திவான் லொடபட சிங் பகதூர்/தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆரணி குப்புசாமி முதலியாரைத் தொடர்ந்து அவர் பாணியில் தழுவல்களாக எழுதியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். தழுவல் நாவல்களாயிருந்தபோதிலும் தமிழ்நாட்டு இடப் பெயர், மக்கள் பெயர்களை வைத்தே ஜனரஞ்சகமாக எழுதப்பட்டதால், இவரது நாவல்கள்தான் தமிழ்நாட்டில் ஒரு பரந்த வாசகர் உலகத்தைச் சிருஷ்டித்து வைத்தன. புத்தகம் படிக்கும் பழக்கம் இந்த நாவல்களால் ஏற்பட்டது ஒரு புறமிருக்க, கண்டமேனிக்கு கதை எழுதும் எழுத்தாளர்களை உற்பத்தி செய்யக் காரணமாய் இருந்ததும் வடுவூரார் நாவல்கள் தான். ஆக, அக்காலச் சூழ்நிலையை ஒரு விமர்சகர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகிறார்:
அச்சுப் பொறி மலிந்து காகித வர்த்தகம் பெருகி வரும் இக்காலத்தில் நாவல்களும் புற்றீசல்போல் தோன்றித் தொடங்கி விட்டன, மக்களின் ஆசாரங்கள் சீர் பெறவும், பாஷை வளர்ச்சியுறவும் நாவல்கள் பெரிதும் உதவி புரியும் என்பது உண்மையே. ஆனால், தடியெடுத்தோரெல்லாம் வேட்டைக்காரர் என்றபடி தமிழ் உலகத்திலே இறகோட்டிகளெல்லாம் நாவ லாசிரியர்களாய் மூன்வந்திருப்பதால் தற்கால நாவல்கள் பெரும்பாலானவற்றால் விளையும் தீமைகள் அற்ப சொற்ப மன்று. 'ர'கர 'ற'கரங்களைச் சரியாய் வழங்க அறியாதவர்களும் தமிழ் எழுத்தாளராகத் துணிவு கொள்வதும் தமிழ் மொழியின் சனி திசையென்றே கூற வேண்டும். ஒன்றோ இரண்டோ விட புருஷர்கள், இரண்டோ மூன்றோ நாணமற்ற கன்னியர்கள், ஒரு துப்பறியும் கோவித்தன் அல்லது கோபாலன், ஒரு ஆகாவழி ஜமீந்தார் --- தமிழ் நாவல் பூர்த்தியாகி விடுகிறது. தற்காலத்தில் துப்பறியும் நாவல்களெல் லாம் பிற நாட்டுப் பழக்க வழக்கங்களையும் மனோபாவங் களையும் தமிழகத்தில் பரப்பித் தமிழ் மக்களை அனாசாரப் படுகுழியில் தலைகீழாக வீழ்த்துகின்றன. நாவல்களின் தன்மை இன்னதென்றறியாத தமிழ் மக்களும் இந்த நாவல் புற்றீசலர்களைக் கோழி விழுங்குவதுபோல் விழுங்கித் திருப்தி அடைகின்றனர் (லக்ஷ்மி, செப். 1924, முத்து மீனாட்சி நாவலுக்கு மதிப்புரையில்). வடுவூர் துரைசாமி ஐயங்கார் ரெயினால்ட்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களின் கதைகளைத் தழுவி எழுதிய தோடு நின்று விடாமல் தமிழ்நாட்டின் சமகால சமுதாயத்தைச் சித்திரிக்கும் சொந்த நாவல்கள் பலவற்றையும் எழுதியிருக்கிறார். இவருடைய சொந்த முயற்சிகளில் சிறந்தவை மேனகா, கும்பகோணம் வக்கீல் என்பவையாகும். கையில் எடுத்தால் புத்தகத்தைக் கீழே வைக்காமல் தொடர்ந்து படிக்கும் ரசனை மிகுந்த கதைகளை எழுதிய வடுவூர்துரைசாமி ஐயங்கார் பின்னர் கல்கி போன்றவர்களின் கதைகளைப் படிக்கத் தயாரான ஆயிரக்கணக்கான வாசகர்களைத் தோற்றுவித்த முன்னோடியாகவே விளங்கினார். இந்தப் பெருமையை ஆரணி குப்புசாமி முதலியாரும், ரங்கராஜூவும் பகிர்ந்து கொண்டனர்.
