தென்னாட்டு காந்தி/தமிழே போதனா மொழி

◯ பால்வாய்ப் பசுந்தமிழ்
◯ இப்போது
◯ போதனாமொழியாக
◯ இலங்கி வருகிறது.
◯ இக்கனவு
◯ முற்றுப்
◯ பெறுவதற்குள்
◯ இடைமறித்த
◯ தொல்லைகள்
◯ ஒன்றா, இரண்டா!

 
தமிழே போதனா மொழி
 
தமிழே போதனா மொழி

அகில உலகப் பேரொளியாக விளங்கிய காந்தியடிகள், தம் ஆயுட் காலத்தில் மணிமணியான பொன் மொழிகள் பலவற்றை அவ்வப்போது பொதுமக்கள் முன்னே வைத்திருக்கின்றார், அவை எக்காலத்துக்கும் ஏற்ப அமைந்த பொற்புக் கொண்டவை. தாய்மொழியின் வல்லமை குறித்தும், அன்னைமொழியின் இன்றியமையாத் தன்மை பற்றியும் ஒரு திட்டவட்டமான முடிவை அவை எடுத்துக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டு வாசகங்களை இப்போது நாம் மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணல் காந்திஜி கூறுகின்றார்.

“சத்தியத்தையும் அஹிம்சையும் பலி கொடுத்து விட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் எவ்வாறு ஏற்றுக் கொள்ள மாட்டேனோ, அதுபோல, தாய் மொழியை அலட்சியப் படுத்திக்கொண்டு வரக்கூடிய எல்விதமான அரசாட்சியையும் நான் ஏற்க மாட்டேன்.
“கல்வி புகட்டுவதில், நமது தாய்மொழியை உபயோகிக்கக் கூடாது என்று விலக்கி வைத்தல் மிகவும் கேடான செயல் முறையாகும்.
“அந்தந்த நாட்டு மக்களுக்கு உயர்பண்பு நலன்களைப் போதிக்க, அந்தந்த நாட்டுப் பிரதேச மொழிகளே உயர்வுமிக்க சாதனமாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும்!”

அறவழித் தந்தையின் தாய்மொழிப் பேச்சு அந்தந்த நாட்டுக்கு - அந்தந்தக் காலத்துக்குச் சாலப் பொருந்தும்.

ஆகவே, இம்மொழிகள் நம் தாய்த் திருநாட்டுக்கும் ஒட்டி வருவது இயல்பு : பொருத்தம்.

தேமதுரத் தமிழ்மொழி ஆட்சிமொழியாகக் கைக் கொள்ளப்பட்டது; செயல் வடிவில் படிப்படியாக முன்னேற்றமும் முற்போக்கும் தெளிவும் கொண்டு இலங்கி வருவதையும் நாம் கண்டு தெளிந்து வருகின்றோம்.

ஆனால் கல்லூரிகளிலே, தமிழே போதனா மொழியாக இயக்கப்பெற வேண்டும் என்று ‘ஒருமனப்பட்ட குரல்’ அண்மைக் காலத்தில் தமிழ்கூறு நல்லுலகெங்கும் முழக்கம் செய்து வருகிறது.

பல்கலைக் கழக உயர்மட்டத் தலைமைப்பீடம் முழு மூச்சோடு எதிர்த்தது.

நமது மாநிலக் கல்வி அமைச்சர் மனத்திண்மை பெற்றவர்; இத்தகைய பக்குவத்திற்கு முதற்காரணம், அன்னாரது தமிழார்வமேயாகும். ஆகவே, அவர், எதிர்த்து வந்த எதிர்ப்புக்களை துச்சமென - மதித்தார். கோவை அரசினர் கல்லூரியில் போதனா மொழியாக, அமுதத்தமிழ் அங்கம் வகித்தது. சோதனையாக எடுத்துக் கொண்ட செயல்முறைத் திட்டத்தின் வெற்றியைக் கண்டு நாம் அகமகிழ்ந்தோம். இது தெய்வத் தமிழன்னையின் வெற்றி!

