தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-இயல்1.நூன்மரபு-இளம்பூரணர் உரை
தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்
தொகுஇயல் 1. நூன்மரபு
தொகுஇளம்பூரணர் உரை
தொகுமுதலாவது "நூன்மரபு"
தொகு- இவ்வோத்து என்நுதலிற்றோவெனின், அதுவும் அதன் பெயர் உரைப்பவே அடங்கும். இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத் தினை ஓராற்றால் தொகுத்து உணர்த்துதலின், நூன்மரபு என்னும் பெயர்த்து. இதனுட் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை (நின்ற) எழுத்திற்கன்றி, தனிநின்ற எழுத்திற்கென உணர்க.
நூற்பா:01 (எழுத்தெனப்படுப)
தொகு- எழுத்தெனப் படுப () எழுத்து எனப்படுப
- வகரமுத னகர விறுவாய் () அகர முதல் னகர இறுவாய்
- முப்பஃ தென்ப () முப்பஃது என்ப
- சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே. (01) சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.
இளம்பூரணர் உரை:
தொகு- இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோவெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.
- பதவுரை
- இதன்பொருள்
- எழுத்து எனப்படுப= எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன;
- அகரம் முதல் னகர இறுவாய்= அகரமாகிய முதலை உடையனவும், னகரமாகிய இறுவாயினை உடையனவுமாகிய;
- முப்பஃது என்ப= முப்பதென்று சொல்லுப (ஆசிரியர்);
- சார்ந்துவரல் மரபின் மூன்றும் அலங்கடை= சார்ந்துவருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து.
- மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லுப என்றவாறு.
- உதாரணம்
- அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ,ஐ,ஒ, ஓ, ஒள- க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்- என வரும்.
- விளக்கம்
- எனப்படுப என்ற சிறப்பான், அளபெடையும் உயிர்மெய்யும் வரிவடிவம் சிறப்பில்லா எழுத்தாகக் கொள்ளப்பட்டன. அ, ஆ- என்பன பெயர். முறை அம்முறை. தொகை முப்பது.
- அவற்றுள் அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதற் சிறப்பான், முன்வைக்கப்பட்டது.
- னகரம் வீடு பேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது.
- தொகை (யென்பது) தொகையுட் டொகையும், தொகையுள்வகையும், தொகையுள் விரியும், வகையுட் டொகையும், வகையுள் வகையும், வகையுள் விரியும், விரியுட் டொகையும், விரியுள் வகையும், விரியுள் விரியும் என ஒன்பது வகைப்படும்.
- எழுத்தென்பது தொகையுட்டொகை. முப்பதென்பது அதன்வகை. முப்பத்து மூன்றுஎன்பது, அதன் விரி.
- முப்பதென்பது, வகையுட் டொகை. முப்பத்து மூன்று என்பது அதன் வகை. அளபெடை தலைப்பெய்து நாற்பதென்பது அதன் விரி.
- முப்பத்து மூன்றென்பது விரியுட் டொகை. நாற்பதென்பது அதன்வகை. உயிர்மெய் தலைப்பெய்து இருநூற்றைம்பத்தாறென்பது அதன் விரி.
- செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது. அகரமுதல் னகரவிறுவாய் என்ன, இருபெயரொட்டாகுபெயரான் முப்பதன் மேல்நின்றன.
நூற்பா:02 (அவைதாம்)
தொகு- அவைதாங் () அவைதாம்
- குற்றியலிகரங் குற்றியலுகர மாய்த மென்ற () குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
- முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன. (02) முப்பால் புள்ளியும் எழுத்து ஓரன்ன.
இளம்பூரணர் உரை:
தொகு- இது, மேல் சார்ந்துவரும் என்னப்பட்ட மூன்றற்கும் பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று.
- பதவுரை
- இதன்பொருள்
- அவைதாம்= மேற் சார்ந்துவரும் என்னப்பட்டவைதாம்;
- குற்றியலிகரம் குற்றியலுகரம்= குற்றியலிகரமும் குற்றியலுகரமும்;
- ஆய்தம் என்ற முப்பால் புள்ளியும்= ஆய்தமும் என்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை;
- எழுத்து ஓர் அன்ன= (அவை) மேற்சொல்லப்பட்ட முப்பது எழுத்தோடு ஒரு தன்மைய.
