தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 11

11

ன்று வெள்ளிக்கிழமை, காலை பத்து மணிதான் ஆகியிருக்கும்; ஆனாலும் சூரியன் தென் திசை நோக்கி விரைந்து செல்வதாலோ என்னவோ! நண்பகல் போல் வெய்யில் கடுமையாகக் காய்ந்து கொண்டிருந்தது. அரைமணி நேரத்துக்கு முன்புதான், நீதி மன்றத்துக்குப் போன சதானந்தம் பிள்ளை எதையோ எடுத்துக்கொண்டு போக மறந்து விட்டுப் போய் வழியில் திடீரென நினைத்துக் கொண்டவராய் வீடு திரும்பலானார். அவர் வீட்டு வாசலில் காலடியெடுத்து வைத்த சமயத்தில் வேலைக்காரி வேதம் ஏதோ வேலையாக வந்து கொண்டிருந்தாள். வீட்டு எசமானைக் கண்டதும் அவள் பயபக்தியுடன் ஒதுங்கி நின்று வழி விட்டுப் போகலானாள்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே, "மங்கை!" எனக் கூப்பிட வாயெடுத்த பிள்ளையவர்கள் பூஜையறையிலிருந்து வந்த - பிரார்த்தனை கீதத்தைக் கேட்டு, அழைப்பதைவிட்டுத் தம் அறைக்குச் சென்றார். மேல் உத்தரீயத்தை எடுத்து அங்கிருந்த சோபாவொன்றின் மீது போட்டுவிட்டு அவர் ஒரு பீரோவண்டை சென்று அதைத் திறந்து தான் எடுத்துக் கொண்டு போக வந்த சட்டப் புத்தகமொன்றைக் கையில் எடுத்தார்.

பூஜையறையிலிருந்து வந்த ஊதுவத்தியின் புகையும் நறுமணமும் அவற்றின்மீது மிதந்து வருவது போல் வந்த இனிய குரல் இசையும் அவருடைய உள்ளத்தையும் உடம்பையும் கிளுகிளுக்கச் செய்தன. பீரோவிலிருந்து எடுத்த சட்டப் புத்தகத்தை மேஜைமீது வைத்தது அவர் கரம். அடுத்து அவருடைய கால்கள் பூஜையறை நோக்கி நடக்கலாயின்.

"பிறந்து மொழிபயின்ற பின்எல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்- நிறந்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே!

எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?"

இனிய கண்டத்திலிருந்து உருக்கமாக வெளிவந்து கொண்டிருந்த அற்புதப் பாடலொன்று அவர் செவிகளில் தேன் போல் இனிமையாகப் பாய்ந்தது. பிள்ளையவர்கள் அப்பாடலில் வயித்துப் போய் அப்படியே நின்றுவிட்டார்.

"இடர்களையா ரேனும் எமக்கு இரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடர்உருவில்
என்புஅறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்கு

அன்புஅறாது என்நெஞ்ச அவர்க்கு."

தொடர்ந்து மற்றொரு பாடல் இனிமையும் பக்தியும் சொட்டச் சொட்டக் காற்றில் வந்தது அவருக்குத் தெளிவாகக் கேட்டது.

இது கேட்டு, பிள்ளையவர்கள், "ஆஹா!" என்று பரவசப் பட்டுப் போனார். அவர் அப்புளகாங்கித நிலையிலிருந்து விடுபடுவதற்குச் சில விநாடிகள் ஆயின.

