தென்னாட்டு காந்தி/தமிழ் எங்கே? தேவநாகரி எங்கே?

◯ தொண்டர் நாதனைத்
◯ தூது விடுத்த
◯ தெய்வத்தமிழுக்குத்
◯ தேவநாகரி லிபி
◯ கொடுக்க ஆட்சிபீடம்
◯ முனைந்த சோதனைக்
◯ காலம் அது.
◯ அந்தப் பூச்சாண்டி
◯ எங்குதான்
◯ மறைந்ததோ ?...

 
தமிழ் எங்கே?
தேவநாகரி எங்கே?
 
தமிழ் எங்கே?
தேவநாகரி எங்கே?

சீர் நிறைந்த தெய்வத் தமிழ் நாட்டின் இன்றைய நடப்பு நிலையை எண்ணிப் பார்க்கும் பொழுது, தமிழுணர்ச்சி பொங்கித் ததும்பி நிற்பதைக் காண்கிறோம்; தமிழ் இன உணர்வும் தமிழ் நாட்டுப் பற்றும் இடைவெளி ஏதுமின்றி நெருங்கிப் பிணைந்து நிலவி வருவதையும் நாம் உணர்கின்றோம். இத்தகைய உயிரூட்டம் தரும் சிறப்பியல்புகளால்தான் நம் நாடும், மொழியும் மென் மேலும் வளர முடியும். அவ்வளர்ச்சியின் அடித்தளத்தில் தான் - தமிழக மக்களின் வாழ்வும், வளப்பமும், பொலி வெய்தத்தக்க ஆரோக்கியமான சூழலும் உருவாகிப் பலப்படக்கூடும்.

“தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்,” என்று தம் ஆர்வக் கனவைக் கோடிட்டுக் காட்டப் புகுந்த புதுமைக் கவிஞர், “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்,” என்ற விண்ணைத் தொடும் இலட்சியத்தையும் சேர்த்து வைத்துத் தமிழ் முழக்கம் செய்திருப்பதையும் - நாம் படித்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

பாரதியின் இப் பெருமைக்கு மற்றொரு கரும்புக் கணுவாக அமைகிறது. நாமக்கல் கவிஞரின் பழம் பாடல்.

“தமிழன் என்றொரு இனமுண்டு;
தனியே அவற்கொரு குணமுண்டு;
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்;
அன்யே அவனுடை வழியாகும்!”

ஆம்; வரலாற்றுச் சிறப்புக் கொண்டவன் தமிழன். தொன்மைப் புகழ் வாய்ந்தது தமிழ்மொழி. தமிழ் என்றால், இனிமை என்று பொருள்: தமிழ் எனில் அழகு: தமிழே அமிழ்தம்! இவ்வகைச் சிறப்புகள் பெற்ற தமிழ், இன்று அரசு மொழியாகவும் போதனா மொழியாகவும் விளங்கும் பெருமை பெற்று வருகிறது.

கொண்ட குறிக்கோளின் வெற்றிக்காக அல்லல் பல அனுபவித்து, அதற்காகப் போராட்டங்கள் பல நிகழ்த்தினோம் நாம். இன்று வெற்றியும் அடைந்திருக்கின்றோம். இந்நிலையில், மீண்டும் புதுப்புதுக் குழப்பங்களும், அர்த்தமற்ற சோதனைகளும் புறப்பட்டு நம்மைத் தொல்லைப் படுத்தி வருவதையும் நாம் நேர்முகமாகக் கண்டு வருகின்றோம்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. மாநில முதலமைச்சர்களை வரவழைத்து மாநாடு ஒன்றைக் கூட்டினார் நேருஜி. “இந்தியா ஒரே நாடு ” என்னும் உயர்ந்த கொள்கையில் ஊறி வளர்ந்து வாழ்ந்துவரும் நேருஜி, அக்கொள்கையைச் செயற்படுத்த வேண்டுமென்ற நற்கனவில் அல்லும் பகலும் திளைத்திருக்கின்றார். அதற்காக, அவர் செய்து பார்க்கும் பரீட்சைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. இந்திய ஐக்கியத்திற்கு மூலாதாரமானது மொழி என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகவே, “இந்திய நாட்டிலுள்ள எல்லா மொழிகளுக்கும் ஒரே லிபி இருக்கவேண்டு மென்றும், அந்த லிபி இந்தி மொழிக்கான ‘தேவநாகரி லிபி’யாகவேதான் இருக்க முடியும்,” என்றும் தில்லி மாநாடு முடிவு கட்டியிருக்கின்றது. அரசியல் சட்டத்தில் அங்கம் பெறும் எல்லா மாநில மொழிகளுக்கும் பொது எழுத்தாக தேவநாகரி லிபி விளங்க வேண்டுமாம்! இம்முடிவு செயற்படுவதென்பது பகற்கனவுக்கு ஒப்பாகும். ஆனால், இது செயல் வடிவம் எடுத்தால் அல்லது, சட்டத்தின் உருவம் பெறுகின்ற நிலைமை உருவானால், மதிப்புக்குரிய பாரதப் பிரதமரின் அசைக்க முடியாத நம்பிக்கைக்காக, தேவநாகரி வரிவடிவத்தை ஏற்றுக்கொள்ள மூன்றுகோடித் தமிழ் மக்கள் ஒப்பவேமாட்டார்கள், இது உறுதி. ஏனென்றால், இது மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் தன்மானப் பிரச்சினை: தாய்மொழிப் பிரச்சினை!

