தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 2

2

மேன்மாடியில் முன் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறே பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்தார் சதானந்தம் பிள்ளை. தங்கள் பங்களாவுக்குள் ஏதோ வண்டி வரும் சப்தங் கேட்டு விட்டு, யார் வருகிறது என அறிய அவர் எழுந்து முன்வந்து பார்த்தார். அவர் பார்வையில் முதலில் பட்டது வண்டியிலிருந்து அப்போது தான் இறங்கி நின்ற மங்கையர்க்கரசி தான். முன்பின் தெரியாத யாரோ ஒரு இளம் பெண்ணைக் கண்டதும் அவர் வியப்புற்று மீண்டும் பார்க்கலானார். அதே சமயத்தில் மங்கையர்கரசியும் தற்செயலாக மேலே நோக்க இருவர் கண்களும் சந்தித்துக் கொண்டன. மங்கையர்க்கரசி நாணத்தால் உடனே தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவரும் ஒரு பெண்ணை - அறிமுகமில்லாத ஒரு மங்கையை நோக்குவது சரியல்ல என்ற எண்ணத்தோடு தம் பார்வையைத் திருப்பிக் கொண்டார். ஆனால், அவர் கண் வாயிலாக நெஞ்சத்தில் பதிவாகிய அவள் உருவம் சோக சித்திரமாக அவருடைய மனக்கண் முன் பிரதிபலித்தது. ஒரு கணத்தில் அவருடைய நெஞ்சத்தை நெகிழ்ந்து உருகச் செய்துவிட்ட அவ்வுருவத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டுமென்று அவருடைய மனதில் ஆவல் எழுந்தது. தாம் உட்கார்ந்திருந்த இடத்துக்குத் திரும்பிய அவர் மீண்டும் நடந்து மெல்லத் தலையை நீட்டிப் பார்க்கலானார். அச்சமயம் தம் மனைவியான திலகவதி அவர்களை வரவேற்று உபசரித்தவாறு உள்ளே அழைத்துச் செல்வதைக் கண்டு, 'அட! குமரியும் கிழவியுமாகவல்லவா வந்திருக்கிறார்கள். யார் இவர்கள்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? இப்படி யாரும் வருவார்கள் என்று அவள் சொல்லவில்லையே!' என்று அவர் பலவிதமாக எண்ணினார்.

அவர் மங்கையர்க்கரசியை இரண்டாவது முறை பார்த்ததானது நிழலுருவத்தின் (போட்டோ ) மீது ஓவியனொருவன் வண்ணந் தீட்டி நன்றாக விளங்கச் செய்தது போலாய் விட்டது. மங்கையர்க்கரசியின் உருவம் அவ்வளவு அழுத்தமாக அவர் உள்ளத் திரையில் பதிந்து விட்டது. "இளமை கொழிக்கும் எழில் தோற்றம்! ஆனால் சோபையிழந்த மதிமுகம். வெள்ளைக் கலையுடுத்தி வாணி போல் விளங்கும் அவ்வனிதையின் வதனத்தில் வாட்டம் ஏன்?" அந்தச் சில விநாடிகயில் அவளைக் குறித்து அவருடைய மனம் என்னென்னவோ கேள்வியெல்லாம் அவரைக் கேட்டு நச்சரித்து விட்டது. தான் பார்த்த பெண் - தன் உள்ளத்தைக் கவர்ந்தபெண் - அமங்கலி - விதவை - என்று அறிய அவருக்கு வெகு நேரமாகவில்லை. ஐயோ! இவ்வளவு இளவயதில் இந்த அலங்கோல வைதவ்யம்! பாழாய்ப் போன நம் நாட்டுக்கு இது ஒரு பெருமை போலும்" என்று அவர் மனம் அங்கலாய்த்தது.

'இந்தப் பெண் யார்? உடன் வந்திருக்கும் கிழவி யார்! திலகவதிக்கு என்ன வேண்டும்? எங்கிருந்து வந்திருக்கிறார்கள். என்ன காரியமாக வந்திருக்கிறார்கள்?' என்று கேள்விகளைச் சரமாரியாகப் போட்ட அவர் உள்ளம் அடுத்த கணம், 'இதென்ன பைத்தியக்காரக் கேள்வி? சுற்றத்தார் சொந்தக்காரர்கனா யிருந்தால் சாதாரணமாக வருவார்கள் தான். காரியமில்லா விட்டால் உறவினரைப் பார்க்க வரக் கூட்டாதோ?' என்று பதில் கேள்வி போடலாயிற்று.

இவ்விதம் மன அரங்கத்தில் நடக்கும் போரைக் வனித்துக் கொண்டிருந்த சதானந்தம் பிள்ளையை, "ஊரிலிருந்து யாரோ வந்திருக்கிறாங்க, நீங்கள் பார்த்தீங்கள அப்பா?" என்று கணேசன் வந்து கேட்ட கேள்வி திடுக்கிட்டு விழிப்புறச் செய்தது.

"யாரு ராஜா!"

"யாரோ பாட்டியாம்; சின்னம்மாவாம், அம்மா சொன்னாங்க."

