தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 3

3

செந்தோம் மாதா கோவில்மணி நான்கடித்தது. அப்போதும் வெய்யிலின் கொடுமை கணியவில்லை. செந்தோம் ஹைரோட் பாரிசத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும் கடற்காற்று வரப்பிரசாதம் போல் வீசிக் கொண்டிருந்தது. ஜன நெருக்கம் அதிகமில்லாத அந்தப் பகுதியில் அந்நேரத்தில் நிலவிய அமைதி மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாயிருந்தது. மஞ்சள் வெய்யில் பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்த நீலக்கடலின் அழகில் திளைக்கவோ அல்லது அக்கடல் நீரில் வெள்ளித் துண்டங்கள் போல மின்னித் துள்ளிக் குதிக்கும் மீன்களைக் கொத்தித் தின்னவோ அப்பிரதேசத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கடற்பறவைகள் இசைத்த இசைகான அமுதமாயிருந்தது.

உடம்பு அசதி காரணமாக உறங்கிக் கொண்டிருந்த திலகவதியை மாதா கோவில் மணி அடித்த ஒசை தட்டி எழுப்பிவிட்டது. கட்டிலைவிட்டு இறங்கியவள், “மங்கை, மங்கை” எனக் கூப்பிட்டுக் கொண்டே எழுந்து வரலானாள். ஆனால், அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை.

“மங்கை எங்கே போனாள்? ஒரு வேளை உறங்குகிறாளா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்டே நடந்தாள்.

குழாயடியில் பற்றுச் சாமான்களைத் துலக்கிக் கொண்டிருந்த பணிப்பெண் எசமானி தானாகப் பேசிக் கொண்டு வருவதைக் கேட்டு, “அவங்க சமையக் கட்டில் இருக்காங்க, அம்மா” என்று கூறினாள்.

“ஓ! அப்படியா? காபி போடுகிறாய் போலிருக்கு” என்று மெல்லச் சொல்லிய திலகவதி குழாயண்டைபோய் முகத்தைக் கழுவிக்கொண்டு சமையலறைக்குப் போனாள்.

மங்கையர்க்கரசி அடுப்புக்கு முன் பிரமை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். திலகவதி வருவதை அவள் உணரவேயில்லை. காலடியோசைகூட அவளை விழிப்புறச் செய்யவில்லை. இந்நிலை திலகவகிக்கு ஒரே வியப்பை விளைவித்தது. ஆகவே அவள், “மங்கை, மங்கை” என்று மெல்லக் கூப்பிடலானாள். மூன்று நான்கு முறை அழைத்த பின் தான் மங்கையர்க்கரசி தன்னுணர்வு பெற்றாள். உடனே அவள் துணுக்குற்று பரபரப்புடன் முந்தானையால் கலங்கியிருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவளுடைய இச்செயல் திலகவதிக்கு மேலும் வியப்பையும் திகைப்பையும் அளித்தது.

“ஏன், மங்கை? அழுது கொண்டிருந்தாயா? என்ன?” என்று கேட்டாள் திலகவதி.

“வாங்க, அக்கா” என்று கூறிக் கொண்டே எழுந்து நின்ற மங்கையர்க்கரசி, “என்ன கேட்டீர்கள்?” என்றாள்.

“அழுது கொண்டிருந்தாற்போலிருக்கிறதே?”

“இல்லையே, அக்கா!” என்று கூறிக்கொண்டே வெளியே எரிந்து வந்துகொண்டிருந்த விறகைத் தள்ளுவது போலத் திரும்பிக் குனிந்து உட்கார்ந்தவாறு முகத்தை மறைத்துக் கொள்ளலானாள்.

“முகங்காட்டுகிறதே! ஏன் மறைக்கப் பார்க்கிறாய், மங்கை”

“அதெல்லாம், ஒன்றுமில்லை, அக்கா! அடுப்பை ஊதிய போது தீப்பொறி பறந்து வந்து கண்ணில் பட்டுவிட்டது. அதனால்தான்...”