தமிழுக்குத் தேவநாகரி லிபியா?

நாம் எண்னிப் பார்க்கிறோம். அதே சடுதியில், தமிழ் மொழியின் தனித் தன்மையையும், தெய்வத் தன்மையையும் நாம் எண்ணி நோக்க வேண்டியவர்களாகவும் ஆகின்றோம்.

தமிழுக்கு முதல் இலக்கணம் செய்தவன் குடமுனி. அம்முனிக்கு முதன் முதலில் தமிழைப் போதித்தவன் சிவபெருமான், தமிழ் ஆதிமொழி: அசல் மொழி. பிற தென்னிந்திய மொழிகளினின்றும் தமிழ் பிறந்ததென்று முன்னர் ஒருமுறை வாதம் செய்தவர்களுக்கு, “தமிழ் என்றால் இனிமை: அதன் காரணமாகவே தமிழுக்கு இப்பெயர் வந்தது. ஆகவே; இதுவே அசல் மொழி,” என்று சூடு கொடுத்தார் மகா மகோபாத்தியாய டாக்டர் ஐயர் அவர்கள்.

வீர மாமுனிவரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இத்தாலிய நாட்டில் பிறந்தவர், தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் கற்று முடித்த பின், தமிழ் மொழியே அனைத்தினும் சாலச் சிறந்ததென்ற முடிவுக்கு வந்து, ‘சதுரகராதி’யையும் ‘தேம்பாவணி’யையும் தமிழில் உருவாக்கினார்.

இறையைப் போற்றி வணங்க உதவுகின்றன தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற தமிழ்ப் பாடல்கள். மற்றெம்மொழியிலும் இயற்ற வாய்ப்பிழ்ந்த சந்தங்களை யமகம், திரிபு, சித்திரம், வித்தாரம் முதலிய கவிமுறை இலக்கணங்களை வைத்துப் பாடவும், எழுத்தியல்பு, சொல்லியல்பு, புணர்ச்சி போன்ற விதிகள் சிறக்கச் செய்யவும் பயன்படும் உயர் தனிச் செம்மொழி இத்தமிழ் மொழி. இதன் இடத்திற்குத் தேவநாகரி எவ்வகையில் பொருந்த முடியும்?

தமிழிலேயே அர்ச்சனைகள் செய்யப்பட வேண்டுமென்ற எண்ணம் மடங்களில் வலுப்பெற்று, அமைச் சரவையின் வலுவையும் சம்பாதிக்கத் தொடங்கியிருகிறது. தமிழே போதனா மொழியாக இயங்கி வெற்றியும் பெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட கட்டத்தில், இந்தித் திணிப்புக்குரிய வழிவகைகள் அரசுமொழி-பயிற்சி மொழி போன்ற பிரிவுகளுடன் மத்திய அமைப்பில் மறைமுகமாக உருவாகி வருவதை யார்தான் விரும்புவார்கள்?

