தென்னாட்டு காந்தி/முதல் குடியரசுத் தலைவரின் கடைசிப் பேருரை

◯ ராஜன் பாபு
◯ அவர்களின்
◯ பொது வாழ்வு
◯ அரசியல்
◯ ரீதியாகவும்
◯ அறிவு ரீதியாகவும்
◯ சரித்திர சிறப்பு
◯ வாய்ந்தது
◯ மனிதருள் மனிதர்
◯ அவர் இறவாப் புகழ்
◯ கொண்டவர் அவர்!

 
முதல் குடியரசுத் தலைவரின்
கடைசிப் பேருரை
 

முதல் குடியரசுத் தலைவரின்
கடைசிப் பேருரை

‘ஹரிஜன்’ பத்திரிகையில் ஒரு சமயம் மகாத்மா காந்தி அடிகள் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:

“...உங்களிலே சிலர் ‘காந்தி பக்தர்’ என்று சொல்லப்படுகிறார்கள்; அந்தப் பெயர் பிரயோசனமில்லை. அதைவிட, ‘அகிம்சா பக்தர்’ என்று சொன்னால் என்ன? ஏனென்றால், காந்தி என்பவரிடம் நன்மையும் தீமையும், பலமும் பலவீனமும், அகிம்சையும் இம்சையும் கலந்தே காணப்படுகின்றன. ஆனால், அகிம்சையோ எந்தவிதக் கலப்பும் அற்ற தூயவடிவமாகும்!...”

முதலில் தன்னை உணர்ந்து புரிந்து கொண்டு, அப்பால் உலகத்தவர்க்குத் தன்னை உணர்த்திப் புரிய வைக்கும் பரிபக்குவ நிலை கைவரப் பெற்றவனே ஞானியென மதிக்கப்படுகிறான். இவ்வகைப்பட்ட ஞானிகளுக்கெல்லாம் ஞானியாக நம்மிடையே வாழ்ந்த வாழ்ந்து காட்டிய தவயோக ஞானியான அண்ணலின் மேற்கண்ட அகிம்சைத் தத்துவம் பொன்னெழுத்துக்களிலே வடிவம் பெற்றுள்ள மூதுரையாகும். இம்முதிய மொழியான அகிம்சைத் தத்துவ நெறியில் காலூன்றி நின்றுநிலைத்து-பண்பட்ட போறிஞர்களுள் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் : குறிப்பிடத் தகுந்தவர் ஆவார். “பூரண ஞானம் பொலிந்த நன்னாடு” என்று பாடிய பாரதியின் கவிக்குரலுக்கு வாய்த்த எதிரொலிபோல விளங்கும் டாக்டர் பிரசாத் அவர்கள், இந்தியக் குடியரசின் முதற் தலைவராக கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக நம்மிடையே விளங்கி, தமக்கும் தம் தாய்த்திரு நாட்டுக்கும் பெருமை தேடிக்கொண்ட பான்மைமிகு சரித்திரத்தை வரலாறு என்றென்றும் நினைவிற்கொள்ளும்!

தம்முடைய பதவிக்காலம் நிறைவெய்தி, விடை பெற்றபோது, புதுப் பார்லிமெண்டைத் துவக்கி வைத்துப் பேசிய ஜனாதிபதியின் கடைசிப் பேருரை உலக அரங்கத்தின் கவனத்தைக் கவர்ந்தது.

“நாட்டிலே ஜன நாயக சோஷலிஸ சமுதாயத்தை நிறுவ திறம்பட நடவடிக்கைகள் எடுத்து, உறுதியான கொள்கைகளைக் கடைப் பிடிப்பதே இந்தியக் குடியரசின் உயிர்ப்பான நோக்கமும் லட்சியமும் ஆகும்; இதன் மூலம் தான் நாடு முன்னேறி, பாரத மக்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு ஏற்பட்டு, உற்பத்தி பெருகி, சமூகநீதி நிலைக்க முடியும்!...”

புதிய பாராளுமன்றத்தின் இணைப்புக் கூட்டத்தில் இவ்வாறு தம்முடைய அழகிய உரையைத் தொடங்கி, அதன்பின் இன்றையப் பிரச்சினைகள் குறித்தும் நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் அற்புதமான கருத்துக்கள் சிலவற்றையும் எடுத்துரைத்தார்.

