தென்னாட்டு காந்தி/காங்கிரசுக்கே ஓட்டுப் போடுங்கள்!

◯ இதோ, 1967 தேர்தல்
◯ நெருங்கி
◯ வந்து கொண்டிருக்கிறது.
◯ இது. கடந்த தேர்தலின் நிலை!
◯ இது எப்போதுமே
◯ நினைத்துப்
◯ பார்க்கத் தக்கதொரு
◯ சிந்தனைத்
◯ தொடரே அல்லவா?

“காங்கிரசுக்கே
ஓட்டுப் போடுங்கள்!”
காங்கிரசுக்கே
ஓட்டுப் போடுங்கள்!

இந்தியத் துணைக் கண்டத்திலே எங்கு பார்த்தாலும், பொதுத் தேர்தலின் பரபரப்பு சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் நெருக்கடியான நேரம் இது. பாரதத்தின் எதிர் காலத்தைப்பற்றி நிர்ணயம் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும், இந்நாட்டு மக்களின் வாக்குப் பதிவுகளிலே முடிவு பெற வேண்டிய வேளை இது, இன்னும் மூன்று வாரங்களில் இந்தியா முழுவதிலும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தகைய இக்கட்டான சட்டத்தில் இருக்கும் - நாம், நம்மைப்பற்றியும் நம்மை ஆளும் காங்கிரஸ் மகாசபையைப் பற்றியும் நன்றாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டு காலமாக நாய் வெள்ளையரின் ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தோம், தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுக் கிடந்த பாரத தேசத்தை வாழ்விக்க வந்த ஜோதியாக அண்ணல் காந்தியடிகள் தோன்றினார். உடல், பொருள், ஆவி அனைத்தையும் சர்வபரித் தியாகம் செய்து, பிறந்த நாட்டின் விடுதலைக்கென தங்களையே அர்ப்பணம் செய்ய மாபெருந் தலைவர்கள் பலர் முன் வந்தார்கள். அயலவரின் அடக்கு முறைச் சட்டங்களுக்கு அடங்கிக் கிடக்காமல், “வெள்ளையனே, வெளியேறு!” என்று கோஷமிட்டார்கள்: சிறைப்பட்டார்கள். பாரதத் தாயின் அடிமை விலங்குகளை அறுத்தெறிவதே தங்கள் தலையாய லட்சியம் என்ற முடிவைக் கைக்கொண்டு, “வந்தேமாதரம்” என்னும் தாரக மந்திரத்தை வான் முட்டப் பரப்பினார்கள். இதற்கிடையிலே, மாவீரர் நேத்தாஜி கடல் கடந்து சென்று, சிதைந்து கிடந்த இந்தியர்களை ஒன்று திரட்டி, சுதந்திரப் போராட்டத் திற்குத் தொண்டியற்றினார். “கட்டுண்டோம், பொறுத்திருப்போம்: காலம் மாறும்” என்ற கோட்பாட்டில் அறவழி நின்று, காந்தீய நெறி நடந்து வந்த பாரத நாடு விடுதலை பெற்றது. நாம் இருக்கும் நாடு நமது என்பதை உணர்ந்தோம், நம்மை நாமே ஆண்டு கொள்ளத் தலைப்பட்டோம்.

இந்தியத் துணைக்கண்டம் சுதந்திரம் பெற்றுப் பதினான்கு ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. ஆசியாவின் ஜோதியான உலகப் புகழ்பெற்ற நேருஜி, தம் நெஞ்சில், காந்தியடிகளை நிலை நிறுத்தி, அவர் காட்டிய பாதையில் நடந்து, நம் நாட்டையும் நடத்தி வருகிறார். பஞ்சசீலக் கொள்கைகளை உலக அரங்கில் வைத்து, அதன் மூலம் இந்தியாவின் அறவழிப் பண்பாட்டை உலக நாடுகள் அனைத்தும் அறிந்துணரச் செய்துவரும் நேருஜியின் தலைமைப் பொறுப்பின் கீழ் ‘ஐந்தாண்டுத் திட்டங்கள்’ ஒவ்வொன்றாகச் செயற்படுத்தப்பட்டு, வெற்றி பெற்று வருகின்றன. பொருளாதாரம், உணவு, தொழில் போன்ற எல்லாப் பிரிவுகளிலும் காங்கிரஸ் ஆட்சி, அந்நிய நாட்டவர்களும் கண்டு வியந்து போற்றத்தக்க அளவில் மகத்தான வளர்ச்சி பெற்று வருவதைப் பொதுமக்கள் அத்தனைபேரும் பரிபூரணமாக உணருவார்கள் . தன்னகத்தே மாபெரும் வரலாற்றுப் பெருமையைக் கொண்டிருக்கும் நமது காங்கிரஸ் மகாசபை தான் இந்தியாவின் தன்னேரில்லாத உயிர்ச் சக்தி என்பதையும் அனைவரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில்தான், பொதுத் தேர்தல் அண்டி வந்து கொண்டிருக்கிறது. பல தரப்பட்ட கட்சிகள் தேர்தலில் - போட்டியிடுகின்றன. ஐக்கிய இந்திய தேசீயத்தில் பிரிவினையை வளர்க்க முனைந்த திராவிட முன்னேற்றக் கழகம், “திராவிட நாடு அடைந்தே தீருவோம்!” என்று தம்பட்டம் கொட்டி, தம்மைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அப்பாவி மக்களின் கண்களிலே மண்ணைத்தூவி, தங்கள் பைகளைப் பணத்தால் நிரப்பி வருவது உலகம் அறிந்த ரகசியமாகும். திராவிட நாடு அடைவது பகற்கனவு என்பதைத் தமிழகத்தின் தலைவர்களும், தி. மு. க. விலிருந்து பிரிந்த படைவீரர்களும் பட்டி தொட்டிகளிலெல்லாம் நிரூபித்து விட்டார்கள்!

