தென்னாட்டு காந்தி/அன்று காந்திஜி எச்சரித்தார்! இன்று நேருஜி எச்சரிக்கிறார்!
◯ 1962 தேர்தல்
◯ முடிந்த நேரம்
◯ பிரிவினை சக்திகளைச்
◯ சாடி நேருஜி பேசிய
◯ பேச்சு மறக்க
◯ முடியாதது ஆகும்.
◯ தி. மு. கழகம்
◯ இன்று திராவிட
◯ நாட்டுக் கோரிக்கை
◯ எனும் பிரிவினைக்
◯ கொள்கையைத்
◯ திட்டங்களிலிருந்து
◯ பிரித்து விட்டதாகச்
◯ செப்பிவருகிறது.
◯ நேருஜியின் எச்சரிக்கை
◯ சம்பந்தப்பட்டவர்கட்கு
◯ கசக்கவே செய்யும்
◯ ஆம்; உண்மை
◯ என்றைக்குத்தான்
◯ இனித்திருக்கிறது?...
இன்று நேருஜி எச்சரிக்கிறார்!
இன்று நேருஜி எச்சரிக்கிறார்!
அண்மையில் நடந்த பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தின் போது, குடியரசுத் தலைவரின் உரைமீது சபையில் நடந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய பாரதப் பிரதமர் நேருஜி, பொது மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் அற்புதமான கருத்துக்கள் பலவற்றைத் தெளிவுபடுத்தினார். அவரது உரையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிவினைக் கொள்கையை முழு மூச்சோடு எதிர்த்துப் பேசிய பேச்சு, மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருக்கிறது. “இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு கேட்கிறது தி. மு. கழகம். இந்தக் கோரிக்கை, அடிப்படையிலேயே தவறானதாகும். ஒவ்வொரு இந்தியரும் இக்கோரிக்கையை மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டும்,” என்று உரை நிகழ்த்திக் கொண்டிருந்த தலைமை அமைச்சர், பின்னர் தம் குரலை உயர்த்தி அழுத்தம் பதித்துப் பேசியதாவது: “... ஏற்றுக் கொள்ள முடியாத சில கோரிக்கைகளும் நாட்டில் உண்டு, போர். என்றால் போர்தான். ஆனால், போரை நாம் ஒருபோதும் ஏற்கமுடியாது. தி. மு. கழகத்தவருக்கு வேறு சில கட்சிகள் துணையாக நின்று ஆதரவு கொடுப்பது தீவினைப் பயனாகும்; தீவினை பயப்பதுமாகும். தேர்தல் காலத்தில் தலைவிரித்தாடிய ஜாதி வெறி, வகுப்புவாதம் போன்ற தீயபண்புகளைத் தூண்டிவிட்ட குறுகிய புத்தியைக் கொண்ட இக் கட்சிகளின் மனப் பான்மையைத் தடுத்து நிறுத்தாமல் விட்டுவிடுவோமானால், நாட்டின் ஐக்கியம் பாழ்பட்டுப்போக நேரிடும். எனவே, இம்மாதிரியான தீயகொடுமைச் சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும்!”
ஆம்; உணர்ச்சி மிகுந்த பேச்சு இது!
கட்சி என்றால், அதற்கெனத் தனித்தன்மை கொண்ட திட்டவட்டமான சில கொள்கைகள் இருந்தாக வேண்டும். அத்தகைய உட் கருத்துக்களை நிலையான மனப் பக்குவத்தோடு, நியாயமான முறையில் உருவாக்கத்தக்க தலைவர்கள் அந்தந்தக் கட்சிக்குக் கிட்ட வேண்டும். இவ்விதமான பொதுக்கருத்தை மாற்றிவிட்டார் திரு சி. என். அண்ணாத்துரை. அவர் கொண்டிருக்கும் வலுவிழந்த கருத்துக்களுக்கு ஏற்றவகையில்தான் அவரது கட்சியும் இயங்கி வருகிறது. தெளிந்த இதயத்தில்தான் தெளிவான எண்ணங்கள் பிறக்க முடியும். தெளிவான எண்ணங்கள் தாம் நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த முடியும். ஆனால் தி. மு. கழகத்தையோ, அதன் தலைவரையோ நம் கருத்திற் கொணர்ந்து பார்த்தால், அவரை நம்பியுள்ள பரிதாபத்துக்குரிய ஆயிரக் கணக்கான நம் நாட்டுச் சகோதரர்கள் தாம் நம் ஆழ்ந்த அனுதாபத்துக்கு இலக்காகின்றார்கள்.
தேர்தலில் தி. மு. கழகம் நாட்டுப் பிரிவினையை அடித்தளமாக் கொண்டு இயங்கவில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர்களுக்குக் கிடைத்த தொடர்போ, அல்லது இணைப்போ சுமுகமான முறையில் ஏற்பட்டிருக்க முடியாது! தேர்தலில் பண்பு கெட்ட வழிகளில் சுவரொட்டிகளை ஒட்டியும், ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி ஐந்து ஏக்கர் நிலம் போன்ற தவறான கணைகளைக் கொண்டு அப்பாவி மக்கள். நெஞ்சைத் தம் வசப் படுத்தியும் ஏதோ ஓர் அளவுக்கு, சென்ற தேர்தலைக் காட்டிலும் இம்முறை கூடுதலான இடங்களைப் பிடித்து விட்டார்கள். சந்தர்ப்பங்கள் சிலரை - வாழவைப்பது உண்டல்லவா? அவ்வகையில் தான், இவர்களுக்கு இப்போது ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கிறதே தவிர, வேறு எந்தச் சிறப்பும் மறைந்திருப்பதாக எண்ண மார்க்கம் இல்லை! “இருபது லட்சம் பேர்கள் எங்களுக்கு வோட்டு போட்டிருக்கிறார்கள். இந்த இருபது லட்சம் மக்களும், எங்களது திராவிட நாட்டுக் கொள்கைக்காகவேதான் ஓட்டு போட்டிருக்கிறார்கள்!” என்று துணிந்து பச்சைப் பொய் ஒன்றைத் திரித்து விட்டிருக்கிறார் மாஜி எம். எல். ஏ. தலைவர்! “மேல் சடைக்கு நான் நிற்க ஒப்பவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளில் காஞ்சி மக்களைத் திருப்திப் படுத்தும் வண்ணம் நல்ல முறையில் சேவை செய்வதே என் கடமையாகும்.” என்று அழகாக நீலிக்கண்ணீர் வடித்த தலைவரின் ஒப்பாரியை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது, அவருக்குக் கிட்டியுள்ள ராஜ்யசபைப் புதுப் பதவி!
