தென்னைமரத் தீவினிலே/சிவப்பு ஆற்றில் வள்ளி மலர்
வள்ளியம்மை அன்று எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தாள். விமான நிலையத்தில் அண்ணனையும், பெரியம்மாவையும் இப்படித் தனியே சந்தித்து, மனம் திறந்து உரையாடும் சந்தர்ப்பம் வாய்க்கும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. அண்ணன் தான் அப்படி என்றால், அண்ணன் குழந்தைகள் பாபுவையும், ராதாவைவும் அவளால் மறக்கவே முடியவில்லை. அருணகிரியையும் அல்லவா தங்களுடன் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்!
பை நிறைய பழங்களையும், பிஸ்கட்டுகளையும் போட்டுக் கொடுத்தது போதாதென்று, ஒரு கட்டு நோட்டையுமல்லவா சோப்புக் கட்டி மாதிரி அண்ணன் போட்டுத் தந்திருக்கிறார்.
அருணகிரி இப்போது அவர்களுடன் காரில் சென்று கொண்டிருப்பான். பாவம்! அவன் இப்படி என்னை விட்டு அவர்களுடன் போக நேரிடும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டான். பாபு அவனைப் பிடிவாதமாக அழைத்தும் அருணகிரிக்கும் உள்ளூர அவர்களுடன் போக வேண்டுமென்கிற ஆசை இருந்ததை அவனது கண்கள் கூறின.
இல்லாவிட்டால் யார் கூப்பிட்டாலும் இப்படி என் மகனை அனுப்ப மாட்டேன். அவனும் தராதரம் தெரியாமல் போக ஆசைப்பட மாட்டான்.
எல்லாவற்றையும்விட அருணகிரியை அவர்களுடன் அனுப்பி விட்டதற்காக அவர் என்னிடம் எவ்வளவு கோபித்துக் கொள்ளப் போகிறாரே; அவரை நான் எப்படி சமாதானம் செய்யப் போகிறேனோ தெரியவில்லை!
விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட வள்ளியம்மை இப்படி வழி முழுவதும் பலவிதமாகச் சிந்தித்துக் கொண்டே வேகமாக நடந்தாள்.
குறுக்கு வழியில் அத்தனை வேகமாகச் சென்றும் நாலரை மணிக்குப் பட்டித் துறையிலிருத்து புறப்படும் பஸ் அவள் வந்து சேர்வதற்குள் புறப்பட்டுப் போய்விட்டது. வள்ளியம்மைக்கு ஏமாற்றமாகி விட்டது.
அடுத்த பஸ்ஸிற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். ஆறு மணிக்குத் தான் அடுத்த பஸ் வரும். ‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவள் ஒரு முடிவிற்கு வந்தாள்.
செவலவத்தை வழியாகக் குறுக்கு வழியில் நடந்தால், இங்கே பஸ் வருவதற்குள், ஆறு மணிக்கெல்லாம் வீட்டையே அடைந்து விடலாம். கால்கள் தான் நோவெடுக்கும்.
கால் வலியைப் பார்த்தால் வீட்டுக்குப் போய் விளக்கேற்ற வேண்டாமா? கூட்டம் முடிந்து பசியோடு வருகிற புருஷனுக்கு சுடு சோறு ஆக்கிப் போட வேண்டாமா? சூ... கால் வலியென்ன; பெரிய கால்வலி; வீட்டுக்கு போனதும் சுடு தண்ணி ஒத்தடம் கொடுத்தால் எல்லாம் சரியாகி போகும்!
வள்ளியம்மை வேகமாக நடக்கத் தொடங்கினாள். கையிலிருந்த பை சிறியதாக இருந்தாலும் அதிலிருந்த ஆரஞ்சு ஆப்பிள், திராட்சை இவற்றால் கனம் அதிகமாகவே இருந்தது. ஆரஞ்சு என்றால் அத்தானுக்கு உயிர். ஆசை ஆசையாச் சாப்பிடும். வீட்டுக்குப் போனதும் பழத்தை சுளை சுளையாக உரித்து வைத்து, சோறு சாப்பிட்ட பிறகு தின்னக் கொடுக்க வேண்டும்.