- விளக்கம்
- அப்பெயர் பெயர். அம்முறை முறை. 'எழுத்தோரன்ன' என வேண்டா கூறியவதனான், முன் 'எனப்படுப' என்ற சிறப்பு அம்மூன்றற்கும் கொள்ளக் கிடந்தமையின், அது விலக்குதல் பெறுதும் என்பது.
- குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எ்ண்ணும்மை விகாரத்தால் தொக்கன.
- சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது, அதுபோல இகர வுகரங்கள் குறுகின விடத்தும் அவை உயிர் ஆகற்பாலன.
அவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும், பொருள் வேற்றுமையும் நோக்கி வேறெழுத்தென்று வேண்டினார் என உணர்க.
நூற்பா:03 (அவற்றுள்)
தொகு- அவற்றுள் () அவற்றுள்
- அ இ உ () அ இ உ
- எ ஒ வென்னு மப்பா லைந்து () எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்
- மோரள பிசைக்குங் குற்றெழுத் தென்ப. (03) ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப.
இளம்பூரணர் உரை:
- இது, மேற்கூறப்பட்டனவற்றிற்கு அளபும் குறியும் உணர்த்துதல் நுதலிற்று.
- பதவுரை
- இதன்பொருள்
- அவற்றுள்= மேற்கூறப்பட்ட எழுத்தினுள்;
- அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும்= அ இ உ எ ஒ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஐந்தும்;
- ஓர் அளபு இசைக்கும்= (ஒரோவொன்று) ஓர் அளபாக இசைக்கும்;
- குற்றெழுத்து என்ப= (அவைதாம்) குற்றெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்).
- விளக்கம்
- இவர் காரணம் பற்றியன்றிக் குறியிடார். ஆகலின், இது தன் குறுமையான் இக்குறி பெற்றது. இக்குறியை ஆண்டவாறு மேல்வழிக் கண்டு கொள்க.
நூற்பா:04 (ஆஈஊஏஐ)
தொகு- ஆ ஈ ஊ ஏ ஐ () ஆ ஈ ஊ ஏ ஐ
- ஓ ஒள வென்னு மப்பா லேழு () ஒள என்னும் அப்பால் ஏழும்
- மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப. (04) ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.
இளம்பூரணர் உரை:
- இதுவும் அது.
- பதவுரை
- இதன்பொருள்
- ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் அப்பால் ஏழும்= ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஏழும்;
- ஈர் அளபு இசைக்கும்= (ஒரோவொன்று) இரண்டு மாத்திரையாக ஒலிக்கும்;
- நெட்டெழுத்து என்ப= (அவைதாம்) நெட்டெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர் (புலவர்).
- விளக்கம்
- ஐகார ஒளகாரங்களுக்கு இனம் இல்லையெனினும், மாத்திரை யொப்புமையான் அவை நெட்டெழுத்து எனப்பட்டன.
நூற்பா:05 (மூவளபிசைத்)
தொகு- மூவள பிசைத்த லோரெழுத் தின்றே. (05) மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே.
இளம்பூரணர் உரை:
- இது உயிரளபெடை எழுத்திற்கு மாத்திரை கூறுதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- மூ அளபு இசைத்தல்= மூன்று மாத்திரையாக ஒலித்தல்
- ஓர் எழுத்து இன்று= இயல்பாகிய ஓர் எழுத்திற்கு இல்லை (விகாரமாகிய இரண்டு கூடியதற்கு உண்டு).
நூற்பா:06 (நீட்டம்)
தொகு- நீட்டம் வேண்டி னவ்வள புடைய () நீட்டம் வேண்டின் அவ் அளபு உடைய
- கூட்டி யெழூஉத லென்மனார் புலவர். (06) கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்.
- இது, உயிரளபெடை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- நீட்டம் வேண்டின்= நீண்ட மாத்திரையையுடைய அளபெடை எழுத்துப்பெற வேண்டின்;
- அ அளபு உடைய கூட்டி எழூஉதல்= மேற்கூறிய இரண்டளபுடைய நெடிலையும் ஓர் அளபுடையை குறிலையும் (பிளவுபடாமற்) கூட்டி எழூஉக;
- என்மனார் புலவர்= என்று சொல்லுவர் புலவர்.
நூற்பா:07 (கண்ணிமை)
தொகு- கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை () கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
- நுண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே. (07) நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.
- இஃது, அம்மாத்திரை யிலக்கணம் கூறுதல் நுதலிற்று.
- இதன் பொருள்
- கண்ணிமை என் நொடி என அவ் மாத்திரை= கண்ணிமையும் நொடியுமாகிய அவை மாத்திரைக்கு அளபு;
- நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே= (இது) நுண்ணிதாக நூல் இலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி.