திலகவதி அருகு சென்று இறங்கிக் குனிந்திருந்த அவளுடைய முகத்தைப் பிடித்து நிமிர்த்தி, “மங்கை, ரொம்ப சாமர்த்தியமாகப் பேசுகிறாயே! பட்டணத்துக்கு வந்து பழகிக் கொண்டாயா என்ன?” என்று புன்முறுவலோடு கூறினாள்.

மங்கைதுர்க்கரசியால் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை. “எழுந்திரு; மங்கை காபிக்கு இதற்குள் என்ன அவசரம்?” என்று கூறியவாறே திலகவதி மங்கையர்க்கரசியின் தோள்களைப் பற்றி எழும்பினாள்.

“குழந்தைகள் வரும் நேரமாய்விட்டதே, அக்கா? பஜ்ஜி போடலாமென்று...”

“இப்பத்தானே நாலடித்தது. அவர்கள் வர இன்னும் ரொம்ப நேரமிருக்கிறது, மங்கை. தண்ணிர்க் குடத்தை அடுப்பின் மேலே வைத்துவிட்டுவா, இப்படி!”

திலகவதி வற்புறுத்திச் சொல்லிய பின், மங்கையர்கரசியால் மீற முடியவில்லை. அவள் பின்னே பேசாமல் நடந்தாள்.

கூடத்துக்கு வந்ததும் திலகவதி ஆழ்ந்த யோசனையோடு மங்கையர்க்கரசியின் முகத்தைப் பார்த்தவாறு, “உட்கார், மங்கை” என்று கூறிக் கொண்டே அமர்ந்தாள்.

எதிரில் உட்காரப் போன மங்கையர்க்கரசி, திடீரென ஏதோ நினைத்துக் கொண்டவள்போல், “இரு, அக்கா ஒவல் போட்டுக் கொடுக்க மறந்துவிட்டேன். ஒரு நொடியில் கொண்டு வந்து விடுகிறேன்......” என்றாள்.

“பரவாயில்லை, அப்புறம் குடிக்கிறேன், நீ உட்கார்” என்று கூறி அவள் கையைப் பற்றி அமர்த்தினாள் திலகவதி.

வேறு வழியின்றி மங்கையர்க்கரசி உட்கார்ந்தாள். ஆனால் திலகவதியை ஏறிட்டுப் பார்க்க அவள் வெட்கப்பட்டாள்.

சில விநாடிகள் அவர்களிடையே மெளனம் நிலவியது. மங்கையர்க்கரசியின் முகத்தை ஊடுருவிப் பார்த்த திலகவதி, “மங்கை, என்னிடம் ஒளிக்காமல் சொல்லு, ஏன் நீ அழுது கொண்டிருந்தாய்...... ?” என்று கேட்டாள்.

“ஒன்றுமில்லை, அக்கா!”

“இல்லை; நீ ஏதோ மனதில் நினைத்துக் கொண்டு குமுறுகிறாய்?......” மங்கையர்க்கரசி தலை குனிந்துகொண்டாள்.

“மங்கை, உண்மையைச் சொல். உனக்கு இங்கு குறை ஏதேனும் இருக்கிறதா? அல்லது இங்கே இருக்க உனக்குப் பிடிக்கவில்லையா? அப்படி ஏதேனும் இருந்தால் நீ தாராளமாக என்னிடம் சொல்லலாம். நான் வித்தியாசமாக எண்ணிக் கொள்வேனோ? கோபித்துக் கொள்வேனோ? என்று பயப்படவேண்டியதில்லை...”

“என்ன அக்கா, ஏதேதோ சொல்கிறீர்களே?...”

“பின் என்ன? நீ எதுவும் சொல்லாமல் இருந்தால் நான் வேறு எப்படி எண்ணிக் கொள்வது?......”

