தென்னைமரத் தீவினிலே/தங்கமணியின் தங்க மனசு



5
தங்கமணியின் தங்க மனசு

ருணகிரி அம்மாவைப் பற்றிய சோக நினைவுகளுடன் தனது அறையில் அமர்ந்திருந்தான்.

அங்கு வந்த பாபு அவனைப் பார்த்ததுமே “ஏன் அருணகிரி என்னமோ போல் இருக்கிறாய்?” என்று அருணகிரியின் முகத்தை தூக்கிப் பிடித்து கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தான்.

“ஒன்றுமில்லையே!” என்று கூறிய அருணகிரி, துக்கத்தில் தடுமாறினான்.

இதற்குள் அங்கு வந்த தங்கமணியும், ராதாவும் அவ்விருவர்களையும் பார்த்து, “வீட்டைச் சுற்றிப் பார்க்கப் போகலாமா?” என்று கேட்டார்கள். இருவரும் அவர்கள் பின்னால் மாடிக்கு சென்றார்கள்.

தங்கமணி அங்குள்ள அறைகள் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொரு பெயரை குறிப்பிட்டு கூறி விளக்கினாள். பாபுவும், ராதாவும் ஆர்வத்தோடு அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார்கள். அருணகிரி மட்டும் மவுனமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தான்.

“மேல் மாடிக்கு போகலாமா?” என்று அவள் கேட்டபோது, வேண்டாம் தங்கமணி காலெல்லாம் வலிக்கிறது. இந்த சோபாவில் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்,” என்றான் பாபு.

உடனே அருணகிரி, “நீங்கள் இன்னும் இந்த ஊரில் எத்தனை நாள் இருப்பீர்கள்?” என்று கேட்டான்.

“ஒரு வாரத்திற்குள் திரும்பிவிட வேண்டும் காலாண்டு தேர்வு வேறு வருகிறது. மார்க்கு குறைந்தால் அம்மா லேசில் விடமாட்டாள். நானும், ராதாவும் சாலன்ஞ் பண்ணி அனுமதி வாங்கி வந்திருக்கிறோம். இல்லாவிட்டால், இந்த டிரிப் அப்பாவும், பாட்டியும் மட்டும்தான் வருவதாக இருந்தது,” என்றான்.

“ஒரு வாரம் எதற்கு இந்த ஊரைச் சுற்றிப் பார்க்க? காரில் போனால் ஒரே நாளில் கூட எல்லாவற்றையும் பார்த்து முடித்து விடலாம்,” என்றான் அருணகிரி. மகிழ்ச்சியில், பாபுவும், ராதாவும் கை தட்டி ஆர்பரித்தார்கள்.

சற்றைக்கெல்லாம் மேலே வந்த ஒரு வேலையாள், “அருணகிரி! உன்னை பெரிய யசமான் கூப்பிடுகிறார்; வா கீழே போகலாம்,' என்றான்.

“என்னை எதற்கு கூப்பிடுகிறார், ஏதாவது சொல்லித் திட்டவா?” என்று எண்ணிக்கொண்டே அருணகிரி கீழிறங்கி வந்தான். அருணகிரி, மாமா அருகில் வந்து நின்றபோது அவர் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

ஆமாம் “நான் தான் பொன்னம்பலம் பேசுகிறேன். கனகசபையை உடனே என் வீட்டுக்கு அனுப்பி வை. தாமதிக்கக் கூடாது,” என்று ஒரு உத்தரவு போல் கூறி விட்டு போனை கீழே வைத்தார்.

கொழும்பு நகரத்திலுள்ள செல்வாக்கு மிகுந்த முக்கியமான பிரமுகர்களில் பொன்னம்பலமும் ஒருவர். அவருக்கு சொந்தமாக பல ஆலைகளும், தொழிற்கூடங்களும், தோட்டங்களும், பங்களாவும் பல கார்களும் உள்ளன. இதனால் அவரது குரலில் எப்போதும் கம்பீரமும், அதிகாரத்தின் வாடையும் வீசிக் கொண்டிருப்பது வழக்கம்.

தன் அருகில் நின்று கொண்டிருந்த அருணகிரியை கண்டதும், ‘அருணகிரி; காந்திமதி, பாபு, ராதா, தங்கமணி எல்லாருக்கும் கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்க வேண்டுமாம். கைடு கனகசபையை வரச்சொல்லி இருக்கிறேன். நம்ம காரில் நீயும் அவர்களுக்கு துணையாக சென்று எல்லா இடங்களையும் காட்டு. எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கிறது, இந்தா இதைப் போகுமிடங்களில் கைச் செலவிற்கோ, ஏதாவது சாமான் வாங்கவோ வைத்துக் கொள்,” என்று கூறி ஐந்து ரூபாயை அருணகிரியிடம் கொடுத்தார்.