- இமையென்றது இமைத்தற்றொழிலை. நொடியென்றது நொடியிற் பிறந்த ஓசையை. தன் குறிப்பு இன்றி நிகழ்தலின், இமை முன் கூறப்பட்டது. நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல், தேங்கமுகத்தளத்தல், சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைய என்னும் அளவினுள், இது சார்த்தியளத்தல். நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறு என்றதனான் நாலுழக்கு கொண்டது நாழி யென்றாற் போல, அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக.
நூற்பா:08 (ஒளகார)
தொகு- ஒளகார விறுவாய்ப் () ஒளகார இறுவாய்ப்
- பன்னீ ரெழுத்து முயிரென மொழிப. (08) பன் ஈர் எழுத்தும் உயிர் என மொழிப.
- இது மேற்கூறிய குறிலையும் நெடிலையும் தொகுத்து வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- ஒளகார இறுவாய்ப் பன்னீர் எழுத்தும்= ஒளகாரமாகிய இறுதியையுடைய பன்னிரண்டு எழுத்தினையும்,
- உயிர் என மொழிப= உயிர் என்னும் குறியினையுடைய என்று சொல்லுவர்.
நூற்பா:09 (னகார)
தொகு- னகார விறுவாய்ப் () னகார இறுவாய்ப்
- பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப. (09) பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.
- இது,மேற்கூறிய உயிரல்லா எழுத்திற்கு ஓர் குறியிடுதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- னகார இறுவாய்ப் பதினெண் எழுத்தும்= னகரமாகிய இறுதியையுடைய் பதினெட்டு எழுத்தினையும்,
- மெய் என மொழிப. மெய்யென்னும் குறியினையுடைய என்று சொல்லுவர்.
நூற்பா:10 (மெய்யோ)
தொகு- மெய்யோ டியையினு முயிரிய றிரியா. (10) மெய்யோடு இயையினும் உயிர் இயல் திரியா.
- இஃது, உயிர்மெய்க்கு அளபு கூறுதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- மெய்யோடு இயையினும்= (உயிர்மெய்யாவன) மெய்களோடு உயிர் இயையப் பிறந்த நிலைமையவாயினும்;
- உயிர் இயல் திரியா= (அவ்வுயிர்கள் அவ்வியைபின்கண்ணே வேறு ஓர் எழுத்தாய் நின்றமையின், மெய்யோடு இயைபின்றி நின்ற) உயிர்களது இயல்பில் திரியா.
- உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க்கூட்டத்தினை, 'மெய்யோடியையினும்' என உயிர்மேல் வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்கு மாத்திரையாகக் கூறுகின்றமை நோக்கிப் போலும். இயலென்றது பெரும்பான்மை மாத்திரையினை. சிறுபான்மை குறியும் எண்ணும் கொள்க.
- க எனவும், கா எனவும் அவ்வாறு நின்றமை அறிக.
நூற்பா:11 (மெய்யதளபே)
தொகு- மெய்ய தளபே யரையென மொழிப. (11) மெய்யது அளபே அரை என மொழிப.
- இது தனிமெய்க்கு அளபு கூறுதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- மெய்யின் அளபு= மெய்யது மாத்திரையினை;
- அரை என மொழிப= (ஒரோவொன்று) அரை மாத்திரையுடையவென்று சொல்லுவர்.
- காக்கை, கோங்கு எனக் கண்டுகொள்க. ஈண்டு வேற்றுமை நயமின்றி ஒற்றுமை நயம் கருதப்பட்டது.
நூற்பா:12 (அவ்வியனிலை)
தொகு- அவ்விய னிலையு மேனை மூன்றே. (12) அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே.
- இது, சார்பிற் றோற்றத்து எழுத்து மூன்றற்கும் அளபு கூறுதல் நுதலிற்று.
- இதன்பொருள்: அ இயல் நிலையும்= மேற்கூறிய அரை மாத்திரையாகிய அவ்வியல்பின்கண்ணே நிற்கும்;
- ஏனைமூன்று= ஒழிந்த சார்பிற் றோற்றத்து மூன்றும்.
- கேண்மியா, நாகு, எஃகு எனக் கண்டு கொள்க. (ஏகாரம் ஈற்றசை).
நூற்பா:13 (அரையளபு)
தொகு- அரையளபு குறுகன் மகர முடைத்தே () அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே
- யிசையிட னருகுந் தெரியுங் காலை. (13) இசை இடன் அருகும் தெரியும் காலை.
