தேவலீலைகள்/களிமண்ணும் கையுமாக

களிமண்ணும் கையுமாக



"வீரர் வாளும் கையுமாக இருந்து நாட்டையும் வீட்டையும், மானத்தையும் காப்பாற்றுகின்றனர்"

"தர்ப்பையும் கையுமாக இருந்துகொண்டு வஞ்சகர்கள், மன உறுதியற்றவர்களை மயக்கியும், மிரட்டியும் அடக்கி வருகின்றனர்"

"பேனாவும் கையுமாக நீ இருக்கிறாய் பரதா! பயன் என்ன?"—என்று வீரன் சலித்துக்கொண்டு கேட்டான்.

"திடீரென்று உனக்கேனப்பா, கைகளின் நிலை பற்றிய ஆராய்ச்சியிலே ஆர்வம் பிறந்து விட்டது?" என்று வீரனை நான் கேட்டேன்.

"கை செய்யும் வேலை கருத்தைக் காட்டுவதுதான்" என்றான் வீரன்.

"உண்மைதான்! கருத்து இருக்கும் விதத்திற்கேற்றபடிதான் கையின் நிலையும் இருக்கும், ஆனால் இன்று என்ன விசேஷம்? இந்த ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாய்?" என்று மேலும் கேட்டேன்.

"அந்தக் கரங்கள், விமான விசையைப் பிடித்துச் செலுத்துகின்றன; டாங்கிகளை ஓட்டுகின்றன; பீரங்கிகளைப் பேச வைக்கின்றன; துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டுள்ளன; எதிரியின் பிடரியிலே பாய்க்கின்றன; சுதந்திரக் கொடியைத் தாங்குகின்றன; ஆராய்ச்சி வாளைப் பிடிக்கின்றன; அறிவுச்சுடரை ஏந்தி உள்ளன. ஆர்ப்பாட்டக்காரரை அடக்குகின்றன; அரசுகள் நடத்துகின்றன; அந்தக் கரங்களே கரங்கள். மற்றவை மரங்கள்!" என்றான் வீரன் ஆர்வத்தோடு.

"வெளிநாட்டவரின் கரங்களைப் புகழ்வதே உன் வேலையா, வீரா? நம் நாட்டுக் கரங்கள் லேசா?" என்றேன் நான்.

"கூப்பிய கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற்றைப் பிசையும் கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற் கரம்"—என்று வர்ணித்தான் வீரன், வெறுப்புக்கலந்த குரலுடன்.

"அதற்கென்ன செய்யலாம்?" என்று நான் கூறினேன். வீரன் திருப்தி அடையவிலலை. "பரதா! கப்பலோட்டும் கரம், கோட்டை எதிரே நின்று கொடி தாங்குங்கரம்; பாட்டுமொழி ஏட்டைத் தாக்கும் கரம் இல்லை என்பதற்கு, வெளிநாட்டான்மீது மட்டும் பழி சுமத்தினால் போதாது. களிமண்ணுங் கையுமாக நம்மவரை இருக்குமாறு அவனா சட்டம் இயற்றியிருக்கிறான்? வெட்டி வேலைக்குக் கரங்களைப் பயன்படுத்தும்படி வெள்ளையனா பணித்தான்? வீணருக்குழைக்கும்படி அவனா ஏவுகிறான்?" என்று வீரன் கேட்க, “எனக்கொன்றும் புரியவில்லையே, களிமண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?" என்று நான் வீரனைக் கேட்டேன். "கைவண்ணங் காணத்தானே போகிறாய். திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களிமண்ணுங் கையுமாகத்தான் இருப்பர். வினாயக சதுர்த்தியப்பா அன்று. வீட்டிற்கு வீடு களிமண்ணுங் கையுமாக இருப்பர். பானை முகத்தான், மத்தளவயிற்றானை, மகேஸ்வரன்மைந்தனை ஈரக் களிமண்ணால் செய்து, எள்ளுருண்டையும், அப்பமும் கொழுக்கட்டையும், அவல், பொறியும் படைத்து குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டு, விநாயக சதுர்த்தி பூஜை செய்வர்" என்று வீரன் விளக்கிய பிறகே, “அடடே! அதையா சொன்னாய்! வேடிக்கை தான். களிமண்ணுங் கையுமாகத்தான் இருப்பர்" என்று கூறிக்கொண்டே நான் சிரித்தேன். "கையில் மட்டுமல்ல களிமண்! மண்டையிலும் அதுவேதான்" என்றான் நண்பன் கோபத்தோடு. "திட்டாதே தேவநிந்தனை செய்யாதே, ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது" என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்!

"வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானைமுகம், மத்தளவயிறு, ஒற்றைத் தந்தம்—நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப்பார் நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இத கேட்டால், எவன் தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவார்! உலகமக்களின் பிரிதிநிதிகள் கூட்டமொன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனுங், கழுத்திலே மண்டையோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர்சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காதா? நீயே கூ.று! சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப் பாடும் வேளையிலே நந்தி முகவதி வந்தால், கைகொட்டிச் சிரிக்கமாட்டார்களா! உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணை பொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம் புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு; பக்கத்திலே பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுள்களின் காட்சி எனும் கூத்திலே கணபதி, ஒரு விதூஷகராகவே பாவிக்கப்படுவார்" என்று வீரன் உரைத்தான்.

களிமண்ணுங் கையுமாக இருப்பர் நமது மக்கள் என்று வீரன் சொன்னதிலே தவறு இல்லை. விநாயக சதுர்த்தியன்று, நம்மில் பலர், இத்தகைய வீணாட்டத்திலேதான் இருப்பர். வெளிநாட்டார் கேட்டால் நம்மைக் கேலி செய்வார்கள் என்பதும் உண்மையே. அதுமட்டுமா! விநாயகரின் வரலாற்று விசித்திராதிகள். களிமண்ணுங் கையுமாக இருக்கும் தோழர்கள் சற்றுக் கவனித்தால், வீரன் கூறினதில் தவறில்லை என்று கூறிவிடுவர் என்பது திண்ணம்.

0000

கரிமுகத்தோடு ஒரு கடவுள், நாக்கிலே நாயகியுடன் ஒரு கடவுள், நடனமாடும் மயில் மீது மற்றோர் கடவுள், அலைகடல்மீது ஆலிலைமேல் துயிலும் வேறோர் கடவுள், தலைமீது தையலுடன் பிறிதோர் தேவன், என்ற இன்னோரன்ன கடவுள்கள் இருந்துகொண்டு இன்னின்னவருக்கு இன்னின்ன விதமான நிலைமை இருக்கவேண்டும் என்று ஏற்பாடுகளைச் செய்துகொண்டு வாழ்கிறார்கள் என்பதை இன்றும் நம்பி, அந்த நம்பிக்கைக்கேற்ற நாள் நட்சத்திரம் நடவடிக்கைகளில் பாசம் வைத்துக்கொண்டுள்ள மக்களிடத்திலே, கான்ஸ்ட்டிடியூவண்ட் அசெம்பிளி, பற்றியும், காரல்மார்க்சின் கருத்துப் பற்றியும், புரட்சி பற்றியும் பேசுகிறார்களே!

திருந்தாத வயலிலே, தீங்கனிமரம் கோரி, விதை தூவி, தேன் பெய்தாலும் பயன் கிட்டுமா? ஆடைஅணி புனைந்து, ஆடிப்பாடி வரச்செய்தாலும், அலியை அணைத்துக்கொண்டால் சுகம் கிட்டுமா? ஆரியம் எனும் படுகுழிமீது புராணமெனும் பச்சிலை போட்டு மூடிக்கிடக்கிறது. பச்சையைக் கண்டு இச்சைப்பட்டுச் செல்லும் பாமரர் நிச்சயமாகப் படுகுழி வீழ்வர் என்பது ஆரியருக்குத் தெரியும்! கொக்கெனத் காத்திருந்து, குள்ளநரியோல் குறியை வஞ்சகத்திலேயே நிறுத்தி, கள்ளமும் கபடமும் இல்லாதவரைக் கைதிகளாக்கி விட்டனர்; அவர்களின் கண்ணீர்வெள்ளத்தைக்கொண்டு, தமது சுயநலத்தோப்புக்கு நீர் பாய்ச்சுகின்றனர்; அவர்களின் வியர்வை, இரத்தம் ஆரியப்பண்ணைக்குப் பாய்கிறது. இதனை அறிந்தோறும், அஞ்சுகின்றனர் எடுத்துரைக்க எனில், அறியாதார் நிலைபற்றிக் கூறிடவும் வேண்டுமா?

