தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 10

10

நகரம் நவநாகரிக நாரீமணி போல, மினுக்கிக் குலுக்கி ஒய்யாரமாக நடை போட்டுக் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தது. ஆம்; பொங்கல் புது நாள் மக்களைப் பூரிப்பில் ஆழ்த்திப் புத்தாடை பூண்டு அணிமணிகள் தரித்து ஆண்களும் பெண்களும் குழந்தை குட்டிகளுடன் வளைய வந்து கொண்டிருந்தது, பார்ப்பதற்கு நகரமே நளினமாக நடனமாடுவது போன்ற பிரமையைத் தான் உண்டு பண்ணியது. தொடர்ந்தாற்போல் ஐந்தாறு வருஷங்கள் மழையில் லாமல் இவ்வருஷம் பருவமழை பெய்து வயல்களைப் பசுமையாக்கியது போல் மக்களுடைய வாழ்க்கையிலும் பசுமையை ஏற்படுத்தியதால் அவர்கள் பொங்கல் விழாவைப் பூரிப்போடு கொண்டாடி மகிழ்ந்தனர். வானமா மழை காணுது வாடி யிருக்கும் பயிர்கள் போல், பஞ்சத்தால் பரதவித்த மக்கள் முன் ஆண்டுகளில் பொங்கல் வந்து பூரிப்பின்றிப் பட்டினி பசியால் நலிந்திருந்தனர். அமுத மழைத் துளிகள் விழுந்ததும் சாவியாகிச் சரிந்து விழும் நிலையிலிருந்த பயிர்கள் குப்பெனத் தளிர்த்துத் தலைதுாக்கி நிற்பதுபோல், பருவமழையால் பயனடைந்த மக்கள் பல ஆண்டுகளுக்குப் பின் இவ்வருஷந்தான் மகிழ்ச்சிப் பொங்கலோடு பால் பொங்கவிட்டு அருக்கனில் சோதிவைத்த அருள் இறைவனுக்குப் படைத்துப் பின் மனைவி மக்களுடன் வயிறார உண்டு பேருவகை கொண்டார்கள்.

'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்னும் பழமொழிக்கு ஏதுவான தை மாதம் பிறந்த-அதாவது பொங்கல் நாள் வந்த மூன்றாம் நாள்,' காணும் பொங்கல்' என்று கூறிக் கொண்டு களிப்பு மிகக் கொண்ட மக்கள் உறவினரையும் நண்பர்களையும் உவந்து போய்ப் பார்த்து அளவளாவி விட்டு வரும் நன்னாள். அன்று மக்கள் சாரி சாரியாகப் பல பக்கங்களிலும் போய்க்கொண்டிருந்தார்கள். செல்வத்தில் திளைத்திருந்தவர்கள் கார்களிலும், குதிரை வண்டிகளிலும் செருக்கோடு சென்று கொண்டிருந்தனர். பொருளிலும் பிறவற்றிலும் மத்திய தரமாகவுள்ள மக்கள் வாடகை வண்டிகளில், பஸ்ஸில் போகலாயினர். ஏழை மக்கள் கால் நடையாகச் செல்லலாயினர். பாட்டாளி மக்கள் கூட்டம் பள்ளுப்பாட்டு பாடித் தெம்பாகச் செள்று கொண்டிருந்தது, கூலி வேலை செய்யும் குமரிப் பெண்களும் நடுத்தர வயது மகளிரும் தங்களுக்குத் தெரிந்தவர்களின் வீடுகள் தோறும் சென்று கும்மியடித்துப் பொங்கல் இனாம் காசு பெற்றுப் போய்க் கொண்டிருந்தனர்.

மாலை மஞ்சள் வெய்யிலில் மக்கள் இவ்விதம் வையாளி வந்து கொணடிருந்தது பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. மக்கள் முகங்களில் மகிழ்ச்சி துளும்ப, கலகல வெனப் பேசிக்கொண்டு போன கலகலப்பொலி நகர் முழுவதுமே எதிரொலி செய்து கொண்டிருந்தது.

இவ்விதம் எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ஆனந்தம் தாண்டவமாடிக் கொண்டிருக்க, ஒரேயொரு வீட்டில் மட்டும், ஒரு சிலர் முகங்களில் மட்டும் சோகம் குடி கொண்டிருந்தது. மயிலாப்பூர் செந்தோம் ரோட்டிலுளள சதானந்தம் பிள்ளையவர்களின் மாளிகை பலவகையிலும் சோபையிழந்து காணப்பட்டது. ஒரு மணிக்கொரு தரம்காலை மாலைகளில் காலை மணிக்கொரு தரம் அடிக்கும் செந்தோம் மாதாகோவில் மணியின் 'டணார், டணார் ’ என்ற ஒலி கூட அவ்வீட்டிலுள்ளோரைத் துயரத்திலிருந்து துயில் எழுப்பவில்லை. அவ்வளவுக்கு அளவிடமுடியாத துக்கம் அவர்களை ஆட்கொண்டிருந்தது. இதற்குக் காரணம் சொல்லவேண்டியதில்லை. அந்த வீட்டுத் தலைவியான திலகவதியம்மாள் திடீரெனப் பாவாதத்தால் பீடிக்கப்பட்டுப் படுகிடையாகி, "இப்பவோ, பின்னையோ, இன்னும் சற்று நேரத்திலோ!" என்றும் 'ஆக்கை அகத்ததோ, புறத்ததோ!' என்றும் சொல்லக்கூடிய நிலையில் இருந்து வரும்போது வீட்டிலுள்ளார்க்கு எப்படி கலகலப்பாய் இருக்க முடியும்?