- இது,மெய்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- அரை அளபு குறுகன் மகரம் உடைத்து= அரையளபாகிய வெல்லையிற் குறுகிக் கான்மாத்திரை யாதலை மகரமெய் உடைத்து. (அஃது யாண்டோவெனின்);
- இசையிடன் அருகும்= வேறு ஓர் எழுத்தினது ஒலியின்கண் அது சிறுபான்மையாகி வரும்;
- தெரியுங்காலை= ஆராயுங்காலத்து.
- உதாரணம்
- போன்ம், வரும்வண்ணக்கன் என வரும். கான்மாத்திரையென்பது உரையிற்கோடல். (ஏகாரம் ஈற்றசை).
நூற்பா:14 (உட்பெறு)
தொகு- உட்பெறு புள்ளி யுருவா கும்மே (14) உள் பெறு புள்ளி உரு ஆகும்மே.
- இது, பகரத்தின் மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று.
- இதன்பொருள்
- உள்பெறு புள்ளி உருவு ஆகும்= புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம். (அஃதின்மை பகரத்திற்கு வடிவாம்.)
- உதாரணம்: ம, ப எனக் கண்டுகொள்க.
(உள்ளாற்பெறும் புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவாம் என்பதே, இச்சூத்திரத்திற்கு நேர் உரை. ஏகாரம் ஈற்றசை).
நூற்பா:15 (மெய்யினியற்கை)
தொகு- மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல். (15) மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்.
- இஃது, உயிர்மெய்யோடு தனிமெய்யிடை வடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று.
- இதன்பொருள்
- மெய்யின் இயற்கை= தனிமெய்யினது இயல்பு;
- புள்ளியொடு நிலையல்= புள்ளியொடு நிற்றல். (உயிர்மெய்யினது இயல்பு புள்ளியின்றி நிற்றல்).
- க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் - எனக் கண்டு கொள்க.
நூற்பா:16 (எகர)
தொகு- எகர வொகரத் தியற்கையு மற்றே. (16) எகர ஒகரத்து இயற்கையும் அற்றே.
- இஃது, எகர ஒகரங்கட்கு ஏகார ஓகாரங்களோடு வடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று.
- இதன்பொருள்
- எகர ஒகரத்து இயற்கையும் அற்று= எகர ஒகரங்களது இயல்பும், அவ்வாறு புள்ளிபெறும் இயல்பிற்று.
(ஏகார ஓகாரங்களது இயல்பு, அப்புள்ளிபெறா இயல்பிற்று). (ஏகாரம் ஈற்றசை).
- உதாரணம்: எ், ஒ்.
நூற்பா:17 (புள்ளியில்லா)
தொகு- புள்ளி யில்லா வெல்லா மெய்யு () புள்ளி இல்லா எல்லா மெய்யும்
- முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலு () உருவு உருவு ஆகி அகரமோடு உயிர்த்தலும்
- மேனை யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலு () ஏனை உயிரோடு உருவு திரிந்து உயிர்த்தலும்
- மாயீ ரியல வுயிர்த்த லாறே. (17) அ ஈர் இயல உயிர்த்தல் ஆறே.
- இஃது உயிரும் மெய்யும் கூடுமாறு உணர்த்தல் நுதலிற்று.
- இதன்பொருள்
- எல்லா மெய்யும் புள்ளி இல்லாக= எல்லா மெய்களும் புள்ளி இல்லையாம்படியாக;
- உருவு உருவு ஆகி= தத்தம் முன்னை வடிவே இன்னும் வடிவாக;
- அகரமொடு உயிர்த்தலும்= அகரத்தோடு கூடி ஒலித்தலும்;
- ஏனை உயிரோடு உருவோடு உருவு திரிந்து உயிர்த்தலும்= ஏனை உயிரோடு உருவு வேறுபட்டு ஒலித்தலுமாகிய;
- அ ஈர் இயல= அவ்விரண்டு இயல்பினையுடைய;
- உயிர்த்தல் ஆறு= அவை ஒலிக்கும் முறைமை.
- "தன்னின முடித்தல்" என்பதனான், அளபெடை உயிரோடும் சார்பிற் றோற்றத்து உயிரோடும் கூடும் உயிர்மெய்யும் கொள்க.
- உதாரணம்: உருவு உருவாகி உயிர்த்தல் க ங எனக்கண்டு கொள்க. உருவு திரிந்து உயிர்த்தல் கா ஙா எனக் கண்டுகொள்க.