துரைசாமி ஐயங்காரின் மிகப் பிரசித்தமான மேனகா என்ற நாவலின் முதல் பக்கத்திலேயே ஓர் அடிக் குறிப்பு காணப்படுகிறது:
'சம்பசிவையங்கார், மேனகா என்பவை உண்மைப் பெயர்களை மறைக்கும் பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைப் பெயர்கள்'
என்று அந்தக் குறிப்பு விளக்குகிறது. இன்றைய நாவல்களில் வரும் 'பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. உண்மை மனிதர்களையும் சம்பவங்களையும் குறிப்பிடுபவை அல்ல' என்ற சட்ட அடிப்படையில் முன்கூட்டியே விளக்கம் சொல்லிக் கொள்வது நடப்பியல் சித்திரங்களில் இன்றியமையாத நிபந்தனையாக அமைவதற்கு மாறாக, வடுவூராரின் குறிப்பு, மேனகா கதை உண்மை நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கற்பனை என்பதை உணர்த்துகிறது. மர்மங்களும் துப்பறிதலும் நிறைந்த இந்த நாவலில் வாசகர் மனதை ஈர்க்கும் சம்பவங்கள் பல கையாளப்பட்டிருக்கன்றன. உணர்ச்சிகளின் உச்ச நிலையைத் தொடும் சம்பவங்களுக்கும் குறைவில்லை. பல அல்லல்களுக் குட்படும் மேனகா, ஒரு முஸ்லிம் பெண்ணின் உதவியினால் தன் கணவனை மீண்டும் அடைவது லட்சிய கதை மாந்தர்களின் செயலின் விளைவாக அமைகிறது. தமிழ்நாட்டின் பல் வேறு நகரங்களின் சமகாலச் சூழ்நிலை 1920களில் எழுதப் பட்ட இந்த நாவலில் தத்ரூபமாக விளங்குகிறது.வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்களில் மேனகாவை அடுத்து மிகப் பிரசித்தி பெற்றது கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் என்பது. பல மர்மங்களும், திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்த இந்த நாவலில் தஞ்சைப் பிராந்தியத்தில் அன்று நிலவிய சூழ்நிலை வருணிக்கப்படுகிறது. கதையின் ஆரம்பமே பின்வருமாறு அமைந்திருக்கிறது:
திருக்கண்ணமங்கை என்னும் சிற்றுர் தஞ்சை ஜில்லா விலுள்ள மிக்க இரமணியமான ஒரு ஸ்தலம். அவ்வூரில் எக்காலத்திலும் ஓயாது குயிலினங்கள் தமது தீங்குரலமுதைச் சொரிந்து கொஞ்சிக் குலாவிக் குதூகலமாக வதிந்த தென்னஞ்சோலைகளுக்கிடையில், அச்சிற்றுரின் வேளாளரது தெரு அமைந்திருந்தது. அத்தெருவினிடையிலிருந்த ஒரு பெருத்த மச்சு வீட்டின் கூடத்தில் முப்பத்தைந்து வயதுள்ள ஒரு ஸ்திரீ தென்னங்கீற்று முடைந்து கொண்டிருந்தாள். அவளது கைகள் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனவோ அவ்வளவு சுறுசுறுப்பாகவே அவளது வாயிலிருந்து சொற்களும் வெளிப்பட்டு பக்கத்து அறையில் வாழைப் பூவை அரிவாள்மணையில் வைத்து நறுக்கிக் கொண்டிருந்த ஓர் அழகிய பெண்மணியின் செவிகளில் தாக்கிக் கொண்டிருந்தன.
இவ்வாறு அழகாக சில காட்சிகளை வருணிக்கும் துரைசாமி ஐயங்கார் எழுத்திலே வாசகரைக் கவரும் உத்தி எங்கும் சிறந்து நிற்கிறது. 'கல்கிக்கு முன் அவ்வளவு தெளிவுடனும், அழகுடனும் வசனம் எழுதியவர்கள் வடுவூராரைத் தவிர வேறு யாருமில்லை என்று சொல்லி விடலாம். தமிழ் வாசகர்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அறிந்து எழுதிய வர்களில் காலத்தால் முதன்மையானவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார்...' என்பது க.நா. சுப்பிரமணியத்தின் மதிப்பீடு- (படித்திருக்கிறீர்களா?-2)
வடுவூர் துரைசாமி ஐயங்காரின் செல்வாக்கைப் பயன் படுத்தி, குடும்பச் சூழ்நிலையை வைத்து, ஜனரஞ்சகமான நாவல்களை எழுதியவர் வை.மு. கோதைநாயகி அம்மாள்.
நன்றி: தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும் - சிட்டி,
சிவபாதசுந்தரம்.