விளையாட்டைப்போல், திலகவதியம்மாள் நோயில் விழுந்து ஆறு மாதத்துக்கு மேலாய்விட்டது. மூத்த மகன் பரீட்சையில் தேர்ச்சிபெருமல் போய்விட்டதையும் அரசாங் கத்துக்கு எதிரான இயக்கங்களில் ஈடுபட்டிருப்பதால் அடக்கு முறைக்கு ஆளாகவேண்டிய அபாய நிலையில் இருப்பதையும் ஒரே சமயத்தில் கேட்ட அதிர்ச்சியினால், ஏற்கனவே நோயில் நலிந்துள்ள திலகவதியைப் பாவாதம் பற்றிப் பல விதமான பிணிகளைக் கிளைக்கச் செய்தும் நோய் நீங்கிய பாடில்லை. ஒன்று மாறி ஒன்று வந்து கொண்டேயிருந்தது. சதானந்தம் பிள்ளையவர்கள் முதலில் ஆங்கில வைத்திய முறைகளால் சிகிச்சை செய்து பார்த்தார். அதனால், நீங்கா தென்று அறிந்தபின், மாசிலாமணி முதலியாரின் யோசனை பின்படி, ஆயுர்வேதம், சித்தவைத்தியர்களைக் கொண்டு, சிகிச்சை செய்யலானர். இவற்ருலும் உடனடியாகப் பலன் ஏற்படாமல் போகவே, யூனிை, ஹோமியோபதி வைத்திய முறைகளாலும் கிகிச்சை செய்யச் சொல்லிப் பார்த்தார்.

அவருக்குச் சில விஷயங்களில் நம்பிக்கையில்லையானாலும், தம் அருமை மனைவி எப்படியாயினும் மரணப் படுக்கை யிலிருந்து மீண்டு எழுந்தால் போதும் என்ற ஆதங்கத்தோடு மற்றவர்கள் சொல்லியபடியெல்லாம் மணி, மந்திர, ஒளஷத முறைகள் அனைத்தையும் கையாண்டு பார்த்துவிட்டார். ஆனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவானது தவிர, அலுப்பு சலிப்பு இல்லாமல் யார் யார் என்ன சொன்னாலும் யாரைப் பற்றிச் சொன்ஞலும் அவர்கள் சொல்லுகிற வைத்தியர்களையும், மந்திரவாதிகளையும், ஜோதிடர்களையும் அலைந்து திரிந்து போய் அழைத்து வந்து பார்த்து ஏமாந்தது தவிர, திலகவதி யம்மாள் படுக்கையிலிருந்து இம்மியளவுகூட எழுந்திருக்கவில்லை. எந்தவிதமான சிகிச்சையாலும் மருந்து மாயங்களாலும் சதானந்தம் பிள்ளையின் மனைவி சிறிதளவும் குணமடையாததைக் கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். சில மருந்துகளால், மணி மந்திரங்களால், சில சமயம் நோய் சிறிது குணமாவதுபோல் காணப்படும். இரண்டு நாள் கழித்து மறுபடியும் நோய் முடக்கிக் கொள்ளும். இந்த விதமான விசித்திர நிலை, பொதுவாக உறவினர், அக்கம் பக்கத்து மனிதர்கண் மட்டுமல்லாமல், வைத்தியர்களையும் மந்திரவாதிகளையும் லியப்பில் ஆழ்த்தியது; இதிலிருந்து, திலகவதியம்மாளுக்கு உடம்பில் மட்டும் முடக்குவாதமில்லை உள்ளத்திலும் முடக்கு வாதம் பிடித்துக் கொண்டிருக்கிறது என்றே தோன்றியது. உடற்பிணிக்கு மணி மந்திர ஒளஷதம் பிடிக்கும். மனப்பிணிக்கு எப்படிப் பிடிக்கும்? நோய் ஒன் றிருக்க மருந்தொன்று கொடுத்தால் குணமாகுமா? மன நோய்க்கும் மருந்து உண்டோ? மகளுல் ஏற்பட்ட மன அதிர்ச்சியால்தான், மனக் கவலையால்தான் ஏற்கனவே, உடல் நலிவுற்றிருந்த திலகவதியம்மாள் இப்போது திரா நோய்க்காளானாள். மனநோய் முற்றிய தால் உண்டான உடற்பிணிக்கு மருந்துகளைக் கொடுப்பதை விட முதலில் மனப்பிணி அகல மார்க்கஞ் செய்தால் பூரண குணம் ஏற்படும். ஆனால் அதற்கு வழி யாரும் செய்யவில்லை. ஏனென்ருல் திலகவதியம்மாளை உள்ளுர அரித்துவரும் மன நோயை-மற்றவர்கள் - மணுளன்கூட அறியாததுதான் இதற்குக் காரணமாகும். வியாதியின் மூலத்தையுணர்ந்தால் தானே அதைப் போக்க முடியும்?

மாசிலாமணி முதலியார் மூட்டிவிட்ட தீதான் திலகவதியம்மாளைச் சரியாகப் பற்றிக்கொண்டது. அவர் பிள்ளையவர்களுடன் அடிக்கடி பேசி வந்த பேச்சிலிருந்து கணவனைப் பற்றியும் குமாரர்களைப் பற்றியும் அறிந்த சில விஷயங்கள் அவளுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணின. 'உத்தமரான என் கணவரையும் உலகம் சந்தேகிக்கிறதே! விரோதிக்கிறதே! உலகம் என்றால் யார்? அறிவால், ஒழுக்கத்தால் உயர்ந்த ஆன்றோர்களா? நற்குண சம்பன்னர்களா? இல்லை; இல்லை. சுயநலத்தால் சூழ்ச்சி செய்யும் உலுத்தர்கள்-யோக்கியப் பொறுப்பற்றவர்கள் தான் என் கொழுநரைக் குறை கூறுகிறார்கள்; குற்றஞ்சுமத்த முயல்கிறார்கள். குரோதங் கண்டு தீமை புரியச் சமயம் பார்த்துக்கொண்டிருக்கிருர்கள். காங்கிரஸில்-தேச மகா சபையாகிய காங்கிரளில் - தாதாபாய் நெளரோஜிகோபாலகிருஷ்ண கோகலே-சுரேந்திர நாத பானர்ஜிவிவினசந்திர பாலர்-பால கங்காதர திலகர்-போன்ற தேச பக்தர்கள்-தியாகிகள் அரும் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸில்-காந்தி மகான்-சத்தியத்தையும் அஹிம்சையும் ஆயு தங்களாகக் கொண்டு சுதந்திரப் போராட்டம் நடத்திய மகாத்மா காந்தி பலப்படுத்திய காங்கிரஸில்-சுபாஷ் சந்திர போவின் அரும்பெருந் தியாகத்தாலும், வீரதீரப் போராட்டத்தாலும் நாட்டுக்கு ஆட்சி சுதந்திரம் வாங்கித் தரும் பெருமை பெற்ற காங்கிரளில் கூடவா சுயநலவாதிகள் அயோக்கியர்கள் மலிந்துவிட்டார்கள்? அட கடவுளே! தந்தை மீதுள்ள வஞ்சங் காரணமாக, பிள்னைகள்மீது பழி தீர்த்துக்கொள்ளப் பார்க்கிருர்களே! கயவர்கள்? என்று எண்ணியெண்ணி மனம் வருந்தினாள்.