பின்னர் அவர் பூஜையறையை நெருங்கி வெளியிலிருந்தவாறே மெல்ல எட்டிப் பார்க்கலானார். அங்கு காணப்பட்ட காட்சியைக் கண்டு அவர் பிரமித்துப் போனார். அவர் தினந்தோறும் இருந்து பூஜை புரிந்து வரும் பூஜையறை முற்றிலும் புதுமைக் கோலங்கொண்டிருந்தது. அந்தப் பூஜையறையில் சுவர் முழுவதும் கடவுளின் திருவுருவப் படங்கள் அழகாக மாட்டப்பட்டிருந்தன. அறையின் நடுவில் அழகிய விதானமொன்று அமைத்து, அதற்குள் அண்ட சராசரங்களையும் சகல லோகங்களையும் ஆட்கொண்டு அருளும் பெருங்கருணையுடனே அநவரதமும், ஆனந்த தாண்டவம் புரிந்துகொண்டிருக்கும் அம்பலவாணனின் அழகிய திருவுருவங்கொண்ட பஞ்சலோகங்களாலான சிலா விக்கிரகத்தையும், இடப்பாகத்தில் சிவகாம சுந்தரி சிலையையும் வலப்புறம் மாணிக்க வாசகப் பெருமானின் சிலையையும் சதானந்தம் பிள்ளை வைத்திருந்தார். அதற்கு நேரே கீழ்ப்புறத்தில் ஓங்கார சொரூபமான விநாயகப் பெருமானையும், இரு பக்கமும் லக்மி, ஈரசுவதிதேவியரையும் சப்பரயொன்று செய்துவைத்திருந்தார். இப்போது பிள்ளையாரும் கலைமகளும் திருமகளும் நடராஜப் பெருமான் திருவோலக்கங்கொண்டிருந்த விதான பீடத்திலேயே முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

பிள்ளையார் பூஜை செய்யுமிடத்தில் திலகவதியின் உருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. பெரிய அளவில் வரையப்பட்டிருந்த அவ்வண்ணப் படத்தின் முன், திலகவதி அணிந்திருந்த ஆடையணிகள் அழகுற வைக்கப்பட்டிருந்தன. சுவாமி சிலைகளுக்கும், படங்களுக்கும் பூமாலைகள் சூட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது போலவே, திலகவதியின் உருவப்படத்துக்கும் வாச மிகுந்த மலர்மாலைகள் சூட்டப்பட்டிருந்தன. அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆடைகள்மீது நகைகளும் அவற்றின்மேல் ஜாதிக் கதம்ப மலர்களும் வைக்கப்பட்டிருந்தன. வெள்ளிக் குத்து விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்டிருந்தன. இருபக்கமும் ஊதுவத்திகள் கற்றையாகப் பொருத்தி வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்தன. இதன் புகையும் தூபகொலு சத்திலிருந்து எழுந்த சாம்பிராணிப் புகையும் நாலா பக்கமும் பரவி நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. தட்டத்தில் கற்பூரம் ஏற்றிவைக்கப்பட்டு ஜோதியாக எரிந்து கொண்டிருந்தது.

இவற்றுக்கு முன்பு மங்கையர்க்கரசி மண்டியிட்டு அமர்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்கள் திலகவதியின் உருவப்படத்தின் மீதே பதித்திருந்தன. அவளுடைய கரங்கள் வரங் கேட்பது போல், அப்படத்துக் கெதிரே நீண்டிருந்தன, அவள் தரித்திருந்த தும்பைப் பூப்போன்று துல்லியமான வெண்ணிறப் புடவை பிள்ளையவர்களின் கண்களைப் பறித்தன. மங்கையின் நா ஏதோ உச்சரித்துப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது. "அக்கா! நீ எங்களையெல்லாம் விட்டுப் போய்விட்டாய் என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. எங்கள் எல்லோரையும் அநாதையாக விட்டுச் சென்று ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. குடும்பத் தலைவியாயிருந்து எங்களுக்கெல்லாம் வாழ்வளித்து, வந்த நீ, நாங்கள் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத நெடுந்தொலைவில் உள்ள மேல் லோகத்துக்குப் போய்விட்டாய்! போன மாதம் வரை எங்களிடையே இந்த மாளிகையில் மானிடப் பெண்ணாக உலவிவந்த நீ , இப்போது தெய்வமாகிவிட்டாய். இது வரை பூதவுடலில் இருந்து எங்களுக்கு வழிகாட்டிவந்த நீ இப்போது சூசும தேகத்தில் இருந்து வழிகாட்டி வருவாய் என்பதில் சந்தேகமில்லை. நீ தெய்வத்தோடு தெய்வமாதி விட்டாலும் எங்களை மறக்கமாட்டாய்; கைவிடமாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. பொதுவாக நம் நாட்டில் பெண்கள் சுமங்கலிகளாக இறந்துவிட்டால் ஒவ்வொரு குடும்பமுமே அவர்களைத் தங்கள் தெய்வங்களாகக் கோடித்து, வருவது வழக்கம். அதுபோலவே, நாங்களும் எங்கள் குலதெய்வமாக-ஏன்? அதற்கு மேலாகவே-பாவித்துக் கோடித்து வருவோம். நம் குடும்பத்தில் ஒவ்வொரு காரியத்தையும் உன்னை நினைத்தே செய்வோம்.