கோவையில் நடந்த சர்வகட்சிக் கூட்டமொன்றில் கல்வி அமைச்சர் பேசுகையில், “தமிழை ஆட்சிமொழியாகவும், போதனா மொழியாகவும் ஆக்க, தமிழ்நாடு அரசு செய்திருக்கும் இம்முடிவு இருதியானது. இவ்விஷயத்தில் தமிழ் நாடு அமைச்சரவையின் கருத்து ஏகமனதாக் இருக்கிறது,” என்று குறித்தார். கல்வி அமைச்சர் திரு சி. சுப்பிரமணியம் அவர்களைத் தமிழகம் இதயபூர்வமாகப் பாராட்டும்.

அவர் பேசுகையில், “அகில இந்தியக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, மத்திய நிருவாக மொழியாக ஹிந்தியும் ஆங்கிலமும் இயங்க வேண்டியவையாகின்றன. ஆனால், ஹிந்தி மொழிக்கு நம் நாட்டில் ஆதரவு கிடையாது. ஆகவே, அவ்விடத்தில் ஆங்கிலம் இடம் காணுவது அவசியமாகிறது. ஆதலால், கீழ்மட்டத்தில் நான்காவது வகுப்பிலேயே ஆங்கிலம் பயிற்றுவிக்கப்பட வேண்டும்!” என்று அவர் மேலும் தொடரலானார். கல்வி அமைச்சரின் இக் கருத்து மட்டும் பலரது ஐயுறவுக்கு அடித்தளமானது. உயர் மட்டத்தில் தமிழுக்கும் அடி, மட்டத்தில் ஆங்கிலத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதானது நாட்டு மக்களிடையே ஒரு குழப்ப நிலையை மட்டுமல்லாமல், குழப்பமான மனப்போக்கையும் உண்டாக்குமென்று தலைவர் திரு ம. பொ. சி. அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

கல்வி அமைச்சர் இதுபற்றிச் சிந்தித்து முடிவெடுத்தல் அவசியம் என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியவர்களாக ஆகின்றோம்.

கோவைக் கல்லூரியில் தமிழ்பாட நூல் வெளியீட்டு விழா ஒன்று நடந்தது. அப்போது உரை ஆற்றிய தமிழக முதலமைச்சர், பல்கலைக் கழகப் போதனாமொழி பற்றிய மாநில ஆட்சியின் முடிவு இறுதியானதும் உறுதியானதுமாகும் என்று சொன்னார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இணைந்துள்ள மாநிலங்கள் மொழி வழியே பிரிக்கப்பட்டு இயங்கி வருவதால், அந்தந்த வட்டார மொழிகளே மாநில ஆட்சி மொழியாகவும், போதனா மொழியாகவும் விளங்க வேண்டுமென்பதே அரசியல் தத்துவமாகும். இத்தத்துவத்தை உணர்ந்து கொண்டு செயல் வடிவு கொடுக்க எத்தனை தடைகள்? எவ்வளவு கால தாமதம்? எத்தனை போராட்டங்கள்!

தாய்மொழிப் பற்றும், தேசிய உணர்வும் இரு கண்களாக வாய்க்கப்பெற்ற தமிழார்வலர்களின் இடையறாத நினைவூட்டலினாலும், தொடர்ந்து முழங்கிய பேச்சுக்களாலும், இப்பணி வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

தமிழக மக்களின் ஒருமித்த போற்றுதலுக்கு உட் பட்டது தமிழ் நாட்டின் அமைச்சரவை.

ஆனால், ஒன்று :

ஆட்சிபீடம் அதன் கடமையை இயற்றி விட்டது. ‘பழைய வீம்புகளை’ மறந்து இந்த நல்லுறவைப் பயன்படுத்திக் கொள்வதில் பல்கலைக் கழகம் முனையவேண்டும். தமிழில் தரமான பாட நூல்கள் வெளியிடுவதில் புத்தகப் பண்ணைகள் அக்கறை காட்ட வேண்டும்; பாடங்களைத் தமிழாக்கம் செய்வதைக் கல்வி மேலதிகாரிகள் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும்!