இவர் எதற்காக அந்த அயோக்கியர்களோடு மல்லாடுகிறார்? நீதியும், நேர்மையும், உண்மையும் இல்லையென்று அறிந்தால் இவர் பேசாமல் விலகிக் கொள்வதுதானே !

காங்கிரஸில் இருந்துதான் மக்களுக்குச் சேவை புரிய முடியுமா? என்ன வேறு எந்த ஸ்தாபனத்திலும் சேர்ந்து சேவைசெய்யமுடியதா? நீண்டகாலம் காங்கிரஸ்ஸில் இருந்து தொண்டாற்றி வந்ததால், பிற கட்சிகளில் சேர விருப்பமில்லையென்றால், தனிப்பட்ட முறையில் முடிந்த அளவு மக்களுக்கு நன்மை செய்து மனத்திருப்தி கொள்வதுதானே! அதை விட்டு......... பொல்லாதவர்களுடன் பொல்லாங்கு எதற்கு? நாய் வாலே நிமிர்த்த முடியுமா? துஷ்டர்களுக்குப் புத்தி சொன்னால் திருந்தப்போகிறார்களா? அதற்குப்பதிலாக அவர்கள் தீமை செய்யத்தான் பார்ப்பார்கள். தங்க இடமின்றி மழையில் நனைகிறதே என்ற பரிவுணர்ச்சியோடு புத்தி சொன்ன தூக்கனாங் குருவியின் கூட்டைப் பிய்த்தெறிந்த குரங்கின் கதையை இவர் அறிய மாட்டாரா? இவருக்குத் தெரியாத விஷயமா? இவருக்கு யோசனை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?-மனைவிக்கு உரிமையா? இல்லாத உரிமையிருக்கலாம். அந்த உரிமையை எப்பேர்ப் பட்ட கணவரிடம்-எந்த சமயத்தில் உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிய வேண்டாமா.........?'

கணவனிடத்தில் திலகவதிக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு; உயர்ந்த மதிப்பு உண்டு. இடையில் மங்கை விஷயமாக அவள் சந்தேகங்கொண்டபோது கூட, கணவன்மீது கடுகளவும் ஐயங் கொள்ளவில்லை. மங்கைமீதுதான் சந்தேகங் கொண்டாள்; அசூயை கொண்டாள். அவள்தான்-இளமையிலேயே இன்பத்தை இழந்துவிட்ட விதவையான அவள் தான் தன் கணவரை மயக்க முயல்கிருள் என்று எண்ணினாள்.

