை வம்பு மலர்த் தில்லையீசனைச் சூழ மறைவுவளத்தான், நிம்பநறுந் தொங்கற் கோச்செங்கணான் (82} எனவரும் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பிகளும்,

"திருவார்ந்த செம்பொன்னி னம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமாளை அடி வணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் ராங்களிப்பத் தொழுதேத்தி யுறையுநாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்"

(பெரிய-கோச்-10)

“தேவர்பிரான் திருத்தொண்டிற் கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொது நீக்கி ஆண்டருளிப் புவனியின் மேல்
ஏவியநற் றொண்டுபுரிந் திமையவர்க ளடிபோற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர் திருவடி நிழற்கீழ்"

(க்ஷ-17)

எனவரும் பெரிய புராணச் செய்யுட்களில் சேக்கிழார் நாயனாரும் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

கி.பி. 871 முதல் 907 வரை சோழநாட்டை ஆட்சி புரிந்த முதலாம் ஆதித்த சோழன், கொங்குமண்டலத்தை வென்று தில்லைச் சிற்றம்பல முகட்டினை அப்பொன்னினால் வேய்ந்தான் இச்செய்தி,

"சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம்பல முகடு
கொங்கிற் கனகம் அணிந்த ஆதித்தன்"

(திருத்தொண்டர் திருவந்தாதி-65)

எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் வாய் மொழியால் உறுதி செய்யப்படும்.

ஆதித்த சோழன் மகனாகிய முதற் பராந்தக சோழன் கி.பி. 907 முதல் 953 வரை சோழநாட்டை ஆட்சி பரிந்தான்.

இவன் சிவபக்தியிற் சிறந்து விளங்கினான். தன் தந்தை ஆதித்தன் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலமாகச் செய்யத் தொடங்கிய திருப்பணியை மேலும் தொடர்ந்து செய்து இனிது நிறைவேற்றினான். இவ்வாறு இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னம்பலமாக்கிய செய்தி ஆனைமங்கலச் செப்பேடுகளிற் குறிக்கப் பெற்றுள்ளது. பராந்தகன் செய்த இத்தில்லைத் திருப் பணியினை,

“வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறற்
செங்கோற் சோழன் கோழிவேந்தன் செம்பியன் பொன்னணிந்து
அங்கோல் வளையார் பாடியாடும் அணிதில்லையம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம் இறையை என்று கொல் எய்துவதே,”

(திருவிசைப்பா -202)

எனப் பராந்தகன் மகனார் முதற்கண்டராதித்த சோழரும்'

“கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
காதலாற் பொன் வேய்ந்த காவலனும் "

(விக்கிரம சோழனுலா, வரிகள்-31,32)

எனக் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரும் போற்றியுள்ளார்கள்.

பகைவரைப் புறங்காணும் வெற்றித் திறத்தாலும் தனது நாட்டுமக்கள் எல்லாரும் எல்லாம் வல்ல சிவபெருமானைத் திருப்பதிக இன்னிசையாற் போற்றி இம்மை மறுமை இன்பங்களைப் பெற்று இன்புறுதல் வேண்டும் என்னும் - சிவபத்தித் திறத்தாலும் பிற்காலச் சோழமன்னர்கள் எல்லாருள்ளும் முதலில் வைத்து எண்ணத்தக்க பெருவேந்தன் முதலாம் இராசராச சோழன் ஆவான். தான் பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணமாக அமைந்தது எல்லாம் வல்ல சிவபெருமானது திருவருளே யென்னும் மெய்ம்மையினை உலக மக்களுக்கு உணர்த்தும் முறையில், தஞ்சையில் இவ்வேந்தனாற் கட்டப்பட்டுள்ள இராசராசேச்சுரத் திருக்கோயில் இவனது வெற்றிச் சின்னமாகத் திகழ்தலை வரலாற்றறிஞர் பலரும் நன்குணர்வர். தில்லைப் பெருக் கோயிலிற் சேமிக்கப் பெற்றிருந்த தேவாரத் திருமுறைகளைத் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையாரது திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளின் துணை கொண்டு தேடிக்கண்டு தொகுத்த சோழமன்னன் இராசராசன் அபயகுலசேகரன் என்னும் பெருவேந்தன் எனவும், அவ்வேந்தன் திருமுறைகளைக் கண்டு தேடித் தொகுத்தமை பற்றித் திருமுறை கண்ட இராசராச தேவர் என அழைக்கப் பெற்றான் எனவும் திருமுறை கண்ட புராணம் கூறும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும் தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடிய திருப்பதிகங்களில் தமக்குத் தெரிந்த ஒரு சில பதிகங்களையே சிவனடியார்கள் பாடக்கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்து உருகிய இராசராசனாசிய சோழ மன்னன், மூவர் பாடிய இனிய திருப்பதிகங்கள் எல்லா வற்றையும் தேடிக் கண்டு ஒரு சேரத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அப்பதிகங்களைப் பலவிடங்களில் தேடியும் முழுதும் கிடைக்கவில்லை.

அந்நிலையில் திருநாரையூரிற் பொல்லாப் பிள்ளையார் திருவருளை நிரம்பப் பெற்ற நம்பியாண்டார் நம்பிகளை வணங்கித் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். அவரும் மன்னனது விருப்பத்தினை மனத்திற் கொண்டு பொல்லாப் பிள்ளையாரை இறைஞ்சி வேண்டினார். தில்லையில் கூத்தப் பிரான் திருநடஞ் செய்யும் பொன்னம்பலத்தின் அருகிலே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் அடையாளமுள்ள அறையினுள்ளே தேவாரத் திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ள செய்தியைப் பொல்லாப் பிள்ளையார் அறிவுறுத்தியருளினார்.

அதனைக் கேட்டு மகிழ்ந்த நம்பியாண்டார் நம்பியும் அபய குலசேகரனும் தில்லையை அடைந்து கூத்தப் பெருமானை வணங்கினர். தில்லைச் சிற்றம்பலத்தின் மேற்றிசையிலுள்ள அறையிலே தேவாரத் திருமுறைகள் இருத்தலைத் தில்லை வாழ் அந்தணர்களிடம் தெரிவித்து அவ்வறையைத் திறக்கும் படி மன்னன் வேண்டிக் கொண்டான். அது கேட்ட அந்தணர்கள் மூவர்கையிலச்சினையுடன் பூட்டப் பெற்றுள்ள அவ்வறையினை அம்மூவரும் வந்தாலன்றித் திறக்கவியலாது என்றனர். உடனே சோழமன்னன் தில்லையம்பல வாணர்க்குச் சிறப்புடைய பூசனை செய்யச் செய்து தேவார ஆசிரியர் மூவர் திருவுருவங்களுக்கும் வழிபாடியற்றித் திருவீதிக்கு எழுந்தருளச் செய்து திருமுறைகள் சேமிக்கப் பெற்றிருந்த அறையின்முன் கொண்டு வந்து நிறுத்தி'மூவரும் வந்தனர், அறையினைத் திறந்திடுமின்' எனப் பணித்தான். அரசனது ஆணையால் அறை திறக்கப்பட்டது. அறையினுள்ளேயிருந்த தேவார ஏடுகள் கரையான் புற்றால் மூடப்பட்டுச் சிதைந்த நிலையிற் காணப்பட்டன. அவ்வேடுகளின் மேல் எண்ணெயைச் சொரிந்து அவற்றை வெளியில் எடுத்துப் பார்த்த அளவில், பெரும்பாலன பழுதுபட்டுச் சிதைவுற்றமை கண்டு மன்னன் பெரிதும் வருந்தினான். அந்நிலையில் இறைவனருளால் 'இக்காலத்திற்கு வேண்டுவனவற்றை மட்டும் செல்லரிக்காமல் வைத்தோம்' என்றதொரு அருள்வாக்கு யாவரும் கேட்கத் தோன்றியது. அது கேட்டு உள்ளந் தேறிய சோழமன்னன் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை மட்டும் சிதையாமலெடுத்து முன் போலத் தொகுத்துத் தரும்படி நம்பி யாண்டார் நம்பிகளை வேண்டிக் கொண்டான். திருஞான சம்பந்தர் பாடிய திருப்பதிகங்கள் 1, 2, 3, திருமுறைகளாகவும் திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 4, 5, 6, திருமுறைகளாகவும், சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் 7 ஆம் திருமுறையாகவும் வகுக்கப் பெற்றன. மன்னனும் நம்பியும் திருவெருக்கத்தம் புலியூரை அடைந்து திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபிற்பிறந்த இசைவல்ல அம்மையாரைத் தில்லைக்கு அழைத்து வந்து தேவாரத் திருமுறைகட்குப் பண் வகுத்தனர்.

இவ்வாறு நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு திருமுறைகளைத் தேடித் தொகுத்த சோழ மன்னன் தஞ்சை இராசராசேச்சுரந் திருக்கோயிலைக் கட்டிய முதலாம் இராச ராச சோழனேயென ஆராய்ச்சியாளர் கூறுவர். வேந்தர் பெருமானான இவன், தான் கட்டுவித்த தஞ்சை இராசராசேச்சுரத் திருக்கோயிலில் நாள் தோறும் தேவாரப் பதிகங்கள் பாடுதற்குப் பிடாரர் (ஓதுவார்) நாற்பத்தெண்மரையும் அவர்களுக்குத் துணையாக உடுக்கை வாசிப்போர், மத்தளம் முழக்குவோர் இருவரையும் நியமித்து நிபந்தம் வழங்கியுள்ளான். இச்செயதி,

"ஸ்ரீராஜராஜ தேர் கொடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண் மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின்மர்க்குப் பேராவ் நிசதடம் நெல்லு முக்குறுணி நிலத்தமாய் ராஜகேசரியோடெர்க்கும் ஆடவல்வானென்னும் மரக்காலால் உடையார் உள்ளூர்ப் பண்டாரத்திலே பெறவும் (தெ.இ.க. தொ. I எண்:65). என வரும் கல்வெட்டுப் பகுதியால் நன்கு விளங்கும். இவ்வாறு திருக்கோயிலில் ஓதுவார் நாற்பத்தெண்மரையும், இசைக்கருவியாளர் இருவரையும் நியமித்துத் தேவாரத் திருப்பதிகங்களைப் பண் பொருந்தப் பாடி இறைவனை வழிபடுதற்குரிய திட்டம் வகுத்த பெருமை முதலாம் இராசராச சோழனுக்கே உரியதாகும். இதுபற்றியே, "சேய திருமுறை கண்ட.. ராசராச தேவர்" (சேக்கிழார் புராணம்-) - என இம்மன்னன் பாராட்டப் பெற்றுள்ளான்.

திருமுறைகண்ட சோழன் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராசன் தில்லையம்பல வாணர்பால் நிரம்பிய ஈடுபாடு உடையவன் என்பது தஞ்சைப் பெருங்கோயிலில் ஆட வல்லானை எழுந்தருளுவித்துள்ளமையாலும் அக்கோயிலிற் பயன்படுத்தப்படும் முகத்தலளவையாகிய மரக்காலுக்கு 'ஆட வல்லான்' எனப் பெயரிட்டுள்ளமையாலும் உய்த்துணரப்படும். 'சோழ மன்னர்கட்குத் தில்லையம்பல வாணரே - தெய்வம் என்பது 'கல்வெட்டுகளால் உணரப்படும் செய்தியாதலின், பிற் காலச் சோழர்களில் முதலாம் ஆதித்தன், பராந்தகன் முதலியோர் தில்லைப் பெருங்கோயிலுக்குப் பல திருப்பணிகளைக் செய்துள்ளார்கள் என்பது நம்பியாண்டார் நம்பிகளும், கண்டராதித்தரும் பாடியுள்ள திருமுறைப் பனுவல்களால் நன்கு விளங்கும். கண்டராதித்த சோழர்க்குப் பின் திருமுறை கண்ட சோழர் எனப் போற்றப் பெறும் முதலாம் இராசராச சோழனும் தில்லைப் பெருங் கோயிலிற் பல திருப்பணிகளைச் செய்திருத்தல் வேண்டும், அவர்கள் செய்த திருப்பணிகளைக் குறிப்பிடும் கல்வெட்டுகள் பிற்காலத்தில் அயலவர் படைகள் சிதம்பரம் திருக்கோயிலில் தங்கிச் செய்த அழிவுகளாற் சினதந்து போயின என்பது இக்கோயிலில் தளவரிசையில் ஆங்காங்குத் தூண்டு துண்டாகக் காணப்படும் கல்வெட்டுக் கற்களால் உய்த்து உணரப்படும்.

தனியூராகிய இத்தில்லைப் பதியினைச் சூழ்ந்துள்ள பிடாகைகளாகிய இருபத்திரண்டுக்கு மேற்பட்ட சிற்றூர்களும் வழிகளும் முதலாம் இராசராச சோழனுடைய தந்தை சுந்தர சோழர், தாயார் வானவன் மாதேவி, தமக்கை குந்தவையார் சிறிய தந்தை உத்தம சோழன், இராசராசன் முதலியோர் பெயர்களால் சுந்தர சோழவழி, வானவன் மாதேவி வழி குந்தவை வாய்க்கால், உத்தமசோழபுரம், இராசராசன் வாய்க்கால் என்றாங்குக் கல் வெட்டுகளிற் குறிக்கப் பெற்றுள்ளமையால் முதலாம் இராசராசன் தந்தையார் சுந்தர சோழரும், தாயார் வானவன் மாதேவியும் தமக்கையார் குந்தவையாரும், சிறிய தந்தை உத்தம சோழரும் தம் குலநாயகராகிய ஆடவல்லான் எழுந்தருளிய தில்லைப்பதியிற் பலதிருப்பணிகளைச் செய்துள்ளமை நன்கு புலனாகும்.