சற்று நேரத்திற்கெல்லாம் கனகசபை கை கட்டியபடி வந்து நின்றான்.

அவரைப் பார்த்ததும், “கனகசபை நம்ம வீட்டுக்கு மெட்ராசிலிருந்து உள்நாட்டுகாரர்கள் வந்திருக்கிறார்கள். நீ இவங்கள அழைத்துக் கொண்டி கொழும்பைச் சுற்றிக் காட்டிவிடு. நாளை காலையில் ஐந்து மணிக்கு இவர்களோடு நீயும் நம் ஊருக்குப் புறப்படுகிறாய். முடிந்த அளவு இலங்கையில் உள்ள எல்லா இடங்களையும் அவர்களுக்கு புரியும்படியாக நன்றாக விளக்கிக் காட்டி விட்டு பத்திரமாக அழைத்துக் கொண்டு வந்துவிடு. இதை உன் கைச்செலவுக்கு வைத்துக் கொள்” என்று கூறி இருநூறு ரூபாயைக் கொடுத்தார் பொன்னம்பலம்.

“ஆகட்டும் ஐயா, தங்கள் உத்திரவுபடியே செய்கிறேன்” என்றார் கனகசபை பணிவுடன், மாமா உடனே தன் காரிலே வெளியே சென்று விட்டார்.

“அருணகிரி! நீ டிரஸ் பண்ணிக்க நான், அம்மா,பாபு, ராதா எல்லாரும் சீக்கிரம் புறப்பட வேண்டாமா?” என்று துரிதப்படுத்தினாள் தங்கமணி.

அதற்கு மேலும் அருணகிரியால் மெளனமாக இருக்க முடியவில்லை. விமான நிலையத்திற்கு என் அம்மா எல்லோரையும் வரவேற்கத்தான் வந்தேன். அம்மாவோடு வீடு திரும்ப வேண்டிய என்னை பாபு அங்கிருந்தபடியே அழைத்து வந்தான்

“இந்த டிரஸ்ஸோடு என்னை உங்களோடு அழைத்துப் போகச் சம்மதமானால் நான் வருகிறேன். இல்லாவிட்டால் இங்கேயே இருக்கிறேன் எனக்கு கொழும்பு நகரம் ஒன்றும் புதிதில்லை. அங்குள்ள எல்லா இடங்களையும் என் அப்பாவே எனக்குச் சுற்றிக் காண்பித்து விட்டார்,” என்றான்.

“சரி... சரி... தெரியாமல் கேட்டு விட்டேன். இதற்காக நீ கோபித்துக் கொண்டு எங்களுடன் வராமல் இருந்து விடாதே. வா, நாம் போய் முதலில் காரில் ஏறிக் கொள்ளலாம்” என்று தங்கமணி அழைத்தாள்.

உடனே அருணகிரி, “அவசரப் படாதே தங்கமணி எல்லோரும் ஏறிக் கொண்ட பிறகு இடத்திற்குத் தகுந்தாற் போல் நான் வந்து உட்கார்ந்து கொள்கிறேன்” என்றான்.

இதைக் கேட்டதும் தங்கமணி கலகலவென்று சிரித்தாள். தாத்தாவிற்குச் சொந்தமாக ஐந்து கார்கள் இருக்கின்றன. வீட்டு உபயோகத்திற்கு மட்டும் மூன்று கார் இருக்கு. இப்போ, நாம் வெளியே போகப் போகிற காடிலாக் வான். கப்பல் மயதிரி பெரிசா இருக்கும். எல்லாரும் ஏறிக் கொண்டாலும், பாதி இடம காலியாகத் தான் இருக்கப் போகிறது. வா போகலாம்” என்று சிரித்தபடியே அவன் கையைப் பிடித்து அழைத்துப் போனாள்.

தங்கமணியின் வெள்ளை உள்ளமும், கர்வமில்லாத, அன்பான பேச்சும் அருணகிரியின் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அதற்கு மேலும் மறுப்பேதும் கூறாமல் அவளுடன் சேர்ந்து சென்று காரில் உட்கார்ந்து கொண்டான்.

இதற்குள், காந்திமதி, பாபு ராதா எல்லோரும் டிரஸ் செய்து கொண்டு தயாராக வந்து விட்டனர். கல்யாணியும், லட்சுமி அம்மாளும் வரவில்லை என்று சொல்லி விட்டார்கள். காந்திமதியிடம், குழந்தைகள் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடு, திட்டாமல், அடிக்காமல், எல்லோரையும் கையைப் பிடித்து அழைத்துப் போய் பத்திரமாய்க் கூட்டிக் கொண்டு போய் விட்டு வா,” என்றாள் லட்சுமி அம்மாள்.

கைடு, கனகசபையும், தங்கமணியும், அவளுடைய செல்ல நாய்க்குட்டி ‘தும்பு’வோடு முன் சிட்டில் உட்கார்ந்து கொண்டார்கள்.