அக்கா! நீ இறைவன் திருவடியை அடைந்ததிலிருந்து உன்னை நினைக்காத நேரமில்லை; நாளில்லை. ஆனால், உன்னோடு ஆத்மார்த்தமாகப் பேசிப் பிரார்த்தித்துக் கொள்ள இன்று தான் அவகாசம் கிடைத்தது. உனக்கு எல்லாம் தெரியும் நான் சொல்லவேண்டியதில்லை. நீ தான் எல்லாவற்றையும் ஆவி ரூபமாயிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறாயே உன் இறுதிச் சடங்குக்கு வந்திருந்த உற்றாரும் உறவினரும் போக இவ்வளவு நாட்களாயின. அம்மா கூட தேற்றுத்தானே போனார்கள்? கருமாந்திரம் ஆன பின்னர், உன் சகோதரிகளும் சகோதரர்களும் செய்த அட்டகாசங்களையும், பேசிய பேச்சுக்களையும் இப்போது, நினைத்துப்பார்த்தாலும் என் உடல் விதிர்ப்புறுகிறது. அக்கா!.. நீ அணிந்திருந்த நகை நட்டுகளையும் துணிமணிகளையும் கேட்டு, பணங்கேட்டு அத்தானை எத்தனை தொல்லைப்படுத்தி, விட்டார்கள்? எப்படியும் இங்கிருந்து முடிந்தவரை கிடைக்கக் கூடியவைகளையெல்லாம் சுருட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்றல்லவா சாகஸங்கள் எல்லாம் செய்தார்கள்? தங்கள் சகோதரிக்கு இவ்வளவு பிள்ளைகள் இருக்கின்றனவே! அவர்கள் முன்னேற வேண்டாமா? அனுபவிக்கவேண்டாமா? என்ற எண்ணமே கிஞ்சித்தும் இருந்ததாகத் தெரியவில்லையே! இது தான் சமயமென்று அவர்கள் அத்தானைப் பிய்த்துப் பிடுங்கியதைப் பார்த்தபோது தானே, உயிர் பிரியும் சமயத்தில் உடன் பிறந்தாரைப்பற்றி நீ வெளியிட்ட அபிப்பிராயம் எவ்வளவு உண்மையானதென்று தெரிந்தது? அவர்களுடைய பேச்சையும் செயலையும் கவனித்த பிறகுதான் என் மீது எவ்வளவு பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது? நீ கட்டளையிட்டுச் சென்றவாறு, என் கடமையை எவ்வளவு கண்ணுங் கருத்துமாகச் செய்யவேண்டும்? என்பதை என்னால் உணர்ந்து கொள்ளமுடிந்தது.

அக்கா! நீ என்னிடம் வைத்துள்ள முழு நம்பிக்கையை நான் ஒரு சிறிதும் பொய்யாக்க மாட்டேன், நீ எனக்கு விதித்துச் சென்ற கடமையை நிறைவேற்றும் விஷயத்தில் கடுகளவும் பிசகமாட்டேன். ஆனால், நீ எனக்கு அதற்குரிய வலிமையைத் தந்து கொண்டிருக்கவேண்டும். எனக்குத் தோன்றாத் துணையாயிருந்து எல்லா விஷயங்களிலும் வழி காட்டி யுதவவேண்டும் அத்துடன் சுற்றத்தாரும் அக்கம் பக்கத்தில் சூழ்ந்திருப்பவர்களும் பொறுமை, பொச்சரிப்பு காரணமாகப் பேசும் பழிப்புப் பேச்சுகளையும், சுமத்தும் வீண் பழிகளையும், அபவாதங்களையும் தாங்கிக்கொள்ளும் சக்தியை எனக்கு அளிக்கவேண்டும்.