கிழங்கு கிழங்கான ஆப்பிளை மட்டும், அத்தானை விட்டு நறுக்கித் தரத் சொல்விச் சாப்பிடணும்; அதுதான் அழகா நறுக்கும். திராட்சை ஒண்னுக்குத்தான், உரிக்கவோ, நறுக்கவோ வேண்டாம் தண்ணி ரொப்பின கோலிக் குண்டு கணக்கா-
தளதளன்னு குலையோடு இருக்கு. ஒவ்வொண்னா- அப்படியே பிச்சு அத்தான் வாயிலே போடணும்- பதிலுக்கு அதுவும், ஒண்ணை எடுத்து என் வாயிலே போடும் போது கையை...
வழியெல்லாம் வள்ளியம்மையின் மனம் தன் அன்புக் கணவனைப் பற்றியே சுற்றி சுற்றி எண்ணிய வண்ணமிருந்தது. செல்லச் சீமாட்டியாக வாழ வேண்டிய வள்ளியம்மை, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, ஏழை கனக விஜயனை விரும்பி மணந்து கொண்டாள். அதனாலேயே குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகி, அவளுக்கு இந்த ஏழ்மை நிலை ஏற்பட்டது.
அதனால் என்ன- இப்போதும் அவர்கள் வரையில் கண்ணியமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறரிடம் சென்று ஒரு வெள்ளிக் காசுக்காகக் கை நீட்டியது கிடையாது கணவன் எவ்வளவு சம்பாதித்துக் கொண்டு வந்தாலும், அதையே பெரிதாக ஏற்று ஒரு குறையும் இல்லாமல் சிக்கனமாகக் குடும்பம் நடத்தி; கணவன், மனைவி, குழந்தையோடு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். மற்றவர்கள் கண்களுக்கு ஏழையாகத் தோன்றினால் இருந்து விட்டுப் போகட்டுமே என்பது அவள் எண்ணம்.
ஆனால் இவளைப் போல், வள்ளியம்மையின் பெற்றோரால் நிம்மதியாக இருக்க முடியவில்லையே!
வள்ளியம்மையின் தாயார் ஞானம்பாளுக்கும் தனியாக ஆஸ்தி இருக்கிறது; அதுபோல தந்தைக்கும் கொழும்புவில் பல தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. என்ன இருந்து என்ன? ஒரே மகளான வள்ளியம்மை சீரும், சிறப்புமாய் வளர்த்து வந்தனர் சிவபாதம் தம்பதியினர். வள்ளியம்மை மேற்படிப்பிற்காக அந்தப் பள்ளியில் சேர்ந்த போது அதே வகுப்பிற்கு கனக விஜயனும் வந்தான். சாதாரண குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும், படிப்பில் மிகவும் கெட்டிக்காரன் . பேச்சில் மிகவும் வல்லவன். பள்ளி பேச்சுப் போட்டியில் பல பரிசுகள் பெற்று வந்தான். அடக்கமும், பண்பும் உள்ளவனாக இருந்தான்.
இந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக நெஞ்சுவலியினால் சிவபாதம் காலமானார். அப்போது ஞானாம்பாள் சகோதரி லட்சுமி அம்மாளும் வேதனையில் இருந்தாள். அவளது மாமா மயில்வாகனம் இறந்து போய் அவள் பரம குருவோடு தங்கியிருந்தாள் எனவே, ஞானம்பாளே தன் சகோதரி மூலம் வள்ளியம்மைக்கு பல விதங்களில் உதவினாள். திருமணத்திற்காக பெரிய இடமாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் வள்ளியம்மை தான் “விஜயனைத் தவிர வேறு யாரையும் மணக்க முடியாது!” என்று கூறி விட்டாள்.
இந்த விஷயம் ஞானாம்பாளின் இதயத்தில் பேரிடியாக விழுந்தது. கனக விஜயன் எவ்வளவு தான் நல்லவனாக இருந்தாலும், மிகவும் ஏழைக் குடும்பத்து பையன். தங்களுடைய அந்தஸ்துக்கு சிறிதும் ஒத்துவராது வீணே உறவினர்களின் ஏளனத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என எவ்வளவோ ஞானாம்பாள் மகளுக்கு புத்தி கூறினாள் ஆனால், ஒரே பிடிவா இருந்தாள் வள்ளி.