அறிவிலே அக்கறை, நாணயத்திலே நாட்டம், நீதியிலே நோக்கம், மனிதத் தன்மையிலே நம்பிக்கை இம்மி அளவேனும் இருப்பினும், ஆண்டவன் பெயரால் அளக்கப்பட்டுள்ள ஆபாசங்களை மக்களிடை எடுத்து விளக்கி அன்னியத் துணிகளை நெருப்பிலிடுவதற்கு நெடுநாட்களுக்கு முன்பே, இந்தக் குப்பைகளைக் கொளுத்திவிட்டிருக்க மாட்டார்களா? கள்ளுக்கடை பகிஷ்காரத்திற்கு முன்னரேயே, கடவுள் பெயரைக் கூறிக் காசைப் பறிக்கும் ஸ்தாபனங்களின் முன் மறியல்கள் நடத்தியிருக்க மாட்டார்களா?

நாட்டு மக்களின் நிலை தெரியாமல், நாட்டுடைய நாடியைப் பிடித்துப் பார்க்க வகையின்றி, பகுத்தறிவுச் சுடரொளி வீசும் இந்தக் காலத்திலும் இருண்ட இந்தியாவிலே ஒளியின்றி, இருடிகள் தர்பார் நடத்துவதும், அரவிந்தர்கள் அலைகடல் குளிர்ந்த காற்று வீச ஆஸ்ரமம் அமைப்பதும், குன்றின்மீது கோட்டை எழுப்பிக் கொண்டு மகரிஷிகள் மன்னர்போல் மாநிதியுடன் தர்பார் நடத்துவதும், சங்கராச்சாரிகள், சில ஜில்லாக்களிலே சோணகிரிகள் தரும் சோடசோபசாரம் பெற்று ஜெகமெங்கும் குருவென்று ஜம்பம் பேசுவதும், தம்பிரான்கள் சைவத்தின் சரசத்திலே சகல சுகமும் பெற்றுச் சகல சம்பத்துடன் விளங்குவதும் ஆகிய இந்தக் காரியங்கள், அறிவுப் பெருக்கெடுத்தோடும் இந்தக் காலத்திலேயும் நடைபெறலாகுமா என்று கேட்கின்றனரா? துணிந்து கேட்பவர்கள் மீது கல்வீச்சும், சொல்வீச்சும் எவ்வளவு! அதிலே தப்புவோரைத் தள்ளிட வைதிகர்கள் வகுத்துள்ள குழிகள் எவ்வளவு!

நெறியிலாதவனுக்கு நெறிகாட்ட, ஒளி காணாதவனுக்கு ஒளி காட்ட ஒரு ஜோதி—ஆண்டவன்!

அசுத்தமான உலகில், சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை விளக்க, அநாகரிக உலகில் நாகரிக போதனையின் நாதனாக விளங்க, கபடம், வஞ்சகம் காய்ச்சல் முதலியன கொண்ட உள்ளத்திலே, கருணை நேர்மை, அன்புடைமை முதலிய அருங்குணங்கள் உண்டாகச் செய்ய ஒரு குருநாதன்—ஆண்டவன், எங்கும் நிறைந்து—எந்தச் சக்தியும் பெற்று—எல்லையில்லாத இன்பத்தின் வடிவமாகி, சத்தியசொரூபியாகி சாட்சாத்காரமாகி, சகல ஜீவாத்மாக்களுக்கும் ரட்சகனாகி பதியாகி உள்ள பரமன்—ஆண்டவன்!