- ஈண்டு உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை, எல்லா மெய்யுமென்று மெய்மேல் வைத்துக் கூறியது, அது முன்கூறிக் கூறப்படுதல் நோக்கிப் போலும். உயிர்மெய் யென்பதனை, ஒற்றுமைகொள்வுழி, உம்மைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை யெனவும், வேற்றுமை கொள்வுழி உம்மைத்தொகையெனவும் கொள்க.
'இல்லாக' என்பது, 'இல்லா' என நின்றது. உருவு திரிந்து உயிர்த்தல், மேலும் கீழும் விலங்கு பெறுவன விலங்கு பெற்று உயிர்த்தலும், புள்ளிபெறுவன புள்ளிபெற்று உயிர்த்தலும், புள்ளியும் கோடும் உடன் பெறுவன புள்ளியும் கோடும் உடன்பெற்று உயிர்த்தலும் எனக் கொள்க.
நூற்பா:18 (மெய்யின்வழி)
தொகு- மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. (18) மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே.
- இது, உயிர்மெய்யுள் உயிரும் மெய்யும் நிற்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- உயி்ர்= உயிர்;
- மெய்யின் வழியது= மெய்களின் பின்னவாம்;
- தோன்றும் நிலை= உயிர்கள் தோன்றும் நிலைமைக்கண்.
- தோன்று நிலை என்றதனான், உயிர்மெய்களைப் பிரிக்குமிடத்தும் கூட்டுமிடத்தும், அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால், அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி, விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறுநின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்.
- ஈண்டு வேற்றுமைநயம் கருதப்பட்டது. (ஏ-ஈற்றசை).
நூற்பா:19 (வல்லெழுத்)
தொகு- வல்லெழுத் தென்ப கசட தபற (19) வல்லெழுத்து என்ப க ச ட த ப ற.
- இது, தனிமெய்களுள் சிலவற்றிற்கு வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- வல்லெழுத்து என்ப= வல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர்;
- க ச ட த ப ற= க ச ட த ப ற என்னும் தனிமெய்களை.
- வல்லென்று இசைத்தலானும், வல் என்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்து எனப்பட்டது. மொழிக்கு முதலாம் எழுத்து நான்கு உளவாகலானும், அவற்றால் வழக்குப் பயிற்சி பெரிதாகலானும் (வல்லினம்) முன் கூறப்பட்டது. (க ச ட த ப ற என்னும் மெய்கள் க், ச், ட், த், ப், ற்.)
நூற்பா:20 (மெல்லெழுத்)
தொகு- மெல்லெழுத் தென்ப ஙஞண நமன. (20) மெல்லெழுத்து என்ப ங ஞ ண ந ம ன.
- இதுவும் அது.
- இதன்பொருள்
- மெல்லழுத்து என்ப= மெல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர்;
- ங ஞ ண ந ம ன= ங ஞ ண ந ம ன என்னும் தனிமெய்களை.
- மெல்லென்று பிறத்தலானும், மெல் என்ற மூக்கின் வளியாற் பிறத்தலானும், மெல்லெழுத்து எனப்பட்டன. மொழிக்கு முதலாமெழுத்து மூன்று உளவாகலானும் அவற்றின் வழக்குப் பயிற்சியானும் (மெல்லினம்) முதலாமெழுத்துச் சிறுபான்மை வழக்கினவாய் இரண்டாகிய இடையினத்தின்முன் வைக்கப்பட்டது. வன்மை மென்மை கூறலின், எழுத்து அருவன்றி உருவாதல் பெறப்பட்டது. உயிருக்கும் குறுமை நெடுமை கூறலின், உருவென்பது பெறுதும். (ங ஞ ண ந ம ன என்னும் தனிமெய்கள் ங், ஞ், ண், ந், ம், ன்.)
நூற்பா:21 (இடையெழுத்)
தொகு- இடையெழுத் தென்ப யரல வழள. (21) இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள.
- இதுவும் அது.
- இதன்பொருள்
- இடையெழுத்து என்ப= இடையெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர்;
- ய ர ல வ ழ ள = ய, ர, ல, வ, ழ, ள என்னும் தனிமெய்களை.
- இடைநிகரனவாகி ஒலித்தலானும், இடைநிகர்த்தாய மிடற்று வளியாற் பிறத்தலானும் இடையெழுத்து எனப்பட்டது. (ய ர ல வ ழ ள என்னும் தனிமெய்கள் ய், ர், ல், வ், ழ், ள்.)