“இங்கு எனக்கு ஒரு குறையும் இல்லை, அக்கா! அப்படி எனக்கு இங்கே இருக்கப் பிடித்தமில்லாமலிருந்தால் அம்மா ஊருக்குப் போனபோதே நானும்கூடப் போயிருப்பேனே!...”

“அதுதானே நானும் கேட்கிறேன்...இப்பச் சொல்லு மங்கை உன் துயரத்துக்குக் காரணமென்ன, சொல்லு; என்னால் அதைப் போக்க முடியுமா என்று பார்க்கிறேன். நான் உன் சகோதரியல்லவா? என்னிடம் எதுவும் சொல்லலாம். சங்கோஜப்படுவதற்கே நியாயமில்லை...”

“என் பேச்சை நம்புங்கள், அக்கா! இருந்தாற்போலிருந்து கண் கலங்கியது. காரணம் ஒன்றுமேயில்லை...”

மங்கையர்க்கரசி இவ்வளவு தூரம் சொல்லிய பிறகு மேலும் வற்புறுத்திக் கேட்க, திலகவதி விரும்பவில்லை. ஆகவே, “ஒரு வேளை ஊர் நினைவு வந்து வருந்தினயோ என்று கருதினேன்...” என்று கூறிப் பேச்சை முடிக்க முயன்றாள்.

“ஊரில் யார் இருக்கிறார்கள், அம்மாவைத் தவிர? அம்மா இப்பத்தானே போனர்கள்? இதற்குள் அவர்களை நினைப்பதற்கு என்ன..??” திலகவதி இடைமறித்து, என்ன அப்படிச் சொல்கிறாய்? மங்கை, உன் உடன் பிறந்த அண்ணன் இல்லையா? அருமை அண்ணியில்லையா? மற்றும் உற்றார் உறவினர்...'

மங்கையர்க்கரசி, அக்கா! உங்களை மிகவும் மன்ருடிக் கேட்டுக் கொள்ளுகிறேன். யார் பேச்சை எடுத்தாலும் தயவு செய்து அண்ணன் பேச்சை மட்டும் எடுக்காதீர்கள்! அந்தச் சண்டாளனால்தான்...'

சாந்தமே உருவமாக விளங்கிய மங்கையர்க்கரசி இவ்விதம் ஆத்திரமாகப் பேசுவதைக் கேட்டுத் திலகவதி பேராச் சரியத்தில் ஆழ்ந்தாள். மங்கை, மடத்தனமாகப் பேசி உன் மனதைப் புண்படுத்திவிட்டேன். மன்னித்து விடு.சித்தி விஷயத்தைச் சொன்னர்கள்; இந்தக் காலத்தில் உடன் பிறந்தவர்களைக் கூட நம்புவதற்கில்லை......போகட்டும்; உன்னைப் பிடித்த சனி விட்டது என்று எண்ணிக் கொள், இனிமேல் நீ யாதொன்றுக்கும் கவலைப்படாதே. உன் ஆயுசு முழுதும் இங்கேயே இருந்து கழித்துவிடலாம். நான் முன் னேயும் சொல்லியிருக்கிறேன். இன்றைக்கும் சொல்லுகிறேன். நினைவில் வைத்துக் கொள். என் மூச்சு இருக்கும் வரைக்கும் உனக்கு யாதொரு குறைவும் இருக்காது. ஏன்! அதற்கு அப்புறம்கூட உனக்குக் குறைவு இருக்காது என்று உறுதியாகச் சொல்வேன். உன் அத்தானும் மிக நல்லவர். பிள்ளைகளும் உதார குணமுடையவர்கள். இப்போதே அவர் கள் அனைவரும் உன்மீது மிகவும் பிரியமாயிருக்கிறார்கள். இனி மேலும் உன்மீது, அன்பு அதிகமாகுமே யொழிய, குறைவதற்கு இடமில்லை......ஆகவே, இது உன் வீடு, இங்கிருப்பது எல்லாம் உன்னுடைய சொத்து; ஆதலால், உன இஷ்டப்படி சுதந்திரமாக எதுவும் செய்யலாம். எப்படியும் உசிதம் போல் நடந்து கொள்ளலாம். உனக்கு ஏதாயினும் வேண்டுமென்றால் தாராளமாக என்னைக் கேள்; அல்லது அத்தானிடம் சொல்லு. இல்லை; பெரிய பிள்ளை சிவகுமாரனைக் கேட்கலாம். கூச்சப்படவேண்டாம். உனக்கு மனக்குறை புண்டா கும்படியாக......' என்று பரிவுணர்ச்சியுடன் பேசிக் கொண்டே போனாள்.

