தென்னைமரத் தீவினிலே/ஒரு புதிய லட்சாதிபதி உருவாகிறான்


13
ஒரு புதிய லட்சாதிபதி உருவாகிறான்

ரவு மணி எட்டு. காலையில் சுற்றுலாவுக்கு சென்றவர்கள் இன்னும் வந்து சேரவில்லை, பங்களாவில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. காலை பத்து மணிக்கு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பரமகுரு அப்போது தான் வீடு திரும்பியிருந்தார்

போன் அடித்தது. சட்டென்று எழுந்து சென்று போனை எடுத்தார் பரமகுரு எதிர் முனையில் சிங்கப்பூரிலிருந்து மாமா பேசினார். சற்று உரக்கவே தெளிவாக காதில் விழும்படியே பேசினார்.

“பரமு, இரண்டு தடவை உனக்கு நான் ‘கால்’ போட்டேன். என்னுடைய மகிழ்ச்சியை உன்னோடு உடனே பகிர்ந்து கொண்டுவிட வேண்டும் என்று தான் அப்படிச் செய்தேன். பிசினசை ‘பார்க்கெய்ன்” பண்ணி 58 லட்சத்திற்கு முடித்து விட்டேன். எல்லாம் உன்னுடைய வாழ்த்துக்கள் தான்” என்று தன்னுடைய திறமையையும் அதே சமயம் மகிழ்ச்சியையும் ஒரே வரியில் மாமா வெளியிட்டார்.

பரமகுரு “ரொம்ப சந்தோஷம் மாமா! எப்பொழுது திரும்புகிறீர்கள்” என்று கேட்டார்.

உடனே பொன்னம்பலம், “அதற்குள் சந்தோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விடாதே இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறேன். இதை நீ என்ன; யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம்!”

“சஸ்பென்ஸ் இல்லாமே சீக்கிரமா சொல்லுங்கள் மாமா!”

“ஏண்டா அவசரப்படறே ! டிரங்கால் பில்லை உன் கம்பெனியா கொடுக்கப் போகிறது. கால் மணி உன்னோடு சந்தோஷமாக பேச வேண்டுமென்று மூன்று மணியிலிருந்து முயற்சி பண்ணுகிறேன். நீ ஆளே அகப்படலே. உன் மகாநாடு நல்லபடியா நடந்துதா?”

“அது நல்லா நடந்தது மாமா! நீங்க விஷயத்தைச் சொல்லுங்க,” என்று பரமகுரு அவசரப்படுத்தினார். மாமா ஒரே குஷியில் இருக்கிறார் என்பதை அவருடைய குரலிலிருந்தே பரமகுருவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“உன் அம்மா எல்லாரும் சுற்றுலா முடிந்து வந்து விட்டார்களா?”

“இன்னும் வரவில்லை! அவர்களை எதிர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!”

“சரி, நீ என்னிடம் புறப்படும்போது ஞானாம்பாளைப் பார்த்துவிட்டு வரச் சொன்னால் அல்லவா? அது மிகவும் நல்லதாகி விட்டது. அவளே எனக்கு கடிதம் எழுதி வரவழைப்பதாக இருந்தாளாம். ஞானாம்பாளுக்கு உடம்பு ரொம்பவும் மோசமாகி விட்டது. சமீபத்தில் விஷ ஜூரம் வந்து பிழைத்திருக்கிறாள். தன் தம்பியை நம்பி இருந்தாள்; அவன் இவளை பார்ப்பதே இல்லையாம். என்னைக் கண்டதும் கதறி அழுது விட்டாள்.

“வள்ளியம்மைக்கு நான் செய்த துரோகம் தான் இங்கே வந்து அனுபவிக்கிறேன்!” என்று கண்ணீர் விட்டு அழுதாள் உடனே நான் “உன் பேரன் அருண்ரியை பார்த்தேன். பரமகுருவோட வீட்டில்தான் இருக்கிறான். பையன் கெட்டிக்காரன். முகச் சாயலில் உன்னையே உரித்து வைத்திருக்கிறது பேச்செல்லாம் சிவபாதம் மாதிரி தோரணையில்தான் பேசுகிறான்,” என்று நான் சொன்னதுமே முகம் பிரகாசமாகி விட்டது.