நூற்பா:22 (அம்மூவாறு)
தொகு- அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் () அ மூ ஆறும் வழஙகு இயல் மருங்கின்
- மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை. (22) மெய் மயக்கு உடன் நிலை தெரியும் காலை.
- இது தனிமெய்ம்மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- அ மூ ஆறும்= மேற் சொல்லப்பட்ட (மூவாறு) பதினெட்டு மெய்யும்;
- வழங்கு இயல் மருங்கின்= தம்மை மொழிப்படுத்தி வழங்கும் இயல்பு உளதாமிடத்து;
- மெய்ம்மயக்கு= மெய்ம்மயக்கம் என்றும்;
- உடனிலை=உடனிலை மயக்கம் என இருவகைய;
- தெரியும் காலை= (அவை மயங்குமுறைமை) ஆராயும் காலத்து.
- உயிர்,மெய், உயிர்மெய் மூன்றனையும் உறழ்ச்சி வகையான் உறழ ஒன்பது உளவாமன்றே, அவற்றுள் தனிமெய்யொடு தனிமெய்மயக்கம் ஒன்றே கூறியது என்னெனின், மற்றவற்றிற்கு வரையறையின்மையின், வரையறையுடைய தனிமெய்மயக்கமே கூறியொழிந்தார் என உணர்க. மெய் என்றதனால், தனிமெய்யோடு உயிர்மெய்மயக்கமின்றி, தனிமெய்யோடு தனிமெய் மயக்கமாதல் கொள்க.
நூற்பா:23 (டறலளவென்)
தொகு- இது, மெய்மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
- டறலள வென்னும் புள்ளி முன்னர்க் () டறலள என்னும் புள்ளி முன்னர்க்
- கசப வென்னு மூவெழுத் துரிய. (23) கசப என்னும் மூ எழுத்து உரிய.
- இதன்பொருள்
- டறலள என்னும் புள்ளி முன்னர்= ட ற ல ள என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர்;
- க ச ப என்னும் மூ எழுத்து உரிய= க ச ப என்று சொல்லப்படும் மூன்று எழுத்தும் மயங்குதற்கு உரிய.
- உதாரணம்
- கட்க, கற்க, செல்க, கொள்க எனவும் கட்சிறார், கற்சிறார், செல்சிறார், கொள்சிறார் எனவும், கட்ப, கற்க, செல்ப, கொள்ப எனவும் வரும்.
- விளக்கம்
- மேல் 'தெரியுங்காலை' என்றதனான், இம்மெய் மயக்கம் கூறுகின்ற சூத்திரமெல்லாம், பலபடியால் மயக்கம் கொள்ளச் சொல்நோக்கு உடையவெனினும், வழக்கினோடு பொருந்த ஒன்றனோடு ஒன்றின்றி மயங்காதென்பது கொள்க. மெய்மயக்கம் ஒருமொழிக்கும், புணர்மொழிக்கும் பொதுவாகலின், மேற்கூறும் புணர்மொழிச்செய்கையெல்லாம் தலையாய அறிவினோரை நோக்க ஒருவாற்றாற் கூறியவாறாயிற்று.
நூற்பா:24 (அவ..லளஃகான்)
தொகு- அவற்றுள் () அவற்றுள்
- லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். (24) ல ளஃகான் முன்னர் ய வ வும் தோன்றும்.
- இதுவும் அது.
- இதன்பொருள்
- அவற்றுள்= மேற்கூறிய நான்கனுள்ளும்;
- லளஃகான் முன்னர்= லகார, ளகாரங்களின் முன்னர்;
- யவவும் தோன்றும்= க ச ப க்களேயன்றி யகர வகரங்களும் தோன்றி மயங்கும்.
- உதாரணம்
- கொல்யானை, வெள்யானை, கோல்வளை, வெள்வளை எனவரும்
நூற்பா:25 (ஙஞணமன)
தொகு- ஙஞணமனவெனும் புள்ளி முன்னர்த் () ங ஞ ண ம ன எனும் புள்ளி முன்னர்த்
- தத்த மிசைக ளொத்தன நிலையே. (25) தம் தம் மிசைகள் ஒத்தன நிலையே.
- இதுவும் அது.