தன் கணவர் அனுபவ மிகுந்தவர்; அவர் நிலைமைக்குத் தகுந்தபடி நடந்து கொள்வார்; அவரைப் பற்றித் தான் அதிகமாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 'அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்களின்-அதிகாரத்தைக் கைக் கொண்டிருப்பவர்களின்-பகைமை எதற்கு?’ என்ற ஒரு சிறு நினைவைத் தவிர அவள் அவரைப் பற்றி அதிகஞ் சஞ்சலங் 1 கொள்ளவில்லை. பிள்ளைகளை நினைக்கும்போதுதான் அவள் பெருங்கவலை கொண்டாள். சிறு வயதிலேயே- படிக்கும் போதே-இவர்களுக்கு எதற்காக அரசியல் விவகாரங்கள்? கட்சிகளில் கலந்து கொண்டு கூச்சல் போடுவதேன்? நல்லது, கெட்டது என்று இன்னமும் சரியாகத் தெரியாத நிலையில் இவர்கள் பொது விஷயங்களில் ஈடுபடுவது கூடாது. ஆனால், அவர்கள் இதைக் கேட்க மாட்டார்கள் போலிருக்கிறதே! பெரியவன்தான் ஒரு தினுசாய்ப் போய் விட்டான் என்ரு லும், சின்னவனும் அதைவிட மோசமாகவல்லவா இருக்கிறான்? ஆனால் விசுவம், சிவனைப் போலப் பரீட்சையில் கோட்’ அடிக்கவில்லை. எப்படியோ எழுதிப் பாஸாய் விடுகிறான்; மேல் படிப்பில் எப்படி இருப்பானே?......' என்று பெற்ற பிள்ளைகளை எண்ணித்தான் அவளுடைய தாயுள்ளம் பெரும் பேதுற்றது. பி.எஸ்.ஸி. ஆனர்ஸ் பரீட்சையில் பாஸாகாமல் போன தற்குப் பொதுவிவகாரங்களில் ஈடுபட்டதுதான் காரணம் என்று தந்தையார் படித்துப் படித்துச் சொல்லிக் கண்டித்துங் கூட, சிவகுமாரன் தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல், அரசியலில் அதிகமாக ஈடுபட்டு வருவதை அறிந்து திலகவதியம்மாள் வெகுவாக வருந்தினாள். வெளிப் பார்வைக்குத் தான் எதிலும் கனக்காதது போல் பாவனை செய்து வந்தாலும், அந்தரங்கத்தில் அவன், அரசியல், சமூகக்கிளர்ச்சிகளில் தீவிரமாகக் கலந்து வேலை செய்து வருகிறான் என்ற செய்தி பிள்ளையவர்களுக்கு மாசிலாமணி முதலியார் முதலியவர்கள் வாயிலாக எட்டத்தான் செய்தது. சிவகுமாரன் கம்யூனிஸ்டு கட்சியிலும், விசுவநாதன் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து முக்கிய பங்கெடுத்துக் கொள்கிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது. தகப்பன் காங்கிரஸ்காரர்; பிள்ளைகள் காங்கிரஸ் சக்கு நேர்விரோதமான கட்சிகளில்-காங்கிரஸ் செல்வாக்கைக் குலைப்பதையே குறிக்கோளாக் கொண்ட எதிர்க்கட்சிகளில் - சேர்ந்திருக்கின்றனர்' என்று சதானந்தம் பிள்ளையவர்களைக் குறை கூற முயன்றவர்கள் கேலியாகச் சொல்லலாயினார். பிள்ளைகளின் வெளி விவகாரம் பகிரங்கமாகத் தெரிந்த பின்னர் திலகவதிக்குப் பயம் அதிகமாய் விட்டது. விசுவம் தி.மு.க.வில் சேர்ந்திருப்பதுகூடப் பாதகமில்லை. சிவன் போய் அந்தச் சதிகாரக் கட்சியில் தொடர்பு வைத்துக் கொண்டிருப்பதுதான் எனக்கு மன வேதனையாயிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் பலாத்கார முறையை விட்டு விட்டார்கள், வேலைத் திட்டத்தை மாற்றிக் கொண்டார்கள் என்று சொல்லப்பட்டாலும், அதைச் சட்ட ரீதியான கட்சி, நேர்மையான அரசியல் கட்சி என்று நம்மால் நம்ப முடியாது. அரசாங்கமும்-மத்திய அரசாங்கங்கூடத்தான்-அதை நம்பாமலேயிருந்து வருகிறது. இந்நிலையில் இவன் போய் அதன் நடவடிக்கைகளில் கலந்து கொள்வது-அல்லது அநுதாபங் காட்டுவது கொள்ளிக்கட்டையைக் கொண்டு தலையைச் சொரிந்து கொள்வது போலல்லவா ஆகும்?......' என்று ஒரு நாள் கணவர் தம் நண்பரொருவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் வேதனை இவள் நெஞ்சத்தைத் துளைத்தது. மாசிலாமணி முதலியார் அன்றொரு நாள் எச்சரித்தது போல், இன்று ஆட்சி பீடத்திலிருக்கும் தன் கணவனுக்கு வேண்டாதவர்கள், இவர் மீதுள்ள ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக, சிவனை அரசாங்கத்துக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான் என்று ஏதாயினும் காரணங் காட்டிச் சிறையில் தள்ளி விட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஏங்கினாள். இப்பயங்கர நினைவு அவளைப் பாகாய் உருக்கிவிட்டது.

அவள் கணவர் சமீபத்தில் பழநிசாமிப் படையாச்சியிடம் தெரிவித்ததுபோல், சிவன் சிறு பையனுயிருந்தாலும் இரண்டு அறை அறைந்து அதிலெல்லாம் சேராதே என்று பயமுறுத்திப் புத்தி சொல்லலாம்; தலைக்கு மேலே மூத்துவிட்ட பிள்ளையை எந்த விதமாகக் கண்டிப்பது? மிஞ்சிக்கண்டித்தால் மீறி விட்டால் என்ன செய்வது? கொஞ்ச நஞ்சமுள்ள மரியாதையுமல்லவா கெட்டுப் போகும்? ஆகவே, கணவன்  இதைக் கண்டும் காணாமல், அறிந்தும் அறியாமல் போவது தான் நல்லது என்று அவள் எண்ணினாள். பிள்ளைகள் தன் கணவனை எதிர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படக் கூடாதே, கடவுளே! என்று அவள் பிரார்த்திக்கலானாள்.

ஆனாலும் திலகவதிக்குச் சிவன்மீது மனத் தாங்கல் ஏற்படத்தான் செய்தது. எந்த மகன் பரீட்சையில் பெயிலாய் விட்டதைக் கேட்டு -பெயிலானதற்கு இன்னதுதான் காரணம் என்று அறிந்து-ஆட்சியிலுள்ளவர்கள் அவன்மீது அடக்குமுறையைக் கையாளக்கூடும் என்று கேட்டு அவள் அஞ்சினாளோ-அந்த அச்சத்தாலேயே அதிர்ச்சியடைந்து முடக்கு வாதத்தில் முடங்கி விட்டாளோ-அந்த மூத்தமகன் தன்னைப்பற்றி அவ்வளவாகக் கவலை கொள்ளாமல் தான் தோன்றித்தனமாகத் திரிந்து விட்டு வருவது-செப்டம்பரில் பரீட்சை எழுதிப் பூர்த்தி செய்யப் போகிறேன் என்று சொல்லிப் பின் அவ்விதம் செய்யாமல்- சரியாகப் படிக்கவில்லை; நன்ருகப் படித்து மார்ச்சு பரீட்சைக்குப் போகிறேன்' என்று கூறி வீண் பொழுது போக்கிக் கொண்டு தந்தையின் நற்பெயரையும் குடும்பக் கெளரவத்தையும் கெடுத்து வருவது அவளால் சகிக்கக்கூடாததாய் விட்டது. அதை நினைத்து நினைத்தே அவள் நெக்குருகி விட்டாள். இவ்விதம் மன நோய் முற்ற முற்ற உடலைப் பற்றிய வியாதி எப்படிக் குணப்படும்? எந்த மருந்துதான் எப்படிப் பிடிக்கும்? ஆகவே, அவள் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு தான் வந்தது. வந்தது இந்நிலையிலும் அவளுக்கு ஒரே ஒரு ஆறுதல் மங்கையர்க்கரசி ஒன்றுவிட்ட சகோதரியாயிருந்தும் உடன் பிறந்த சகோதரியைவிட உறுதுணையாயிருந்து வரும் மங்கையர்க்கரசி தன் குடும்ப நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு திறமையாக நடத்தி வருவதும், தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் யாதொரு குறைவுமின்றி அக்கரையாகக் கவனித்துக் காரியங்களைச் செய்து வருவதும் கண்டு விம்மிதமுற்றாள். அத்துடன் மங்கை சிறு பிள்ளைகளை நன்கு பராமரிப்பதோடு சமயம் நேரும்போது சிவகுமாரனுக் சிவகுமாரனுக்கும் விசுவநாதனுக்கும் புத்தி சொல்லித் திருத்த முயல்வதை யறிந்து அவள் நெஞ்சம் நன்றியுனர்வால் நெகிழ்ந்தது.