இழவுக்கு வந்தவர்கள் பலர் அதிலும் உன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்-முக்கியமாக உன் சகோதரிகள் என்னைப் பற்றி மறைவிலும் நேரிலும் எவ்வளவு கேவலமாகப் பேசினார்கள் என்பது உனக்குத் தெரியும். நீ எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டுதானே இருந்தாய்? அப்பப்பா! அதை நினைத்தாலே உடம்பு கிடுகிடுக்கிறது; நெஞ்சு நடுக்கங் கொள்கிறது இந்த இழிமொழிகளைக் கேட்கச் சகிக்காமல், நான் அம்மாவுடன் ஊருக்குப் போய்விடலாம் என்றுகூட நினைத்தேன். ஆனால் அம்மா அதற்கு இசையவில்லை. மற்றவர்களைப் போல் தாமும் அக்கா குடும்பத்தை நிராதரவாக விட்டுவிட்டுப் போவது சிறிதும் நியாமில்லை என்று எடுத்துச் சொன்ன பிறகுதான் உணர்ச்சி தாங்காமல் நான் புரிய இருந்த தவறு புரிந்தது. அத்துடன், அக்கா நீ கடைசி காலத்தில் எனக்கு இட்ட கட்டளையையும் நான் உனக்களித்த வாக்குறுதியையும் நினைத்துக் கொண்டேன். யார் என்ன சொன்னாலும் பொருட்படுத்தாமல் என் கடமையைச் சரி வரச் செய்து உன் குடும்பத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று முன்னைவிட அதிகமாக உறுதி கொண்டேன்.

அக்கா! நீ எங்களை விட்டுப் பிரித்து போகும் சமயத்தில் மொழிந்த ஒவ்வொரு மொழியையும் நினைத்துப் பார்த்தால் என் உடம்பு புல்லரிக்கிறது. "இது உன் வீடு; நீதான் இக் குடும்பத்தின் தலைவி; இங்கிருப்பவர்கள் உன் பராமரிப்பில் இருப்பவர்கள். இவர்களை உன்னிடத்தில் ஒப்படைத்துச் செல்கிறேன்" என்று கபம் தொண்டையை அடைக்கும் நிலையிலும் குழறியபடியே கூறிய சொற்கள் என்றும் என் நெஞ்சத்தில் நிலைத்திருக்கும். உன் ஸ்தானத்தில் நீ என்னை வைத்து, விட்டுச் சென்றிருக்கிறாய். ஆனால் அக்கா! நான் அதற்கு ஒரு சிறிதும் அருகதையுடையவள் அல்ல. நீ ஆவியாக மாறிவிட்டாலும் நீதான் இந்த இல்லத்தின் அரசி, தலைவி; ஆதலால், இந்தக் குடிலையே உன் கோவிலாகக் கொண்டு இங்கேயே நிலைத்திருந்து உன் குடும்பத்தையும், என்னையும் பாதுகாத்து வரவேண்டும். உன் ஏவல்படி நான் பணிப்பெண்ணாக இருந்து அத்தானுக்கும் பிள்ளைகளுக்கும் பணிபுரிந்து வருவேன். இக் குற்றேவலில் எக்குறையும் நேராதவாறு, தவறு ஏற்படாதவாறு நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னதான் வயதானாலும், மனைவியை இழந்திருக்கும் ஆண்பிள்ளை இருக்கும் வீட்டில் பருவப்பெண்ணொருத்தி அதிலும் இளமையிலேயே விதவையாய் விட்ட ஒரு பெண் - இருந்து குடும்பம் நடத்துவது சரியேயல்ல' என்று பலர் சொல்லுவதில் நியாயமிருக்கிறது; உண்மையுமிருக்கிறது. ஆனாலும், இருந்தாக வேண்டியிருக்கிறதே! என்ன செய்வது? எனவே, யார் என்ன சொன்னாலும் என் முன் நிற்கும் கடமையைச் செய்வதில் நான் சிறிதும் பின் வாங்கமாட்டேன். உனக்குக் கொடுத்துள்ள உறுதி மொழியிலிருந்து ஒரு சிறிதும் பிசகமாட்டேன். எந்தவிதமான அபவாதமும் களங்கமும், கெட்ட பெயரும் வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். உனக்காக - உன் குடும்பத்துக்காக - எதை ஏற்கவும் நான் துணிந்துவிட்டேன்.

