தொல்காப்பியம்/பொருளதிகாரம்/கற்பியல்
கற்பு எனப்படுவது கரணமொடு புணர
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. 1
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன் போகிய காலையான. 2
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே. 3
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. 4
கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும்
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும்
அஞ்ச வந்த உரிமைக்கண்ணும்
நல் நெறிப் படரும் தொல் நலப் பொருளினும்
பெற்ற தேஎத்துப் பெருமையின் நிலைஇ
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும்
நாமக் காலத்து உண்டு எனத் தோழி
ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்
அல்லல் தீர ஆர்வமொடு அளைஇ
சொல்லுறு பொருளின்கண்ணும் சொல் என
ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது
வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என
அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும்
ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் ஒழுக்கத்துக்
களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி
அலமரல் உள்ளமொடு அளவிய இடத்தும்
அந்தரத்து எழுதிய எழுத்தின் மான
வந்த குற்றம் வழி கெட ஒழுகலும்
அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும்
தான் அவட் பிழைத்த பருவத்தானும்
நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி
தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும்
புதல்வற் பயந்த புனிறு தீர் பொழுதின்
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி
ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும்
செய் பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்
பயம் கெழு துணை அணை புல்லி புல்லாது
உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி
அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின்
மெல்லென் சீறடி புல்லிய இரவினும்
உறல் அருங்குரைமையின் ஊடல் மிகுத்தோளைப்
பிற பிற பெண்டிரின் பெயர்த்தற்கண்ணும்
பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப்
பரிவின் நீக்கிய பகுதிக்கண்ணும்
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும்
சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும்
காமத்தின் வலியும் கைவிடின் அச்சமும்
தான் அவட் பிழைத்த நிலையின்கண்ணும்
உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும்
மடம் பட வந்த தோழிக்கண்ணும்
வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்தானும்
மீட்டு வரவு ஆய்ந்த வகையின்கண்ணும்
அவ் வழிப் பெருகிய சிறப்பின்கண்ணும்
பேர் இசை ஊர்திப் பாகர் பாங்கினும்
காமக் கிழத்தி மனையோள் என்று இவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்
சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி
இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும்
அருந் தொழில் முடித்த செம்மல் காலை
விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும்
மாலை ஏந்திய பெண்டிரும் மக்களும்
கேளிர் ஒழுக்கத்துப் புகற்சிக்கண்ணும்
ஏனைய வாயிலோர் எதிரொடு தொகைஇ
பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும்
எண்ண அருஞ் சிறப்பின் கிழவோன் மேன. 5
அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்
ஏற்றற் கண்ணும் நிறுத்தற்கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில்
பெருமையின் திரியா அன்பின்கண்ணும்
கிழவனை மகடூஉப் புலம்பு பெரிது ஆகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும்
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளியின் நீக்கிய இளி வரு நிலையும்
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்பு நனி காட்டி
இயன்ற நெஞ்சம் தலைப் பெயர்த்து அருக்கி
எதிர் பெய்து மறுத்த ஈரத்து மருங்கினும்
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையர்க்கு உரை என இரத்தற்கண்ணும்
செல்லாக் காலை செல்க என விடுத்தலும்
காமக் கிழத்தி தன் மகத் தழீஇ
ஏமுறு விளையாட்டு இறுதிக்கண்ணும்
சிறந்த செய்கை அவ் வழித் தோன்றி
அறம் புரி உள்ளமொடு தன் வரவு அறியாமை