சென்னை உயர் நிலைப் பள்ளி எஸ். எஸ். எல். ஸி, மாணவர்கள் பலர், இந்தியைப் பாடமாக வைத்ததை எதிர்த்து ஊர்வலம் நடத்திக் கிளர்ச்சி செய்தார்கள். மாணவர்களின் செய்கையைச் சரியென்று நாம் ஏற்கவில்லை. ஆனாலும், அவர்களது செய்கைகளில் நீரோட்டம் காட்டுகின்ற தமிழார்வத்தை நாம் உணர வேண்டாமா?

மொழி வழியில் மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கொள்கை புயல் வடிவம் கொண்டு விளங்கி வருகின்ற நேரம் இது.

பம்பாய் மகாணப் பிரிவினையைக் கண்டோம்!

‘தனிப் பஞ்சாபி மொழி மாநிலம்’ கோரி, சாகும் வரை உண்ணா நோன்பு இருக்கத் திட்டமிட்டு, பொற் கோயிலில் விரதமிருந்து வரும் அகாலி தளத் தலைவர் மாஸ்டர் , தாராசிங் அவர்களின் லட்சியத்தை மத்திய அரசு ‘வெறி’ யென்று ஒதுக்கிவிட முடியாது!

மொழிப் பற்றும், மொழியுரிமையும் அந்தந்த நாட்ட வர்களுக்குத் தாய் வீட்டுச் சீர்வரிசைகள் போன்றவை. இவற்றில் மத்திய ஆட்சி குறுக்கிடுவதோ, குறுக்கிட விழைவதோ தவறு. இவ்விதமான தவறுகள் அடியெடுத்து வைக்காமல் இருக்க வேண்டு மென்று தான் மொழிவழித் தேசிய இன அடிப்படையில் மாநிலங் களுக்குச் சுயாட்சி வழங்க வேண்டு மென்று நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம்.

தாய்மொழிச் சுதந்திரம் பற்றியும், அதன் அவசியம் குறித்தும் பேசும் பொழுது, “சத்தியம், அஹிம்சையைப் பலி கொடுத்துவிட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் எவ்வாறு ஏற்றுக்கொள்ள மாட்டேனோ, அதேபோல, தாய்மொழியை அலட்சியப் படுத்திவிட்டுவரும் எந்தவித ராஜ்யத்தையும் நான் ஏற்க மாட்டேன்,” என்று காந்தியடிகள் குறித்திருப்பதையும் மத்திய ஆட்சியினர் பார்வைக்கு வைக்கவேண்டியது நம் கடமை:

நேருஜி தம்முடைய பொருள் நயம் பொதிந்த பேச்சுக்களிலும், எழுத்துக்களிலும் ‘உணர்ச்சி ஒற்றுமை’ (emotional-integration) யைப்பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகின்றார். வரவேற்கின்றோம். ஆனால் அவர் கனவு காணும் இந்த உணர்ச்சிப் பிணைப்பு பாரத நாட்டு மக்களிடம் , ஏகோபித்த அளவில் பண்பட வேண்டுமென்றால், “பிரிவினைபற்றிப் பேசுவது சட்டப்படி குற்றம்!” என்று பூச்சாண்டி காட்டினால் மட்டும் போதுமா?

மனித மனங்களின் உணர்ச்சிகள் மதிக்கப்பட வேண்டும். பண்பாட்டுச் சுதந்திரமும், தேசிய சுயமரியாதையும் காக்கப்பட்ட வேண்டும். தாய் மொழிப் பாதுகாப்பிற்கு அரசியல் சட்டரீதியான உத்தரவாதம் கொடுக்கப்பட்ட வேண்டியதும் இன்றியமையாததாகும். உணர்ச்சி ஒற்றுமை உருவானால் தான், தேசிய ஒற்றுமை உருவாக முடியும்! உலகம் புகழும்

உத்தமத் தலைவர் நேருஜி, தமிழர்களின் உள்ளங்களைத் தொடப் பாடுபட வேண்டுமே தவிர, உணர்ச்சிகளைத் தொட முயலக் கூடாது. கன்னித் தமிழ் மொழியின் பொற்புணர்ந்து, அதன் உரிமையில் குறுக்கிடும் இந்த ‘லிபி! நஞ்சை விலக்கி, மூன்று கோடித் தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் வாழும் உறவைப் பாரதப் பிரதமர் பலப் படுத்திக் கொள்வாரென்றும் எதிர்பார்க்கின்றோம்.