அதற்கு மேலும் விஷப் பரீட்சை செய்ய ஞானாம்பாள் மனம் ஒப்பவில்லை “சரி வருகிற ஒரு முகூர்த்தத்தில் உனக்கும், விஜயனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறேன். ஆனால், திருமணத்திற்குப் பிறகு, நீ, யாரோ நான் யாரோ. என் சொத்துக்களில் ஒரு காம் கூட உனக்கு கிடைக்காது. இது நிச்சயம்!” என்றாள் ஞானாம்பாள். அப்படியும் வள்ளியம்மையின் மனம் மாறவில்லை.
இதயத்தினுள் பொங்கியெழுந்த எல்லையற்ற துயரத்தை அடக்கிக் கொண்டாள் ஞானாம்பாள். உறவினர் யாரையும் அழைக்காமல், கதிர்காமம் முருகன் சன்னதியில், வள்ளியம்மை விஜயனுக்கு சிறப்பாக மணமுடித்துக் கொடுத்தாள். மறு நிமிஷமே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கார் ஏறி ஊருக்குப் போய் விட்டாள் ஞானாம்பாள்.
அதன் பிறகு, வள்ளியம்மை வீட்டிற்கு ஞானாம்பாள் சென்றதில்லை. இனி தன் மனைவிக்கு அந்த உறவு இல்லை என்பதை விஜயன் உணர்ந்து கொண்டு விட்டான். கனகவிஜயன் தன் தாயாருடன் தனது மனைவி வள்ளியம்மையை அழைத்துச் சென்றான். பல மாதங்களுக்குப் பிறகு, ஒரு சமயம் விஜயன் கண்டிக்கு சென்றிருந்தான். அப்போது ஞானாம்பாள் தன் சொத்துக்களையெல்லாம் பொன்னம்பலம் மூலம் விற்றுக் கொண்டு சிங்கப்பூரிலுள்ள தம்பியிடம் சென்று விட்டதாக தகவல் கிடைத்தது.
விஜயனின் படிப்பிற்கு தகுந்த வேலை உள்ளூரில் கிடைக்கவில்லை. சரியான வருமானம் இல்லாமல் குடும்பம் வறுமையில் கஷ்டப்பட்டது, தன் தாயார் மனைவியுடன் பிழைப்பிற்காக கொழும்பிற்கு வந்து விட்டான்.
அருணகிரி பிறந்த பிறகு விஜயன் குடும்பத்திற்காக மட்டுமே அதிகமாக உழைத்தான். அதுவும் சிறிது காலத்தில் மாறிவிட்டது. இப்போதெல்லாம் விஜயனின் முழு மூச்சும் ஈழத் தமிழர்களை மேம்படுத்துவதிலேயே இருந்தது. இதற்கிடையில் விஜயனின் தாய் காலமானாள்.
தமிழ் மக்களின் உரிமைகளைக் காக்க இரவு பகல் உழைப்பது நாள் தவறாமல் கூட்டம், பேச்சு என்று ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் விளையாடுகிற போராட்டம் தான் விஜயனுக்கு.
இவ்வாறு சிந்தித்தபடி பாதி வழிக்குமேல் தடந்து, செம்மண் மேட்டருகே வரும்போது, எதிரே வந்த ஜீப் ஒன்று வேகமாக அவளை கடந்து சென்றது. அதில் ராணுவ வீரர்கள் போல் தோற்ற மளித்த சிலர் இருந்தனர்.
வள்ளியம்மை, தனக்கு முன்னால் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் ஆளுடன் துணை சேர்ந்து விடவேண்டுமென எண்ணி வேகமாக நடந்த போது, சற்றுமுன் அவளைக் கடந்து சென்ற ஜீப்பிலிருந்தவர்கள் வள்ளியம்மையை நோக்கி சரமாரியாக சுட்டனர். இலங்கை மண்ணிற்கு ரத்த தானம் செய்து கொண்டே அவள் உயிர் பிரிந்தது.