மாபெரும் தோல்வியில் மறைந்திருக்கும். புது வெற்றியிலே திரு அண்ணாத்துரை கண்மூடித் திளைத்திருக்கும் நேரமாயிற்றே இது! ஆகவேதான், அவர் நேருஜிக்குப் பதில் சொல்லவும் முனைந்து விட்டார் போலும்! “சிவப்புத் துணியைக் கண்டு மிரண்டு கோபமடையும் காளையைப்போல, பிரிவினைக் கொள்கையைக் கண்டு நேரு ஆத்திரப்படுகிறார்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலரைத் தவிர ஏனையப் பொதுமக்கள் எல்லோரும் இப்போது அறிஞரையும் அவரது பச்சோந்திப் பேச்சுக்களையும் எடைபோட்டு, எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டு விட்டார்கள். ஆகவே, தி, மு. கழகம் செப்பிடு வித்தை காட்டிவரும் இந்தத் “திராவிட நாடு” என்பது. இன்றல்ல, என்றுமே உருவாக்க முடியாத ஒன்றாகும்! இப்பொழுது கிடைத்துள்ள அதிகப்படியான இடங்களை வைத்துப் பேசிப் பொதுமக்களை இன்னும் ஏமாற்றும் வழிகளில் இவர்கள் இறங்கி வருகிறார்கள். அடுத்த தேர்தலில் தி. மு. க. தான் ஆளப்போகிறதாம்! சொல்மாரி பொழிந்து வருகிறார்கள் தம்பிமார்களும் புது முகங்களும்! பாவம், பரிதாபத்துக்குரியவர்கள்! இப்போது கிடைத்துள்ள பதவியின் மூலம், இந்த ஐந்தாண்டுகளிலே டில்லிக்குப் பறந்து திரும்புவதுடன் பெருமைப்பட்டுக் கொள்ளாமல், தம்முடைய பிரிவினைக் கொள்கையில் திரு அண்ணாத்துரைக்கு மெய்யாகவே ஒரே ஒரு முறையேனும் இவர் ‘திருவாய்’ மலர்ந்து, தம் பிரிவினைக் கொள்கையைத் தர்க்க ரீதியான அரசியல் அடிப்படையுடன் பேசத் தெம்பு பெறுவாரா? ஊஹூம், ஒருகாலும் இந்நிகழ்ச்சி இந்த ஐந்தாண்டுக்குள் ஏற்படச் சாத்தியமே இல்லை!
எங்களுடைய இந்தக் கூற்றுக்கு ஒரே ஒரு அத்தாட்சியை மட்டும் எடுத்துக்காட்ட விழைகிறோம். சென்ற மாதத்தின் - மத்தியில் எஸ். ஐ. ஏ. ஏ. மைதானத்தில் திரு அண்ணாத்துரை பேசுகையில், திராவிட நாடு கோரிக்கையை நான்கணாவுக்கு ஒப்பிட்டுப் பேசினார். “நாலணா கேட்டால் தான், ரொம்ப நேரமாகக் கேட்கிறானே, இரண்டணாவாவது கொடுப்போம் என்று மனம் மாறுவார்கள். சிலர் அதே போன்று, திராவிட நாடு கேட்டால் தான், கடைசியில் தமிழ் நாடாவது கிடைக்கும்,” என்று தி. மு. க. மூலர் பிரசங்கம் செய்தார். தம் பேச்சைப் பத்திரிகைகளில் படித்ததும், அவருக்கே தன் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டதில், அசடுவழியத் தொடங்கிவிட்டிருக்க வேண்டும் உட்னே ஓர் அறிக்கையை வெளியிட்டுவிட்டார். “என் பேச்சுக்கு வேண்டுமென்றே சிலர் வேறு அர்த்தம் கொடுத்துத் திரித்து வெளியிடுகிறார்கள்!” என்று புலம்பி முடித்தார் அவர். இந்த ஒரு பேச்சே போதும், தி. மு. க. வின் ஏமாற்று வித்தையை மெய்ப்பிக்க!
அகில உலகப் புகழ் படைத்த ஒப்பற்ற தலைவர் நேருஜி எங்கே?
மெரினா புகழ் காணும் இந்த தி. மு. க. தலைவர் எங்கே?
“இந்தியாவைத் துண்டாட விரும்புபவன் நாட்டின் துரோகி யாவான்!” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிவந்த அண்ணல் காந்தி அடிகளின் ஒன்றுபட்ட தேசீய இன உணர்ச்சியின் தத்துவத்தையும் குறிக்கோளையும் பொதுமக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்பதும் உறுதி!