அதிலிருந்து அருணகிரியையும், வள்ளியம்மையையும் பார்க்க வேண்டுமென ஆசைப்படுகிறாள். நான் இங்கு வருவதற்கு முன்னமேயே, னுடைய சொத்து முழுவதையும் சுமார் 50 லட்சம் தேறும் வள்ளியம்மைக்குப் பிறகு பேரன் அனுபவிக்க வேண்டியது” என்று எழுதியிருக்கிறாள்.

அந்த உயிலை என்னிடம் கொடுத்து “உன்னை அருணகிரிக்கு கார்டியனாக எழுதி இருப்பதாகவும்” கூறினாள்.

“யார் அந்தப் பயல்? அங்கே இருக்கிறானா? கொஞ்சம் கூப்பிட்டுப் பேசச் சொல்லேன். நான் ஞானாம்பாள் பிளாட்டிலிருந்துதான் பேசுகிறேன்,” என்று பொன்னம்பலம் பேசிக் கொண்டிருக்கும்போதே வாசலில் கார்கள் வந்து நிற்பதைப் பரமகுரு கவனித்தார்.

உடனே சட்டென்று, “மாமா போனை வைத்துக் கொண்டிருங்கள். அவர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். அருணகிரியை கூப்பிடவா?” என்று கேட்டார்.

“கொஞ்சம் இரு, நான் இன்டர்காமில் ஞானாம்பாளைக் கூப்பிடுகிறேன்.” என்று கூறி விட்டு அடுத்த சில நொடிகளில் “பரமு! பயலைக் கூப்பிடு! ஞானம் டெலிபோன் லைனில் இருக்கிறாள்.” என்றார்.

அப்போது காருலிருந்து இறங்கி ஒவ்வொருவ ராக உள்ளே வந்துக் கொண்டிருந்தனர். பரமகுரு ஹாலிலிருந்தபடியே, “அருணகிரி!” என்று உரக்கக் குரல் கொடுத்து அழைத்தார்.

“என்ன மாமா?” என்று அருணகிரி ஓடி வந்தான்.

“உன்னுடைய பாட்டி சிங்கப்பூரில் இருப்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்று கேட்டார்.

“ஓ! அம்மா சொல்லி இருக்காங்க,” என்றான் அருணகிரி.

“இப்போ! அந்த பாட்டிக்கு உன் குரலை கேட்கணுமாம்; உன் கூட பேசனும்னு ஆசையாக இருக்காம்” என்று கூறி போனை அவன் கையில் கொடுத்தார் பரமகுரு.

அருணகிரி ரிசீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டு “ஹலோ!” கூப்பிட்டான். “பாட்டி என்று கூப்பிடு!” என்று பரமகுரு மெல்லச் சொல்லிக் கொடுத்தார். உடனே “பாட்டி” என்று அருணகிரி அழைத்தான்.

“யார் அருணகிரியா?” என்று எதிர்முனையிலிருந்து ஞானாம்பாள் கேட்டாள்.

“ஆமாம் பாட்டி! நான்தான் அருணகிரி பேசறேன்! நீங்க நல்லா இருக்கீங்களா? உங்களை எனக்குப் பார்க்கணும் போல ரொம்ப ஆசையா இருக்கு பாட்டி!” என்று கணீரென்று கூறினான்.

“நான் நல்லாத்தான் இருக்கேன் அருணகிரி. உன்னை இத்தனை காலம் நான் பார்த்துக் கொஞ்சக் கொடுத்து வைக்காத பாவியாய் இருந்து விட்டேன். உங்க அம்மா ரொம்ப நல்லவள். நான் அவளுக்கு துரோகம் பண்ணிட்டேன். நீ அம்மாவைப் பார்த்ததும், பாட்டி உன்னையே நெனச்சு உருகிக்கொண்டு இருக்கா; பாட்டியை மன்னிக்கச் சொன்னா என்று சொல்லுவியா? அவள் மன்னித்தால் தான் என் மனம் சமாதானம ஆகும்! மீதியெல்லாம் பொன்னம்பலம் மாமா ஊருக்கு வந்ததும் உங்கிட்டேச் சொல்லுவாங்க. சாப்பிட்டியா? கொழும்பு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போயிருந்தாயாமே!”