தமிழகத்தைக் கி.பி.1012 முதல் 1044வரை ஆட்சிபுரிந்த பெருவேந்தன், முதல் இராசேந்திரனாகிய கங்கை கொண்டசோழன் ஆவான். திருவிசைப்பா ஆசிரியர் கண்டராதித்தர் மனைவியார் செம்பியன் மாதேவியாராலும், தன் தந்தை இராசராச சோழார் தமக்கையார் குந்தவையாராலும், வளர்க்கப் பெற்ற இவ்வேந்தர் பெருமான், தன் வடநாட்டு வெற்றிக்கு அடையாளமாகக் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்னும் பெருங்கோயிலைக் கட்டியவனாவான். இத்திருக்கோயிலைத் திருவிசைப்பாப் பதிகத்தாற் பரவிப் போற்றிய கருவூர்த் தேவர், இத்திருப்பதிகத்தின் கடைசிப் பாடலில் இவ்வேந்தனது சிவபத்தியின் மாண்பினைச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். இவ்வேந்தனது 24ஆவது ஆட்சியாண்டில் இவனுக்கு அணுக்கப் பணிபுரிந்த நக்கன் பாவையார் என்பவர், தில்லைக் கூத்தனாகிய திருச்சிற்றம்பலமுடைய பெருமான் திருவானித் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளும் அன்றைக்கு வேண்டும் செலவுகட்கும் அமுது படிக்கும் சிவனடியார்களுக்குச் சட்டிச்சோறு ஆயிரம் கொடுக்கவும், திருவிழாவுக்கு வேண்டும் எண்ணெய்க்கும் வேண்டும் வழக்கத்துக்கும் பரிசட்டம் திருவிளக்கு எண்ணெய் முதலிய செலவுகட்கும் திருமாசித் திருநாளில் திருத்தொண்டத் தொகை விண்ணப்பஞ் செய்வதற்கும் ஆண்டொன்றுக்கு மேல்வாரம் இரண்டாயிரத் திருநூற்றைம்பதின் கலம் ஆக வருவாயுள்ள நாற்பத்து நாலு வேலி நிலம் நிபந்தமாக அளித்துள்ளார். அணுக்கி நக்கன் பரலையாராகிய இவரே இத்தில்லைப் பதியில் உள்ள சிங்களாந்தகன் என்னும் அறச்சாலையில் நாள்தோறும் பிராமணர் இருபத்தைவர் உண்பதற்கும், சமையல் ஆளுக்கும், தண்ணீர்க்கலம் கொண்டு வருவோனுக்கும் உடை முதலிய செலவுகட்கும் ஆக ஒராண்டுக்கு மேல்வாரமாக ஆயிரத்து இருநூற்று இருபத்தைந்து கலம் நெல் வருவாயுள்ள பத்து வேலி நிலமும் நிபந்தமாக அளித்துள்ளார். இது பற்றிய விவரங்கள் தில்லைப் பெருங்கோயிலின் முதற் பிரகாரத்தில் வடபுற மதிலில் கங்கை கொண்ட சோழனது 24ஆம். ஆட்சியாண்டில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டில் (தெ இ.க. தொகுதி IV எண் 223) விரிவாகக் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

மேற்குறித்து கல்வெட்டுச் செய்திகளை ஊன்றி நோக்குங்கால், இப்பொழுது தில்லைப் பெருங்கோயிலில் நிகழ்ந்து வரும் ஆனித்திருமஞ்சனத் திருவிழாவும், மார்கழித் திருவாதிரைத் திருவிழாவும் கங்கை கொண்ட சோழன் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே நிகழும் தொன்மை வாய்ந்தன என்பதும், இவ்விரு திருவிழாக்களிலும் அடியார்களுக்கும், அந்தணர்களுக்கும் அன்னம் பாலிக்கப் பெற்றதென்பதும் இவ்விரு திருவிழாக்களுடன் திருமாசித் திருநாளிலும் திருவிழா நிகழ்ந்ததென்பதும் அத்திருவிழாவில் 'தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என ஆரூரிறைவர் அடியெடுத்துக் கொடுக்க, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகம் தில்லைக் கூத்தப் பெருமான் திருமுன்னர் விண்ணப்பஞ்செய்யப் பெற்றதென்பதும் நன்கு விளங்கும்.

பிற்காலச் சோழரது ஆட்சியில் சோழர்களின் பெண்வழி மரபில் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர்கள் முதற் குலோத்துங்கன் விக்கிரம சோழன் முதலியோராவர். சோழ நாட்டில் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த பெருவேந்தர்களுள் முதற்குலோத்துங்க சோழனும் ஒருவன். சிவபெருமான்பால் எல்லையற்ற பேரன்பினனாய், குடிமக்கள் மகிழச் சுங்கம் தவிர்த்த சோழனாகிய இம்மன்னன், கி.பி. 1070 முதல் 1120 வரை சோழநாட்டை நன்முறையில் ஆட்சி புரிந்துள்ளான். இவனது ஆட்சிக்காலத்தில் தில்லைப் பெருங்கோயிலின் திருப்பணி மிகச் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

முதற்குலோத்துங்கன் தன் முன்னோர்களைப் போலவே தில்லைக் கூத்தப் பெருமான்பால் பேரன்பு செலுத்தியவனாவான். இவ்வேந்தன் தன் நண்பனாகிய காம்போச நாட்டு மன்னன் தனக்குக் காட்சிப் பொருளாகத் தந்த ஒளிதிகழ் பளிங்குக்கல்லினைத் தில்லைச் சிற்றம்பலத்தைச் சார்ந்துள்ள திருவெதிரம்பலத்தில் அணி திகழ வைத்தான். இச்செய்தி,

“ஸ்ரீ இராசேந்திர சோழ தேவர்க்குக் காம்போஜராஜன் காட்சியாகக் காட்டின கல்லு இது - உடையார் இராசேந்திர சோழ தேவர் திருவாய் மொழிந்தருளி உடையார் திருச்சிற்றம்பலமுடையார் கோயிலில் முன் வைத்தது - இந்தக் கல்லு திருவெதிரம்பலத்துத் திருக்கல் சரத்தில் திருமுன் பத்திக்கு மேலைப் பத்தியிலே வைத்தது (Ep.Ind.Vol II.No,132).

எனத் தில்லைத் திருக்கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டால் அறியப்படும்.

முதற்குலோத்துங்க சோழனுக்குச் சகோதரிகள் இருவர். இவர்கள் குந்தவை, மதுராந்தகி என்போராவர். இவ்விருவரும் தில்லையம்பலவாணர்பால் எல்லையற்ற பேரன்பினால் தில்லைத் திருக்கோயிலுக்குச் சிறப்புடைய திருப்பணிகள் செய்துள்ளார்கள். இவருள் குந்தவை என்பார், தில்லைச் சிற்றம்பலப் பெருமான் தண்ணீர் அமுது செய்தருளுதற்கென ஐம்பதின் கழஞ்சு நிறையுள்ள பொன்வட்டிலைத் தில்லைப் பெருங்கோயிலுக்கு உளமுவந்து வழங்கியுள்ளார். இச்செய்தி,

ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் - சக்கரவர்த்திகள் குலோத்துங்க சோழ தேவர் திருத்தங்கையார் இராஜராஜன் குந்தவை ஆழ்வார் ஆளுடையாாக்குத் தண்ணீர் அமுது செய்தருள் இட்ட (மி)ண்டம் ஒன்றினால் குடிஞைக்கல் நிறைமதுராந்தகன் மாடையோடு ஒக்கும் பொன் ருய ஐம்பதின் கழஞ்சு உ" (தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி 5). என வரும் கல்வெட்டிற் குறிக்சுப்பெற்றுள்ளமை காணலாம்.

குந்தவையாழ்வாராகிய இவ்வம்மையார், கி.பி. 1114 ஆம் ஆண்டில் தில்லையம்பலவாணர் திருக்கோயில் முழுவதும் பொலிவுடன் திகழப் பொன்னம்பலத்திற்கு மீண்டும் பொன் வேய்ந்துள்ளார். இச்செய்தி,

நானிலத்தை முழுதாண்ட சயதரற்கு
நாற்பத்து நாலா மாண்டில்
மீனநிகழ் நாயிற்று. வெள்ளி பெற்ற
வுரோகணி நாள் இடபப் போதால்
தேனிலவு பொழிற்றில்லை நாயகர்தங்
கோயிலெலாஞ் செம்பொன் வேய்ந்தாள்
ஏனவருந் தொழுதேத்தும் இராசராசன்
குந்தவை பூ விந்தையாளே"

(எபிராபிகா இண்டிகா தொகுதி 5, பக்,, 105)

என வரும் கல்வெட்டுச் செய்யுளால் இனிது விளங்கும்.

இப்பாடலில் சயதரன் என்றது முதற்குலோத்துங்க சோழனுக்கு வழங்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்றாகும். இராசராசன் குந்தவை என்றது அவன் தங்கையாகிய குந்தவையாரை. முதற்குலோத்துங்கனது ஆட்சியில் நாற்பத்து நாலாமாண்டில் அவன் தங்கை குந்தவையாரால் தில்லைச் சிற்றம்பலம் மீண்டும் பொன் வேயப் பெற்றதென்பது இச்செய்யுளால் நன்கு புலனாகிறது.

இனி முதற்குலோத்துங்கனது மற்றொரு தங்கையாகிய மதுராந்தகி என்பார் கி. பி. 1116 ஆம் ஆண்டில் தில்லையில் திருச்சிற்றம்பலமுடையார் திருநந்தவனத்திற்கும் சிவனடியார் திருவமுது செய்யுந் திருமடத்திற்கும் நிவந்தமாக இறையிலி நிலங்கள் வழங்கியுள்ளார். இச்செய்தி, “திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு நாற்பத்தாறாவது ராஜாதிராஜ வளநாட்டுத் தனியூர் பெரும்பற்றப்புலியூர் உடையார் திருச்சிற்றம்பல முடையார்க்குத் திருநந்தவனப்புறமாகவும் ஸ்ரீமாகேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறம் நம் பெருமாள் திருத்தங்கையார் மதுராந்தகியாழ்வார் வாச்சியன் இரவிதிருச்சிற்றம்பல முடையான் பேரில் விலை கொண்ட நிலம் கிடாரங்கொண்ட சோழப் பேரிளமை நாட்டு எருக்கட்டாஞ் சேரியான ஜயங்கொண்ட சோழ நல்லூர்ப் பால்" (தெ. இ. க. தொகுதி 4 எண் 222) எனவரும் கல்வெட்டுப் பகுதியில் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

இங்கு எடுத்துக் காட்டிய கல்வெட்டுப் பகுதிகளால் முதற் குலோத்துங்க சோழன் தங்கைமாராகிய இராசராசன் குந்தவையாரும், மதுராந்தகி யாழ்வாரும் தில்லைப் பெருங்கோயிலுக்குத் திருப்பணிகள் பலபுரிந்துள்ளமை நன்கு புவனாதல் காணலாம்.

முதற்குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாம் ஆட்சியாண்டில் தொண்டை 'நாட்டுக் காரிகைக் குளத்தூர் தலைவனும், மிழலை நாட்டு வேளாண்மை கொண்டவனுமாகிய கண்டன் மாதவன் என்பான் தில்லையம்பலத்தின் வடகீழ்த் திசையில் சொன்னவாற்றிவார் கோயிலும் சிவபுராணங்களை விரித்துக் கூறுதற்கு இடமாகிய புராண மண்டபமும் அதனை யொட்டிய திருமாளிகைப் பத்தியும் மலைபோன்று உயர்த்து தோன்ற வரிசையாகக் கட்டினான். இச்செய்தி நீடூர்க் கோயிலில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டில்,

"ஆரியவுலகம் அனைத்தையும் குடைக்கீழ்
ஆக்கிய குலோத்துங்க சோழற்
காண்டொரு நாற்பத்தாரிடைத் தில்லை.
பம்பலத்தே வட கீழ்பால்
போரியல் மதத்துச் சொன்னவாற்றிவார்
கோயிலும் புராண நூல் விரிக்கும்
புரிசை மாளிகையும் வரிசையா விளங்கப்
பொருப்பினான் விருப்புறச் செய்தான் ... கண்டன் --- மாதவனே"

என வரும் பாடலில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம் இப்பாடலில் சொன்னவாறறிவார் கோயில் என்றது, யாரும் யாவும் கழறினவும் அறியும் ஆற்றலை இறைவனருளாற் பெற்ற சேரமான் பெருமாளுக்கு அமைத்த திருக்கோயிலாகும். தில்லைப் பெருங்கோயிலின் வடகீழ்த்திசையிற் கண்டன் மாதவனாற் கட்டப்பட்ட இத்திருக்கோயில் காலப்பழமையால் பேணுவாரின்றிச் சிதைந்து அழிந்து போய்விட்டதெனக் கருத வேண்டியுளது. தில்லைப் பெருங்கோயிலில் கூத்தப் பெருமானைச் சுற்றியுள்ள முதல் திருச்சுற்று விக்கிரம சோழன் திருமாளிகை எனவும்; இரண்டாம் திருச்சுற்று குலோத்துங்க சோழன் திருமாளிகை எனவும், மூன்றாம் திருச்சுற்று, இராசாக்கள் தம்பிரான் திருவீதி எனவும் கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளன. குலோத்துங்க சோழன் திருமாளினகயாகிய இரண்டாம் திருச்சுற்றின் மேற்புறத்தில் அமைந்த கோபுரவாயில் குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் (தெ.இ.க. தொ, எண், -22) எனக் கல்வெட்டிற் குறிக்கப்பெற்றுள்ளது.