இச்சமயத்தில் கணேசன் புத்தகப் பை தோளில் தொங்கத் துள்ளியோடி வந்து திலகவதியின். நீண்ட பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அவன்.பின்னலேயே கோகிலா புத்தக அடுக்கைத் தூக்க மாட்டாமல் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

கணேசன் புத்தகப் பையைக் கழற்றி ஒரு மூலையில் தூக்கி எறிந்து விட்டு, சித்தி காபி' என்று கேட்டுக் கொண்டே ஓடி வந்தான்.

'பார்த்தாயா, மங்கை......! கணேசன் யாரைக் காபி கேட்கிறான்? என்னைக் கேட்டான, பார்த்தாயா? எல்லாப் பிள்ளைகளுமே... ...'

மங்கையர்க்கரசி வெட்கத்துடன் தலை குனிந்து பின் கணேசனப் பார்த்து, காபி போடலையே......” என்று கூறிச் சிரித்தாள்.

ஊஉம். பொய் சொல்றே, சித்தி!' என்று கூறிக் கொண்டே அவள்மீது தாவி அவளைச் சேர்த்துக் கட்டிக் கொண்டு, காபி கொடுத்தாத்தான் உன்னை விடுவேன், பலகாரம் கூடக் கொடுக்கணும். பசிக்குது சித்தி' என்று கொஞ்சலோடு சொன்னான்.

இதற்குள் கோகிலாவும் புத்தகங்களை வைத்து விட்டு வந்து, தாயின் பக்கத்தில் நின்றவாறே, மங்கையர்க்கரசியைக் கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இல்லை, கண்ணு, நிசமாகத்தான் சொல்கிறேன். காபி இன்னம் போடவில்லை" என்று கணேசன் கன்னங்களைச் செல்லமாகப்பற்றிக் கொண்டு சொல்லிய மங்கையர்க்கரசி, திலகவதி பக்கத் திரும்பி, அம்மாதான்......அவர்களைப் போய்ப் பிடித்துக்கொள்: விடாதே! என்று புன் சிரிப்போடு கணேசன் தலையையாட்டி, "அம்காவண்டை போன பிரப்பம்பழம் கெடைக்கும். அதெல்லாம் முடியாது. நீ தான் கொடுக்கணும், சித்தி. உன்னை விட மாட்டேன்......" என்று சொன்னான்.

இதைக் கேட்டு எல்லோரும் கொல்லெனச் சிரித்தனர். "பார்த்துக்கோ, மங்கை" என்ற திலகவதி, "சரி, சரி! கணேசா! சித்தியை விடு. உனக்கு ஒவல் போட்டுக் கொடுக்கச் சொல்கிறேன். தின்ன ஏதாயினும் வேண்டு மென்றால் பீரோவைத் திறந்து பழங்கள், கேக், பிஸ்கட் எல்லாம் இருக்கு. உனக்கு எது வேண்டுமோ, எடுத்துக் கொள். சித்திக்கு இங்கே வேலை இருக்கு. தொந்திரவு செய்யாதே, போ...' என்று சொன்னாள்.