“ஆமாம் பாட்டி. நாங்க எல்லாருமா போயிட்டு இப்பத்தான் வந்தோம் கதிர்காம முருகன் கிட்டே, “கன்யா”விலே இருக்கிற, ராவணனோட பிள்ளையார்கிட்டே, திருகோணேசுவரர்கிட்டே, கண்டியிலேயும்; ரூவான்வெலிசா புத்தர்கிட்டேயும் வேண்டிக்கிட்டேன் பாட்டி!”

“என்ன வேண்டிக் கொண்டாய் அருணகிரித் என்று ஞானாம்பாள் ஆசையோடு கேட்டாள்.

“பாபு, ராதா, தங்கமணி எல்லாருக்கும் இருக்கிற மாதிரி எனக்கும் ஒரு பாட்டி சிங்கப்பூர்லே இருக்காளாமே. அந்த பாட்டிக்கு ஏன் என்னைப் பார்க்கணும்னு ஆசையில்லை, என்று எல்லா கடவுளையும் கேட்டேன். இப்போ இங்கே வந்தவுடனே, நீங்க இப்படி கூப்பிட்டுப் பேசுவீங்க என்று நான் நினைக்கவே இல்லை பாட்டி. எனக்கு உங்களைப் பார்க்கணும்னு ஒரே ஆசையா இருக்கு பாட்டி!” என்றான் அருணகிரி.

அதன் பிறகு சில நொடிகள் போன் மவுனமாக இருக்கவே, அருணகிரி, “பாட்டி...பாட்டி...” என்று கூப்பிட்டான்.

“அருணகிரி எனக்கு இப்போ உடம்பு சரியில்லை! குணமானதும் நான் உன் கூடவே வந்து இருக்கப் போறேன். சந்தோஷம்தானே? அம்மாவையும், அப்பாவையும் நான் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லு!” என்று கூறிவிட்டு பரமகுருவைக் கூப்பிடச் சொன்னாள் பாட்டி.

பரமகுரு போனை கையில் வாங்கிக் கொண்டு என்ன “பெரியம்மா?” என்றார்.

“ஒன்றுமில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அருணகிரி, வள்ளியம்மை, விஜயன் எல்லாருடைய போட்டோவிலும் ஒரு காப்பி எடுத்து எனக்கு அனுப்பி வைக்கிறாயா? உன் மாமாகிட்டே எல்லா விபரமும் சொல்லி இருக்கிறேன். வள்ளிக்கும் அருணகிரிக்கும் நீதான் துணையாய் இருக்கணும். என்னாலே அதிகம் பேச முடியவில்லை. போனை மாமாவிடம் கொடுக்கறேன்,” என்று கூறினாள்

பொன்னம்பலத்திடம் பரமகுரு பேசும்போது, “மாமா! நீங்க வருகிறவரை உங்க போன் நம்பரையும் கொடுங்கள். குறித்துக் கொள்கிறேன்," என்றார்.

பொன்னம்பலம் நம்பரைக் கொடுத்துவிட்டு, “வேறு விசேஷம் ஒன்றுமில்லையே? வைத்து விடவா?” என்றார்.

“வைத்து விடுங்கள் மாமா! குட்நைட்!” என்றார் பரமகுரு.

போனை கீழே வைத்த பரமகுரு, அப்படியே பிரமித்துப் போய் அருகிலிருக்கும் சோபாவில் உட்கார்ந்து விட்டார். அவருக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது

ஒரு டெலிபோன் மணி ஒலிக்க ஆரம்பித்து அது முடிகிற நேரத்திற்குள், “அருணகிரியை ஐம்பது லட்சத்துக்கு அதிபதி என்று உணர்த்திய அதிசயத்தை எண்ணியபோது, ‘ஓ மை காட்...யூ ஆர் கிரேட்’ என்பதைத் தவிர அவரால் வேறு எதையும் சிந்திக்க இயலவில்லை!

செல்வந்தர் வீட்டுப் பெண்ணாய் பிறந்தும் வாழ்நாள் முழுவதும் வறுமையோடு போராடும் வள்ளியம்மைக்கு, இத்தனை காலம் கடந்தாவது கந்தன் கருணை புரிந்தானே என்று பரமகுரு எல்லையற்ற மகிம்ச்சியில் திளைத்தார்.