கடவுளைப் பற்றிக் கசிந்து கண்ணீர் மல்கிப் பலர் கூறுவர் இதுபோல். ஆம். நெறி, ஒளி, நீதி, வாய்மை, தூய்மை, அன்பு—இவையே கடவுள். அறிவான தெய்வமே! எங்கும் நிறைகின்றன பொருளே! அன்பேசிவம்! உண்மையே ஆண்டவன்!—என்று பலர் போதித்தனர்.

இவை இருக்கும் இதே இடத்திலே, கடவுட் கதைகள் வேறு உண்டு! தத்துவம் ஒருபுறம், தத்தித்தோம் எனத் தாண்டவமாடும் தர்ப்பா சூரரின் தந்திரக் கதைகள் பக்கத்திலே! இவையும் சரி. அவையும் சரியே என்றுகொண்டு, "இடது காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே" என்பதற்குத் தத்துவம் இதுவென்பதையும் கேட்டுக்கொண்டு, இடதுகாலை இன்னவர் இந்த நாள் இந்தமடத்திலே இவ்வளவு சொகுசாகத் தூக்கி நின்றாடும் காலை, இன்ன மடாதிபதி இத்தனை பெரிய தொந்தி, இப்படிக் குலுங்கநகைத்து, இமைகொட்டாது பார்த்து, இன்னின்ன பரிசுகள் தந்தார் என்ற இந்த நடவடிக்கையும் கண்டு தத்துவத்திற்கும் நடத்தைக்கும் உள்ள தகாத தன்மையைக் கண்டு தணலிடு புழுவெனத் துடிக்காது, கிணற்றுத் தவளைபோல் இருந்து விடுகின்றனர்—மக்கள்—மக்களின் தலைவர்களிலே பலர்!

உங்கள் கடவுள் இப்படி இருப்பார், என்று விநாயக உருவத்தைக் காட்டும்போது, அந்த வைதிகன் கன்னத்திலே பகுத்தறிவாளனின் கரம் விளையாடும் காலம் விரைவிலே வரும் என்பது என் துணிபு. உன் கடவுளின் வரலாறு இது, அவருடைய குணாதிசயம் இன்னவை என்று, இன்றுள்ள புராணாதிகளைக் கூறினால் வேறு விதியற்றவர்கள் கேட்டுகொள்வர். சொந்த மதியற்றவர்கள் பொறுத்துக்கொள்வர். சிந்தனா சக்தி உள்ளவர்கள் கேட்டுக் கொள்வார்களா? எனக்குத் தூய்மையான ஆண்டவன்வேண்டும். தீயன் வேண்டாம் என்று தீர்ப்புக்கூறும் காலம் வெகு தூரத்தில் இல்லை. கொஞ்சம் தெளிவு, சற்று சொரணை, நாடியிலே இன்னம் கொஞ்சம் முறுக்கு, மனத்திலே சற்று அதிகரித்தகவலை, அறிவிலே அக்கறை பிறக்கவேண்டும்.

பயபக்தியுடன் நீங்கள் கும்பிட்டு வணங்கும் விநாயகர் யார்? மூவருள் முதல்வர் என்று சைவர்கள் மார்தட்டிக் கூறிக் கொள்ளும் மூக்கண்ணனாரின் மைந்தன்! கடவுள் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர் என்று பொருள். ஆனால் இங்கோ கடவுளுக்குக் குடும்பம். பிள்ளைக்குட்டி, பரத்தை முதலிய எந்தப் பாசமும் இல்லாமலில்லை.