ஆனால் அக்கா! உனக்கு ஒரு சிறு வேண்டுகோள். தெய்வமாய்விட்ட உன்னிடம் ஒரு வரம் வேண்டுகிறேன். இளம் பருவங்காரணமாக என் உள்ளத்தில் இன்ப நினைவு எப்போதேனும் தப்பித் தவறி ஏற்படக் கூடும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் தவறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்த முடியும். நானும் மனிதப் பிறவி தானே; மானிட ஜன்மத்துக்கு இயற்கையாகவுள்ள குற்றங்குறைகளும் பலவீனங்களும் எனக்கும் இருக்கும். ஆதலால், சந்தர்ப்ப உணர்ச்சிக்கோ, சூழ்நிலைக்கோ நான் அடிமையாய் விடாமல் என்னை நீ பாதுகாக்க வேண்டும். நான் எளிதில் அவ்வித அவல நிலைகளுக்கு ஆளாக மாட்டேன் இங்கு வந்த புதிதில் தற்செயலாக நிகழ்ந்துவிட்ட ஒரு சிறு தவறுதலுக்கே நான் அடைந்த மன வேதனையும், தண்டனையும் ஜன்ம ஜன்மத்துக்கும் மறக்காதே! ஆகையால் நான் தவறு புரிய மாட்டேன். தவறுவதற்கான சூழ்நிலைக்கு எப்போதும் இடம் அளிக்கமாட்டேன். என் உடம்பையும், உள்ளத்தையும் அவ்வளவு தூரம் ஒறுத்து மரத்துப் போகும் படியாகப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆனாலும், அக்கா! ஒருவேளை என்னை அறிந்தோ அறியாமலோ தவறு நேர்ந்தால் அக்காலத்தில் நீ என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டும். அக்கா! பிழை புரியாதவாறு தடுத்துப் பாதுகாக்க வேண்டும். தெய்வமாக நீ சாந்நித்தியங் கொண்டுள்ள இந்த வீட்டில் தவறு நேரமுடியாது. எங்கும் கண்ணுங் காதுமாயுள்ள உன்னையறியாமல் இங்கு ஒன்றும் நடக்காது நடக்க யாருக்கும் துணிவு ஏற்படாது. அத்தானைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. அவர் உத்தமர்; பெரிய மனிதர் நான்தான் எல்லாவற்றிலும் சிறியவள்; சிறுமையுடையவள், என்னைத்தான் நீ கண்காணித்து வரவேண்டும். நாள் தவறினாலும் நான் உன்னைக் கோடித்து வருவதிலிருந்து ஒரு பொழுதும் தவறமாட்டேன், அக்கா!"

மங்கையின் பேதை நெஞ்சத்திலிந்து வெளிவந்த இப் பிரார்த்தனை வாசகங்களைச் செவியேற்ற சதானந்தம் பிள்ளையவர்கள் உள்ளம் உருகிப் போனார். அம்மன நெகிழ்ச்சி கண்ணீராக வெளிவந்து கொண்டிருந்தது. அவருடைய வாய் மெல்ல முணுமுணுக்கத் தொடங்கியது.

மங்கை, உன்னை என்னவோ என்று நினைத்திருந்தேனே! நீ எவ்வளவு பெரியவள்? நீ உன்னைச் சிறியவள்; சிறுமையுடையவள் என்று சொல்லிக் கொள்ளுகிறாயே! நீ வயதில் சிறியவளாயிருக்கலாம். நல்ல அறிவிலும் உயர் குணத்திலும், ஒழுக்கத்திலும் பெரியவளாக அல்லவா இருக்கிறாய்? நீ சாதாரணப் பெண்ணல்ல; அபூர்வப் பெண், இத்தகைய பெண்ணரசியான நீ எங்கள் குடும்பத் தலைவியாகவும் செவிலித்தாயாகவும் வாய்த்தது எவ்வளவு பெரும் பேறு? குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய தியாகஞ் செய்திருக்கிறாய்? நீ உன் வாழ்க்கையையே அர்ப்பணித்து விட்டாயே அது மட்டுமா நீ எங்கள் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன் வந்திருப்பதனால் உனக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தையும், பழியையுங்கூடப் பொருட்படுத்தாமல், அல்லவா உன் வாழ்வை எங்கள் குடும்பத்துக்கு ஒப்படைத்து விட்டாய்? நீ எங்களைப் பராமரிப்பதற்காக, எங்கள் குடும்ப நலனைப் பாதுகாப்பதற்காக உனக்கு ஏற்படக்கூடிய எத்தகைய அவப்பெயரையும் அபவாதத்தையும் ஏற்கவல்லவா துணித்து விட்டாய்? இது சாமானியமாக நினைத்துப் பார்க்கக்கூடியதா? ஒரு பெண் எதையும் தியாகஞ் செய்ய முன் வருவாள்; ஆனால், அவள் தன் வாழ்வைத் தியாகஞ் செய்ய முன்வர மாட்டாள். தன் வாழ்க்கைக்கு ஏற்படக் கூடிய களங்கத்தை, தன் கற்பைப் பற்றியே பிறர் சந்தேகத்துப் பழி பேசக்கூடிய கேவல நிலையை உண்டாக்கிக் கொண்டு தியாகஞ் செய்யத் துணிவு கொள்ளமாட்டாள். அத்தகைய அரும்பெரும் காரியத்தை நீ எங்கள் குடும்பத்துக்காக, எங்களுடைய குடும்பத்தைக் கண்காணித்துப் பாதுகாப்பதற்காக, செய்திருக்கிறாய். இதற்காக நானும் என் பிள்ளைகளும் உனக்கு எவ்வளவோ கடமைப்பட்டிருக்கிறோம். இந்த நன்றிக் கடனை நாங்கள் எப்படி உனக்குத் திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை. நீ எங்களை - எங்கள் குடும்பத்தை வாழ்விக்க வந்த குலதெய்வம் என்றே 'நான் மதிக்கிறேன். நாங்கள் உன்னைத் தெய்வப் பாவையாக வைத்தே வழிபட்டு வருவோம்.

