தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/கொடை வள்ளல் நாயுடு;

15. கொடை வள்ளல் நாயுடு
வாரி வழங்கிய பட்டியல்!

சங்க காலப் பாரி, பறம்பு மலையில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன் அவனிடம் குன்றுகள் போல செல்வம் குவிந்திருந்தது. அதனால், அவனைத் தேடி நாடி ஓடி வந்த பானர்களுக்கும், புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும் வாரி வழங்கி வறுமையைப் போக்கிப் பாரி என்ற பெயரைப் பெற்றான் தமிழ் வரலாற்றில்!

வாடிய பயிர்கள் கண்ட போதெல்லாம் வாடிய கருணை மனம் கொண்ட வடலூர் வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளைப் போல, படர முடியாமல் தவித்து அலைமோதிக் கொண்டிருந்த முல்லைக் கொடியைக் கண்ட வள்ளல் பாரி, தனது தேரையே அதற்குத் தானமாக வழங்கி, அந்த முல்லைக் கொடியை அதன்மேல் படர விட்டக் குறுநிலக் கோமான் பாரி, ஓரறிவு உயிர் மீதும் கருணையே வடிவமாகத் திகழ்ந்தவர் ஆவார். அதற்கான சில சம்பவங்களை இனிப் படிப்போம்.

கோவை திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், வள்ளல் பாரியைப் போல ஒரு குறுநில மன்னர் அல்லர் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சாதாரணக் கல்வி கூட கற்காதவர். தனது வாழ்க்கையில் பல இன்னல்களையும், துன்பங்களையும், துயரங்களையும் ஏற்றவர். ஆனால், ஒயாத உழைப்பாலும், தளராத உள்ளத்தாலும், இரவு-பகல் என்று பாராமல் உழைத்தவர்.

எளிய குடும்பத்தில் பிறந்த ஜி.டி. நாயடு அவர்கள், மக்கள் மனதைக் கவரக் கூடிய அளவுக்கு முன்னேறி, உலக நாடுகளைப் பலமுறைச் சுற்றி, அந்தந்த நாட்டு மக்கள் பொருளாதாரத் துறையிலும், தொழிற் துறையிலும் முன்னேற்றம் அடைந்ததை நேரில் பார்த்தவர்.

இந்திய மக்களும், குறிப்பாகத் தமிழ்ப் பெரு மக்களும், மேநாடுகளைப் போல பொருளாதாரத் துறையில் முன்னேற வேண்டும். தொழிற் துறையில் வளர்ச்சிப் பெற வேண்டும் என்ற ஆவல் கொண்டார்.

ஏராளமான தொழிற்சாலைகளை அத் துறையில் அவரே உருவாக்கி, நம் நாட்டு மக்களுக்குரிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் நாயுடு என்றால், இது ஏதோ மிகைப் படுத்திக் கூறுவதன்று.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும் என்ற கருணை உள்ளத்தால், தொழிலாளர் நலச் சங்கம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார் ஜி.டி. நாயுடு அவர்கள். அதன் தலைவராகவும் அவரே பணியாற்றினார்.

சங்கத்தை உருவாக்கி விட்டால் மட்டும் போதுமா? தொழிலாளர்கள் வாழ்க்கை அதனால் முன்னேறி விடுமா? என்று திரு. நாயுடு சிந்தித்தார்.

வள்ளல் பாரியைப் போல, பல லட்சம் ரூபாய் பெறுமானம் பெறும் தனது சொத்துக்களை, கோவை வள்ளல் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் தொழிலாளர் நலன்களுக்காகவே எழுதி வைத்து விட்டார். வள்ளல் பாரி, வறுமையில் வாடி தேடி வரும் கலைஞர்களுக்கு வாரி வழங்கிய அன்பு உள்ளம் போல, கோவை வள்ளல் ஜி.டி. நாயுடு அவர்களும் தனது சொத்துக்களைத் தொழிலாளர்களுக்கு வாரி வழங்கினார்.