அத்தகைய சிவனாரும், உமையம்மையும் ஒருநாள் காட்டு மார்க்கமாக உலாவிக்கொண்டிருந்தனராம் கடலோரத்திலே இப்போது காதலர்கள் எதிரே திரை கடலும், இதயத்திலே களிப்புக் கடலும், கடலிலே அலையும், மனதிலே கருத்தும் கொந்தளிக்க நடந்து செல்வதுபோல! எல்லாவற்றையும் கடந்தவர், அங்கு இரு யானைகள் கலவி செய்திடக் கண்டாராம்! கண்டதும் அவர் மனதிலே அலைமோதத் தொடங்கியது. மன்மதனைக் கண்ணால் எரித்தார் எங்கள் மகாதேவர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ளும் சைவர்கள், இந்தப் புராணத்தையும் பூரிப்போடு பேசுவர்; இதைக் கூறியும் நீறு பூசுவர்! காட்டானைகளின் கலவியைக் கண்டதும் காமனைக் கருக்கியவருக்கு உள்ளத்திலே காம உணர்ச்சி ஓங்காரமாகி விட்டது! ஆம்! கடவுளுக்குத்தான் தோழரே இந்த உணர்ச்சி வந்தது! தாங்களும் காட்டானைகளாகிக் கலவி இன்பத்தைக் கண்டு காம ரசத்தை உண்டுகளிக்க எண்ணினார். உமையும் சரி என்றார். இருவரும் யானை உருக்கொண்டனர். காட்டிலே திருவிளையாடல் நடந்தது! அந்தப் போகப் பிரசாதமே யானைமுகக் கணபதி! பிள்ளையார் பிறப்புக்கு இஃதோர் வரலாறு.

இதன் ஆபாசத்தைப் பாரீர்; இத்தகைய ஆபாசத்தை ஆண்டவன் செயலென்று கூறிடும் அன்பர்களைவிட, கடவுளை நிந்திக்கும் கயவர் உண்டோ கூறீர். கருணாமூர்த்தி, கட்டுகளைக் கடந்தவர், மும்மலமற்றவர். பஞ்சேந்திரியங்களின் சேட்டைகள் பரமனை அணுகா என்று பேசுவதும், பின்னர் கண்ணுதற் கடவுள் காட்டானைகள் கலவி செய்யக்கண்டு காமங்கொண்டு, கணபதியைப் பெற்றார் என்பதை உரைப்பதும் பேதைமையன்றோ, பித்தமன்றோ என்று கேட்க உனக்கு உரிமை கிடையாதா?

மற்றுமோர் வரலாறு கேளீர்! பார்வதி குளிக்கச் செல்கையில், தன் உடம்பிலிருந்த அழுக்கை உருட்டித்திரட்டி ஒரு பிள்ளையை உற்பத்திசெய்து, தன் வீட்டு வாயிலைக் காவல் புரியவைத்தாராம். பத்துமாதம் சுமந்து பாமரர் பெற்றால், பார்வதியார் உடல் அழுக்கை உருட்டிப் பிள்ளையாக்குகிறார்! கடவுள் அல்லவா! இதுகூடச் செய்யாவிட்டால், இமையவனை மணந்தவளுக்கு இழுக்கு நேரிடும் என்று புராணப் புளுகர்கள் கருதினர் போலும்!

அழுக்கன், பார்வதியின் வீட்டு வாயலிலே நிற்கையில், பரமசிவனார் உள்ளே நுழைய வந்தாராம் அவருக்கு என்ன அவசரமோ பாவம்! தனயன் தந்தையைத் தடுக்க, தந்தை கோபித்து வாள்கொண்டு பிள்ளையின் தலையை வீசிவிட்டு, உள்ளே நுழைந்தார். மகனின் கழுத்து பனங்காய் போலும்! ஒரே வெட்டு மகன் தலை உருண்டது.