இவ்விதம் திலகவதி பலவித நினைவுகளால் சதா அலைக்கப்படுவதை அவள் சரீரம் தாங்கவில்லை. அது மிகவும் சோர்ந்து போய் விட்டது. ஒருநாள் திடீரென உடல் நிலை மிக மோசமாய் விட்டது. பொங்கலுக்கு முன்னாள் இரவு அவள் நிலை கவலைக்கிடமாய் விட்டது. ஊர் முழுவதும் மக்கள் பீடை மாதங் கழித்துப் புத்தாண்டு பிறந்து வாழ்க்கை மகிழ்ச்சி பொங்கப் போகிறது. வீடுகளில் பால் பொங்க வைக்கப் போகிறோம் என்று பூரிப்புக் கொண்டு, போகிப் பண்டிகையில் பழசுகளையெல்லாம் திக்கிரையாக்கி மேளமடித்து எண்ணெய் தேய்த்து முழுகிக் கோடியாடை உடுத்திக் குதூகலமாயிருக்கும் சமயத்தில், சதானந்தம் பிள்ளை வீடு துக்கமும் அழுகையுமாய் இருந்தது. திலகவதியின் படுக்கையைச் சுற்றி எல்லோரும் கவலையோடும் கண்ணிரோடும் கை பிசைந்து கொண்டு நின்றிருந்தனர்.

தனக்கு ஆயுள் குறுகி விட்டது; இனி தன் உயிர் உடல் கூட்டிலிருந்து எந்தக் கணத்திலும் பிரிந்துவிடக் கூடும் என்று நன்கு அறிந்து கொண்டாளானலும், திலகவதி கணவனுக்கும் மங்கைக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் மொழி புகலலானாள். இவளுடைய தாய் வீட்டுக்கும் மற்றும் முக்கியமான உறவினருக்கும் தகவல் சொல்லி வரவழைக்கலாம் என்று சதானந்தம் முயன்றதைக்கூட, அவள் ‘அவசரப்பட்டுச் சொல்லியனுப்ப வேண்டாம்; பின்னால் பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறித் தடுத்துவிட்டாள். அவள் தன் அருமருந்தன்ன கணவனின் மடிமீது தலையை வைத்துத் தான் அமைதியாக உயிர்விட வேண்டுமென்று விரும்பினாள். இவ்வளவு நெருக்கடியான சமயத்திலும் வீட்டில் தங்காமல் பொறுப்புணர்ச்சியின்றி சிவன் எங்கெங்கோ சுற்றிவிட்டுக் காலங் கடந்து வருகிறானே என்று ஒரு புறம் அவள் மனம் கவன்று கொண்டுதானிருந்தது. இத்தருணத்தில் விசுவநாதன் புத்தசாலித்தனமாக நடந்து கொண்டான். தந்தை கூப்பிடுங் குரலுக்கு ஏனென்று கேட்டு நடக்கப் பக்கத்திலேயே இருந்தான். சிற்றன்னையுடன் இருந்து தாய்க்குச் செய்ய வேண்டிய சிச்ரூஷைகளைச் செய்வதில் உதவியாய் இருந்தான்.

திலகவதிக்குப் பேச்சு மூச்செல்லாம் மெல்ல மெல்ல அடங்கி வந்தது. ஆனால், அவள் கண்கள் மட்டும் அடிக்கடி எல்லோரையும் ஆவலாகப் பார்க்கலாயின. இரவு பகலாய்க் கண் விழித்தும் கவலை கொண்டும் கணவன் உருக்குலைந்து போயிருப்பதைக் கண்டு அவள் உள்ளம் உருகியது. அடுத்தபடி, எல்லாப் பாரங்களையும் தான் தாங்கிக் கொண்டு அக்கா எப்படியும் பிழைத்தெழுந்து விடவேண்டும் என்ற ஆவலோடும், நம்பிக்கையோடும் வேளா வேளைக்கு மருந்தும், உணவும் கொடுத்து கண்ணுங் கருத்துமாகக் காத்து ஓய்ச்சல் ஒழிவின்றி உழைத்து ஓடாய்ப் போய் விட்டிருக்கும் மங்கையைப் பார்த்து அவள் கண்ணிர் உகுத்தாள்.

விவரம் நன்றாக அறியாவிட்டாலும் தான் அசெளக்கியமாயிருப்பதற்காக வருந்தி மெலிந்து போன கணேசனையும், கோகிலத்தையும் கட்டிக் கொண்டு அவள் கோவென அழுதாள்.

விசுவநாதனேஇ அவள் அன்பாகத் தடவிக் கொடுத்து, “அப்பாவுக்கு ஒத்தாசையாயிரு, விசு! அண்ணனைப் போல் அக்கரையற்றிராதே” என்று அறிவுரை கூறினாள்.

சிவகுமாரனுக்கும் ஏதாயினும் சொல்லிவிட்டுப் போக வேண்டும் என்று அவளுடைய உள்ளந் துடித்தது. அவன் அவள் அருகே வருவதே அருமை. தார இருந்தே துயரத்தை வெளிப்படுத்தி விட்டுப் போய் விடுவான். ஒரு கணமாயினும் தன் சமீபம் அவன் இருக்கவேண்டுமென்று ஆசைப்பட்டது திலகவதியின் நைந்த உள்ளம். அதற்கு அவன் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

இரண்டு மூன்று நாட்களாகவே, திலகவதி அடிக்கடி உணர்விழப்பதும் மெல்ல உணர்வு பெறுவதுமாயிருந்தாள். ஆகவே, சதானந்தம் அவள் அருகேயே இருந்தார். ஒரு கணம் கூட அப்படி இப்படி போவதில்லை, தப்பித் தவறிப் போனலும் மங்கையைக் கூப்பிட்டு இருக்கச் சொல்லிவிட்டுப் போவார்.