புறம் செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தானும்
தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்
அந்தம் இல் சிறப்பின் மகப் பழித்து நெருங்கலும்
கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது
நல் இசை நயந்தோர் சொல்லொடு தொகைஇ
பகுதியின் நீங்கிய தகுதிக்கண்ணும்
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என
மாதர் சான்ற வகையின்கண்ணும்
தாயர் கண்ணிய நல் அணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியும்
தன்வயின் சிறைப்பினும் அவன் வயின் பிரிப்பினும்
இன்னாத் தொல் சூள் எடுத்தற்கண்ணும்
காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும்
கொடுமை ஒழுக்கத்துத் தோழிக்கு உரியவை
வடு அறு சிறப்பின் கற்பின் திரியாமை
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல் வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇ
கிழவோள் செப்பல் கிழவது என்ப. 6
புணர்ந்து உடன் போகிய கிழவோள் மனை இருந்து
இடைச் சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய் வினைக்கு அச்சம் ஆகும். 7
தோழி உள்ளுறுத்த வாயில் புகுப்பினும்
ஆவயின் நிகழும் என்மனார் புலவர். 8
பெறற்கு அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த
தெறற்கு அரு மரபின் சிறப்பின்கண்ணும்
அற்றம் அழிவு உரைப்பினும் அற்றம் இல்லாக்
கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும்
சீருடைப் பெரும் பொருள் வைத்தவழி மறப்பினும்
அடங்கா ஒழுக்கத்து அவன்வயின் அழிந்தோளை
அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும்
பிழைத்து வந்து இருந்த கிழவனை நெருங்கி
இழைத்து ஆங்கு ஆக்கிக் கொடுத்தற்கண்ணும்
வணங்கு இயல் மொழியான் வணங்கற்கண்ணும்
புறம்படு விளையாட்டுப் புல்லிய புகற்சியும்
சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும்
மாண் நலம் தா என வகுத்தற்கண்ணும்
பேணா ஒழுக்கம் நாணிய பொருளினும்
சூள்வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும்
பெரியோர் ஒழுக்கம் பெரிது எனக் கிளந்து
பெறு தகை இல்லாப் பிழைப்பினும் அவ் வழி
உறு தகை இல்லாப் புலவியுள் மூழ்கிய
கிழவோள்பால் நின்று கெடுத்தற்கண்ணும்
உணர்ப்புவயின் வாரா ஊடல் உற்றோள்வயின்
உணர்த்தல் வேண்டிய கிழவோன்பால் நின்று
தான் வெகுண்டு ஆக்கிய தகுதிக்கண்ணும்
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எளிமைக் காலத்து இரக்கத்தானும்
பாணர் கூத்தர் விறலியர் என்று இவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும்
பிரியும் காலை எதிர் நின்று சாற்றிய
மரபு உடை எதிரும் உளப்பட பிறவும்
வகை பட வந்த கிளவி எல்லாம்
தோழிக்கு உரிய என்மனார் புலவர். 9
புல்லுதல் மயக்கும் புலவிக்கண்ணும்
இல்லோர் செய்வினை இகழ்ச்சிக்கண்ணும்
பல் வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும்
மறையின் வந்த மனையோள் செய்வினை
பொறை இன்று பெருகிய பருவரற்கண்ணும்
காதல் சோர்வின் கடப்பாட்டு ஆண்மையின்
தாய் போல் தழீஇக் கழறி அம் மனைவியைக்
காய்வு இன்று அவன்வயின் பொருத்தற்கண்ணும்
இன் நகைப் புதல்வனைத் தழீஇ இழை அணிந்து
பின்னர் வந்த வாயிற்கண்ணும்
மனையோள் ஒத்தலின் தன்னோர் அன்னோர்
மிகை எனக் குறித்த கொள்கைக்கண்ணும்
எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும்
கண்ணிய காமக்கிழத்தியர் மேன. 10
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல் இயல் பொறையும் நிறையும் வல்லிதின்
விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்
முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல்
அகம் புகல் மரபின் வாயில்கட்கு உரிய. 11
கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக்கு உரிய ஆகும் என்ப. 12
சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய. 13
இடித்து வரை நிறுத்தலும் அவரது ஆகும்
கிழவனும் கிழத்தியும் அவர் வரை நிற்றலின். 14
உணர்ப்பு வரை இறப்பினும் செய் குறி பிழைப்பினும்
புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய. 15
புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும்
சொலத் தகு கிளவி தோழிக்கு உரிய. 16
பரத்தைமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி
மடத் தகு கிழமை உடைமையானும்
அன்பிலை கொடியை என்றலும் உரியள். 17