- இதன்பொருள்
- ஙஞணநமன என்னும் புள்ளி முன்னர்= ங ஞ ண ந ம ன என்று சொல்லப்படும் புள்ளிகளின் முன்னர்;
- தத்தம் மிசைகள் ஒத்தன= (நெடுங்கணக்கில்) தத்தமக்கு மேல்நிற்கும் எழுத்தாகிய க ச ட த ப ற க்கள் பொருந்தின;
- நிலை= மயங்கி நிற்றற்கண். (ஏகாரம் ஈற்றசை).
- உதாரணம்
- தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று எனவரும்.
நூற்பா:26 (அவற்..ணனஃகான்)
தொகு- அவற்றுள் () அவற்றுள்
- ணனஃகான் முன்னர்க் () ண னஃகான் முன்னர்க்
- கசஞப மயவவ் வேழு முரிய. (26) க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய.
- இதுவும் அது.
- இதன்பொருள்
- அவற்றுள்= மேற்கூறப்பட்ட மெல்லெழுத்து ஆறனுள்;
- ணனஃகான் முன்னர்= ணகார, னகாரங்களின் முன்னர்;
- கசஞபமயவ= ஏழும் உரிய= (டறக்களேயன்றி) க ச ஞ ப ம ய வ என்று சொல்லப்படும் ஏழும் மயங்குதற்கு உரிய.
- உதாரணம்
- வெண்கலம், புன்கண், வெண்சாந்து, புன்செய், வெண்ஞாண், பொன்ஞாண், வெண்பலி, பொன்பெரிது, வெண்மாலை, பொன்மாலை, மண்யாது, பொன்யாது, மண்வலிது, பொன்வலிது எனவரும்.
நூற்பா:27 (ஞநமவ)
தொகு- ஞநமவ வென்னும் புள்ளி முன்னர் () ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர்
- யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. (27) யஃகான் நிற்றல் மெய் பெற்று அன்றே.
- இதுவும் அது.
- இதன்பொருள்
- ஞநமவ என்னும் புள்ளி முன்னர்= ஞ ந ம வ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர்;
- யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே= யகரம் மயங்கி நிற்றல் பொருண்மை பெற்றது. (ஏகாரம் ஈற்றசை.)
- உதாரணம்
- உரிஞ்யாது, பொருந்யாது, திரும்யாது, தெவ்யாது எனவரும்.
நூற்பா:28 (மஃகான்)
தொகு- இதுவும் அது.
- மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். (28) மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும்.
- இதன்பொருள்
- மஃகான் புள்ளிமுன்= மகரமாகிய புள்ளி முன்னர்;
- வ உம் தோன்றும்= (பகர வகரங்களேயன்றி) வகரமும் தோன்றி மயங்கும்.
- உதாரணம்
- நிலம்வலிது என வரும்.
நூற்பா:29 (யரழவென்)
தொகு- யரழ வென்னும் புள்ளி முன்னர் () ய ர ழ என்னும் புள்ளி முன்னர்
- முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். (29) முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும்.
- இதுவும் அது.
- இதன்பொருள்
- யரழ என்னும் புள்ளி முன்னர்= ய ர ழ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர்;
- முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும் = மொழிக்கு முதல் ஆம் என்னப்பட்ட ஒன்பது மெய்யும் (முதலாகா) ஙகரத்தோடு தோன்றி மயங்கும்.
- உதாரணம்
- வேய்கடிது, வேர்கடிது, வீழ்கடிது- சிறிது, தீது, பெரிது- ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என வரும். வேய்ஙனம், வேர்ஙனம், வீழ்ஙனம் எனவும் ஒட்டுக. வேய்யாது என்புழி உடனிலையாதலான் யகரம் ஒழித்து ஒட்டுக.
நூற்பா:30 (மெய்ந்நிலை)
தொகு- மெய்ந்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்துந் () மெய்ந்நிலைச் சுட்டின் எல்லா எழுத்தும்
- தம்முற் றாம்வரூஉம் ரழவலங் கடையே. (30) தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே.
- இது நிறுத்தமுறையானே உடனிலைமயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- மெய்ந்நிலை சுட்டின்= பொருள்நிலைமைக் கருத்தின்கண்;
- எல்லா எழுத்தும் தம் முன் தாம் வரும்= எல்லா மெய்யெழுத்தும் தம்முன்னே தாம் வந்து மயங்கும்;
- ரழ அலங்கடை= ரகார ழகாரங்கள் அல்லாத விடத்து. (ஏகாரம் ஈற்றசை).
- உதாரணம்
- காக்கை, எங்ஙனம், பச்சை, மஞ்ஞை, பட்டை, மண்ணை, தத்தை, வெந்நோய், அப்பை, அம்மி, வெய்யர், எல்லி, எவ்வீ, கொள்ளி, கொற்றி, கன்னி என வரும்.