கருணாமூர்த்தியின் காரியத்தைப் பாரீர்! மகன், மாதா நீராடுகிறாள் சற்றுப்பொறும் என்று கூறியதைக்கேட்டுக் கோபம் பொங்கிக் கொடுவாள் கொண்டு சிரச்சேதம் செய்கிறார் சிவனார். எவ்வளவு நீதி, எத்தகையநாகரிகம். விஷயமறிந்த பார்வதி, “ஐயோ மகனே! அழுக்கனே, பாலகா?" என்று அலறி அழ, அரன்கண்டு, செத்தால் என்ன, இதோ பிழைக்க வைக்கிறேன் என்று தேற்றி வெளியே வந்து பார்க்க, உடல் மட்டும் இருந்ததாம். தலையைக் காணோமாம்! செத்தவனை மீட்கும் சக்திபெற்ற சிவனாருக்கு மறைந்த தலையைக் கண்டுப்பிடிக்க முடியாது போன காரணம் என்னவோ? வழியே ஒரு யானை சென்றதாம். அதன் தலையை வெட்டி, உருண்டு கிடந்த உடலிலே ஒட்ட வைத்து பிள்ளையாரைப் பிழைக்கச் செய்ய, யானை முகத்தோடு கணபதி எழுந்தாராம்.

இந்த வரலாற்று மூலமாகலாவது ஏதேனும் கடவுட் தன்மை, கடவுட் கொள்கை, மனிதத்தன்மை, தூய்மை முதலிய நற்குணம் விளங்குகின்றனவா என்று நாத்திகமென்றால் நடுங்கும் நமது ஆத்திக அன்பர்களைக் கேட்கிறேன்.

மற்றுமோர் வரலாறு! நமது புராண இலட்சணம் எப்படியெனில், ஒரு நிகழ்ச்சிக்குக் குறைந்தது ஒன்பது விதமான கதையாவது இருக்கும். புளுகர்கள் கூட்டம், போட்டியிட்டுக்கொண்டு வேலை செய்துள்ளது. விநாயகர், பார்வதியின் கர்ப்பத்திலே இருக்கையில் ஒரு அசுரன், காற்றுவடிவில் கருவிருக்கும் இடஞ்சென்று, குழந்தையின் தலையைக் கொய்துவிட, உடனே பரமன், அந்தத் தலை போனாலென்ன இதோ ஆனைத்தலை இருக்க அருள்கிறேன் என்று பாலித்திட, ஆனை முகத்தோடு குழந்தை பிறந்தது என்று விநாயக புராணம் கூறுகிறது. தக்கன் யாகத்தை அழிக்க, சிவனாரால் ஏவப்பட்ட விநாயகர் சிரம் அறுபட்டுவிழ, சிவனார் சிரமற்ற பிள்ளையைக்கண்டு, யானைச் சிரமொன்றை வைத்துப் பிள்ளையை உயிர்ப்பித்தாராம்! உயிர் வரச்செய்யும் உத்தமர், பழைய மனிதத் தலையை மட்டும் வரவழைக்க அறியார் போலும் என்ன மடமை!

வடநாட்டிலே ஒரு புராணம் விநாயகருக்கு! விசித்திரமானது. பிரமன் ஒருநாள் கொட்டாவிவிட, திறந்த வாயினின்றும் திடீரென்று தீ வண்ணமாக ஒரு திருக்குழவி தொப்பென்று வெளியே வந்து குதித்ததாம். கொட்டாவி பெற்ற குழந்தையை, பிரமன் தன் உள்ளங்கையிலே வைத்து உவகையோடு பார்த்துக்கொண்டிருக்கையில், குழந்தை தண்ணீரில் குதித்துப் பிசாசு வடிவாயிற்றாம்.

இதென்ன விசித்திரம் பாருங்கள்! கொட்டாவியிலே குழந்தை! தண்ணீரில் மூழ்கியதும் பிசாசு! தேவர்களே! உங்களின் வாழ்வு இவ்வளவு ஆபத்தானதுதானா? என்று பரிதாபப்பட வேண்டியிருக்கிறது. பிரமன், "ஓ! மகனே சிந்தூரா! வரமொன்று தருவேன் பெற்றுக் கொள். நீ யாரைக் கட்டித்தழுவினாலும் அவர்கள் இறந்து போகக் கடவர்" என்று அருளினார்.