வாச்சியன் திருச்சிற்றம்பலமுடையான் சங்கரனான தென்னவன் பிரபராயன் என்பான், பெரும்பற்றப்புலியூர் வடபிடாகை மணலூரில் தான் அனுபவித்து வருகிற மணற் கொல்லை கால் வேலி நிலத்தையும் சுங்கத் தவிர்த்தருளின குலோத்துங்க சோழ தேவர் மகளார் அம்மங்கையாழ்வாரான பெரிய நாச்சியார்க்குச் சேமமாக சம்மதித்து அன்னிய நாம கரணத்தால் தில்லைப் பெருங்கோயிலுக்கு அளித்துள்ளான். (தெ.இ.க.தொருதி IV எண் 226), அடுத்து.,

"திருமணி பொற்றோட் டெழுது பத்தாண்டில்
வருதிறை முன்னே மன்னவர் சுமந்து
திறை நிறைத்துச் சொரிந்த செம்பொற்குவையால்
தன்குல நாயகன் தாண்டவம் பயிலும்
செம்பொனம்பலஞ் சூழ் திருமாளிகையும்
கோபுரவாசல் கூடசாலைகளும்
உலகு வலங்கொண் டொளிவிளங்கு நேமிக்
குலவனாயுதய குன்றமொடு நின்றெனப்



பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும்
விசும்பொளி தழைப்ப விளங்கு பொன் வேய்ந்து
இருநிலந் தழைப்ப இமையவர் களிப்ப
பெரிய திருநாள் பெரும்பெயர் விழாவெனும்
உயர் பூரட்டாதி உத்திரட்டாதியில்
அம்பலம் நிறைந்த அற்புதக்கூத்தர்
இம்பர் வாழ எழுந்தருளுவதற்குத்
திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து
பருத்திரன் முத்தின் பயில்வடம் பரப்பி
நிறைமணி மாளிகை நெடுந்திருவீதிதன்
திருவளர் பெயராற் செய்து சமைத்தருளி
பைம்பொற் குழித்த பரிகல முதலாச்
செம்பொற் கற்பகத்தொடு பரிச்சின்னமும்
அளவில்லாதன வொளிபெற அமைத்துப்
பத்தாமாண்டிற் சித்திரைத் திங்கள்
அத்தம் பெற்ற ஆதி வாரத்துத்
திருவளர் மதியின் திரையோதசிப்பக்கத்து
இன்ன பலவும் இனிது சமைத்தருளி"

எனவரும் விக்கிரம சோழனின் மெய்க்கீர்த்திப் பகுதி அவன் செய்த தில்லைத்திருப்பணிகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

"அழகிய மணிபதித்த பொன்னேட்டிற் குறிப்பிட்டு எழுதத்தக்க தனது பத்தாம் ஆட்சியாண்டில் தனக்குக் கீழ்ப்படிந்த மன்னவர்கள் சுமந்து வந்து நிறைத்த திறைப்பொருளாகிய பொற்குவையினைக் கொண்டு தன் குலதெய்வமாகிய சிவபெருமான் திருநடம் புரியும் பொன்னம்பலத்தினைச் சூழவுள்ள சுற்று மாளிகையும் அதனையடுத்துள்ள கோபுரவாயிலும் மலைகளும் உலகினைச் சூழவுள்ள சக்கரவாள மலை கதிரவன் உதிக்கும் உதய மலையுடன் கூடி நின்றாற் போல பொன்னால் வேயப்பட்ட பலிபீடமும் வானத்தில் விளங்கப் பொன் வேய்ந்து மண்ணுலகத்தவர் விண்ணவர் மகிழத்தான் பிறந்த பெரியவிழா வென்னும்பூரட்டாதி, - உத்திரட்டாதி திருச்சிற்றம்பலத்தின் அருளும் வாய்நிறைந்து ஆடும் அற்புதக் கூத்தினை நிகழ்த்தி யருளும் சுத்தப்பெருமான் இவ்வுலகத்தவர் வாழ எழுந்தருளித் திருவுலா வருதற்குரிய இயங்குத் திருக்கோயிலாகிய திருத்தேரினைச் செம்பொற் கூரையுடையதாகப் பொன் வேய்ந்து அதன் கண் பருமை வாய்ந்த முத்து வடங்களை வரிசையாகத் தொங்கும்படி அணி செய்து, அத்தேரானது உலா வருதற்கு ஏற்றவாறு தில்லைப்பதியில் நிறைமணி மாளிகையுடைய நெடுந் திருவீதிகளாக நான்கு வீதிகளையும் விக்கிரம சோழன் திருவீதி எனத் தன் பெயரால் அமைத்துப் பசியபொன்னினால் உட்குழிவுடையதாகச் செய்யப் பெற்ற பரிகலம் (உண்கலம்) முதலாகச் செம் பொன்னாற் செய்யப்பட்ட கற்பகத் தருவினையும் பரிச்சின்னங்களையும் அளவில்லாதனவாக ஒளி பெற அமைத்துத் தனது பத்தாம் ஆட்சியாண்டில் சித்திரை மாதம் அத்த விண்மீனுடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் வளர்பிறைத் திரயோதசித் திதியில் இத்தகைய பல திருப்பணிகளைத் தில்லைப் பெருங்கோயிலிற் செய்து நிறைவேற்றினான்" என்பது மேற்குறித்த மெய்க்கீர்த்தி கூறும் செய்தியாகும்.

இவ்வாறு விக்கிரம சோழன் தில்லைப்பதியிற் செய்த திருப்பணிகள் யாவும் கி.பி. 1128 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பதினைந்தாம் நாளில் நிறைவேறின என்பது இம்மெய்க் கீர்த்தியிற் குறிக்கப்பட்டுள்ள காலக்குறிப்பினால் நன்கு அறியப்படும். தில்லைச்சிற்றம்பலத்தைச் சூழவுள்ள திருமாளிகைப் பத்தியாகிய முதற்பிரகாரம் இவ்வேந்தனால் அமைக்கப் பெற்றமையின் “விக்கிரம சோழன் திருமாளிகை” என வழங்கியதென்பது கல்வெட்டுகளாற் புலனாகின்றது. (Ins, No. 282, 284; and 287 of 1913).

விக்கிரமசோழன் பெரும் பற்றப்புலியூராகிய தில்லையிற் பெருவீதியமைத்த செய்தியைக் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தர் இவன் மகன் இரண்டாங்குலோத்துங்கனைக் குறித்துப் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழில்,

'பாவக நிரம்பு திரு மாலும் மலரோனும்
பரந்த பதினெண் கணமும் வந்து பரவந்தம் ::சேவக நிரம்பு திருவீதி புலியூரிற்
செய்த பெருமான்

(குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ் 9-7)

எனவரும் தொடரிற் பாராட்டிப் போற்றியுள்ளமை காணலாம்.

தில்லைத் திருக்கோயிலிற் சிவகங்கைத் தீர்த்தத்திற்கு மேற்பக்கத்தேயுள்ள நூற்றுக்கால் மண்டபம் விக்கிரம சோழன் பணித்த வண்ணம் அவனுடைய படைத் தலைவனாகிய அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன் என்பவனாற் கட்டப்பெற்றதாகும். இம்மண்டபத்தில் பன்னிரண்டு தூண்களில் ‘விக்கிரமசோழன் திரு மண்டபம்' எனப்பெயர்பொறிக்கப் பெற்றிருத்தலால் இம்மண்டபம் விக்கிரம சோழன் பெயரால் அவனது படைத்தலைவன் காலிங்கராயனாற் கட்டப் பெற்றதெனத் தெரிகிறது. இம்மண்டபத்தைக் கட்டியவன் அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங்கராயன் என்பது

"மல்லற் குலவரையால் நூற்றுக்கால் மண்டபத்தைத்
தில்லைப் பிரானுக்குச் செய்தமைத்தான் - கொல்லம்
அழிவுகண்டான் சேரன் அளப்பரிய வாற்றற்
கிழிவு கண்டான் தொண்டைபா ரேறு” -

(தெ. இ. க. தொ . IV பக். 33)

எனவரும் சிதம்பரம் கல்வெட்டுச் செய்யுளால் அறியப்படும்.

தில்லையம்பலவாணர் மாசிமக நாளில் கிள்ளையிலுள்ள கடல் துறையில் தீர்த்தமாடி வீற்றிருந்தருளுதற்கு மண்டபமும், தில்லையிலிருந்து கிள்ளைக் கடற்கரைக்குச் செல்லுதற்குரிய பெருவழியும் விக்கிரம சோழன் ஆட்சியில் அவ்வேந்தனது ஆணை எங்கும் நிகழ அவன் படைத்தலைவனாகிய காலிங்கராயனால் அமைக்கப் பெற்றன. இச்செய்தி,

“மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும்
பேசற்ற அற்றைப் பெருவழியும் - ஈசற்குத்
தென்புலியூர்க் கேயமைத்தான் கூத்தன் திசையனைத்தும் மன்புலியாணை நடக்க வந்து"

(தெ. இ. க. தொ IV. பக், 34)

எனவரும் வெண்பாவால் இனிது புலனாதல் காணலாம்.

அரும்பாக்கிழான் காலிங்கரானாகிய இவன் முதற்குலோத்துங்க சோழன் ஆட்சியிலும் விக்கிரம சோழன் ஆட்சியிலும் படைத் தலைவனாக விளங்கியவன். இவன் தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றாகிய மணவிற் கோட்டத்தின் தலையூராகிய மணவில் என்னும் ஊரினன். தொண்டையர் கோனாகிய இத்தலைவன் முதற்குலோத்துங்கனது ஆட்சியில், படைத்தலைவனாயமர்ந்து வேணாடு மழைநாடு பாண்டிநாடு வடநாடு முதலியவற்றில் நிகழ்ந்த போரில் தன் வேந்தனுக்த வெற்றியை நல்கிப் பெரும்புகழ் பெற்றான். இவனது வெற்றிச் செயல்களை நன்குணர்ந்த முதற் குலோத்துங்கன் இவனுக்குக் காலிங்கராயன், என்னும் பட்டமளித்துப் பாராட்டினான். இவன் அருளாகரன், அரும்பாக்கிமான் பொன்னம்பலக் கூத்தன், நரலோக வீரன் முதலிய பெயர்களாற் பாராட்டப் பெற்றுள்ளான். இவன் விக்கிரமசோழன் ஆட்சியின் முற்பகுதியிலும் படைத் தலைவனாக இருந்தனன் என்பது ஒட்டக்கூத்தர் பாடிய விக்கிரம சோழனுலாவால் நன்கு புலனாகின்றது.

சோழ வேந்தர்க்கு வெற்றி விளைக்கும் போர்த்திறம் வாய்ந்த . கலிங்கராயனாகிய இத்தலைவன் தமிழ் மக்கள் உள்ளத்திலே சிவபத்தியினை விளைக்கும் சிறந்த சிவநெறிச் செல்வனாகவும் திகழ்ந்துள்ளான். இச்செய்தி தில்லைப் பெருங்கோயிலிலும் திருவதிகை வீரட்டானத்திலும் இவன் செய்துள்ள திருப்பணிகளை வெண்பா நடையிற் போற்றி வரையப் பெற்றுள்ள கல்வெட்டுக்களால் இனிது புலனாகும். தில்லைப் பெருங்கோயிலுக்கு இவன் செய்துள்ள திருப்பணிகளைக் குறித்த முப்பத்தேழு வெண்பாக்கள் சிதம்பரம் கல்வெட்டிற் பொறிக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

{1} தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள திருக்கொடுங்கைப் பகுதியைப் பொன்னால் வேய்ந்தது, (2) தில்லையிற் பொன்னம்பலத்தைச் செம்பொன்னால் வேய்ந்தது, (3) தில்லைப் பெருங் கோயிலிலுள்ள திருஞானசம்பந்தர் திருக்கோயிலைப் பொன்னால் வேய்ந்தது, (4) திவ்லைப் பெருங்கோயிலிலுள்ள பேரம்பலத்திற்கு செப்புத் தகடு வேய்ந்தது. (5) வடநாட்டுப் பகையரசர் திறையாகத் தந்த செம்பொன்னைத் தில்லைக் கூத்த பெருமானுக்குப் பரிகலமாகச் செய்தளித்தது, (6)  Invalid template invocation→ கூத்தப்பெருமானுக்குப் பொற்படிக்கம் செய்து கொடுத்தது, {7} செம் பொற்காளஞ் செய்து கொடுத்தது. கூத்தப் பெருமனுக்கு நீண்டெரியும் கற்பூர விளக்கு அமைத்தது. பொன்னம்பலத்தினைச் சூழ்ந்த திருச்சுற்றில் பொன்விளக்கமைத்தது, தில்லைப் பெருமானுக்கு நாள்தோறும் பாலமுது நிவேதிக்க நிபந்தம் அளித்தது. ஆயிரம் நாழி நெய்யால் கூத்தப் பெருமான் திருமஞ்சனஞ் செய்தருளக் கண்டு மகிழ்ந்தது, சிவபெருமான் ஞானங் குழைத்தளித்த சிவஞானப் பாலைப் பருகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் பாடியருளிய திருப்பதிகம்முதலாகவுள்ள தேவாரத் திருப்பதிகங்களை நாளுந் தடையின்றி ஓதுவதற்கும் பலர் கூடியிருந்து கேட்டு மகிழ்வதற்கும் உரிய வண்ணம் தேவார மண்டபத்தைக் கட்டியது, தில்லைப் பெருங்கோயிலில் மலை போன்று உயர்ந்த நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியது தில்லையம்பலத்தைச் சூழத் திருச்சுற்று மாளிகை அமைத்தது, சிவகங்கைத் தீர்த்தத்துக்குக் கருங்கற்களால் படியமைத்தது, தில்லைத் திருவீதி சூழ நல்ல ஒளி விளக்கும் அவ்வீதியின் நாற்றிசையிலும் இறைவன் விற்றிருக்குந் திருமண்டபமும் செய்தது, தில்லைக் கூத்தப்பெருமான் இடப்பாகத்தேயுள்ள சிவகாமியம்மைக்குத் தனிக் கோயிலாகச் சிவகாமக்கோட்டம் அமைத்தது; அக்கோட்டத்தினைச் சூழத் திருச்சுற்று மாளிகை அமைத்தது; சிவகாமியன்னைக்கு நாள் தோறும் திருமஞ்சனஞ் செய்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்தது, சிவகாமியன்னைக்குப் பொன்னாடை சாத்தியது, உலகம் ஈன்ற அன்னையின் அருளை நினைந்து போற்றும் முறையில் அக்கோயிலில் நாள்தோறும் குழந்தைகட்குப் பாலும் எண்ணெயும் வழங்க திபந்தம் செய்தது, புலியூர்ச் சிற்றம்பலத்தைப் பொன்மயமான கொடிகளால் அலங்கரித்தது, தில்லையில் கூத்தப்பிரான் திருவீதியில் எழுந்தருளும்போது நறும்புகை கமழ ஏற்பாடு செய்தது, அத்திருவிழாவில் திருஞானசம்பந்தர் முதலான சைவ சமய ஆசிரியர்களின் திருவுருவமான திருக்கோலங்களை ஒளி பெருக எழுந்தருளச் செய்தது, தில்லைப் பெருமானை வழிபடும் அன்பர்கள் தில்லையில் தங்கியிருந்து உணவு கொள்ளும் முறையில், அன்னம் பாலிக்க. அறக்கட்டளை வகுத்தது, முதலாம் குலோத்துங்கன் பட்டத்தரசியாசிய தியாகவல்லியின் பெயரால் நிலம் வாங்கி அந்நிலத்திற்குரிய வரியை நீக்கித் தில்லை வாழந்தணர்க்கு வீதியில் மனை கட்டிக் கொடுத்தது, தில்லைப்பெருங் கோயிலுக்குக் களிற்று யானை கொடுத்தது, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆசிய மூவரும் எல்லாம் வல்ல முதல்வனாகிய சிவபெருமானது புகழ்த் திறத்தைப் பாடியவாறு அம்மூவர் அருளிய தேவாரப் பதிகங்கள் முழுவதையும் முன்போற் சிதலரிக்கவொண்ணாதவாறு அளவொத்த செப்பேடுகளில் எழுதித் தில்லைப்பெருங்கோயிலிற் சேமித்து வைத்தது, தில்லைக் கூத்தப்பெருமானுக்குத் திருநந்தவனம் அமைத்தது, தில்லைப் பெருமான் மாசிமக நாளில் கடலாட்டிற்கு எழுந்தருளுந் திருவிழாவில் அம்முதல்வன் வீற்றிருந்தருளக் கிள்ளைக் கடற்றுறையில் மண்டபம் அமைத்தது, தில்லைப் பெருங்கோயிலுக்கு ஆயிரம் பசுக்களை அளித்தது, தில்லையில் புலி மடுவின் அருகே வியாக்கிரபாதர் தந்தையார் மத்தியந்தன முனிவர் வழிபட்ட சுடலையமர்ந்தார் திருக்கோயிலைக் கற்றளியாக்கியது. தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் செல்வப் பெருக்கமுடையராதல் வேண்டும் என்னும் நல்ல நோக்கத்துடன் தில்லையருகேயுள்ள ஏரியிலிருந்து தண்ணீர் பாய்தற்கமைந்த மதகினைக் கல்லினாற் செய்தமைத்தது ஆகிய பணிகள் மேற்குறித்த செய்யுட் கல்வெட்டில் விரித்துரைத்துப் பாராட்டப் பெற்றுள்ளன. இவ்வாறே மணவிற் கூத்தன் காலிங்கராயனாகிய இவன் தில்லையிற் போன்றே திருவதிகை திருவீரட்டானத்திருக்கோயிலிலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். அப்பணிகள் யாவும் அக்கோயிலில் வரையப்பெற்றுள்ள இருபத்தைந்து வெண்பாக்களில் எழில் பெற விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