நாட்டின் முதல்வரது மொழியாற்றலைப் போற்றுவதற்கு முன்னதாக, இன்றைய உலகச் சூழலையும் நாம் மறந்து விடலாகாது. காங்கோ, பெர்லின், லாவோஸ், அல்ஜீரியா போன்ற பிரச்சினைக்குரிய பகுதிகளின் பிரச்சினைகள், கொந்தளிப்பு அடங்கிய நிலையில் இருந்து வருவதை நாம் காண்கிறோம். உலகப் பெரும் போரைத் தடுத்து நிறுத்தும் பணியில், ஜெனிவா படைபலக் குறைப்பு மாநாட்டின் பலன் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை.

நம் பாரதத்தின் இன்றைய நிலையையும் நாம் எண்ண வேண்டுமல்லவா? அண்டை நாடான பாகிஸ்தானம் வேளைக்கொரு பேச்சும், நாளுக்கு ஒரு வேஷமுமாகக் கூத்து நடத்திவருகிறது. காஷ்மீர் சீனா சிக்கல்கள் வேறு. இவை நீங்கிய ஏனைய சின்னஞ்சிறு உள் நாட்டுக் குழப்பங்களும் நமக்குத் தலைவேதனையைத் தராமல் தப்பவில்லை, இவை எல்லாவற்றையும் நெஞ்சில் இருத்தித்தான் தமது பேச்சை ஆரம்பித்து முடித்திருக்கின்றார் ராஜேந்திர பிரசாத்.

வெளி நாட்டு விவகாரங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், அணு குண்டு உற்பத்தி, படைக்கலப் பெருக்கம் போன்ற முனைப்புச் சக்திகளைத் தடுப்பதற்கான வழிவகைகளிலே அமைதி நிலவச் செய்யும் வண்ணம் பாரதம் அதன் செல்வாக்கைப் பயன்படுத்தி, தன்னால் இயன்ற தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.

“ஜன நாயக சோஷலிஸ சமுதாயத்தை இந்நாட்டில் அமைப்பதற்குச் சரியான குறிக்கோள்களை பாரதம் அனுசரித்துக் கடைப்பிடிக்கும். இந்த லட்சியத்தை அடைவதற்கு உறுதியான கொள்கைகளைப் பின்பற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமும் கவலையுமாக இருக்கும். இவைகளை நிறைவேற்றி, எல்லா மக்களும் சமமான வாழ்க்கை வசதிகளுடன் வாழ வழி செய்யும் நம் காங்கிரஸ் ஆட்சி எனவே, சமுதாய நீதியும் காலக் கிரமத்தில் பண்பட்டுத் தழைக்கத் தொடங்கும் என்பதும் நிச்சயம்...” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய விழிப்புப் பெற்ற மக்களிடையே சகோதர உணர்வுடன் கூடிய ஒன்றுபட்ட உள்ளப்பிணைப்பு இரண்டறக் கலந்து உறவாட வேண்டிய அவசியம் பற்றி திரு. பிரசாத் அவர்கள் அடிக்கடி நினைவூட்டிய தன்மையில், நாட்டுப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தூண்டும் கூட்டத்தவரை எச்சரித்த மனப்பாங்கு இருப்பதை யார் தாம் உணராமல் இருப்பார்கள்? ஏழை எளியவர்களுக்கு நன்மை செய்வதே தங்கள் கனவு என்று தம்பட்டம் அடித்துவரும் சுதந்திரக் கட்சியைச் சாடும் முறையில், திரு. பிரசாத் அவர்கள் உரை நிகழ்த்துகையில் ஏழை மக்களின் நலனில் முதல் அக்கறை செலுத்தி வருவது நம் காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதையும் திட்ட வட்டமாகச் சொல்லிவிட்டிருக்கிறார், ராஷ்டிரபதி.

எவ்வகையில் பார்த்தாலும், சிறப்புத்தன்மை கொண்டதாக அமைந்து விட்டது, பாரதத்தலைவரின் பேருரை.

‘சிறந்த தேசபக்தர், நுண்ணிய சிந்தனாவாதி, நல்ல கர்மவீரர், உண்மையான காந்தி பக்தர்’ என்று புகழ்ந்து கொண்டே இருக்கும் நேருஜியின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் காரணமாகி ஒளிவிளக்காகத் திகழும் திரு. ராஜன்பாபு அவர்களின் பேரையும் புகழையும் பணியையும் நினைவில் வைத்து அஞ்சலி செய்வது நம் நாட்டு மக்களின் கடமையாகும்.