- விளக்கம்
- மெய்ந்நிலைச்சுட்டின் என்றதனால், 'தம்முற்றாம் வரும்' என்றது, மெய்ம்முன்னர் மெய்யென்னும் மாத்திரையன்றி, உடனிலைமெய் மேலதாம் என்பது கொள்க. 'எல்லாம்' என்றது, மேல் ய ர ழ என்ற அதிகாரம் மாற்றிவந்து நின்றது.
நூற்பா:31 (அஇஉவம்)
தொகு- அஇ உவம் மூன்றும் சுட்டு. (31) அ இ உ அம் மூன்றும் சுட்டு.
- இதன்பொருள்
- அஇஉ அம்மூன்றும் சுட்டு= (குற்றெழுத்து என்னப்பட்ட) அ இ உ என்னும் அம்மூன்றும் சுட்டு என்னும் குறியவாம்.
- உதாரணம்
- அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என வரும்.
நூற்பா:32 (ஆஏஓவம்)
தொகு- ஆஏ ஓவம் மூன்றும் வினா. (32) ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா.
- இதன்பொருள்
- ஆஏஓ அம்மூன்றும் வினா= (மேல் நெட்டெழுத்து என்னப்பட்ட)ஆ ஏ ஓ என்னும் அம்மூன்று வினா என்னும் குறியவாம்.
- உதாரணம்
- உண்கா, உண்கே, உண்கோ சாத்தா எனவரும்.
- விளக்கம்
- "தன்னின முடித்தல்" என்பதனான், எகாரமும், யகரஆகாரமும் வினாப் பெறுமெனக் கொள்க. இக்குறிகளையும் முன் குறிலென்றும், நெடிலென்றும் கூறிய வழியே கூறுக எனின், இவை சொல் நிலைமையிற் பெறும் குறியாகலின், ஆண்டு வையாது மொழிமரபினைச் சாரவைத்தார் என்க. இக்குறி மொழிநிலைமைக்கேல் எழுத்தின்மேல் வைத்துக்கூறியது என்னையெனின், இவ்வதிகாரத்துப் பெயர் வினையல்லனவற்றிற்குக் கருவிசெய்யாமையின் என்க.
நூற்பா:33 (அளபிறந்)
தொகு- அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலு () அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
- முளவென மொழிப விசையொடு சிவணிய () உள என மொழிப இசையொடு சிவணிய
- நரம்பின் மறைய வென்மனார் புலவர். (33) நரம்பின் மறைய என்மனார் புலவர்.
- இஃது, எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டு நிற்கும் இடம் இதுவென்பது உணர்த்துதல் நுதலிற்று.
- இதன்பொருள்
- அளபு இறந்து உயிர்த்தலும்= (உயிரெழுத்துக்கள் எல்லாம்) தமக்குச் சொன்ன அளவினைக் கடந்து ஒலித்தலையும்;
- ஒற்று இசைநீடலும்= ஒற்றெழுத்துக்கள் தம்மொலி முன்கூறிய அளபின் நீடலையும்;
- இசையொடு சிவணிய நரம்பின் மறைய= (இந்நூலுட் கூறும் விளியின்கண்ணேயன்றிக்) குரல் முதலிய ஏழிசையோடு பொருந்திய நரம்பினையுடைய யாழினது இசைநூற்கண்ணும்;
- உளஎன மொழிப என்மனார் புலவர்= உள எனச் சொல்லுவர் அவ்விசை நூலாசிரியர், என்று சொல்லுவர் புலவர்.
- விளக்கம்
- 'ஒற்றிசை நீடலும்' என்றனர், அளபிறந்துயிர்த்தலென்றது அதிகாரத்தால் நின்ற உயிர்மேற் சேறலின், உளவென்றது அந்நீட்டிப்பு ஒருதலையன்றென்பது விளக்கிற்று. இசைநூலாசிரியரும் முதனூலாசிரியர்தாமே எனினும், 'மொழிப' என வேறொருவர்போலக் கூறியது, அதுவும் வேறுநூலாகச்செய்யப்படும் நிலைமை நோககியது போலும். மறையும் என்பதன் உம்மை விகாரத்தால் தொக்கது. அகரம் செய்யுள் விகாரம்.
முதலாவது நூன்மரபும் அதற்கு இளம்பூரணர் செய்த உரையும் முற்றிற்று
தொகு- பார்க்க