நாரதர் வந்தாராம் அவ்வழியே! வரத்தைப் பரீட்சிக்க, சிந்தூரன், நாரதரைத் தழுவிக்கொள்ளச் செல்ல, இதை அறிந்து நாரதர் ஒரு தந்திரம் செய்தார். வரத்தைப் பரீட்சிக்க, வரமளித்த பிரமனையே தழுவிப்பார் என்றாராம், போனான் சிந்தூரன்! பிரமாத கோபம் பிரமாவுக்கு. "ஏ சிந்தூரா, உன்னைக் கணேசர் கொல்வார், போ" என்று சபித்து விட்டார். மறைந்தார். பின்னர், பிரமனைத் தேடிச்சிந்தூரன் வைகுந்தம் சென்றான்". விஷ்ணு, "நான் சாமான்யனப்பா, சிந்தூரா! உன் சக்திக்கேற்றவர் சிவனாரே. அங்குபோய்க் காட்டு உன்திறனை" என்று கூறிட, கைலாயம் சென்று சிவனைத் தேடினான் சிந்தூரன். அவர் இல்லை அங்கு! பார்வதிக்கும் சிந்தூரனுக்கும் பலத்த விவாதம் நடந்ததாம்; சிவனார் வந்து சேர்ந்தார் நல்ல சமயத்திலே. சிந்தூரனுடன் சண்டையிட்டு மூர்ச்சையானார். பார்வதியார் பதைத்து விஷ்ணுவை நோக்கி, "அரியே! என் வயிற்றிலே பிறந்து, இந்தச் சிந்தூரனைக் கொல்லு" என்று கட்டளையிட மஹாவிஷ்ணு மலைமகள் வயிற்றிலே கஜமுகத்தோடு தோன்றிசிந்தூரனைச் சம்ஹாரம் செய்தார். அந்த கஜமுகன்தான் விநாயகர்! பார்வதி புத்திரர், மஹாவிஷ்ணுவின் அவதாரம். பிரமனின் ஒரு பொல்லாத கொட்டாவி இவ்வளவுக்கும் காரணம்!!

யாக்ஞவல்கியர் காலத்துக்கு முன்பு, விநாயகர், ஆரியருக்குக் கிடையாதென்றும், பின்பு நான்கு விநாயகர்கள் தோன்றினரென்றும், அவர்கள் நாசஞ்செய்யும் கெட்ட குணங்கொண்டோ ரென்றும், இரத்தம் சோறும் இறைச்சிப் பலியும் வேண்டினரென்றும், பிறகு நான்கு விநாயகர் போய் ஒரு மஹாகணபதியாக்கப்பட்டதாகவும், இந்துமார்க்க தத்துவ விளக்கமுரைக்கும் பாபு பகவான் தாஸ் கூறுகிறார்.

எந்தப் புராணத்தை நீங்கள் நம்பினாலுஞ் சரியே, அதிலே ஏதாவது ஆபாசமற்றதாக, அறிவுக்குப் பொருத்தமானதாக, அன்புக்கு இருப்பிடமாக, அநாகரீகமற்றதாக இருக்கிறதா என்று அன்பர்களே எண்ணிப் பாருங்கள். இத்தகைய கதாநாயகரைச் களிமண்ணால் செய்து வைத்துக் கைதொழும் போக்குசரியா என்பதை ஆற அமற யோசிக்கலாகாதா?

இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த உளைச் சேற்றிலே உழலுமட்டும், முன்னேற்றமேது, வாழ்வு ஏது? களிமண்ணுங்கையுமாக இருக்கும் தோழர்களே! கசடர் புனைந்துரைகளைக் கடவுட் கதையென்று நம்பி ஏமாளிகளாக இருக்குமட்டும், அறிவு உலகில், நம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும். இவைகளை விட்டு விடும் நாளே, சுயமரியாதை பிறக்கும் வேளையே, மக்களின் விடுதலை நாள்! அந்த நாள் என்று வரும், என்ற ஏக்கமே எனக்குப் பிறந்தது வீரனின் பேச்சுக் கேட்டு. இதனைத்தான் உங்கட்கும் உரைத்தேன், உள்ளத்தில் கோபமின்றி, யோசித்துணர்க!

⚬⚬⚬⚬ooOoo⚬⚬⚬⚬