காணும் பொங்கலன்று மாலை திலகவதியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாய் விட்டது. இது கண்டு, பிள்ளையவர்களும் மங்கையும் வெலவெலத்துப் போயினர். விழிகள் மேலுங் கீழுமாக உருள்வதையும் மருள மருளப் பார்ப்பதையுங் கண்டு பயந்து கோகிலாவும் கணேசனும் அழலாயினர். அச்சமயம் விசுவநாதன் கூட இல்லை.

இருட்டி விட்டுங்கூட, விளக்கு ஏற்றத் தோன்றவில்லை இருவருக்கும். பேயறைந்தவர்கள் போலப் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தனர். பணிப் பெண் வந்துதான் மின்சார விளக்குகளைப் பொருத்தலானாள்.

விளக்கு ஏற்றப்பட்டதும் திலகவதியின் உயிர் விளக்கும் சிறிது பிரகாசமாய் எரியலாயிற்று. திடீரென அவள் முகத்தில் ஒரு விதக் களை காணப்பட்டது. இப்போது இவள் சிறிது தெளிவாகக்கூட பேச முயன்றாள். வேலை செய்து விட்டு, வீட்டு எசமாணிக்கு இப்படியிருக்கிறதே என்று கருதித் தயங்கி ஒரு புறம் நின்றிருந்த பணிப் பெண்ணை நோக்கி, அவள் வீட்டுக்குப் போய்க் காலையில் வருமாறு மங்கை மூலம் சொன்னாள். பின், அவள் குழந்தைகளை அழைத்துப் போய் பொழுதோடு சாப்பிடச் செய்யுமாறு மங்கைக்குப் பணித்தாள்.

கலக்கத்தோடு நின்றவாறு தன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கணவனை நோக்கி, நீங்களும் சாப்பிட்டு விட்டு வாருங்களேன்' என்று பரிவோடு மெல்லக் கூறினாள்.

“இருக்கட்டும்” என்றார் பிள்ளையவர்கள் தழுதழுத்த குரலுடன்.

“எனக்கு ஒன்றுமில்லை; நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள்?” மனைவியின் இந்த ஆறுதல் மொழி பிள்ளையவர்கள் மனத்தை என்னவோ செய்தது.

திலகவதி கணவனைக் கனிவோடு பார்க்கலானாள். அவருடைய முகத்தில் அந்தச் சில வினாடிகளில் என்னென்ன கண்டாளோ! அவள் கண்களில் நீர் பனித்தது. அவள் உள்ளம் பொருமியது. அவ்விம்மிதத்தையுணர்ந்து கொண்டவர் போல் அவரும் பொருமினார்.

“ஏன் நிற்கிறீர்கள்? இப்படி உட்காருங்கள்” என மிக மெல்லச் சொன்னாள் திலகவதி.

பிள்ளையவர்களுக்கு மனைவியின் பக்கத்தில் அமர்ந்து அவளை ஆஸ்வாசப்படுத்த வேண்டும் என்று ஆவல் அடிக்கடி எழும். ஆனால், மங்கையோ மற்றவர்களோ எப்பொழுதும் உடனிருப்பதால் தூர இருந்தே அவளுடைய காரியங்களைக் கவனிப்பார். இப்போது மனைவியே சொன்னதும், அவர் அவள் பக்கத்தில் போய் அமர்ந்தார். சடை பிடித்துத் தாறுமாறாய் முகத்தின் மீது விழுத்து கிடந்த கூந்தலை அவரது இடது கரம் கோதலாயிற்று. அவரது வலக்கை வற்றியுலர்ந்திருந்த அவள் கன்னத்தை வருடியது.

மீண்டும் கணவனைக் கனிகரமாகப் பார்த்த திலகவதி எப்படியிருந்த தேகம் “எப்படியாய் விட்டது? தளதளப்பெல்லாம் போய் தாடையொட்டியல்லவா போயிருக்கிறது. தோளும் சூம்பிக் கைகளும் சோர்ந்து போய்....” என்று ஆற்றாமையோடு சொல்லி நிறுத்தினாள்.

“பேசிச் சிரமப்படுத்திக் கொள்ளாதே, திலகம் என் உடம்புக்கு என்ன? நீ தான் நலிந்து...... நீ நல்லபடியாக எழுந்து விடு. அப்புறம் பார்; எல்லாம் சரியாகிவிடும்......”

அவள் பிழைக்க மாட்டாள் என்று அவருக்கு நன்கு தெரிந்தும் நப்பாசையால் அவ்விதம் நவின்றார்.