மங்கை! நீ உடுத்திருக்கும் சுத்த வெள்ளைப் புடவையை போல, உன் உள்ளமும் தூய்மையாயிருக்கிறது. வாக்கும் துல்லியமாயிருக்கிறது. களங்கமும் குற்றமும் கற்புக் கனலியான உன்னை நெருங்க அஞ்சும்; நீ பெண்களிலேயே மிக நல்லவள்; நற்குணமும் நல்லொழுக்கமும் வாய்த்தவள், நீ தும்பைப் பூ போன்று துல்லியமானவள்; தூய்மையானவள். செடி கொடிகளில் எத்தனை எத்தனையோ வண்ண வண்ண மலர்கள் விதவிதமாக மலர்கின்றன, ஆனால் அவைகளில் மிகச் சிலவே வெண்ணிறமுடையனவாக இருக்கின்றன. அவ் வெண்ணிறப் பூக்களிலும் மல்லிகை, முல்லை போன்றவைகளையே மக்கள் விசேஷமாக விரும்பிச் சூடிக் கொள்ளுகிறார்கள், மல்லிகை, முல்லை வகைகளைப் பார்க்கையில் தும்பைப்பூ சிறிது - மங்கலான வெண்ணிறமுடையது தான்: தாவரங்களில் தாழ்வாக உள்ள சிறு செடிகளில் பூப்பவை தான் தும்பைப்பூ ஆனால், மக்களிடையே இந்தத் தும்பைப் பூவுக்கும் உள்ள மதிப்பும், பெயரும் மல்லிகை முதலிய வாசனை மிகுந்த மலர்களுக்குக்கூடக் கிடையாது. வெண்மையான பொருளை, வெண்ணிற ஆடையைப் பார்த்தால், தும்பைப் பூப்போல் துல்லியமாக இருந்கிறது; தும்பைப் பூப்போலத் தூய்மையான வெள்ளை நிறமுடையதாக இருக்கிறது; என்று பாராட்டுகிறார்களே தவிர, மல்லிகையைப் போல, முல்லையைப் போல, மற்ற மற்ற பூக்களைப் போல் இருக்கின்றன என்று யாருஞ் சொல்வதில்லை.