இவ்வாறு சோழரது அரசியல் ஆட்சிவளம் பெறவும், தமிழகத்தின் அருளியலாட்சி முறையாகிய சிவநெறி வளர்ச்சி பெறவும் மணவிற்கூத்தன் காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகளில் சிறப்புடையதாகக் குறிக்கத் தகுவது. தேலார ஆசிரியர் மூவரும் பாடிய திருப்பதிகங்கள் முழுவதையும் செப்பேடுகளில் வரையச் செய்து சிவராச தானியாகத் திகழும் தில்லைப் பெருங்கோயிலிற் சேமித்து வைத்த திருநெறித் தமிழ்ப் பணியேயாகும். இத்திருப்பணியை விரித்துரைத்துப் போற்றும் முறையில் அமைந்தது.

'முத்திறத்தார் ஈசன் முதற்றிறத்தைப் பாடியவா(று)
ஒத்தமைத்த செப்பேட்டி னுள்ளெழுதி - இத்தலத்தின்
எல்லைக் கிரிவாய் இசையெழுதி னான் கூத்தன்
தில்லைக்சிற் றம்பலத்தே சென்று'

(தெ. இ. க. தொகுதி IV. பக்கம் 34, செய்யுள் 55).

என வரும் வெண்பாவாகும்.

இறைவன் திருக்கோயிலுக்குச் செய்யும் திருப்பணி, நாட்டில் வாழும் ஏழையெளிய மக்களுக்கும் நற்பயனளித்தல் வேண்டும் என்னும் பெருநோக்குடையவன் காலிங்கராயன் என்பது, அவன் தில்லைச் சிவகாமியம்மை திருக்கோயிலில் நாள் தோறும் இளங்குழந்தைகளுக்குப் பாலும் எண்ணெயும் வழங்குமாறு அறக்கட்டளை வகுத்துள்ள சமுதாயத் தொண்டினால் நன்குணரப்படும். இச் செய்தி.

“செல்வி திருந்தறங்கள் தென்னகரித் தில்லைக்கே
நல்லமகப் பால்எண்ணெய் நாடோறுஞ் செல்லத்தான்
கண்டான் அரும்பையர்கோன் கண்ணகனீர் ஞாலமெல்லாங்
கொண்டானந் தொண்டையார் கோன்"

(தெ. இ. தொகுதி IV. பக். 34, பாடல் 47)

எனவரும் வெண்பாவில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய தேவார ஆசிரியர்கள் மூவரும் பாடியருளிய தேவாரத்திருப்பதிகங்களை தடையின்றி எல்லாரும் இருந்து கேட்டற்குரிய தேவராய மண்டபத்தைத் தில்லையம்பல முன்றிலிலே காலிங்கராயன் கட்டினான், இச்செய்தி.

நட்டப் பெருமானார் ஞானங் குழைத்தளித்த
சிட்டப் பெருமான் திருப்பதியம்- முட்டாமைக்
கேட்போர்க்கு மண்டபத்தைச் செய்தான்தெவ் வேந்தர்கெட
வாட்போக்குத் தொண்டையர்கோன் மன்'

(தெ. இ.க. தொகுதி IV, பக். 34)

எனவரும் வெண்பாலிற் கூறப்பெற்றுள்ளது. தில்லைப் பொன்னம்பல முன்றிலிலே இப்பொழுது கோவிந்தராசப் பெருமாள் சந்நிதியின் - கிழக்குப் பகுதியே காலிங்கராயன் கட்டிய தேவார மண்டபம் இருந்த இடமாகும். இப்பகுதியில் தேவார ஆசிரியர் மூவர்க்கும் தில்லைக் கூத்தப்பெருமானை நோக்கிய நிலையில் சந்நிதியிருந்தது. இச்சந்நிதியிலிருந்த தேவார ஆசிரியர் மூவர் திருவுருவமும் இப்பொழுது பொன்னம்பலத்தைச் சூழவுள்ள முதற்பிரகாரத்தில் பரமானந்த கூபத்தின் எதிரே பைரவர் சந்நிதியையொட்டி எழுந்தருளச் செய்யப் பெற்றமை காணலாம்.

விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மைந்தன் இரண்டாங் குலோத்துங்க சோழன் கி.பி. 1133 முதல் 1150 வரை இந் நாட்டினைச் சிறந்த முறையில் ஆட்சி புரிந்த பெருவேந்தனாவான். இவ்வேந்தனைத் "தில்லைத் திருநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய குலோத்துங்க சோழ தேவர்" (தெ. இ.க தொகுதி VII எண் 780) எனத் திருமாணிகுழியிலுள்ள கல் வெட்டு சிறப்பித்துப் போற்றுகின்றது. எனவே இவனது ஆட்சிக் காலத்தில் தில்லைப் பெருங்கோயில் திருப்பணிகள் பல இனிது நிறைவேற்றப்பெற்றுத் தில்லைத் திருநகரம் மிகவும் சிறப்புடையதாகத் திகழ்வதாயிற்று என்பது நன்கு புலனாகும். இரண்டாம் குலோத்துங்கனாகிய இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலப் - பெருமான் பால் அளவிலாப் பேரன்புடையவன் என்பது, "தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்கும் சிந்தை யபயன்" (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்:-78) எனவும், "நவ நிதிதூஉய், ஏத்தற் கருங்கடவுள் எல்லையில் ஆனந்தக் கூத்தைக் களிகூரக் கும்பிட்டு” (குலோத்துங்க சோழனுலா வரி 74-76) எனவும் வரும் ஒட்டக் கூத்தர் வாய்மொழியாலும், 'தில்லைக் கூத்தபிரான் திருவடித் தாமரையிலுள்ள . அருளாசிய தேனைப் பருகும் வண்டு போன்றவன்' (தெ. இ. க. தொகுதி IV எண் 397) எனத் திருவாருர்க்கல்வெட்டு இவ்வேந்தனது சிவபத்தித் திறத்தினைக் குறிப்பிடுதலாலும் நன்கு விளங்கும்.

இவ்வேந்தன். தில்லைத் திருநகரின் நான்குபெருவீதிகளையும் வனப்புடையனவாக அழகுபடுத்தினான், பற்பல மண்டபங்களைக் கட்டுவித்தான். சிவபெருமான் திருக்கூத்தியற்றியருளும் திருச்சிற்றம்பலத்தைத் தம்முன்னோர் செய்தது போலவே பொன்னாலும் மணிகளாலும் அணி பெறச் செய்தான். திருச்சிற்றம்பலத்தின் முகப்பாகிய 'எதிரம்பலத்தையும்' உட்கோபுரத்தையும், திருச்சுற்று மாளிகையையும் பொன்மயமாக்கினான். எழுநிலைக் கோபுரங்களைக் கட்டினான். தன் தந்தை விக்கிரம சோழன் காலத்திற் சுட்டப்பெற்ற சிவகாமக் கோட்டத்தினை உமாதேவியார் தாம் தோன்றிய இமயமலையையும் மறக்கும்படி மேலும் விரிவுடையதாக்கினான். சிவகாமியம்மையார் திருவிழா நாளில் உலா வருதற்குப் பொன்னினும் மணியினும் அணி செய்யப் பெற்ற தேரினைச் செய்து கொடுத்தான்; பொன்னாலாகிய கற்பகத் தருக்களை அமைத்தான், அம்மை இருக்கோயிலுக்கு எதிரேயுள்ள சிவகங்கைத் தீர்த்தத்தினைச் சூழ நாற்புறமும் மண்டபம் அமைத்தான். இவ்வாறு இவ்வேந்தன் தில்லைச் சிற்றம்பலத்தை விரிவுபடுத்தும் திருப்பணிகளைச் செய்யத் தொடங்கிய போது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தில்லைத் திருமுற்றத்தில் நந்திவர்மனால் பிரதிட்டை செய்யப் பட்ட தில்லைக் கோவிந்தராசர் கோயிலை இடமாகப் பற்றி வாழ்ந்த எலவனைவர் சிலர் இத்திருப்பணிக்குத் தடையாய் இடையூறு பல புரிந்தனர். அது கண்டு சினமுற்ற இவ்வேந்தன் அத்திருமால் மூர்த்தத்தை இடம் பெயர்த்துப் பின்னர்த் தான் மேற்கொண்ட தில்லையம்பலத் திருப்பணியினை இனிது நிறைவேற்றினன் என்பது வரலாறு.

இவ்வேந்தன் தில்லையில் சிவகாமி அம்மை திருக்கோயிலைத் தென் திசைமேரு என்னும்படி பலரும் வந்து பணிந்து தங்கும்படி உயர்ந்த விமானமும் மண்டபமும் உடையதாக விரிவுபடுத்தினான் என்பதனை,

“நீடிய வெண்டிசை நீழல் வாய்ப்ப'
நேரிய தெக்கிண மேரு வென்னப்
பீடிகை தில்லை வனத்தமைத்த
பெரியபெருமாளை வாழ்த்தினவே"

(தக்கயாகப்பரணி)

என வரும் தாழிசையில் ஒட்டக்கூத்தர் குறித்துள்ளார். தில்லை யம்பலத்தைச் சூழ்ந்துள்ள இரண்டாம் திருச்சுற்றினைக் திருமாளிகைப் பத்தியுடன் அமைத்தவன் இரண்டாங் குலோத்துங்கள். தில்லைப் பொன்னம்பலத்தைச் சூழ்ந்துள்ள இரண்டாம் திருச்சுற்று, குலோத்துங்க சோழன் திருமாளிகை என வழங்கப்பெற்றது.

அருண்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகளைக் கொண்டு சிவனடியார்கள் அறுபத்து மூவர் வரலாறுகளையும் குறித்துத் திருத்தொண்டர் புராணமாகிய வரலாற்றுக் காப்பியத்தைப் பாடும்படி செய்தவன் இரண்டாங் குலோத்துங்கனே என்பது ஆராய்ச்சியாளரிற் பெரும்பாலோர் துணிபாகும். தில்லையம் பலவன் 'உலகெலாம்' என்று அடியெடுத்துக் கொடுக்கத் திருத் தொண்டர் புராணத்தைப் பாடியருளிய சேக்கிழார் நாயனார் தம்மை ஆதரித்துப் போற்றிய சோழ மன்னனைப் பத்து இடங்களில் பாராட்டிப் போற்றியுள்ளார். அப்பாடல்களுள் அநபாயன் என்ற பெயரையே சிறப்பாகக் குறிப்பிடுகின்றார்.

“சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத்திருவெல்லை பொன்னின் மயமாக்கிய வளவர் போரேறு என்றும் புவிகாக்கும்
மன்னர் பெருமான் அநபாயன்”

(பெரியபுராணம் சண்டேசர்.8)

எனவரும் பாடலில் ‘தில்லைத் திருவெல்லை பொன்னின் 'மயமாக்கிய வளலர் போரேறு' எனச் சேக்கிழார் நாயனார் தில்லைப்பதியில் இவனுக்குள்ள பெரும்பற்றினைப் புலப்படுத்தியுள்ளமை காணலாம்.

