தேன் சிட்டு/பல்லி வாழ்க்கை


பல்லி வாழ்க்கை

படம் இல்லாத வீடுண்டா? அப்படிப்பட்ட வீட்டை நான் இதுவரை பார்த்ததில்லை. எந்த வீட் டுக்குப் போனலும் அதன் சுவர்களில் படங்கள் தொங்குகின்றன. தெய்வங்களின் வெவ்வேறு வகை யான கோலங்கள்தாம் பெரும்பாலும் காட்சியளிக்கும். தெய்வ நம்பிக்கையற்றவனுக்கும் இந்தப் படத்தின் பக்தி மட்டும் குறைவதில்லை. அவன் நாட்டுத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் படங்களை மாட்டி வைக்கிறான்; இல்லாவிட்டால் கலையின் பெயரால் சுவரை அழகு செய்ய முயல்கிறான். தனக்குப் பிடித்தமான ஆட்டக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள், முற்போக்குச் சிற்பிகள், பேனா மன்னர்கள், புரட்சி வீரர்கள் என்றிப்படிப்பட்டவர்களின் படங்களிலே மனதைப் பறிகொடுத்தவர்கள் மிகப் பலர். அந்த ஆசையையும் துறக்க முயன்றவன் தன்னுடைய உருவப் படத்தையாவது மாட்டி வைப்பான். மனைவி மக்களின் உருவப் படங்களை எதிரிலே காட்சியாக வைத்துக்கொள்ள ஆசைப்படாதவர்கள் யார்? பள்ளியறையில் சான்றோர் படங்களை மாட்டுவோர் அதற்குக் கூறும் காரணங்களையும், நிருவாணப் படங்களை மாட்டுவோர் அதற்குக் கூறாத காரணங் களையும் நான் அறிவேன்.

இந்தப் படங்களிலிருந்து ஒருவனுடைய உள்ளப் பாங்கை ஒருவாறு தெரிந்து கொள்ளலாம். அவனுடைய விருப்பு வெறுப்பு, கட்சிக் கொள்கை, சமயப்பற்று எல்லாம் படங்களிலே சாயல் காட்டும்.

ஆனால் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவது எனக்கு இங்கே நோக்கமல்ல. என் வீட்டுச் சுவர்களிலும் சில படங்கள் தொங்குவதில் தனிப்பட்ட ஆச்சரியம் ஒன்றுமில்லை என்பதை மறை முகமாக வெளிப்படுத்தவே நான் முயற்சி செய்கிறேன்.

படிப்புக்கும் எழுத்து வேலைக்கும் பயன்படும் எனது மேஜைக்கு முன்னால் புத்தருடைய திருவுருவத்தை நான் தொங்கவிட்டிருக்கிறேன். படத்தைச் சுவரோடு ஒட்டினாற்போல வைப்பது அத்தனை அழகாயிராது என்பது என்னுடைய எண்ணம். படத்தின் கீழ் விளிம்பு சுவரைத் தொட்டுக் கொண்டும் மேல் விளிம்பு முன்னால் சற்று சாய்ந்தும் இருக்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும்.

புத்தர் தமது தோள்களிலே ஒரு நொண்டி ஆட்டைச் சுமந்துகொண்டு அன்பு மயமாகக் காட்சி தருகிறார். விசாலமான அவருடைய கண்களிலே கருணை ஒளி வீசுகிறது. இதழ்களிலே சாந்தியின் புன்முறுவல், பிம்பிசாரன் செய்யும் யாகத்திலே பலி யிடுவதற்காக ஒட்டிச் சென்ற ஆடுகளிலே ஒன்று கால் ஊனமாகி நடக்கமாட்டாமல் நொண்டி நொண்டி வருந்தியது. அதைத் தற்செயலாகக் கண்ணுற்ற புத்தர் அந்த ஆட்டைத் தூக்கிக்கொண்டு நடக்கலானார். அன்பு வழிக்கு அரசனை மாற்றச் செல்லும் புனித யாத்திரை தொடங்குகிறது. அந்த உன்னதக் காட்சியைத்தான் ஒவியன் தீட்டியிருக் கிறான்.

நேற்றிரவு மேஜையருகில் அமர்ந்து சிறுகதைத் தொகுதியொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உள்ளம் கதைகளிலே ஊன்றவில்லை; குறி யொன்றுமின்றி எங்கேயோ அலைந்தது.

புத்தர் படத்திற்குப் பின்னால் பதுங்கியிருந்த பல்லியொன்று திடீரென்று வெளிப்பட்டுச் சுவரிலே ஒட்டிய ஒரு பூச்சியைப் பிடித்துக்கொண்டு ஓடி மறைந்தது. என்னுடைய கவனம் அதன்மேல் சென்றது. அதே கணத்தில் உள்ளத்திலே கோபம் குமுறியது.

அன்புருவமான அந்த மகானின் நிழலை இந்த அற்பப் பல்லி எப்படிப் பயன்படுத்துகிறது பார்த்தீர்களா? அதற்கு எத்தனை கொழுப்பு, எத்தனை தந்திரம், எத்தனை வஞ்சனை அதனுடைய கொலைத் தொழிலுக்கு அந்தப் புனிதனையா பதுங்கிடமாகக் கொள்ளுவது? உயிர்ப் பலியை விலக்கச் செல்லும் அந்த அஹிம்சாமூர்த்தியின் பின்னலிருந்தா இப்படி உயிரை வாங்குவது? நினைக்க நினைக்க எனக்கு அந்தப் பல்லியின்மேல் ஆத்திரம் பொங்கிற்று. அதை ஒரே அடியில் அடித்து நொறுக்க வேண்டுமென்று துடித் துக்கொண்டு எழுந்தேன்.