"பாட்டியா?" - என்று யோசனையோடு கேட்ட சதானந்தம் பிள்ளை, பாட்டியுடன் வந்திருப்பது யாரென்று சொன்னூர்கன் இன்னம்மா என்று?..." என்று கேட்டார்.

"ஆமாம்' என்றான் சிறுவன்.

சதானந்தம் பிள்ளை மீண்டும் யோசனையில் ஆழ்ந்தார். தந்தை ஏதோ சிந்தித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கணேசன் அவ்விடத்தை விட்டு வெளியேற முயன்றான். இச்சமயத்தில் கோகிலா அங்கு வந்து, "அப்பா; அம்மா கூப்பிடறாங்க, பலகாரம் சாப்பிடறதுக்கு" என்று கூப்பிட்டாள்.

"என்னம்மா!" என்று துணுக்குற்றுக் கேட்ட சதானந்தம் பிள்ளை, "ஓ! சிற்றுண்டி சாப்பிடக் கூப்பிடுகிறார்களா? இதோ வந்து விட்டேன், கோகிலா!" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.

கூடத்தில் சிவகாமியம்மாளுடனும், மங்கையர்க்கரசியுடனும் ஏதோ பேசிக் கொண்டிருந்த திலகவதி, கணவன் வருகையைக் கண்டதும், "வாங்க, யாரு வந்திருக்கிறதுன்னு பார்த்தீங்களா?..." என்று புன்னகையுடன் கேட்டாள்.

"யாரு? தெரியவில்லையே! நம்ம ஊரிலிருந்து வந்திருக்கிறார்களா?" என்று அவர்களை ஒருவிதமாகப் பார்த்தவாறு கூறினார். இதுதான் சமயமென்று அவருடைய கண்கள், மங்கையர்க்கரசியை நன்றாகப் பார்க்கலாயின. "அவர்களுக்குப் பலகாரம் கொடுத்தையா? முதலில் அதைக் கவனி. மற்றதெல்லாம் அப்புறம் பேசலாம்" என்று உபசாரமாகக் கூறினார்.

மாடிப் படியிலிருந்து யாரோ - இறங்கி வரும் காலடியோசையைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த மங்கையர்க்கரசி அக்காவின் கணவன் வருவதையறிந்து நாணிக் கோணித் தாயின் பின்னே ஒதுங்கி நின்றாள். அவள் கண்கள் மட்டும் அவர் பக்கம் சுழன்று கொண்டிருந்தன. இந்நிலையில், மனைவியின் பேச்சைச் சரியான வாய்ப்பாகக் கொண்டு சதானந்தம் பிள்ளையின் பார்வை தன்மீது விழுவதைக் கண்டதும், வெட்கத்தால் முகம் சிவக்கத் தலை கவிழ்த்துக் கொண்டாள்.

இதையெல்லாம் கவனியாத திலகவதி கணவனை வியப்பாக நோக்கி, “சித்தியைக் கூடவா தெரியல்லை உங்களுக்கு? வயதாக ஆக, மறதி அதிகமாய் விட்டதே!” என்றாள்.


“யாரு, சின்ன அத்தையா இது? அடையாளந் தெரிய வில்லையே! முன்னைவிட...” என்று பேச்சை மழுப்பி நினைவில்லாமையை மறக்க முயன்றார்.


“நான் எப்பவும் இருக்கிற மாதிரிதான் இருக்கிறேன், மாப்பிள்ளை! நீங்கதான் மிகவும் தளர்ந்துபோய் இருக்கிறீர்கள். தலையிலே நரைகூடத் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறதே!...”


“தாத்தாவாய் விட்டார் என்கிறீர்களா? சித்தி! கோகிலாவுக்கு இன்னும் இரண்டொரு வருஷத்திலே கல்யாணமாகி அவள் வயிற்றிலே பிள்ளை பிறந்தால், இவர் தாத்தா தானே!...”


மங்கையர்க்கரசி தவிர மற்றவர்களனைவரும், இவளுடைய நகைச் சுவையில் ஈடுபட்டனர். அவள் மட்டும் இதழ்களில் மலர்ந்த புன்னகையை உதட்டினால் மறைத்துக் கொண்டாள்.


“பார்த்து நெடுநாளாச்சு இல்லையா? அதனால்தான் திடீரென இனம் தெரியவில்லை, அத்தை!...” என்று சதானந்தம் பிள்ளை சமாதானம் சொல்ல முயன்றவாறு, “ஊரிலே எல்லோரும் செளக்கியந்தானே! மைத்துனப் பிள்ளை எப்படியிருக்கிறார்?...” என்று குடும்ப நலம் விசாரித்தார்.


“எல்லோரும் செளக்கியந்தான்” என்று சிவகாமியம்மாள், ஒரே வார்த்தையில் சுருக்கமாகப் பதிலளித்தாள்.