சும்மா உட்கார்ந்திருக்கிறதுதான் வேலையா?...' என்று முனகிக் கொண்டே மங்கையர்க்கரசியை விட்டு எழுந்தான். கோகிலா, தம்பிக்குப் பட்சணம் எடுத்துக்கொடுத்து ஓவல் கலக்கிக் கோடு என்று கூறி அனுப்பினாள் திலகவதி. மங்கையர்க்கரசி கணேசனும் கோகிலாவும் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அவள் திலகவதி பக்கம் திரும்பி, ஏன் அக்கா! காபி போட வேண்டாமா குழந்தைகளே ஒவல் குடிக்கச் சொல்லி அனுப்பிவிட்டீர்களே! அடிக்கடி கேக்கும் ஒவலும் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகுமா? ஒவலும் பிஸ்கட்டும் வயிற்றைக் கட்டக் கூடியது என அத்தான் அடிக்கடி சொல் கிறாரே!......' என்று சொன்னாள்.

"அடிக்கடி எங்கே சாப்பிடச் சொல்கிறோம். இன்று ஒரு நாள் தின்னச் சொல்வதால் ஒன்றும் கெட்டுப் போகாது. ஒரு வேளை யாயினும் அதுவும் உனக்கு மனசு நன்றாயில்லாத இந்தச் சமயத்தில் நீ ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்றுதான் இவ்விதம் சொன்னேன்.” "இந்தப் பாழுங் கட்டைக்கு ஒய்வு வேறே வேண்டுமா?"

"ஒரு வயசுப் பொண்ணு வாயிலிருந்து வருகிற பேச்சாயில்லையே இது கிழங் கெட்டுகள் பேசுகிற விரக்திப் பேச்சு போலல்லவா இருக்கிறது?....."

"ஏதாயினும் வேலை செய்துகொண்டே இருந்தால்தான் மனசு ஒரு கட்டுக்குள் அடங்கியிருக்கிறது அக்கா இல்லா விட்டால்......"

மங்கையர்க்கரசி இடைமறித்துப் பேசிய இப்பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே திலகவதி பேசத் தொடங்கினாள், எனக்கென்னமோ உன் போக்கே பிடிக்கவில்லை. வந்ததிலிருந்து பார்க்கிறேன்; நன்றாக உண்டு உடுத்து, கட்டிக் கழிக்க வேண்டிய இந்த வயதிலே ஒரு வேளை சாப்பிடுவது, நார்மடிச்சீலை, வெள்ளைப் புடவை, அல்லது தோம்புப் புடவை உடுத்துவது, பாயைக் கூடப் போட்டுக் கொள்ளாது தரையில் படுப்பது போன்ற பைத்தியக்கார செயல்கள்.

மங்கையர்க்கரசி ஆச்சரியந் தாங்காமல், என்ன அக்கா, இப்படிப் பேசுகிறீர்கள், பட்டணத்திலே வந்து வாழத் தொடங்கிய பின், நம் திலாசார மெல்லாம் உங்களுக்குக் கொனஷ்டையாகத் தென்படுகிறதா?...'

வெளியுலக விவகாரமே தெரியாமல் கிராமாந்தரங்களில் கிணற்றுத் தவளைகள் போல் வாழ்ந்தோமே! அந்தக் காலத்திலே, இந்த ஆசாரமெல்லாம் சரியாயிருந்திருக்கலாம். இப்போது உலகம் போகிற வேகமான போக்கிலே காதை மூக்கை மூனியாக்கிக்கொண்டு சரியாக உண்ணுது உடுத்தாது வாழ்வது அநாகரிகம் என்றுதான் எனக்குத் தோன்று கிறது......'

"ஐயோ, அக்கா!"