“நல்லபடியாக......” அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள், அவள் கண்கள் மட்டும் அவர் கண்களை ஊடுருவி நோக்கின. அவருடைய கண்களில் கருமணிகளில் அவள் தன் கணவனுடன் கருத்தொருமித்து நடத்தி வந்த இருபத்தைந்து வருடத்திய இல்வாழ்க்கையைப் பார்க்கலானாள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இளம் பெண்ணாக அவர் கையைப் பற்றியது, பிறந்தகத்திலிருந்து புக்ககம் வந்ததும் மாமியார், நாத்திமார் உட்பட அனைவரும் அன்புடன் வரவேற்றது, கணவனுடன் தனிக்குடித்தனம் நடத்தத் தொடங்கியது, கணவனின் காதலன்பிலே தவழ்ந்து புத்திரச் செல்வங்களைப் பெற்று, எல்லாரிடமும் இங்கிதமாய் நடந்து நற்பெயர் வாங்கியது, இவ்விதம் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவளுடைய நினைவுச் சுருளில் வந்து கணவனின் கருமனிகளில் பிரதிபலித்தது. தான் அறியாமையால் பல பிழைகள் புரிந்த காலத்தும் கோபிக்காமல் அன்பாகக் கடிந்துகொண்டு திருத்திகொள்ள அவகாசங் கொடுத்து ஆதரவு காட்டிய கணவனின் பேரன்பையும் பெருந்தன்மையையும் நினைந்து அவள் இச்சமயம் விம்மிதமுற்றாள். இருபத்தைந்து வருட வாழ்வில் அவர்களிடையே நிகழ்ந்த கோபதாபங்கள் நீரில் கிழித்த கோடு போலக் கணத்தில் தோன்றிக் கணத்தில் மறைந்தவைதாம் அதிகம். அவர்களுக்கிடையில் ஏற்படும் சிறு பிணக்கம் அடுத்த கணம் மிக நெருக்கத்தைத்தான் உண்டு பண்ணும். புலவி கலவிக்குத் தான் அடிகோலும். ஊடலோ மகிழ்ச்சியாகக் கூடலைத் தான் கூட்டுவிக்கும். மற்றபடி மன மாற்சரியங்களோ பூசல்களோ மருந்துக்குக் கூட அவர்களிடையே ஏற்பட்டதில்லை. மங்கலமான மனை மாட்சிக்கு நன்கலமாக அவள் பிள்ளைகளைப் பெற்ற காலத்தில் எல்லாம் மறவாமல் தக்க பரிசுகள் பட்டாடைகளாகவும், பொன்மணி அணிகளாகவும் பிள்ளையவர்கள் வழங்கத் தவறியதில்லை. முதல் பிரசவமாகச் சிவகுமாரனப் பெற்ற காலத்தில் பிள்ளையவர்கள் பூரித்த பூரிப்பு, அவளைப் போற்றிய போற்றல், அணிமணி வழங்கி அளவளாவிய அகமகிழ்வு இவைகளை இப்போது நினைத்த போதும் அவள் இதயத்தில் இன்பந்தான் பெருக்கெடுத்து ஓடியது. இவ்வளவு அருமையான கணவரைத் தன் வாழ்க்கைத் துணைவராகப் பெற்று மகிழ்ந்து இப்போது இடையில் பிரிந்துபோக வேண்டியிருக்கிறதே என்று எண்ணியபோதுதான் அவள் கண்கள் இரத்தக் கண்ணீர் வடித்தன.

“நாதா இருபத்தைந்து வருடங்கள் உங்களுடன் இன்ப வாழ்க்கை நடத்தினேன். நீங்கள் எனக்கு வாழ்க்கையில் யாதொரு குறையும் வைக்கவில்லை. ஆனால் நான்தான் ஏதாயினும் தவறு புரிந்திருப்பேன். தங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறியிருப்பேன்; பணிவிடைகளில் பிழை புரிந்திருப்பேன். ஆனால், அவை நான் தெரிந்து செய்தனவாக இரா. எனினும் நீங்கள் இச் சமயத்தில் என்னை மன்னித்து அருள வேண்டும். நான் மறுபடியும் பிறக்க நேர்ந்தால் உங்களோடு வாழக் கூடிய பேற்றையும் உங்களுக்குக் குற்றேவல் செய்யக் கூடிய உரிமையையும் வழங்கியருள வேண்டுமென்று நமது குல தெய்வத்தைப் பிரார்த்திக்கிறேன்.”

சகானந்தம் பிள்ளை மனைவியின் வாயைத் தம் கரத்தால் பொத்தி, “திலகம் இதென்ன பேச்சு? நீ நீடுழி வாழ வேண்டும். இப்படி இடை நடுவில் விட்டுப் போக நான் உன்னை ஒருகாலும் விடமாட்டேன்...” என்று ஆவேசம் வந்தவர்போல் பேசினார்.

திலகவதி இரக்கத்தோடு கணவனை ஏறிட்டுப் பார்த்து, “எனக்கு மட்டும் உங்களை விட்டுப் போக வேண்டுமென்ற விருப்பமா? என்ன! இந்தச் சண்டாள நோய் வந்து நம்மைப் பிரித்துவிடச் சதி செய்கிறதே! என் செய்வது!......” என்று கூறிப் பின், “நாதா கொஞ்சம் நகர்ந்து வந்து என் தலையையெடுத்து உங்கள் மடிமீது வைத்துக் கொள்ளுங்கள்...கொஞ்சம் அப்படி விச்ராந்தியாயிருந்து உயிர்விட விரும்புகிறேன்?”என்றாள்.

தின் தலையை எடுத்து மடிமீது வைத்துக்கொள்ள வேண்டுமென்று திலகவதி சொன்னவுடனே, பரிவோடு எடுத்துக் கொண்ட பிள்ளையவர்கள் "விச்ராந்தியாய் உயிர் விட” எனத் தொடங்கியவுடனே மீண்டும் அவள் அதரத்தை மூடினார்.

“நீ இப்படி யெல்லாம் பேசக்கூடாது. எனக்குக் கோபம் வரும்” என்று பிள்ளையவர்கள் கடிந்து கொண்டார்.

திலகவதி, “என்மீது கோபித்துக் கொள்ள உங்களுக்கு உரிமையுண்டு. தாராளமாகக் கோபித்துக் கொள் ளுங்கள்...”.’’ என்று வெளுத்த உதடுகள் மலரச் சொன்னாள். உடனே ஏதோ நினைத்துக் கொண்டு, “ஆனால், நாதா, ஒரு வரம். என் கண்மணிகளை மட்டும் கோபித்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் தாயற்ற குழந்தைகள். உங்களைத் தவிர, திக்கு யாருமில்லை. அதிலும் சிவனை நீங்கள் மன்னிக்க வேண்டும். அவன் சிறு பிள்ளைத்தனமாய் ஏதாயினும் பிழை செய்வான்.”

“விணாக மனதை அலட்டிக் கொள்ளாதே! திலகம்!” என்று அவளை மேலே பேசவெட்டாமல் தடுத்துவிட்டார் பிள்ளையவர்கள்.