அவன் குறிப்பு அறிதல் வேண்டியும் கிழவி
அகம் மலி ஊடல் அகற்சிக்கண்ணும்
வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. 18
காமக் கடப்பினுள் பணிந்த கிளவி
காணும் காலை கிழவோற்கு உரித்தே
வழிபடு கிழமை அவட்கு இயலான. 19
அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி
பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே. 20
களவும் கற்பும் அலர் வரைவு இன்றே. 21
அலரின் தோன்றும் காமத்து மிகுதி. 22
கிழவோன் விளையாட்டு ஆங்கும் அற்றே. 23
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை
தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை. 24
மனைவி முன்னர்க் கையறு கிளவி
மனைவிக்கு உறுதி உள்வழி உண்டே. 25
முன்னிலைப் புறமொழி எல்லா வாயிற்கும்
பின்னிலைத் தோன்றும் என்மனார் புலவர். 26
தொல்லவை உரைத்தலும் நுகர்ச்சி ஏத்தலும்
பல் ஆற்றானும் ஊடலின் தகைத்தலும்
உறுதி காட்டலும் அறிவு மெய்ந் நிறுத்தலும்
ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும்
அணி நிலை உரைத்தலும் கூத்தர் மேன. 27
நிலம் பெயர்ந்து உரைத்தல் அவள் நிலை உரைத்தல்
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய. 28
ஆற்றது பண்பும் கருமத்து விளைவும்
ஏவல் முடிவும் வினாவும் செப்பும்
ஆற்றிடைக் கண்ட பொருளும் இறைச்சியும்
தோற்றம் சான்ற அன்னவை பிறவும்
இளையோர்க்கு உரிய கிளவி என்ப. 29
உழைக் குறுந் தொழிலும் காப்பும் உயர்ந்தோர்
நடக்கை எல்லாம் அவர்கண் படுமே. 30
பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவைத்
தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும்
இன் இழைப் புதல்வனை வாயில் கொண்டு புகினும்
இறந்தது நினைஇக் கிழவோன் ஆங்கண்
கலங்கலும் உரியன் என்மனார் புலவர். 31
தாய் போல் கழறித் தழீஇக் கோடல்
ஆய் மனைக் கிழத்திக்கும் உரித்து என மொழிப
கவவொடு மயங்கிய காலையான. 32
அவன் சோர்பு காத்தல் கடன் எனப்படுதலின்
மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும்
செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான. 33
எண் அரும் பாசறை பெண்ணொடு புணரார். 34
புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும். 35
காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும்
கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும்
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும்
செலவு உறு கிளவியும் செலவு அழுங்கு கிளவியும்
அன்னவை பிறவும் பார்ப்பார்க்கு உரிய. 36
எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும்
புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப. 37
அன்பு தலைப்பிரிந்த கிளவி தோன்றின்
சிறைப்புறம் குறித்தன்று என்மனார் புலவர். 38
தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்
எத் திறத்தானும் கிழத்திக்கு இல்லை
முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே. 39
கிழவி முன்னர்த் தற் புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப. 40
மொழி எதிர் மொழிதல் பாங்கற்கு உரித்தே. 41
குறித்து எதிர் மொழிதல் அஃகித் தோன்றும். 42
துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன்
வன்புறுத்தல்லது சேறல் இல்லை. 43
செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே
வன்புறை குறித்த தவிர்ச்சி ஆகும். 44
கிழவி நிலையே வினையிடத்து உரையார்
வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் 45
பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்
நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான. 46
வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது. 47
வேந்து உறு தொழிலே யாண்டினது அகமே. 48
ஏனைப் பிரிவும் அவ் இயல் நிலையும். 49
யாறும் குளனும் காவும் ஆடி
பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப. 50
காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. 51
தோழி தாயே பார்ப்பான் பாங்கன்
பாணன் பாட்டி இளையர் விருந்தினர்
கூத்தர் விறலியர் அறிவர் கண்டோ ர்
யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப. 52
வினை வயின் பிரிந்தோன் மீண்டு வரு காலை
இடைச்சுர மருங்கின் தவிர்தல் இல்லை
உள்ளம் போல உற்றுழி உதவும்
புள் இயல் கலி மா உடைமையான. 53