"நான் தீர்மானித்து விட்டேன், மங்கை! நீ இனி மேல் நான் சொல்கிறபடிதான் நடக்கவேண்டும். அத்தானிடம் சொல்லியனுப்பியிருக்கிறேன், உனக்கு. நல்ல பார்ட்ட"னாக ஒரு பொன் சங்கிலி வாங்கி வரச் சொல்லி. அதை நீ கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பட்டுப் புடவை தரிக்காவிட்டாலும் கொறனட்டுப் புடவை யாயினும் இனி உடுத்த வேண்டும்..."

"அக்கா! அக்கா! உங்களுக்குப் புண்ணியமுண்டு. மறுபடியும் நகை நட்டுப் போட்டுக் கொள்ளும்படி என்னை வற்புறுத்தாதீர்கள். கொஞ்ச நஞ்சம் எனக்கு இருந்த ஆசையையும் ஆண்டவன் அண்ணன் மூலமாக அடியோடு போக்கி விட்டான், அக்கா! இனி...”

மங்கையர்க்கரசி திலகவதியின் கைகளைப் பற்றிக் கொண்டு கெஞ்சினாள். திலகவதி வியப்பும் வருத்தமும் தொனிக்க, "அப்படியானால் அண்ணன் ஆடையாபரணங்களைக் கூடவா எடுத்துக் கொண்டார்? நிலபுலத்தைத்தான் உனக்குச் சொல்லாமல் அடமானம் வைத்துவிட்டதாக மட்டுமல்லவா சித்தி சொன்னர்கள்?".என்று கேட்டாள்.

"அந்த வயிற்றெரிச்சலை ஏன் கிளறுகிறீர்கள்? அக்கா! எனக்குத் தெரியாமல் நிலத்தை அடமானம் வைத்துப் பணம் வாங்கிக் கொண்டதைக் கூட நான் பெரிதாகப் பாராட்டவில்லை. குடும்பக் கஷ்டத்துக்கு ஏதோ செய்துவிட்டார் என்றிருந்தேன். நான் அவரிடம் கொடுத்து வைத்திருந்த செயின், தோடு, வளையல், பரியப் புடவை எல்லாவற்றையும் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லாமல் விற்றுச் சுட்டுக் கரியாக்கிவிட்ட கொள்ளையை நினைத்தால்தான் மனம் குமுறுகிறது. மைத்துனன்மார் ஏதாயினும் வல்லடி வழக் குக்கு வரப் போகிறார்கள் என்று அண்ணனிடம் அடைக்கலம் புகுந்தால்......" என்று ஆற்ருமையோடு பேசிக் கொண்டே போனள். இச்சமயத்தில் சதானந்தம் பிள்ளை, யோக்கியனுக்கு இந்த உலகத்தில் இடமேயிராது போலிருக்கிறதே! இக்காலத் தில் நடத்து வரும் அக்கிரமத்தைப் பார்த்தால், உத்தமர்கள், தியாகிகள் என்று நம்பியிருந்தவர்களெல்லாம் செய்து வருகிற காரியத்தைக் கவனித்தால், இனி இந்த உலகத்தில் யாரை நம்புவதென்றே தோன்றவில்லையே! இனி, காங்கிரஸ்காரன் என்று சொல்லிக் கொண்டு வெளியே தலைகாட்ட முடியாது போலிருக்கிறதே!...... நம்ப பயல் சிவகுமாரன் சொல்வதை என்னமோ என்று எண்ணியிருந்தேன். கடைசியாகப் பார்த்தால்......” என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார். அவரைப் பின் தொடர்ந்து ஒரு கனவான் வந்து கொண்டிருந்தார்.

சதானந்தம் பிள்ளையின் குரலைக் கேட்டதுமே மங்கையர்க்கரசி துடித்துப் பதைத்து எழுந்து விட்டாள். அவர் உள்ளே வருவதற்குள் அவள் உன்ளறைக்குள் ஓடி விட்டாள், திலகவதி தன் கணவனுடன் யாரோ வருவதைக் கண்டதும் எழுந்து நின்றாள்.