இச்சமயம் கோகிலாவும் கணேசனும் முன்னே வர மங்கை அங்கு வரலானாள். இது கண்டு திலகவதி கணவன் மடி மீதிருந்த தன் தலையை எடுத்துக் கொள்ள முயன்றாள்.

உடனே மங்கை, “அக்கா. அப்படியே படுத்திருங்கள். நான் அப்புறம் வருகிறேன்” என்று கூறியவாறே அவ்விடத்தை விட்டுப் போக முயன்றாள்.

திலகவதி கை காட்டி, “போகாதே! மங்கை இரு. உன் வருகையைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நான். நினைவு இழப்பதற்குள் உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும்” என்று படபடப்போடு கூறினாள்.

மங்கை வருத்தத்தோடு தயங்கி நின்றாள்.

திலகவதி தன் பிள்ளைகளைச் சில விநாடிகள் பார்த்துப் பின், “கோகிலா, தம்பியை அழைத்துப்போய்த் தூங்க வை. பெரியண்ணாவோ சின்ன அண்ணாவோ வந்தால் மட்டும் இங்கு நான் வரச்சொன்னேன் என்று சொல்” என்று சொன்னாள்.

கோகிலா கணேசனை அழைத்துக்கொண்டு அப்புறம் போகலானாள்.

பின் திலகவதி மங்கையை நோக்கி, “மங்கை! அருகே வா!” எனக் கைநீட்டி அழைத்து, “சகோதரி, உனக்கு நான் எத்தனையோ வகைகளில் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னால் எந்த வழியிலும் உனக்குக் கைம்மாறு செய்ய முடியாது. நன்றி தெரிவித்துக் கொள்ளமட்டும்தான் முடியும்.”

“அக்கா! இது என்ன பேச்சு? நீங்கள் மன நிம்மதியோடு பேசாமல் இருங்கள். நான் போய்க் கொஞ்சம் கஞ்சி கொண்டு வருகிறேன்.........” எனக் கூறி அவள் பேச்சை மாற்றிவிட்டு அங்கிருந்து அகல முயன்றாள் மங்கை.

“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். தயவு செய்து நான் சொல்வதைச் சற்றுக் கேள். நீ முதன் முதலாகச் சித்தியுடன் இங்கு வந்தபோது நான் சொன்ன வார்த்தைகள் நினைவிருக்கும் என்று நம்புகிறேன்......”. இது உன் வீடு. நீதான் இந்த வீட்டுத் தலைவி” என்று சொன்னேன். அப்போது அவ் வார்த்தைகளை நான் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த உனக்கு ஆறுதலாக இருக்க உபசார மொழியாகக்கூடச் சொல்லியிருக்கலாம். ஆனால், இப்போது சொல்லுகிறேன்: இது உன் வீடு. இனிநீதான் இந்த வீட்டின் தலைவி. இதோ இருக்கும் அத்தான், சிவன், விசுவம், கோகிலா, கணேசன் அனைவரும் உன் பராமரிப்பில் இருக்க வேண்டியவர்கள். இப்போது இவர்கள் அனைவரையும் அன்பாக ஆதரித்து வருவதுபோலவே இனியும் இன்னும் அதிகமாய்ப்பாதுகாத்து வர வேண்டும். தெரிகிறதா இவர்களுக்கு உன்னை விட்டால் வேறு துணை இல்லை. என் சகோதரர்களோ சகோதரிகளோ இவர்களுக்கு உற்ற துணையாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள். என்பது உனக்குத் தெரியும், நான் உன்னைத்தான் பூரணமாக நம்பியிருக்கிறேன். உன்னை என் உயிலும் மேலாக மதித்துத் தான் இவர்களை உன்னிடம் அடைக்கலமாக விட்டுச் செல்கிறேன். நான் கேட்டுக் கொண்டபடி காப்பாற்றுவாயா? மங்கை! என் கையில் அடித்துச் சத்தியம் செய்து கொடு" என்று கேட்டாள்.

மங்கை கோவெனக் கதறி விட்டாள். பிள்ளையவர்களின் சுண்களிலும் தாரை தாரையாக நீர் பெருகி ஓடியது. பின் திலகவதி, தன் கணவனின் கரங்களை எடுத்து மங்கையின் கைகளில் சேர்த்து வைத்தாள். மங்கை ஏதோ பதில் சொல்ல முயன்றாள். ஆனால், அவள் நாவிலிருந்து வார்த்தை எதுவும் வெளிவரவில்லை. அதரம் மட்டும் தான் துடிதுடித்தது.

இச்சமயத்தில் கோகிலா, "இதோ அம்மா, பெரியண்ணா!" எனக் கூறியவாறு கணேசனை இருப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள். சிவகுமாரன் என்னவோ ஏதேர் எனப் பதறியோடி வந்தான். சொல்லி வைத்தாற் போல் அண்ணன் பின்னோடேயே விசுவ நாதனும் வந்தான்.

திலகவதி ஜாடை காட்டி எல்லோரையும் நெருங்கி வருமாறு செய்து, அவர்களுடைய கரங்களையும் மங்கையின் கரங்களில் ஒப்படைத்தாள். தாயினுடைய அப்போதைய நிலை சிவன், விசுவம் ஆகியவர்களின் கண்களிலும் நீரை வரவழைத்தது.

இருந்தாற் போலிருந்து கலகலவென ஒசை கேட்டது. திலகவதியின் தொண்டையில் மீண்டும் சளியும் கோழையும் ஏற்பட்டு அவளை, மூச்சுத் திணற வைத்தது. கண்கள் மலர மலர விழித்தார். அடுத்த கணம் திலகவதியின் தலை சாய்ந்து விட்டது. மனைவியின் உயிர் பிரிந்து விட்டது என்று பிள்ளையவர்கள் அறிந்து ஓ'வெனக் கூவினார். மங்கையும் உண்மை புரிந்து கொண்டு “அக்கா' என்று கதறியவாறு பிரேதத்தின் மீது விழுந்து விட்டாள். பிள்ளைகளனைவரும் தேம்பித் தேம்பி அழலாயினர்.