ஐயன் புத்தனின் வதனத்திலே தவழ்ந்த சாந்திமயமான புன்னகை அப்பொழுதும் மாறவில்லை. அவர் என்னைப் பார்த்து ஏதோ சற்று ஏளனமாகச் சிரிப்பது போலவும் எனக்குப்பட்டது. அடிக்கோலை எடுத்துக்கொண்டு ஓங்கிய கை தானாகவே தணிந்தது. நெஞ்சிலே எண்ண அலைகள் மோதின.

"அந்தப் பல்லியின்மேல் உனக்கேன் இத்தனை கோபம்? பகுத்தறிவில்லாத உயிர் அது. ஆனால் ஆறறிவுடைய மனிதர்கள் இப்படி மகான்களின் மறைவிலிருந்து கொண்டு கொடுமை செய்வதில்லையா?” என்று யாரோ கேட்பது போலிருந்தது.

ஆசனத்தில் அமர்ந்து நான் சிந்தனையில் மூழ்கினேன்.

மகான்களின் பெயரை மேடையின்மீது நின்று மக்கள் கூசாமல் முழங்குகிறார்கள். அவர்களைப் பின் பற்றுவதாக வேடமும் புனைகிறார்கள். ஆனால் சொல் லுக்கும் தோற்றத்திற்கும் மாறாக அவர்கள் என்ன வெல்லாம் செய்கிறார்கள்! வரலாறு இதற்குச் சான்று பகர்கின்றது; சற்று ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு நாள்தோறும் கரவினில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளிச்சம் தருகின்றன. அரசியலிலே, சமூக வாழ்விலே, தொழில் முறையிலே,வாணிகத்திலே, கலையிலே எல்லாத் துறைகளிலும் பைம்மறியாகப் பார்க்கும் போது நேர்மைக்கு முன்னால் இந்த வேடத்தையும் காண்கிறோம். நாட்டு அரங்கிலும், உலக அரங்கிலும் இதன் அடி நீரோட்டப் பின்னணிக் காட்சி பதுங்கியிருக்கிறது. எல்லோருமா அவ்வாறு இருக்கிறார்கள்? இல்லையில்லை. அப்படி நினைத்தால் அது தவறு. ஆனால் மனிதர்களிலும் பல்லிகள் உண்டு என்பது மட்டும் நிச்சயம். இவ்வாறு எனது சிந்தனை மானிட சாதியின் பல்லி வாழ்க்கையைப் பற்றி நின்றபோது உள்ளம் தானாகவே குறுகுறுத்தது. இதுதான் தருணமென்று மனச்சான்று எழுந்து மார்பை நிமிர்த்தி நின்று போசத் தொடங்கிற்று.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனச்சான்று என்று ஒன்றிருக்கிறதல்லவா? செல்லக் கூடாத நெறிகளி லெல்லாம் செல்லுவதற்கு மனம் ஆசைப்படும். இந்த மனச்சான்று அதைத் தடுக்க முயலும். பல சமயங்களிலே மனச்சான்று தோற்றுப் போகும். ஆனால் சில சமயங்கள் அதற்குப் பெரிதும் சாதகமாக அமைந்துவிடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்றுதான் இப்பொழுது எனது மனச்சான்றுக்கும் வந்திருக்கிறது.

"உலகத்தைப் பற்றியெல்லாம் குற்ற விசாரணை செய்யப் புறப்பட்டு விட்டாயே, உனது நெஞ்சத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டாயா? புத்தருடைய படத்தை எதிரிலே வைத்துக் கொண்டிருக்கிறாயே, அது எதற்கு? புத்தரைப் போல அன்பு வாழ்விலே தோய்ந்தவனென்று உன்னைப் பார்க்க வருகிறவர்கள் நம்ப வேண்டுமென்பதுதானே உன்னுடைய விருப்பம்? உண்மையிலேயே அவரைப் பின்பற்ற நீ முயன்றிருக்கி றாயா? சற்று முன்புகூட நீ எதற்காக அடிக்கோலை ஓங்கினாய்? நீ பேசுவதையும், எழுதுவதையும் பின்பற்றி நடக்க முயன்றிருக்கிறாயா? அந்த முயற்சியில் மனதார ஈடுபட்டாயா? அதில் தவறியபோது அதற்காக வருந்தி மீண்டும் அதே தவறைச் செய்யக் கூடாது என்றாவது உறுதி செய்து கொண்டிருக்கிறாயா? அந்த எண்ணம் ஒன்றிருந்தாலே போதும். அது உண்டா? எண்ணிப் பார்” என்று மனச்சான்று மளமளவென்று பொழிந்தது. அதை எதிர்த்துப் போர் தொடுக்க அந்த வேளையிலே எனது உள்ளத்திற்குத் துணிச்சல் வரவில்லை. அது பெட்டிப் பாம்பைப்போல அடங்கிக்கொண்டது.

பல்லியை அடிக்க மறுபடியும் நான் முயலவில்லை. என்னுடைய குறைகளையும் தவறுகளையும் பற்றிய ஆராய்ச்சியில் அழுந்தினேன். இவ்வாறு என்னையே நான் எண்ணிப் பார்த்துக் கொள்வதற்குத் தூண்டு கோலாக இருந்த அந்தப் பல்லியை எனது குருவாகக் கூட மதிக்கலாம் என்ற உணர்ச்சி மெதுவாக மேலெழுந்தது.