திருநீற்றுச்சோழன்

தில்லைநகர் சிறப்புடைத்தாகத் திருமுடி சூடி இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் ஒளிவளரத் தில்லைப் பெருங்கோயிலிற் பலவகைத் திருப்பணிகளையும் ஆர்வமுடன் செய்து இத்திருக்கோயிலைப் பொன்மயமாக்கியவன் அநபாயன் இன்னும் சிறப்புப் பெயருடைய சோழ மன்னனாதலின் அவ்வேந்தர் பெருமானைச் சிவநெறிச் செல்வர் பலரும் திருநீற்றுச் சோழன் எனச் சிறப்பித்துப் போற்றுவாராயினர். தில்லையம்பலவாணர்பால் வைத்த பேரன்பின் திறத்தால் தில்லைப் பெருங் கோயிலிற் சிவத்திருப்பணிகள் புரிந்து தில்லையம்பலவாணர் எடுத்த பொற்பாதத்தின் கீழ் என்றும் பிரியாதமார்ந் தின்புறும் தெய்வநிலை கைவரப் பெற்ற இச் சோழர் பெருமானை உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய கோயிற்புராணத்தில்,

“ஒன்றிய சீர் இரவிகுலம் உவந்தருளி யுலகுய்யத்
துன்று புகழ்த் திருநீற்றுச் சோழனென முடி சூடி
மன்றினடந் தொழுதெல்லை வளர்கனக மயமாக்கி
வென்றிபுனை யநபாயன் விளங்கிய பூங்கழல் போற்றி"

(கோயில்- பாயிரம்-12)

எளவரும் பாடலால் வணங்கிப் போற்றியுள்ளார். தில்லைப் பெருமான் திருவீதிக்கு எழுந்தருளும் போது விநாயகர், முருகன் சமயாசாரியர் முதலியோர் திருவுருவங்களோடு திருநீற்றுச் சோழனாகிய இவ்வேந்தர் பெருமான் திருவுருவமும் எழுந்தருளச் செய்யப் பெற்றது என்ற செய்தி தில்லையுலாவில் இடம் பெற்றுள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும்.

“தில்லையில் நடஞ்செய் கமலங்களை வளைக்குஞ் சிந்தை யப்யன்" எனக் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழிலும்,

ஏத்தற் கருங்கடவுள் எல்லையி லானந்தக்
கூத்தைக் களிகூரக் கும்பிட்டு”

எனக் குலோத்துங்க சோழனுலாவீலும் கவிச்சக்கரவர்த்தி ஓட்டக்கூத்தர் தில்லையம்பதியில் அநபாயனாகிய இவ்வேந்தனுக்குள்ள ஈடுபாட்டினைப்புலப்படுத்தியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத்தகுலதாகும். இவன் மைந்தன் இரண்டாம் இராசராச சோழனது 17-ஆம் ஆட்சியாண்டில் திருமழபாடிக் கோயிலில் வரையப் பெற்றுள்ள கல்வெட்டொன்றில் ஜயங்கொண்ட சோழமண்டலத்து ......... குன்றத்தூர்ச் சேக்கிழான்மாதேவடிகள் ராமதேவனான உத்தம சோழப் பல்லவராயன் என்பார் திருமழபாடித் திருக் கோயிலுக்குத் தொண்ணூறு பேராடுகள் உதவிய செய்திகுறிக்கப்பட்டுள்ளது.

'அத்தகைய புகழ்வோரண் மரபிற்சேக்கி
ழார் குடியில் வந்த அருண்மொழித் தேவர்க்குத்
தத்துபரி வளவனுந்தன் செங்கோ லோச்சுந்
தலைமையளித் தவர் தமக்குத் தனது பேரும்
உத்தம சோழப் பல்லவன் தானென்னும்
உயர் பட்டங் கொடுத்திட ஆங்கவர் நீர்நாட்டு
நிந்தனுறை திருநாகேச் சுரத்திலன்பு
நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்'

எனச் சேக்கிழார் புராணங் கூறுமாறு, குன்றத்தூரிற் சேக்கிழார் குடியிற் பிறந்து, இரண்டாம் இராசராசன் 17-ஆம் ஆட்சி யாண்டில் கோயிலுக்கு நீயத்தமளித்த குன்றத்தூர்ச் சேக்கிழான் மாதேவடிகள் ராமதேவனான உத்தமசோமப்பல்லவராயன் என்பவரே சேக்கிழார் நாயனார் என்பதும், இவரை ஆதரித்துத் திருத்தொண்டர் புராணத்தைப் பாடச்செய்த அநபாயன் என்பவன் இரண்டாம் இராசராசனுடைய தந்தை இரண்டாங் குலோத்துங்க சோழன் கான்பதும், சேக்கிழாருடைய தம்பியார் பாலறாவாயர் என்பவர் இரண்டாம் இராசராசனது 19-ஆம் ஆட்சியாண்டில் திருவறத்துறையில் நிகழும் மாசி வைகாசி விழாக்களில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் மாறன்பாடிக்கு எழுந்தருளுதற்கு நிலமளித்தகுன்றத்தூர்ச் சேக்கிழான் பாலறாவாயன் - களப்பாளராயன் என்பது, இவர் இரண்டாங்குலோத்துங்கனது ஆட்சியின் இடைப்பகுதி தொடங்கி மூன்றாங்குலோத்துங்கன் ஆட்சியின் முற்பகுதிவரை வாழ்ந்தவரென்பதும் அறிஞர் மு. இராகவையங்கார் முதலிய ஆராய்ச்சியாளர் துணிபாகும்.

தில்லை நகர்ச்சிறப்புடைத்தாகத் திருமுடி சூடிய இரண்டாம் குலோத்துங்கசோழன் தில்லைப்பெருங்கோயிலில் எழுநிலைக் கோபுரங்களைக் கட்டினான். சேக்கிழாரடிகள் பெரியபுராணம் பாடுதற்கு முன்னேயே தில்லைப் பெருங்கோயிலிலுள்ள எழு நிலைக் கோபுரங்கள் நான்கும் கட்டப்பெற்றிருந்தன என்பது,

'நீடுவான்பணிய உயர்ந்த பொன்வரைபோல் நிலையெழுகோபுரம்'

(பெரிய-தடுத்-109)

எனவும், "நிலையேழ் கோபுரம் முறையே கொடுதொழு துன்புக்கார்”

(௸.திருநாவுக்-194)

எனவும்,

“நீடு நீணிலைக் கோபுரத்துள் புக்கு"

(௸. திருஞான -158)

எனவும் வரும் சேக்கிழார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

தில்லையின் மேற்குக் கோபுரம் சுந்தரபாண்டியன் கோபுரம் எனக் கல்வெட்டுக்களிற் குறிக்கப்பெறினும் (தெ.இ.க தொகுதி IV எண் 628-30) அது அவனுக்கு முன் அரசாண்ட சோழர்களாலே கட்டப்பெற்றிருத்தல் வேண்டும் எனவும், அதனை மேலும் புதுப்பித்தவன் முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் எனவும் அவ்வாறே தில்லையின் தெற்குக்கோபுரத்தைப் புதுப்பித்துக் சொக்கசீயன் என்று பெயரிட்டவன் முதற்கோப்பெருஞ்சிங்கன் எனவும், வடக்குக்கோபுரத்தைப் பதுப்பித்தவர் கிருஷ்ண தேவராயர் எனவும் கொள்ள வேண்டியுள்ளது. இந்நான்கு கோபுரங்களின் அமைப்பும் இவற்றின் மேலுள்ள கருங்கற்சிற்பங்களின் வடிவ அமைப்பும் சிற்பத்தினை வடிந்த கற்களும் ஒரே தன்மையவாக அமைந்திருத்தலைக் கூர்ந்து நோக்குங்கால் இந் நான்கு கோபுரங்களும் சோழ மன்னர்களால் அமைக்கப்பெற்றுச் சேக்கிழார் காலத்திலேயே சிறந்து விளங்கின என்பது இனிது புலனாகும்.

"சுந்தர பாண்டியன் திருநிலை யெழு கோபுரச்சன்னதியில் சொக்கச்சீயன் குறளில், கீழ்ப்பக்கத்துக் கீழைமடஸ்தானமாகத் திருநோக்கழகியான் திருமடமென்னும் பேரால் செய்வித்த மடத்துக்கு மடசேஷமாக நாயகரும் நாச்சியாரும் எழுந்தருளும் நாள் ... எதிரிலிசோழன் திருநந்தவனத்துக்கு.” (தெ. இ: க , தொ. IV எண் 624) - எனவும் "ஸ்ரீகிருஷ்ணதேவமகாராயன் தன்மமாக ஸிம்ஹாத்திறை பொட்டுனூற்கு எழுந்தருளி ஜயஸ்தம்பம் நாட்டி திரும்பி பொன்னம்பலத்துக்கு எழுந்தருளி பொன்னம்பல நாதனையும் சேவித்து, வடக்குக் கோபுரம் கட்டி வித்தசேவை" (௸ எண் 623)

எனவும் வரும் கல்வெட்டுக்கள் சுந்தரபாண்டியன் கட்டியது மேலைக்கோபுரம் என்பதனையும் வடக்குக் கோபுரம் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பெற்றதென்பதனையும் குறித்துள்ளமை காணலாம்.

"இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத்திருமாளிகையில் நிலையெழுகோபரத் திருவாசல் புறவாசல் தென் பக்கத்து எழுந்தருளியிருந்து பூசைகொண்டருளுகிற குலோத்துங்கசோழ விநாயகர்" எனப்பாண்டியர் கல்வெட்டிற் குறிக்கப்பட்ட தல விநாயகர் மேலைக்கோபுரத்துடன் இணைந்துள்ள திருமேனியாதலால் அப்பெருமான் எழுந்தருளியுள்ள மேலைக்கோபுரம் குலோத்துங்க சோழனால் முதன் முதற் கட்டப்பெற்றதென்பது உயத்துணரப்படும்.

கி.பி.1178 முதல் 1218 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்தசோழ மன்னன் மூன்றாங்குலோத்துங்கன் ஆவன். இவன் தில்லையில் சிற்றம்பலத்திற்கு முன்னுள்ளதும் இப்பொழுது கனகசபையென வழங்கப் பெறுவதும் ஆகிய எதிரம்பலத்னதப் பொன்னினால் வேய்ந்தான். கூத்தப்பெருமானுக்குச் சித்திரைத்திங்களில் திருவிழா நிகழ ஏற்பாடு செய்தான். சிவகாமியம்மை திருக்கோயிலின் விமானமாகிய கோபுரத்தைப் பொன்னால் வேய்ந்தான். இவன் தில்லையிற்செய்த இத்திருப்பணிகள் "எத்தரையும் தொழும் இறைவற்கு எதிரம்பலம் செம்பொன் வேய்ந்து, சித்திரை விழா அமைத்து இறைவிதிருக்கோபுரம் செம்பொன் வேய்ந்து" எனவரும் இவனுடைய மெய்க்கீர்த்தியிற் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம். இங்கு எதிரம்பலம் என்றது சேக்கிழார் கூறும் பேரம்பலமே எனவும், எதிரம்பலம் பொன் வேய்ந்த மூன்றாங்குலோத்துங்கனே திருத்தொண்டர் புராணம் கூறும் பேரம்பலம் பொன் வேய்ந்த அநபாயன் எனவும், சேக்கிழாரை ஆதரித்துத் திருத் தொண்டர் புராணம் பாடு வித்தவன் இம்மூன்றாங் குலோத்துங்கனே எனவும் கூறுவர் ஆராய்ச்சியறிஞர் சதாசிவபண்டாரத்தார்.

"சபாபதியின் முன்னுள்ள, முகமண்டபத்தையும் மலைமகள் (சிவகாமியம்மை) கோயிலின் கோபுரத்தையும் சுற்றியுள்ள பிரகாரமாளிகைகளையும் அவ்வூர்ப் பெருமானிடத்தே இடையறாத பக்தி கொண்ட இவ்வரசன் பொன்மயமாக விளங்கும் படி நிர்மாணித்தான்." எனத் திரிபுவன வீரேச்சுரத் திருக்கோயிலில் வரையப்பட்டுள்ள வடமொழிக்கல்வெட்டும், இவ்வேந்தன் தில்லையிற் செய்த திருப்பணிகளைக் கூறியுள்ம்மமை காணலாம். இக்கல்வெட்டில் முகமண்டபம் என்றது, தில்லைச்சிற்றம்பலவர் திருமுன் கொடி மரத்தின் தென் திசையில் அமைந்துள்ள நிருத்தசபையெனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். இச் சபையானது குதிரைகள் பூட்டிய தேரின் அமைப்பினையுடைய தாயிருத்தலின் இது தேர் மண்டபம் எனவும் வழங்கப் பெறும். (சங்கற்ப நிராகரணம்), இம்மண்டபத்தின் தூண்கள் யாவும் இவ்வேந்தனால் தஞ்சை மாவட்டம் திரிபுவனத்தில் நிறுவப் பெற்ற திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள தூண்களின் அமைப்பினையுடையனவாக இருத்தலாலும் இவனது வழிபடு மூர்த்த மாகத் திரிபுவனத்திலுள்ள சரபமூர்த்தியின் திருமேனி இச்சபையிலும் இருத்தலாலும் இம்மண்டபத்தின் வடபுறத்து அடிப் பட்டியலில் கூத்தப்பெருமானை நோக்கிக் கும்பிடும் நிலையில் இவனது உருவப் படிவம் நேரே அமைக்கப் பெற்றிருத்தலாலும் நன்கு விளங்கும். சிறிய அளவில் இச்சபையில் உள்ள இவ்வேந்தனது கருங்கற் படிவமும் திரிபுவன வீரேச்சுர விமானத்தில் உள்ள இவனது சுதைப்படிவமும் ஒன்றாயிருத்தலால் இந் நிருத்தசபையைக் கட்டியவன் திரிபு வீரேச்சுரத் திருக்கோயிலை நிறுவிய மூன்றாங் குலோத்துங்க சோழனே என்பது நன்கு தெளியப்படும்.