கல்வித் துறையில் தொழிற் புரட்சியை உருவாக்க எண்ணிய திரு. நாயுடு அவர்கள், இரண்டு தொழிற் கல்லூரிகளை ஏற்படுத்தினார். இவை கல்விக்காக அவரால் வழங்கப்பட்ட கொடை உள்ளமல்லவா?

அது மட்டுமா? கலைக் கல்லூரிகள் கட்டடங்களை உடைத்தெறிய வேண்டும் என்று வள்ளல் அழகப்பர் முன்பு முழக்க மிட்ட கொடை வள்ளல் நாயுடு, அந்தக் கலைக் கல்லூரிகளிலே கூட தொழிற் கல்வியை உருவாக்க வேண்டும், உடைத்தெறிவதால் பயனில்லை என்று உணர்ந்தார்.

அதே கலைக் கல்லூரி கட்டடங்களில் தொழிற் கல்வியைப் புகுத்தினார். அவ்வாறு புகுத்தப்பட்டக் கல்லூரிகளில், சென்னை பச்சையப்பர் கல்லூரியும், இராமகிருஷ்ணர் கல்வி நிலையமும், ஆந்திரப் பல்கலைக் கழகமும் ஆகும். அவற்றுக்குள் தொழிற் கல்வியைப் புகுத்த ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கினார் நாயுடு.

தன்னிடம் இருந்த பேருந்துகளில் சிலவற்றை உயர்நிலைப் பள்ளிகளுக்கு இனாமாகக் கொடுத்தார் நாயுடு. இலட்சுமி நாயக்கன் பாளையத்தில் 1943-ஆம் ஆண்டில் ஓர் உயர்நிலைப் பள்ளியை உருவாக்கினார்.

1943-ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்தபோது, சென்னை மாகாணக் கவர்னராக இருந்த சர். ஹார்தர் ஹோப் அவர்களிடம்; போர் நன்கொடையாக ஓர் இலட்சத்து பத்தாயிரம் ரூபாயை வழங்கி, போரில் ஈடுபட்ட உயிர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு நாயுடு அவர்கள் கவர்னிடம் கேட்டுக் கொண்டார்.

அதே நோக்கத்திற்காக, திரு. நாயுடு அவர்கள், போர்க் கடன் பத்திரங்களுக்கும் பத்து இலட்சம் ரூபாயைக் கொடுத்தார்.

முதன் முதல் ஜி.டி. நாயுடு அவர்களால் யு.எம்.எஸ். மோட்டார் சர்விஸ் துவக்கப்பட்டதல்லவா? அந்த நிறுவனத்தில் பணியாற்றிடும் தொழிலாளர் துன்பங்களை, இன்னல்களைப் போக்கி, நல்வாழ்வு பெற்றிடுவதற்காக ஒன்னரை இலட்சம் ரூபாயை சங்க நிதியாக வழங்கியவர் ஜி.டி. நாயுடு அவர்கள்.

சென்னை மாகாணத் தொழிலாளர் சங்க நல வளர்ச்சிக்காக ஓர் இலட்சம் ரூபாயை அவர் நிதியாகக் கொடுத்தார்.

தனது நிருவாகத்தில் ஒன்றாக விளங்கிய ரேடியோ - மோட்டார் தொழில் வளர்ச்சிக்காக இரண்டு இலட்சம் ரூபாயை நிதியாக வழங்கியவர் நாயுடு அவர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மிகவும் தாழ் நிலையில் வாடுவதை நேரில் கண்ட திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், அவர்களது முன்னேற்றத் திற்காக ஐம்பதாயிரம் ரூபாயை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

காவல் துறைக்காக இப்போதுதான் தமிழ்நாடு அரசு அக்கறை காட்டி வருவதைப் பார்க்கின்றோம். ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் நலனுக்காக, காவல்துறைக்கு உதவி செய்வதாக மக்கள் இன்று பேசுகிறார்கள்.

