தென்னைமரத் தீவினிலே/ஒரு மலர் உறங்குகிறது

10
ஒரு மலர் உறங்குகிறது

னைவியையும், மகனையும் தேடி விஜயன் அலைந்தான். அவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது.

இலங்கை கார்பரேஷன் விளக்குகள் எரியத் துவங்கி இரவை பகலாக்கி கொண்டிருந்தன.

விஜயன், தான் இருக்கும் தெருவிற்குள் நுழைந்தபோது அவனை சிலர் வித்தியாசமாக பார்த்தார்கள். எல்லார் வீட்டு வாசல்களிலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தன. விஜயன் வந்து விட்டதைக் கேட்டு உள்ளேயிருந்து சிலர் வெளியே வந்து பார்த்தபடி நின்றார்கள்.

தூரத்தில் அவன் வருவதைப் பார்த்ததும், குமரேசனும், சில நண்பர்களும் வேகமாக ஓடி வந்து அவனுடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள், அவனுடன் எதுவும் பேசாமல் மவுனமாக வந்து கொண்டிருந்தனர். எல்லார் முகத்திலும் ஒரே சோகம் அல்லது யார் மீதோ ஆத்திரம்.

தன் வீட்டு வாசலை மிதித்தபோது விஜயன் அங்கே கண்ட காட்சி அவனை குலை நடுங்கச் செய்தது. தெருவே அவன் வீட்டு வாசலில் கூடியிருந்தது. அவனது நண்பர்கள், அழுதபடி விஜய னிடம், “அண்ணே! பாவிங்க நம்மை பழிவாங்கிட்டாங்க,” என்று கதறியபடி வள்ளியம்மையை காட்டினர். வீட்டின் நடுக்கூடத்தில் தலைமாட்டில் அகல் விளக்கெரிய வள்ளியம்மையின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவளருகே ஒரு பையும் இருந்தது.

அவனைக் கண்டதும் மாரியம்மாள் தான் முதலில் குரல் கொடுத்தால், “விஜயா, வள்ளியம்மை இப்படி நம்மை எல்லாம் தவிக்க விட்டு விட்டுப் போய் விட்டோளே,” என்று வயிற்றிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுதாள்.

அவனது கண்கள் நெருப்புத்துண்டு போல் அந்த மங்கலான வெளிச்சத்திலும் பிரகாசித்தன. நரம்புகள் எல்லாம் வெடித்துச் சிதறி விடும்போல் உடலுக்குள் துவம்சம் செய்தன.

பிரமை பிடித்தவன் போல் எதுவுமே பேசாமல் மனைவியையே பார்த்து கொண்டிருந்த விஜயன், இடி முழக்கம் போல் ‘வள்ளி’ என்று அலறியபடி அவள் கால்களில் தன் முகத்தைப் புதைந்து கொண்டு அழுதான்.

தன்னுடைய வாழ்நாளில் விஜயன் அன்று தான் முதன் முதலாக அப்படிக்கதறி அழுதான். ‘இதுவே எனது முதலும் கடைசியுமான அழுகை’ என்பது போல் அப்படி அழுதான்.

‘என்ன நடந்தது? என் மகன் அருணன் எங்கே?’ என்று விஜயன் கனவிலிருந்து விழித்தவன் போல் கேட்டான்.

குமாரசாமி, விஜயனது தோளைத் தட்டியபடி சமாதானப்படுத்தி விஷயத்தைக் கூறினான்.

“இன்னிக்குக் காலையில் செம்மண்காடு வழியே வந்த நம்ம ஊருக்காரர் ஒருவர் வந்து என் கிட்டே வள்ளியம்மையை யாரோ வழியில் சுட்டுப் போட்டிருப்பதாகச் சொன்னார்!”

“இதைக் கேட்டதும், மாரியம்மா, நானும் வர்றேன்னு புறப்பட்டாள். யாருமே வேலைக்கு போகல்லே. ஆரோக்கியம், அசோகன், தமிழ்நம்பி, நான், மாரியம்மா எல்லோருமா மாரியம்மையைத் தேடிப் போனப்போ அங்கே வள்ளியம்மை இந்த கோலத்தில் மரித்து ஓரமாகக் கிடந்தாள்!” என்றார்.

“இனிமே என்ன செய்யலாம் தம்பி!”

“அருணகிரியை தேடி கண்டுபிடிக்க முடியுமா? வள்ளியம்மை விஷயத்தை தெரிஞ்சவங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்ப வேண்டாமா? எவ்வளவு அழுதாலும் இனிமே என் ராசாத்தி எழுந்திருந்து வரப் போவதில்லை. பாவிங்க! என் உசிரைக் கேட்டாலும் கொடுத்திருப்பேனே நான் யாருக்காக தனியே வாழ்ந்து கொண்டு இருக்கேன்!” என்று புலம்பியபடியே ஆக வேண்டிய காரியங்களையும் நினைவுபடுத்தி விட்டாள் மாரியம்மாள் .

“வள்ளியம்மைக்கு இந்த ஊர்லே எத்தனையோ பணக்கார உறவுக்காரர்கள் இருப்பது உங்களுக்கெல்லாம் தெரியும். என்னை கல்யாணம் செய்து கொண்டதினால், அத்தனை பேருடைய உறவையும் அவள் விட்டவள். ஆனால், அவள் உயிருக்குயிராய் தன் அண்ணன் பரமகுருவைத் தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அவர்கள் இப்போதுசென்னையிலிருந்து, இங்கு பொன்னம்பலம் வீட்டிற்கு வந்து தங்கி இருக்கிறார்கள்,” என்று கூறிக்கொண்டே வந்த விஜயன் நிறுத்திவிட்டு ஒரு முறை திரும்பப் பார்த்தான்.

குமரேசன் ஒரு மூலையில் நின்றபடி அழுது கொண்டிருந்தான். குமரேசனை வள்ளியம்மை தன் சொந்தத்தம்பி மாதிரி எண்ணி நடத்தியவள். தாய், தந்தை இல்லாத அவன், தன் தூரத்து உறவினர் வீட்டில் தங்கி ஒரு மில்லில் வேலை செய்து வருகிறான். பாதிநாள் அவனுக்கு சாப்பாடு விஜயனோடுதான். லீவுநாள் என்றால் குமரேசன் இங்கே வந்துவிடுவான். கட்சி வேலையால் விஜயன் வீட்டில் இருப்பதே அபூர்வம். அருணகிரியையும், வள்ளியையும் கோயிலுக்குக் போவதும், கடைக்குச் சாமான்கள் வாங்க துணையாகப் போவதும் குமரேசன்தான்.

இனி அவனுக்கு வள்ளியைப் போல் உடன் பிறவாசகோதரி எங்கே கிடைக்கப் போகிறாள்!

“குமரேசா!” என்று தாழ்ந்த குரலில் விஜயன் அவனை அழைத்தான்.

“பொன்னம்பலம் வீட்டில் அவர்கள் எல்லாரும் இலங்கையைச் சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறார்கள். வீட்டில் யாருமே இல்லை. இந்நேரம் எல்லாரும் வந்திருப்பார்கள். குமரேசா நீ தான் அதற்கு தகுந்த ஆள். பரமகுருவை வெளியே தனியே அழைத்து வள்ளியம்மை இறந்த விஷயத்தையும், அருணகிரி காணாமல் போன விஷயத்தையும் சொல்லிவிட்டு வந்து விடு. அதன் பிறகு தான், நாம் வள்ளியம்மையின் இறுதிச் சடங்கை நடத்த வேண்டும்,” என்று ஒரே மூச்சில் கூறி முடித்தான் விஜயன்.