தில்லையில் திருமாளிகைப் பத்தியுடன் கூடிய மூன்றாம் பிராகாரம் இராஜாக்கள் தம்பிரான் என்னும் சிறப்புப் பெயரினையுடைய மூன்றாங் குலோத்துங்கனால் அமைக்கப் பெற்றதாகும். அதுபற்றியே இது இராசாக்கள் தம்பிரான் திருமாளிகையென கல்வெட்டில் வழங்கப் பெறுகின்றது. சேரபாண்டிய மண்டலமாகிய பாண்டி நாட்டை இவ்வேந்தன் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் திறையாகப் பெற்ற பசும்பொன்னும் விளை நிலங்களும் ஆகியவற்றைப் பெரும்பற்றப்புலியூர் தில்லையம்பலத்திலே ஆடல் புரியும் கூத்தப் பெருமானுடன் இருந்து அம் முதல்வனது அருள் நடனங்கண்டருளும் சிலகாமியம்மைக்கும் திருவாரூர்ப்பெருமானுக்கும் திரிபுவன வீரேச்சுரத்து இறைவனுக்கும் மதுரைத்திருவாலவாய் இறைவனுக்கும் கொடுத்து மகிழ்ந்தான். இச்செய்தி,

'சிறை கொண்ட புனல் வையைச் சேர பாண்டிய மண்டலத்து
இறை கொண்ட பகம் பொன்னும் இறையிலியு மெயிற்புலியூர்
ஆடும் அம்பலவாணர் கூடி வாய்ந்த திருநடங் கண்டருளும்
பாடகக்காற் பைங்கிளிக்கும் பைம்பொன் மதிள் திருவாரூர்
வானவற்கும் திரிபுவன வீரீச்சுர அருந்தவற்கும்
தேன்விரிசடைத் திருவாலவாய்ச் செழுஞ்சுடர்க்குங்

கொடுத்தருளி'

எனவரும் இவ்வேந்தனது யெய்ச்சீர்த்தியால் அறியப்படும்.

இவ்வேந்தனது முப்பத்தாறாவது ஆட்சியாண்டில் தில்லைச் சிற்றம்பலத்தில் திரு அணுக்கன் திருவாயிலை ஒட்டி, அமைந்த கனக சபையாகிய எதிரம்பலத்தின் அடிப்பீடமாகிய குறடு இவ்வேந்தனால் பொற்றகடு போர்த்தப் பெற்றது. பொற்றகடு போர்த்துவதற்குமுன் அக்குறட்டில் வரையப் பெற்றிருந்த கல்வெட்டு படியெடுக்கப் பெற்று இரண்டாம் பிரகாரத்தினையொட்டிய வாயிலாகிய குலோத்துங்க சோழன் திருமாளிகைப் புறவாயில் வடபக்கத்திற் பொறிக்கப்பட்டது. முதற் குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாவது ஆண்டில் அவ்வேந்தனுடைய தங்கையார் மதுராந்தகி ஆழ்வார் திருச்சிற்றம்பல முடையார்க்குத் திருநந்தவனமாகவும்; ஸ்ரீ மாகேஸ்வரர்க்குத் திருவமுது செய்ய மடப்புறமாகவும் நிலமளித்த செய்தியினைக் கூறுவது இக்கல்வெட்டாகும்.

தில்லைப் பெருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தை இராசாக்கள் தம்பிரான் திருமாளிகை எனத் தன் பெயரால் அமைத்த மூன்றாங் குலோத்துங்க சோழன் அத்திருச்சுற்றின் மேலைப் பிராகாரத்தில் தன் முன்னோர் நிறுவிய சிலகாமியம்மை திருக் கோயிலுக்குத் திருப்பணி செய்ததோடு அதனையடுத்துள்ள முருகப்பெருமான் திருக்கோயிலாகிய பாண்டிய நாயகத் திருக்கோயிலையும் நிருத்தசபையினைப் போன்று பெரிய தேர்மண்டபமாக அமைத்துள்ளான் எனக் கருத வேண்டியுள்ளது. தில்லைக்கோயிலில் அண்டமுற நிமிர்ந்தாடும் கூத்தப் பெருமானுக்கு அமைக்கப்பெற்துள்ள நிருத்தசபையிலும் அறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானையுடன் அமர்ந்தருளிய பாண்டியநாயகத்திலும் அமைந்துள்ள தூண்கள் மூன்றாங் குலோத்துங்கனால் நிறுவப்பெற்றுள்ள திரிபுவன வீரேச்சுரத்தில் உள்ள துண்களை யொத்த அமைப்புடையனவாகவும், இம் மண்டபங்களிலுள்ள சிற்ப அனமப்புகள் ஒரு காலத்தனவாகவும் காணப்படுவதாலும் இலை தமிழகத்தை நாற்பது ஆண்டுகள் நலம்பெற ஆட்சிபுரிந்த மூன்நாங்குலோத்துங்கனால் அமைக்கப் பெற்றனவே எனக் கருத வேண்டியுள்ளது. இவ்வேந்தன் பாண்டியர்களை வென்று பாண்டி மண்டலத்திற்குச் சோழ பாண்டிய மண்டலம் எனவும், மதுரைமாநகர்க்கு முடித்தலை கொண்ட சோழபுரம் எனவும், மதுரையரண்மனையிலுள்ள கொலுமண்டபத்திற்குச் சேர பாண்டியர் தம்பிரான் எனவும் தன் பெயர்களை வழங்கியுள்ளான் அவ்வாறே இத்தில்லைப் பதியில் பாண்டியர்தம் பிரானாகிய மூன்றாங் குவோத்துங்கனாற்கட்டப் பெற்ற முருகன் கோயிலும் பாண்டிய நாயகம் என வழங்கப் பெறுவதாயிற்று எனத்தெரிகிறது. தில்லைத் திருக்கோயிலிற் சேக்கிழார் பெருமான் அமர்ந்து திருத்தொண்டர் புராணத்தை இயற்றுதற்கும், உரைவிரித்தற்கும் இடமாக விளங்கியது ஆயிரக்கால் மண்டபமாகும். இது மூன்றாங் குலோத்துங்கனாகிய, இவ்வேந்தனாற் கட்டப் பெற்றிருத்தல் வேண்டும். என்பது ஆராய்ச்சியறிஞர் சதாசிவ பண்டாரத்தார் துணிபாகும்.

முதல் குலோத்துங்க சோழனது நாற்பத்தாறாம் ஆட்சியாண்டில் மிழலைநாட்டு வேளாண்மை கொண்ட கண்டன் மாதவன் என்பான் தில்லையம்பலத்தின் வடகீழ்த்திசையில் புராண நூல் விரிக்கும் புரிசைமளிகையினை அமைத்தான் என்ற செய்தி முன்னர்க் கூறப்பட்டது, அப்புராணமண்டபத்தினை ஆயிர்க்கால் மண்டபமாக விரிவுபடுத்தியவன் மூன்றாங் குலோத்துங்க சோழன் எனக்கருதுதல் பொருத்தமுடையதாகும். ஆயிரக் கால் மண்டபம் கட்டும் வழக்கம் இவன் காலத்தில், தான் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம் தேவாசிரியன் என வழங்கப்பெறுகின்றது. இம் மண்டபம் மூன்றாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டதென்பது, திரிபுவன வீரேச்சுரத்திலுள்ள வடமொழிக்கல்வெட்டால் அறியப்படும். இவ்வேந்தனது படைத் தலைவனாகிய கண்டர் சூரியன் சம்புவராயன் என்பான் திருவக்கரையிலுள்ள சிவன் கோயிலில் சூரியன் திருக்கோபுரமும் கண்டர் சூரியன் என்ற ஆயிரக்கால் மண்டபமும் ஆகியவற்றைக் கட்டியுள்ளான். எனவே தில்லையிலுள்ள ஆயிரக்கால் மண்டபமும் இவ்வேந்தன் காலத்திலேயே கட்டப்பெற்றிருத்தல் வேண்டும். இவ்வாயிரக்கால் மண்டபத்திலேயே சேக்கிழார் நாயனார் தாம்பாடிய திருத்தொண்டர் புராணத்திற்கு உரை விரித்தருளினார் என்பது உமாபதி சிவாசாரியார் இயற்றிய சேக்கிழார் புராணத்தால் அறியப்படும்.

2. பாண்டியர்

கி.பி. 1251-71 முடிசூடிய முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பான் பலநாடுகளை வென்றமையால் மகாரா சாதி ராசபரமேசுவரன், எம் மண்டலமுங் கொண்டருளியவன் எல்லாந் தலையான பெருமாள் எனப் பல பட்டங்களைப் புனைந்து கொண்டான். இல்வேந்தர் பெருமான் சைவர்களால் கோயில் எனப் போற்றப்பெறும் தில்லைப் பெருங் கோயிலுக்கும், வைணவர்களால் கோயில் எனப்போற்றப்பெறும் திருவரங்கம் பெரிய கோயிலுக்கும் பலதிருப்பணிகளைப் புரிந்துள்ளான். இவன் தில்லையிற் கூத்தப்பெருமானை வணங்கிப் பல துலாபாரதானங்கள் செய்தான். தில்லையம்பலத்தைப் பொன் வேய்ந்தான். தில்லைத் திருக் கோயிலின் மேலைக் கோபுரம் 'சுந்தர பாண்டியன் திருநிலை எழுகோபுரம்' என்னும் பெயரால் (தெ. இ. சு. தொகுதி 4-6.24} கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே இக்கோபுரத்தைப் பழுது பார்த்துப் பதுக்கியவன் இப்பாண்டிய மன்னன் என்பது நன்கு புலனாகும். இவன் தான் துலாபாரம் புக்க பொன்னைக் கொண்டு, தில்லைக் கோயிலுக்குப் பொன் வேய்ந்துள்ளான்.

இது பற்றியே இவ்வேந்தன் "கோயில் பொன்வேய்ந்த பெருமாள்" எனப் போற்றப் பெற்றனன். இச்செய்தி,

"வாழ்க கோயில் பொன் வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர மன்னவன் தென்னனே"

(தொகுதி IV 455)

எனத் திருப்புட்குழி திருமால் கோயிலில் வரையப்பெற்றுள்ள கல்வெட்டுப் பாடலாற் புலனாகும். இப்பாடலிற் "கோயில்" என்றது தில்லைப் பெருங் கோயிலையும், திருவரங்கம் பெரிய கோயிலையும். இங்ஙனம் தில்லையிலும் திருவரங்கத்திலுமுள்ள திருக்கோயில்களைப் பொன் வேய்ந்தமை பற்றிக் “கோயில் பொன் வேய்ந்த பெருமாள்” என இவன் போற்றப் பெற்றனன் எனத் தெரிகிறது. (கல்வெட்டு, ஆண்டறிக்கை 1936-37)

சினவரிக் கிம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட்
சினமத வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லை மன்றில்
வனசத் திருவுடன் செஞ்சொற்றிருவை மணந்ததாக்கும் கனகத்துலையுடன் முத்துத்துலையிற் கலந்ததுவே.

(தொகுதி IV 620)

எனவரும் பாடல் இவன் தில்லையில் துலாபாரம் புக்க செய்தியை யுணர்த்தும். இவனது பதினோராம் ஆட்சியாண்டில் நந்தவனத்துக்குரிய வரி நீக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் திருத்தோப்பு, சுந்தர பாண்டியன் தெற்குத் திருவீதி இவற்றின் வளர்ச்சிக்காகவும் குடிகள் வாழ்வுக்காகவும் நிலம் அளித்துள்ளான். (S. 1. 1. 546-18) திருமூலட்டானமுடையார்க்குத் திருவுருத்திரம் அத்தியயனம் பண்ண நிலம் அளித்துள்ளான் (A.R. Vol. VI 631). இவனது ஆட்சிக் காலத்தில் 1253 முதல் 1268 வரை சோழநாடு நடுநாடு தொண்டை நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாயிருந்து ஆண்டவன் சடையவர்மன் வீரபாண்டியன் ஆவான். இவன் பல்லவ அரசனாகிய இரண்டாங் கோப்பெருஞ் சிங்கனிடம் திறை கொண்டு தில்லையில் - வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டான். இச்செய்தி

"திங்கள் அரவமுஞ் செழுமலர்த் தாருடன்
பொங்குபுனற் செஞ்சடையோன் பொற்புலியூர் வீற்றிருந்து
காடவன் திறையிடக் கண்டினிதிருந்து
வீராபிஷேகமும் விசயாபிஷேகமும் பண்ணியருளிய"

ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு '(புதுக்கோட்டைக் கல்வெட்டுத் தொகுதி 370-372)' என வரும் இவனது மெய்க் கீர்த்தித் தொடரால் இனிது புலனாகும்.

3. பல்லவர்

சிம்மவர்மன் முதலிய முற்காலப் பல்லவர்களின் கல்வெட்டுக்கள் தில்லையிற் கிடைக்கவில்லை. சோழமன்னர்களுக்குப் படைத்தலைவர்களாயிருந்து பின்னர்த் தனியரசு நடத்திய பிற்காலப் பல்லவர்களின் திருப்பணிகளே இக்கோயிற் கல்வெட்டுக்களில் காணப்பெறுகின்றன.

காடவராய மன்னர்களில் மிகவும் சிறப்புடன் விளங்கியவர்கள் சாடும் பெருமானான முதலாவது கோப்பெருஞ்சிங்கனும் அவன் மகன் வாள்வல்ல பெருமாளான இரண்டாவது கோப் பெருஞ்சிங்கனும் ஆவர். இருவரும் சகலபுவனச் சக்கரவர்த்தி, அவனியாளப் பிறந்தான் என்ற பட்டங்களைப் பெற்றிருந்தனர். முதலாவது கோப்பெருஞ்சிங்கன் சோழர் குல இளவரசியைத் திருமணம் புரிந்தவன். அதனால் மணவாளப் பெருமாள் எனப் போற்றப் பெற்றான்.