ஆனால் நாயுடு அவர்கள், காவல் துறையிலே இருந்து எந்தவிதப் பிரதி உதவிகளையும் எதிர்பாராமல்; 1945-ஆம் ஆண்டின் போதே, காவலர்களின் குழந்தைகள் வளர்ச்சிக்காக ஐம்பதாயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

அந்தக் காலத்தில் இலட்சம் ரூபாய் என்றால் ஐம்பதாயிரம் ரூபாய் என்றால், பத்து இலட்சம் ரூபாய் என்றால், அதன் இக்கால மதிப்பும் - மரியாதையும், எவ்வளவாக இருக்கும் என்று எண்ணிப் பார்ப்போருக்குத்தான் அவற்றின் அருமைகளை, அறிய முடியும்.

சென்னை மாகாணக் கவர்னராக இருந்த சர்.ஹார்தர் ஹோப் அவர்கள், ஜி.டி. நாயுடு அவர்கள் மேற்கண்டவாறு இலட்சோப இலட்சம் ரூபாய்களை வாரி வாரி வழங்குவதைக் கண்டு, ஜி.டி. நாயுடுவை இந்தியாவின் நப்ஃபீல்டு (Lord Nufffield) என்று புகழ்ந்து பாராட்டினார்.

திரு. ஹார்தர் ஹோப், திரு. நாயுடுவை ஏன் அவ்வாறு புகழ்ந்தார் தெரியுமா? இங்கிலாந்து நாட்டில் நப்ஃபீல்டு பிரபு என்ற ஒரு செல்வச் சீமான் இருந்தாராம். அவர் தனது வருமானத்தின் பெரும் பகுதிப் பணத்தைக் கல்விக்கும், சமுதாய நன்மைகட்கும் நன்கொடைகளாக வாரி வாரி வழங்கிய வள்ளலாக வாழ்ந்தாராம்.

தமிழ்நாட்டில், கோவை மா நகரில் ஜி.டி. நாயுடு என்ற பெருமகனும், நப்ஃபீல்டைப் போல வாரி வாரி வழங்குகின்றாராம். அதனால், அந்தக் கவர்னர் பெருமகன் தனது நாட்டு வள்ளல் பெயரைக் குறிப்பிட்டு நாயுடுவை வாய் மணக்க வாழ்த்திப் புகழ்ந்தார். அதை யெல்லாம் தமிழன் அன்று நினைத்துப் பார்த்தானா? ஏன் இன்றுதான் எண்ணி மகிழ்ந்து மரியாதை காட்டி வாழ்த்துகிறானா? ஆனால் பேசுவது என்னமோ தமிழ் - தமிழன் என்ற சுயநலப் பிரச்சாரம் தான்!

திரு. நாயுடு அவர்கள் தனது அழியாத அறப் பெருமைகள் வாயிலாகவும், விந்தைகள் பல புரிந்த விஞ்ஞானம் மூலமாகவும், கல்விப் புரட்சிகளாலும் நிலையான ஒரு புகழ் இடத்தை ஜி.டி. நாயுடு பெற்று வந்தார்.

ஏப்ரல் ஃபூல்
விளையாட்டு!

கோவை நகர் சென்றவர்களுக்குத் தெரியும். இன்றும் கோவையில் ஆர்.எஸ். புரம். (R.S. Puram) என்ற ஒரு பகுதி நகரம் இருப்பதைப் பார்த்திருப்பார்கள். அந்த நகரின் முழு பெயர் இரத்தின சபாபதி புரம் என்பதாகும். அந்த திவான் பகதூர் இரத்தின சபாபதி முதலியார் என்பவர் கோவை நகரின் புகழ் பெற்றவர்களிலே ஒருவர். அவர் நமது நாயுடுவுக்கு மிக நெருங்கிய நண்பராவார்.

ஒரு நாள் நாயுடு அவர்கள் இரத்தின சபாபதி முதலியார் தேநீர் விருந்துக்கு அழைப்பது போல, கோவை நகரத்திலே உள்ள எல்லா முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பி விட்டார்.