அருணகிரி, பாபு, ராதா தங்கமணி, காந்திமதி எல்லோரும் பின் சீட்டில் அமர்ந்தனர். கார் வீட்டை விட்டுப் புறப்பட்டு கடை வீதி வழியாகப் போய்க் கொண்டிருந்த போது “டிரைவர் வண்டியை இங்கே கொஞ்சம் நிறுத்துங்கள்,” என்று தங்கமணி கூறவே, கார் ஒரு ரெடிமேடு கடையில் நின்றது.

எதற்கு இவள் காரை நிறுத்தச் சொன்னாள் என்று மற்றவர்கள் யோசிக்கு முன், “ஐந்து நிமிஷம் அத்தை,” என்று கூறியபடி இறங்கிய தங்கமணி அருணகிரியின் அருகில் வந்து “வா என்னோடு” என்று அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, அநத ரெடிமேட் கடைககுள் நுழைந்தாள். அருணகிரி ஏதும் புரியாமல், அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

அந்த ரெடிமேடு கடைக்கு தங்கமணி, தன் தாயாரோடும் பாட்டியோடும் அடிக்கடி வருவது வழக்கம் அவர்களது வாடிக்கைக் கடை அதனால் அங்குள்ள அனைவருக்கும், பொன்னம்பலத்தின் பேத்தியான தங்கமணியைத் தெரிந்திருந்தது.

“வாங்க வாங்க,” என்று கடைசிப் பந்திகளும், கல்லாவில் இருந்தவரும் வரவேற்றார்கள். தங்கமணி அருணகிரியைச் சுட்டிக் காட்டி “இவன் பேரு, அருணகிரி; எங்களுக்கு உறவு இவன் அளவுக்கு இரண்டு பாண்ட், இரண்டு, ஷர்ட்டு, நல்ல உயர்ந்த ரகத்திலே எடுத்துக் குடுங்க" என்றாள்.

அப்பொழுதுதான் அருணகிரிக்குப் புரிந்தது, எதற்காக தங்கமணி தன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறாள் என்று.

அருணகிரி, சட்டென்று, “தங்கமணி” எனக்கு அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம், எல்லாம் இப்போது நான் போட்டிருப்பதே போதும்,” என்று எவ்வளவோ மறுத்தான்.

“ஒன்றும் பதில் பேசக்கூடாது; உனக்குப் பிடித்தமான கலரை தேர்ந்தெடுக்கிற உரிமை மட்டும்தான் உண்டு. மறுத்துப் பேசினால் தாத்தாவிற்கு போன் பண்ணி சொல்லிவிடுவேன்,” என்று பயமுறுத்தினாள் தங்கமணி.

அத்தனையும் மிக விலை உயர்ந்த ரகங்கள். பள்ளிக்கூடத்தில் தன்னோடு படிக்கும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் இம்மாதிரி டிரஸ் போட்டுக் கொண்டு வருவதும், மலிவு ரகத் துணி அணிந்திருக்கும் தன்னை அவர்கள் ஏளனமாக பேசுவதும் அவன் நினைவிற்கு வந்தன.

அருணகிரி தன் முன் பரப்பிக் கிடக்கும் உடைகளில் தனக்குப் பிடித்தமான இரண்டு செட்டை தேர்ந்தெடுத்தான்.

“அருணகிரி! இதில் ஒன்றை உள்ளே டிரஸ்சிங் ரூமில் போய் போட்டுக் கொண்டு வா,” என்று தங்கமணி கூறினாள்.

அந்த பிரம்மாண்டமான கடையில் தங்களையே பார்த்துக் கொண்டிருக்கும் பல ஊழியர்கள் முன் பதில் ஏதும் கூற முடியாமல் உள்ளே போய் உடையை மாற்றிக் கொண்டு வந்தான் அருணகிரி.

கடை சிப்பந்தி ஒருவன், அருணகிரி கழற்றிப் போட்ட பழைய உடையையும், மற்றொரு புதிய செட் உடையையும் அழகாக ‘பாக்’ செய்து காரில் கொண்டு போய் வைத்துவிட்டு வந்தான்.

கவுண்டரில் எழுந்து நின்று கொண்டிருந்த காஷியரிடம், “இந்த பில்லை, பாட்டி கணக்கிலே எழுதிக்கிங்க,” என்று கூறிவிட்டு அவசரமாக அருணகிரியை அழைத்துக் கொண்டு காரில் ஏறி விட்டாள்.

தங்கமணியின் புத்திசாலித்தனமான காரியத்தையும், எல்லாரிடமும் காட்டும் அன்பையும், பண்பையும் கண்டு மிகவும் வியந்தார்கள் காந்தி மதியும், பாபுவும், ராதாவும்.