முதலாவது கோப்பெருஞ்சிங்கன் தன் ஆட்சியின் மூன்றாவது, நான்காவது ஆண்டுகளில் தில்லைக் கோயிலின் பால் நெய் தேவைகளுக்காக ஆயிரத்து எண்பத்தாறு பசுக்களை ரிஷப, சூல முத்திரையுடன் அளித்தான் (S.TIV.ol VII.No 54}. இது இவன் மகனின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1237-இல் இவன் தில்லைக் கோயிலின் தெற்குக் கோபுரம் கட்டுவதற்காகத் தொண்டை மண்டலத்து ஆற்றூரில் முந்தாற்று ஒன்றே முக்கால் வேலி நில வருவாயையும் பிறவரிகள் சிலவற்றிலிருந்து கிடைக்கும் பொருளையும், அளித்துள்ளான். (S. I. I, Vol No. 51). இச்செய்தியைத் தில்லைக் கோயிலிலும், ஆற்றூர் முத்தீஸ்வரர் கோயிலிலும், காஞ்சி ஏகம்பமுடையார் கோயிலிலும் கல்லில் செதுக்கி வைத்தான். இவனால் கட்டப்பட்ட தெற்குக் கோபுரம், "சொக்கச்சீயன் திருநிலை எழுகோபுரத் திருவாசல்" என்ற பெயருடன் விளங்கியது. சொக்கச்சீயன் என்பது முதலாவது கோப்பெருஞ் சிங்கனுடைய விருதுப் பெயராகும். இவன் தனது 15-ஆவது ஆட்சியாண்டில் தில்லைக் கோயிலுக்காக வேசாலிப் பாடிப் பற்றுப் பூவாலையில் 'சொக்கச் சீயன் கமுகு திருநந்தவனம்' எனத் தன் பெயரால் ஒரு நந்தவனம் அமைத்தான், (S. I. 1. Vol. VIII No. 55). இவ்வறக்கட்டளையை இவன் மகனுடைய மூன்றாவது ஆண்டுக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது (S.I. I. Vol. VIII. No. 53)

வாள்வல்ல பெருமாளான இரண்டாவது கோப்பெருஞ் சிங்கன் தில்லைக் கோயிலில் அளவிலா ஈடுபாடுடையவன். இவனுடைய ஆற்றூர்க் கவ்வெட்டு இவனைக் 'கனக சபாபதி சபா சர்வகார்ய சர்வகால நிர்வாகன்' (S, I, I. Vol, XII -No. 120) என்றும், திரிபுராந்தகக் கல்வெட்டு 'கனகசபாபதி நாத சரணாரவிந்த மதுகரமானவன்' (S. I, 1. Vol. XII, No 247) என்றும் குறிக்கின்றன. இவனது மூன்றாவது ஆட்சியாண்டில் சிதம்பரத்தின் மேல் பிடாகையான விக்கிரம சிங்கபுரத்து மேற்புறத்தில் தில்லைக் கோயிலின் தேவைக்கான பழங்கள் காய்கள் முதலியவைகளைப் பெற 'ஆளியார் திருத்தோப்பு' என்னும் திருத்தோப்பு அமைக்கப்பட்டது. (S. 1. I. Vol. VII. No. 53). அதில் பணிபுரிவோருக்குச் சொக்கச் சீயன் திருநந்தவனக் குடிகளுக்கு அளிக்கப்பட்ட ஊதியத்தைப் போன்று அளிக்க இக்காடவன் ஏற்பாடு செய்தான். அதேயாண்டில் இவன் தில்லைக் கோயிலுக்கு நானூற்றுப்பத்துப் பசுக்களை விட்டான். (S 1. 1. Vol. VIII, No. 54) இதைக் கூறும் கல்வெட்டு இவன் தந்தை விட்ட பசுக்களையும் குறிப்பிடுகிறது. கி. பி. 1251-இல் இவன் கடவாச்சேரி என்று தற்பொழுது அழைக்கப்படும் தில்லை நாயக நல்லூரில் சாலியர் (நெசவாளர்) சிலரைக் குடியமர்த்தி அவர்கள் திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார்க்குச் சாத்தும் பரிசட்டத்தை அளிக்க ஏற்பாடு செய்ததுடன் தில்லை நாயக நல்லூருக்குத் 'திருவம்பலப் பெருமாள் புரம்' என்ற புதிய பெயரையும் சூட்டினான். (S.II. Vol. XII. No. 154). அடுத்த ஆண்டில் இவன் தில்லைக் கோயிலுக்குரிய மூன்று திருநந்தவனங்களின் பராமரிப்பிற்காகச் சில நிலங்களை அளித்தான். (ibid No. 154). இவன் காலத்தில்தான் தில்லைக் காளி கோயில் சுற்றளியாக எடுக்கப்பட்டது. இவனது 8-ஆம் ஆண்டுக் கல்வெட்டு அக்கோயில் திருப்பணி நடைபெற்று வந்ததைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. (SI.1 Vol. VIII. No. 717). இவனது பத்தாவது ஆட்சியாண்டில் அத்திருப்பணி முடிவுற்றிருத்தல் வேண்டும். (S. I. I, Vol, XII No. 159). இதற்கு முன்னர்த் தில்லைக்காளி 'தில்லைவனமுடைய பரமேஸ்வரி' எனவும், பின்னர் பிடாரியார் 'திருச்சிற்றம்பல மாகாளி' எனவும் அழைக்கப் பட்டதைக் கல்வெட்டுக்களிலிருந்து அறிகின்றோம். இக்காளி கோயில் தற்பொழுது பள்ளிப் படை என்றழைக்கப்படும் விக்கிரம சோழ நல்லூரின் எல்லைக் குட்பட்டிருக்கின்றது. தில்லைக் கோயிலின் கிழக்குக்கோபுரம் இவனால் கட்டப்பட்டதை இவனுடைய திரிபுராந்தகக் கல்வெட்டிலிருந்து அறிகிறோம். (S. I. I. Vol. XII No. 247). நான்கு திக்கிலும் மிருந்த வேந்தர்களை வென்று, அவர் செல்வத்தைக் கவர்ந்து, துலாபாரம் நடத்தி, அப்பொன்னால் மேருமலையைப் போன்ற கிழக்குக் கோபுரத்தைத் தன் பெயரால் இக்காடவன் எடுப்பித்தான். இக்கோபுரத்தின் நான்கு பக்கங்களையும் இவன் ஒளிமயமாக நிர்மாணித்துக் கும்பாபிஷேகத்தைச் செய்தான், இத்திருப்பணி கி.பி. 1262-ஆம் ஆண்டிற்குள் நடைபெற்றிருத்தல் வேண்டும். மேற் கூறிய திரிபுராந்தகக் கல்வெட்டில் தெற்குக் கோபுரத்தைப்பற்றிய குறிப்பு எதுவும் இல்லாதது கவனிக்கத் தக்கது. ஒரே பெயரில் விளங்கிய தந்தையும் மகனும் முறையே தெற்குக் கோபுரத்தையும் கிழக்குக் கோபுரத்தையும் கட்டினார்கள் என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. இருவரும் தில்லைக் கோயிலுக்கும், திருக்களாஞ் செடியுடையார் கோயிலுக்கும் தனிப்பட்டோர் பலர் அளித்த நிலங்களுக்கு வரிவிலக்குச் செய்துள்ளார்கள்.

முதலாவது கோப்பெருஞ் சிங்கனும் அவன் மகனும் நாட்டியக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இருவரும் 'பரதம் வல்ல பெருமாள்' என்ற விருதுப் பெயரைக் கொண்டிருந்தனர். (S.I.l. Vol. VIII. No. 69). இரண்டாவது கோப்பெருஞ்சிங்கனை அவனுடைய ஆற்றூர்க் கல்வெட்டு 'பரதமல்லன்' என்றும் (S, 1, 1, Vol, VII. No. 120}, திரிபுராந்தகக் கல்வெட்டு 'சாகித்ய ரத்னாகரன்' {ibid No. 247), என்றும் அழைக்கின்றன. தில்லைக் கோயிலின் தெற்கு கிழக்குக் கோபுரங்களின் திருவாசல் உட்புறச் சுவரில் பரதநாட்டிய முத்திரைகள் செதுக்கப்பட்டிருப்பது மேற்கூறிய கல்வெட்டுச் சான்றினை உறுதிப் படுத்துகின்றது.

4. சேரமன்னர் : சகம் 1498 (கி. பி. 1576)-இல் சேரமான் பெருமாள் குடியில் தோன்றிய கொச்சி இராமவர்ம மகாராஜா ஆனந்த தாண்டவ மாகேசுரர்களுக்கும், அந்தணர்களுக்கும், பரிசாரகர்களுக்கும் நாள்தோறும் 33 தளிகையளிக்க நிபந்தம் அளித்துள்ளார்.

5. விசயநகர மன்னர்
மகாதேவராயர் II

இவர் கி.பி. 1428-இல் தேவத்தான நிர்வாக ஊழல்களைத் திருத்தினார். அதிகவரி வசூலிப்பினால் குடிகள் கிராமங்களை விட்டு ஓடிப்போயினர். அதனால் வருமானம் குறைந்தமையால் சிதம்பரம் கோயில் பூசை தடைப்பட்டது. ஓடிப் போன குடிகளை மீண்டும் அழைத்துக் கிராமங்களை வளப்படுத்திக் கோயில் நிர்வாகத்தைச் செப்பஞ் செய்தார். {376-1913).

திம்மராயர்:

வீரப்பிரதாப திம்மராயராகிய இவர் சகம் 1425 (கி.பி. 1503} இல் சுவாமி, அம்பாளுக்கு இரட்டை மாலை சாத்தப் பெரும்பற்றப் புலியூர்க்கு மேற்கேயுள்ள காரிகுடி கிராமத்தை அளித்துள்ளார்.

கிருஷ்ணதேவராயர்

சகம் 1432 (கி.பி. 1510) இல் அழகிய சிற்றம்பல முடையார்க்கு மகாபூசை நிகழவும் அடியார்களுக்கு அமுது வழங்கவும் ஏற்பாடு செய்தார். சகம் 1433 (கி.பி. 1511) இல் சிதம்பர நாதபுரம் என்ற கிராமத்தைக் கோயிலுக்குச் சர்வமானியமாக அளித்தார். சகம் 1431 (கி. பி. 1509) இல் சிம்மஹாத்திரை பொட்டனூருக்குச் சென்று வென்று வடக்குக் கோபுரத்தைக் கட்டினார். (S. 1, 1 of 13) (S.1.1, Vol. IV 622).

அச்சுததேவராயர்:

இவர் திருமால் மூர்த்தத்தை மீண்டும் தில்லைக் கோயிலில் பிரதிட்டை செய்து வைகானச விதிப்படி பூசை நிகழ 5000 பொன் கொடுத்துள்ளார்.

சைவ, வைணவ வேற்றுமையில்லா இவர். சகம் 1451 (கி.பி 1529)-இல் கூத்தப் பெருமான் தேர்விழாவிற்காக 64, கிராமங்களையும், வடக்குக் கோபுரத் திருப்பணிக்காக 38 கிராமங்களையும் சர்வ மானியமாகக் கொடுத்துள்ளார். (Oriental Research Vol. 12. P. 169-178).

வேங்கட தேவராயர்

சகம் 1500 (கி.பி. 1578) சிவகாம சுந்தரியம்மைக்குத் திருவனந்தல் பூசைக்காகக் கிராமங்களை அளித்தார். சகம் 1506 {சி.பி. 1613}-இல் 300 பொன் கொடுத்து ஏழைகளுக்கு நாள்தோறும் 20 கட்டிச் சோறு அளிக்கும்படி ஏற்பாடு செய்தார். 5000 சலம் நெல் வருவாயுள்ள கிராமத்தையளித்து நாள் தோறும் துறவிகளுக்கு 30 கட்டிச் சோறு அளிக்க ஏற்பாடு செய்தார், (S. 1. 1. 346, 347-13) சகம் 1586 {கி.பி. 1664)- இல் சிதம்பரத்தில் இருந்த நமசிவாய உடையார் மேற்பார்வையில் இருபது கட்டிச் சோறு கொடுக்க நிபந்தம் அளித்துள்ளார். இங்குக் குறித்த நமசிவாய உடையார் என்பவர் குருநமசிவாயராக இருத்தல் கூடுமோ என்று ஐயுறுவர் சிலர். இவருடைய கல்வெட்டுக்கள் சிதம்பரம் கோயிலில் 12-உள்ளன. இவற்றுள் பெரும்பாலன அன்னம் பாலிப்புப் பற்றியன.

ஸ்ரீரங்கராயர் II

இவர் சகம 1503 (கி.பி. 1581-இல் மிளகுத் தரகு வருமானங் கொண்டு சிற்றம்பலவர்க்கு அபிஷேகம் செய்யவும், சகம் 1517 (கி.பி. 1595) இல் சிவகாமசுந்தரி ஐப்பசி பூரவிழாக் கொண்டருளவும் புறப்பேட்டை ஊரைத் தேவத்சனமாகக் கொடுத்துள்ளார். சகம் 1503 (கி.பி. 1581) - இல் ஏழு கிராமங்களின் வருமானத்தைக் கொண்டும், மிளகுத்தரகைக் கொண்டும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை விழாச் செலவுகள் நடத்திவர ஏற்பாடு செய்துள்ளார்.


ஸ்ரீரங்கராயர் VI:

இவர் சகம் 1565 இல் தில்லைத் திருச்சித்திர கூடத்தில் கோவிந்தராசப் பெருமாள் முன் மண்டபத்தைப் பழுது பார்த்தார். புண்டரீகவல்லித் தாயார், சூடிக்கொடுத்த நாச்சியார் விமானங்களும் பழுதுபார்க்கப் பெற்றன. இவர்காலத்தில் ஆடூர், கருங்குழி, குரியாமங்கலம், மதுராந்தக நல்லூர், உடையூர் முதலிய கிராமங்களுக்குத் தீர்வை தள்ளுபடி செய்யப்பட்டது. இது நிகழ்ந்த காலம் 2.2.1644 என்று எல்.டி. சாமிக் கண்ணுப் பிள்ளையவர்கள் கணக்கிட்டுள்ளார்.