நான் இதைப் பற்றிச் சித்தித்துப் பார்ப்பதுண்டு தும்பைப்பூ, மல்லிகை முல்லை முதலிய பூக்களைப் போல, வெண்ணிற முடைய தல்ல; வாச மிகுந்தது மல்ல. அப்படியிருக்க, நறுமண மிக்க வெண்ணிற மல்லிகை முதலிய மலர்களைவிட, தும்பைப்பூ மக்களிடம் மதிப்பு எப்படிப் பெற்றது? என்று சமயம் ஏற்படுங் காலங்களில் எண்ணிப் பார்ப்பதுண்டு. மல்லிகை முல்லை முதலிய மலர்களின் நறுமணம் மக்களை மயக்கக் கூடியது ; மோகத்தை யுண்டாக்குவது; மூக்கைத் துளைத்து உட்புகுந்து உள்ளத்தில் கிளு கிளுப்பையும் உடம்பில் ஒருவிதக் கிறுகிறுப்பையும் உண்டாக்கக் கூடியது. தும்பைப் பூவின் ஒருவித மென்மையான வாசம் மோந்து பார்ப்போரை மயக்காது; அதற்குப் பதிலாக மயக்கத்தைப் போக்கும்; அதாவது மக்களை-முக்கியமாக மழலைச் செல்வங்களான குழந்தைகளைப் படிக்கும் சிற்சில நோகளைப் போக்கி உடம்பைக் குணப்படுத்த இது உதவுகிறது. ரம்பைப் பூவின் சாறு குழந்தைகளுக்கு அருமருந்து. ஔஷத மலிகைகளில் ஒன்றாகத் தும்பைப்பூ இருப்பதால் தான் பற்றப் பூவுக்கு இல்லாத மதிப்பு இதற்கு இருக்கிறது.

தும்பைப்பூ போன்றவள் என்று நான் மதிப்பதற்கு இதுதான் காரணம், எத்தனையோ மங்கையர் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களில் பலர் தங்களுக்குள்ள அழகாலும் பணி ஒப்பனைகளாலும் ஆடவரை மயக்குந் தன்மையுடையவரா யிருக்கின்றனர், நீயும் அந்த அழகு மகளிரைப் போல அழகுடையவள்தான் : ஆனால் உன் அழகு ஆண்களை மயக்கக் கூடியதல்ல, உன் அழகில் பகட்டு இல்லை: படாடோபம் இல்லை. வீடுகளில் தொட்டிகளில் பதியம் வைத்து வளர்க்கப்படும் பட்டு ரோஜாவுக்கும், காடுகளில் இயற்கையாக வளர்ந்து பூக்கும் காட்டு ரோஜாவுக்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா! அதுபோலத்தான் உனக்கும்

- களிரைப் போல் பருக்கின்றனர். வரை மயக்குந் மற்ற அழகிய நங்கையருக்கும் உனக்கும் வேறுபாடு இருக்கிறது. அழகு வாய்ந்த பெண்கள் சிலர் தங்கள் செயற்கை அலங்காரங்களால் மல்லிகை, முல்லைகளைப் போல, ஆண்கனை மயக்குகின்றனர். ஆனல் நீயோ தும்பைப் பூப்போல யாரையும் மயக்கவில்லே. உன் இளமையும் அழகும் உன்னிடமுள்ள கற்பு எனும் பொற்பினால் பார்ப்பவர்களை மனங்குவிந்து வணங்கச் செய்கின்றனவே யொழிய, உள்ளக் கிறு கிறுப்பை உண்டாக்கவில்லை. இப்போது நீ தரித்திருக்கும் பரிசுத்தமான வெண்ணிற ஆடை உன்னை ஒரு தேவதை போல அல்லவா காட்சியளிக்கச் செய்கிறது? வானத்தினின்றும் இழிந்து வந்துள்ள தெய்வப் பெண் போலல்லவா எண்ணச் செய்கிறது? காவல்லியமான இத்தூய வெள்ளாடைக்குள் நீ ஒரு பளிங்குப் படிவம் போல் விளங்குகிறாய். என் உள்ளத்தில் உன்னே நான் தெய்வமாக வைத்துவிட்டேன். ஆம், நான் அனுதினமும் வணங்கி வழிபடத்தக்க தெய்வம் நீ! நான் உன்ன வணங்குகிறேன்.

பிள்ளையவர்களுடைய நா மெல்ல உள்ளத்துக்குள் பேசித் கொண்டே போனது. அவரையறியாமல் அவர் கரங்கள் கூப்பின. அவர் உடம்பு ஒரு குலுங்கு குலுங்கி நின்றது. மங்கை திலகவதியின் உருவப்படத்தின் முன் கும்பிட்டு விழுந்து வணங்கி எழுந்திருப்பதற்கு முன், தாம் வந்த சுவடு தெரியாமல் அவ்விடத்தை விட்டுப் போய்விட வேண்டுமென்ற எண்ணத்தோடு, கண் ஆனது கைக்குட்டையால் துடைததுக் கொண்டு அவர் ஓசையெழாதவாறு மெல்ல அடிவைத்து நடந்து விரைந்து வெளியே போகலாஞர்.

முற்றுப் பெற்றது