ஏழைகளைப் பகடைகளாக்கி, பணக்காரர்களை வாழ வைக்க திரை மறைவில் அரசியல் சூதாட்டம் ஆடி வருகிறார், பரிதாபத்துக்குரிய ராஜாஜி. அவரது செல்வாக்கு பறிபோய் விட்ட உண்மையை, டி. டி. கே. அவர்கள் எதிர்ப்பின்றி அடைந்த முதல் வெற்றி நிதர்சனமாக எடுத்தியம்பி வருகிறது.

சமதர்மப் பொதுவுடைமை வாதம் பேசி, பிறந்த மண்ணையே நம் எதிரிகளுக்குக் காட்டிக்கொடுக்கும் நாசகாரக் கும்பலாக கம்யூனிஸ்ட் கட்சிக்கு கேரளத்திலேயே வாழ்வு இல்லாதபோது, இங்கே மட்டும் எப்படி வாழ்வு ஏற்பட முடியும்? தேர்தல் களத்தில் குதிக்கப் போகும் பிற கட்சிகளின் பெயர்களைக்கூட பொது ஜனங்கள் அறிந்திருக்க முடியாது.

அண்மையில், பிரதமர் நேருஜி ஜலந்தரில் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளும் செயல் திட்டங்களும் தான் இந்தியாவை முன்னேற்றும்; திட்டமிட்டுச் செய்யப்படும் அபிவிருத்தியைத் தொடர்ந்து நடத்திச் செல்லும், மற்றச் சிறு கட்சிகள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டுதான் இருக்கும்,” என்று உரைத்ததையும் நாம் என்றென்றும் - நினைவிலும் - நெஞ்சிலும் பதிய - வைத்துக்கொள்ள வேண்டும் - இந்தியாவை அச்சுறுத்திவரும் - சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள், நம்முடைய கோவா வெற்றி கண்டு, விரைவிலேயே மனந்தெளிவார்கள் என்பதும் உறுதி.

தமிழ் நாட்டின் தனித்தலைவரான மதிப்புக்குறிய காமராஜ் அவர்கள் குடியரசு தினக் கூட்டத்தில் “வறுமை ஒழியும் வரை காங்கிரசுக்கு ஓய்வே இல்லை!” என்று பேசினார்கள். தேசப்பற்று, தன்னலமின்மை , தியாகம், உழைப்பு, ஏழைகள் பால் கொண்டுள்ள ஈரம் போன்ற குண நலன்களால் எல்லாப் பொதுமக்களின் உள்ளங்களிலும் குடிகொண்டிருக்கிறார் நம் அன்புத் தலைவர் அவர்கள். அவரது தொண்டுகள் தாம் நம் தமிழகத்தின் மதிப்பையும் மாண்பையும் உயர்த்தி வருகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில், மாணவர் சமுதாயத்திற்கும் சில வார்த்தைகள் சொல்லவேண்டியது நம் கடமை, விடுதலை வேள்வியின் வரலாற்றைச் சரித்திரப்புத்தகத்தில் படித்ததின் மூலம் மட்டுமே அவர்களால் அறிய முடியும் படித்தறிந்த செய்திகளை எண்ணிப் பார்த்து, விடுதலைப் (போரின் புனித வேள்வியைப் பக்தியுடன் போற்ற வேண்டும் அவர்கள். இந்தப் பண்பாடு நிரம்பப் பெற்றவர்களாகவே பெரும்பாலான மாணவர்கள் விளங்கி வருகிறார்கள். ஆனால், ஒரு சிலர், தங்கள் சொந்த வாழ்க்கைக்காக கட்சியை உபயோகப்படுத்தி, அதன் விளைவாக, மாணவர் சமுதாயத்தையும் நாட்டுக்கு விரோதமான வழிகளுக்கு வசப்படுத்தி வருகிறார்கள், இந்நிலை மாறவேண்டும். கட்சியின் பேரால் சீமான்களாக வாழும் பொய்த் தலைவர்களின் வேஷங்களை அறிந்து கொண்டு, அவர்களை மாணவர்கள் அம்பலப்படுத்த வேண்டும். அத்துடன், தனி மனிதர்களைவிட, தேசம்தான் பெரிது என்ற உண்மையையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, நாட்டுப் பணிக்கு உழைக்கப் பழகவேண்டும்!

ஆம்; சொன்னதைச் செய்து காட்டி வருகிறது காங்கிரஸ் ஆட்சி. நெருங்கி வரும் தேர்தலிலும் காங்கிரஸே வெற்றி பெறப் போகிற தென்பதும் உறுதி.

காங்கிரஸ் ஆட்சியில் தான். இந்தியா மென்மேலும் வாழ்வும் வளமும், பேரும் புகழும் அடைய முடியும் என்ற உண்மையை மனத்தில் கொண்டு, பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் காங்கிரஸுக்கே உங்களது மேலான வாக்குகளை அருள வேண்டுமென்று மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்!