வீரபூபதிராயர்:


இவர் நிருத்தநாதன் (கூத்தப்பிரான்) திருமுன் விளக்குக்காக தனது அரசியல் பிரதானி செண்டப்பராசா ஆதித்த ராஜாவைக் கொண்டு 64 பசுக்கள் அளித்துள்ளார். இவர் காலம் புக்கா II காலமாக இருக்கலாம் என்று எபிகிராபிகா (1909 பக் 115) ஆண்டறிக்கை கூறும்


6. நாயக்க மன்னர்கள்:

நாகமநாயக்கர்:

மதுரையில் நாயக்கர் ஆட்சியை நிறுவிய விசுவநாத நாயக்கர் தந்தை நாகம நாயக்கர் சிதம்பரத்தில் ஒரு சரக்கறையை விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு அளித்துள்ளார். முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர்:-

இவர் (சிதம்பரத்தில் கோவித்தராசப் பெருமாளை மீளவும் பிரதிட்சை செய்த) வையப்ப கிருஷ்ணப்ப கொண்டப்பு நாயக்கர் மகனாவார். இவர் சகம் 1520 (கி.பி. 1598)-இல் ஆடிப் பதினெட்டாம் பெருக்கின் போது கொள்ளிடத்தில் கூத்தப் பிரான் தீர்த்தங் கொடுத்தருளுதற்காகக் கொள்ளிடத்தின வட கரையில் தீர்த்த மண்டபம் கட்டியுள்ளார்.

7. மராட்டிய மன்னர்
சாம்போஜி:-

சிவாஜியின் முதல் மைந்தராகிய இவர் செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு கொள்ளிடத்தின் வடபகுதியை ஆண்டவர். ஏறக்குறைய 38 ஆண்டுகள் குடுமியா மலையிலும், மதுரையிலும் பாதுகாப்பாக வைக்கப் பெற்றிருந்த நடராசப் பெருமானுடைய திருவுருவம் இவர்காலத்தில் தில்லைச் சிற்றம்பலத்திற்குக் கொண்டு வரப்பெற்றது. கி. பி. 1684-இல் செப்புத் தகடு வேயப்பெற்றுக் குடமுழுக்கு நிகழ்ந்தது. கி. பி. 1686-இல் பொன்வேய்ந்து மீண்டும் குடமுழக்கு நிகழ்த்தப்பெற்றது. தில்லைப் பெருங்கோயில் திருப்பணியை இவருடைய அதிகாரி 'கோபாலதாதாஜி' என்பவர் கண்காணித்து நிறைவேற்றினார். தில்லைச்சிற்றம்பலத் தவமுனிவர் என்பார் தில்லைக் கோயிலில் நடராசப்பெருமான் மீண்டும் எழுந்தருள உதவி புரிந்தார். அரசருடைய குலகுருவாகிய முத்தையா தீட்சதர் என் பலர் கும்பாபிஷேகத்தை முன்நின்று நடத்திவைத்தார். இவர் செய்த திருப்பணிகள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தால் வெளியிடப் பெற்ற 'தஞ்சைமராட்டியர் செப்பேடுகள்-50' என்னும் நூலில் 45 முதல் 48 வரை எண்ணிடப் பெற்ற திருவாரூர்ச் செப்பேடுகளில் எடுத்துரைக்கப்பெற்றன.

மகமதியர் படையெடுப்புக்காலத்தில் ஹைதர் அலி இக் கோயிலைப் பாசறையாகக்கொண்டமையாலும், கி.பி. 1749-இல் படைத்தலைவன் கோப் என்பவன் தேவிகோட்டைக்குப் புறங்காட்டி ஓடிவரும்போது தில்லைக்கோயிலைத் தனக்கு அரணாகக் கொண்டமையாலும், கி.பி. 1753-இல் பிரஞ்சுக்காரர் புவனகிரியைக் கைப்பற்றித் தில்லைக்கோயிலை அரணாகக் கொண்டு ஆங்கிலேயரைப் புறங்காட்டி யோடச்செய்தமையாலும் கி.பி. 1780-இல் நிகழ்ந்த மைசூர்யுத்தத்தில் ஸ்ர் ஹயர்வுட் என்பவர் இக்கோயிலைப் படை தங்கும் இடமாகக் கொண்டு எதிரியைத் தாக்கினமையா லும் சைவர்க்குத் தலைமைக் கோயிலாகவுள்ள இத் தில்லைப் பெருங்கோயிலானது பலவேறு இடிபாடுகளையடைந்தது. அழகிய சிற்பங்கள் அழிவுற்றன ஆங்கிலேயர் ஆட்சி இந் நாட்டில் நிலை பெற்ற பின்னரே இப்பெருங்கோயிலில் அமைதியான முறையில் நாட்பூசனையும் திருவிழாக்களும் முன்போலத் தொடர்ந்து நிகழ்வனவாயின.

காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியார் திருப்பணி

சிவநெறிச் செல்வராகிய இவர், தமிழகத்திற் சிறப்புடைய கோயில்கள் சிலவற்றுக்கு நிபந்தம் அளித்துள்ளார். தில்லைப் பதியிற் பலநாட்கள் தங்கியிருந்து நடராசப்பெருமானை வழி பட்டு நாட்பூசனைக்கும் திருவிழாக்களுக்கும் அறக்கட்டளை நிறுவியுள்ளார். தில்லைப் பெருங்கோயிலின் கிழக்குக் கோபுரத்தைப் பழுது பார்த்துத் திருப்பணி செய்துள்ளார்.

நகரத்தார் திருப்பணி

சைவமும் தமிழும் வளர்த்த தனவணிகச் செல்வர்களாகிய நகரத்தார் சார்பில் தில்லை நடராசப் பெருமான் திருக்கோயில் சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விரிவான முறையில் திருப்பணி செய்யப் பெற்றது. தில்லையின் எல்லையில் அண்ணாமலைப்பல்கலைக்கழகம் நிறுவிய பெருங்கொடை வள்ளல் செட்டிநாட்டரசர் ராஜா சர் மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்களுடைய தந்தையார் சா. ராம முத்தைய செட்டியர்வர்கள் தில்லைப் பெருங்கோயிலின் முதற்பிராகாரத்தின் திருமாளிகைப்பத்தியினைப் புதுப்பித்தும், திருமூலட்டானே சுவரர் திருக்கோயிலையும் உமையபார்வதி திருக்கோயிலையும் புதுப்பித்தும்,இரண்டாம் பிராகாரத்தையொட்டி அணிவெட்டிக்கால் மண்டபங்களைக் கட்டியும், தில்லைப் பொன்னம்பலத்தை மேலும் பொலிவுறச் செய்தும் கி.பி. 1891-ஆம் ஆண்டில் குட முழுககு விழாவைச் சிறப்புற நிகழ்த்தினார்கள். இவர்கட்குப்பின் இவர்தம் மைந்தர் ராஜா சர். மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள், இக்கோயிலின் சைவவைணவ வேறுபாடு அகலத் தில்லைக் கோவிந்தராசப் பெருமாள் கோயிலைத்திருப்பணி செய்து நடராசர் சந்நிதியிலும் கோவித்தராசர் சந்நிதியிலும் முன்மண்டபங்களைக் கட்டி கி.பி. 1934-ஆம் ஆண்டு தில்லைக் கோவிந்தராசப் பெருமாளுக் குக் குடமுழுக்கு விழாச் செய்தார்கள்.

சீர்காழி சபாநாயக முதலியார் திருப்பணி

சீர்காழி பெருநிலக்கிழாராகிய இவர், தில்லையிற் கனக சபையில் நாள்தோறும் சந்திரமெளலீஸ்வரர்க்கும் இரத்தன சபாபதிக்கும் நிகழ்ந்துவரும் திருமஞ்சனத்தை அன்பர்கள் இருந்து தரிசிப்பதற்கு வசதியாகக் கனகசபையின் கிழக்கே தேக்குமரக்கூரையில் செப்புத்தகடு வேய்ந்த தரிசனமன்றத்தை அமைத்தார்கள். இத்திருப்பணியை இவர்கட்குப்பின் சிதம்பர நாத முதலியார் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

இக்காலத்திருப்பணி

இவ்விருபதாம் நூற்றாண்டில் ஆடுர் பெருநிலக்கிழார் தரும பூஷணம் M. இரத்தினசபாபதிப்பிள்ளையவர்களும், சிதம்பரம் அணிகலவணிகர் தருமபூஷணம் செ. இரத்தினசாமிச் செட்டியார் அவர்களும் சேர்ந்து ரூபா மூன்று இலட்சத்திற்கு மேல் செலவுசெய்து தில்லைச் சிற்சபையினையும் கனகசபையினையும் திருப்பணி செய்து 1955-ஆம் ஆண்டில் குடமுழுக்கு விழாவைச் சிறப்புற நிகழ்த்தினர்.

பின்னர் ஆடூர் பெருநிலக்கிழார் தரும பூஷணம் M. இரத்தினசபாபதிப்பிள்ளையவர்களால் ஆயிரக்கால்மண்டபத் திருப்பணி தொடங்கிச் செய்யப்பெற்றது. அவர்களுக்குப்பின் அவர்கள் பெயரால் நிறுவப்பட்ட அறக்கட்டளையின் சார்பில் பழுது பார்த்து இரும்புக்கம்பிகளால் சுற்றிலும் வசியமைக்கப் பெற்றுத் திருப்பணி இனிது நிறை வேறியது.

சிதம்பரம் திரு. W. கல்யாண ராமபிள்ளை யவர்களால் தொடங்கப்பெற்ற சிவகாமியம்மை திருக்கோயில் திருப்பணி அவர்கட்குப்பின் திரு. N.M. பொன்னம்பலம்பிள்ளையவர்கள் தலைமையில் தமிழக அரசும் செட்டி நாட்டரசர் ராஜா சர் முத்தைய செட்டியார் அவர்களும் பொதுமக்களும் உதவிய நிதியுதவியைக் கொண்டு நிறைவு செய்யப்பெற்றது. 1972-இல் குடமுழுக்கு இனிது நிறைவேறியது.

சிதம்பரம் நகரமன்றத் தலைவராகவும் பாராளுமன்றவுறுப்பினராகவும் சட்டமன்றவுறுப்பினராகவும் இருந்து கூட்டுறவுத் துறை முதலிய பலதுறைகளிலும் நாடுவளம் பெற நல்ல பல பணிகளைப் புரிந்த R. கனகசபைப்பிள்ளை அவர்கள் தம் தந்தையார் ஆடூர் இரத்தினசபாதிப்பிள்ளையவர்கள் விரும்பிய வண்ணம் தில்லைப் பெருங்கோயில் திருப்பணியில் ஈடுபாடுடையராயினர், அவர்களைத் தலைவராகவும் முன்னாள் சட்டமன்ற வுறுப்பினர் திருப்பணிச்செல்வர் G. வாகீசம்பிள்ளையவர்களைச் செயலாளராகவும் கொண்ட சிதம்பரம் சபாநாயகர் திருமதில் திருப்பணிக்குழு தில்லைப்பெருங்கோயிலின் வெளிப்புறப் பெரு மதிலாகிய வீரப்பநாயக்கர்மதில் திருப்பணியை இனிது நிறை வேற்றியது. இக்குழு 1972-இல் சிதம்பரம் சபாநாயகர் கோயில் திருப்பணிக்குழுவாக மாற்றியமைக்கப்பெற்றது. அப்பொழுது தமிழக அரசின் அறநிலையத்துறை ஆணையராகப் பணிபுரிந்த திரு.M.K. பாலசுப்பிரமணியம் அவர்களது உதவியுடன் தில்லைப் பெருங்கோயில் திருப்பணியைச் சிறப்புற நிகழ்த்துதற்கு முப்பத் தைந்துலட்ச ரூபா அளவில் பெரிய திட்டம் (மாஸ்டர்பிளான்) ஒன்று வரையப்பட்டது. அதன்படி தமிழக அரசின் நன்கொடை யாக ரூபா பத்தொன்பது லட்சமும், பொதுமக்கள் நன் கொடையாக ரூபா இருபதுலட்சமும், பழநி தேவத்தானம் M.S கட்டளையின் சார்பில் ராஜா சர் M.A. முத்தையசெட்டியார் குடும்பத்தார், சென்னை மருத்துவர் டாக்டர் இரத்தின வேல் சுப்பிரமணியம் ஆகியோர்மூலம் ரூபா பன்னிரண்டு லட்சமும் ஆக ரூபா ஐம்பது லட்சத்திற்கு மேல் செலவிடப்பட்டுச் சிதம்பரம் திருக்கோயிலின் நான்கு கோபுரங்களும் திரு மாளிகைப்பத்தியும் முக்குறுணிப்பிள்ளையார், கற்பக விநாயகர், சுப்பிரமணியர் முதலியமூர்த்திகளின் கோயில்களும், சுற்றுப்பிராகாரமும்,நிருத்த சபையும். பேரம்பலமும், கனகசபையும், ஆக எல்லாப்பகுதிகளும் திருப்பணிசெய்யப்பெற்றுத் தனித்தனியே குடமுழுக்கு விழா நிகழ்த்தப்பெற்றன. இத்திருப்பணிகளின் நிறைவாகத் தில்லைக் கூத்தப்பெருமானுக்கு நிகழும் அட்சய ஆண்டு தைத்திங்கள் 29-ஆம் நாள் (11-2-1987) புதன்கிழமை மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அண்மையில் நடைபெற்ற இத்திருப்பணிகளால் தில்லை நடராசப்பெருமான் திருக்கோயிலிலுள்ள எல்லாச் சந்நிதிகளும் உற்புறமதில்களும் திருமாளிகைப் பத்தியும் ஆயிரக்கால் மண்டபமும் வெளிப்புறமதில்களும் திருந்திய முறையிற் பழுதுபார்க்கப் பெற்றுப் புதிய பொலிவுடன் திகழ்தல் காணலாம்.