திலகவதி மங்கையர்க்கரசியின் அருகு போய் நின்று, “இவள் நம்ம சித்தி பெண்ணு. அஞ்சு வருஷத்துக்கு முன்னே மாயவரத்திலே ஒரு கலியாணத்துக்குப் போனோமே! ஞாபகமிருக்கா? மங்கையின் கலியானத்துக்குத்தான்” என்றாள். “அப்படியா?” என்று அசட்டுச் சிரிப்புடன் கேட்டார். அவர் மனம், “ஐயோ, அதை ஏன் இவள் இப்போது ஞாபகப்படுத்துகிறாள்” என்று அங்கலாய்த்தது.


சிவகாமியம்மாள், “உங்களுக்குக் கல்யாணம் நடக்கும் போது மங்கைக்கு மூணு வயதிருக்கும்...” என்றாள்.


“அப்படியா? கலியாணத்தின்போதுகூட நான் சரியாகப் பார்க்கவில்லை...” என்றார் சதானந்தம்.


“மங்கை பெரியவளாகி விட்டாளோ இல்லையோ? அதுதான் அத்தானைப் பார்த்து வெட்கப்படுகிறாள்... சிறுசாயிருக்கும்போதே உங்களைப் பார்த்தால் ஒடியொளிவாள். இப்போது சொல்லணுமா?” என்று கூறிய திலகவதி, மங்கையர்க்கரசியின் தோள்களை அன்புடன் பற்றி, “அத்தானைக் கண்டால் ஏன் இப்படி கூச்சப்படுகிறாய்? உன்னை என்ன அவர் விழுங்கியா விடுவார்?...சும்மா இப்படி வா மங்கை!” என்று சொன்னாள்.


சிவகாமியம்மாள், “அவளும் பெரியவளாகிக் கலியாணங் கட்டிக்கொண்டு வாழ்ந்து தீர்த்து விட்டாள் இல்லையா?” என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொல்லிப் பின் “அவள் இந்த நிலைக்கு வந்தபின், இப்போது தானே உங்களையெல்லாம் பார்க்கிறாள்? அதுதான் இவ்வளவு சங்கோஜப்படுகிறாள்?” என்று ஏதோ சொல்ல வேண்டும் எனச் சொன்னாள்.


“இந்தப் பெண்களுக்கே புத்தி கிடையாது என்று பெரியவர்கள் தெரியாமலா சொன்னார்கள். எந்தச் சமயத்தில் எதைச் சொல்லணும்? எதைப் பேசணும்? என்று தெரியவில்லையே?...” என்று சதானந்தம் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

தாயின் அசட்டுப் பேச்சு மங்கையர்க்கரசியை ஒரு கணத்தில் துயரத்தில் மூழ்கடித்து விட்டது. அவள் குமுறி வரும் துக்கத்தை மறைக்க வெகுபாடுபட்டாள். மற்றவர்கள் அவளுடைய அப்போதைய நிலையை உணரவில்லை. மானத் தத்துவத்தைத் தமது பரந்த அனுபவத்தால் ஒருவாறு உணர்ந்திருக்கும் சதானந்தம் பிள்ளை அவளுடைய துயர நிலையை ஒரு நொடியில் உணர்ந்து கொண்டார். ஆகவே, அவர் அவளை மேலும் சங்கடமான நிலையில் வைக்காமல் தவிர்க்க வேண்டி, “சரி, திலகம்! அவர்களுக்கு ஆவனவற்றைக் கவனி. நான் காபி சாப்பிட்டுவிட்டுச் சற்று வெளியே போக வேண்டும்” என்று கூறியவாறே மெல்ல அவ்விடத்தை விட்டுப் போகலானார்.


“சித்தி, இருங்கள். நான் போய் மாப்பிள்ளையை அனுப்பிவிட்டு வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கணவன் பின்னே செல்ல அடியெடுத்து வைத்த திலகவதி, “கோகிலா, இங்கே வா! பாட்டியையும் சித்தியையும் கூட்டிக்கொண்டு போய் பலகாரம் கொடு, இதோ வந்துவிடுகிறேன்” என்று சொல்லிச் சென்றாள்.


எதிர் அறையிலிருந்து மங்கையர்க்கரசியை பார்த்துக் கொண்டிருந்த கோகிலா உடனே வெளியே வந்து, “வாங்க சித்தி, வாங்க பாட்டி” என்று புன்முறுவலுடன் கூறியவாறு, மங்கையர்க்கரசியின் கரத்தை அன்புடன் பற்றினாள்.


“என்ன மங்கையர்க்கரசி, குழந்தை கூப்பிடுகிறாள். எங்கோ கவனமாய் நின்றிருக்கிறாயே! வா போகலாம்” என்று சிவகாமியம்மாளும் அழைக்கலானாள்.


துயரத்தில் உள்ளத்தைத் தோயவிட்டுத் தன்னை மறந்திருந்த மங்கையர்க்கரசி ஸ்பரிசத்தாலும் பேச்சாலும் உணர்வு பெற்றாள். இமைகளில் பணித்திருந்த கண்ணீரை முந்தானையால் மெல்லத் துடைத்துக் கொண்டே கோகிலாவுடன் போகலனாள்.