அழைப்பில் குறிப்பிட்ட நாளன்று - நகரப் பிரமுகர்கள் எல்லாரும் முதலியார் வீட்டிற்குத் திரண்டு வந்து கூடி அமர்ந்திருக் கிறார்கள். முதலியார் வீடு தியான வீடு போல மெளனமாகக் காட்சி தந்தது. ஆனால், அவர்களில் யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெளியே சென்றிருந்த திரு. முதலியார் தனது வீட்டுக்குள் நுழைந்தார்: ஒரே பிரமுகர்கள் கூட்டமாக இருந்தது. அவருக்கும் ஒன்றுமே புரியாத குழப்பமாக இருந்தது. அந்தப் பிரமுகர்கள் கூட்டத்தில் ஜி.டி.நாயுடுவும் அமர்ந்திருந்தார் - ஒன்றும் அறியாதவரைப் போல!

திரு. முதலியார், திரு. நாயுடுவை அழைத்து: "என்ன இது ஒரே கூட்டம்!" என்று விசாரித்தார். உடனே நாயுடு அவர்கள், காலண்டரைச் சுட்டிக் காட்டினார். அதில் 'ஏப்ரல் 1' என்று அச்சிடப்பட்டிருந்தது. அப்போதுதான் திரு. முதலியாருக்கும் உண்மை புரிந்தது. பலருக்கும் நடுவில் தன்னை திரு. நாயுடு ஏப்ரல் முட்டாளாக ஆக்கிவிட்டாரே என்பதைப் புரிந்து கொண்டார் திரு. முதலியார். ஆனால், அழைப்பை ஏற்று வந்தவர்களை எல்லாம் திரு. நாயுடு தனது இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு போய் அறுசுவையான விருந்தளித்து அனுப்பினார்.

ஆனால், முதலியார் திரு. நாயுடுவைத் தனியாக அழைத்து, 'என்ன நாயுடு உனது பழைய சிறுவயதுக் குறும்பும், விளையாட்டும் இன்னும் உன்னை விட்டுப் போகவில்லையே' என்று கட்டித் தழுவிக் கொண்டு இருவரும் சிரித்ததைப் பார்த்து - விருந்துண்டவர்களும் கலந்து கொண்டு சிரித்து மகிழ்ந்தார்கள்.

இந்த வயதிலும் கூட, இவ்வளவு தகுதிகள் உயர்ந்த பிறகும் கூட, தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே திரு. நாயுடு திகழ்ந்தார் என்பதற்கு இது ஒர் எடுத்துக் காட்டல்லவா?

600 மணி நேரம் -
பார்க்கும் போட்டோக்கள்

திரு. நாயுடு அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் கேமிரா என்ற புகைப் படக் கருவிகள் இல்லாமல் போக மாட்டார். அப்படிச் சென்றதால்தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இறுதி ஊர்வலத்தையும், எட்வர்டு மன்னரது பொருட்காட்சி சம்பவங்களையும் அவரால் இலண்டன் நகரிலே படமாக எடுக்க முடிந்தது.

புகைப்படம் எடுக்கும் கலையில் திரு. ஜி.டி. நாயுடு மிகவும் வல்லவர். வெளிநாடுகளில் பல இடங்களில் அவர் சலனப் படங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் முக்கியமானது கல்வி சம்பந்தமான படமாகும்.

ஏறக் குறைய அவை பற்றிய நிகழ்ச்சிகளைப் பல லட்சக் கணக்கான அடிகள் படம் பிடித்துள்ளார். அந்தத் திரைப்படச் சுருள்களை 600 மணி நேரம் ஒட்டிப் படமாகப் பார்க்கலாம் என்றால், அதற்காக அவர் உழைத்த உழைப்புகள், செலவுத் தொகைகள் என்ன சாமான்யமானவையா?

திறமை வாய்ந்த ஒரு விஞ்ஞானியாக நாயுடு அவர்கள் திகழ்ந்ததால்தான், எல்லாவிதமான உலக நிகழ்ச்சிகளையும் அவரால் படமாகப் பதிவு செய்து வைக்க முடிந்தது.

திரு. நாயுடு அவர்கள் எடுத்தப் புகைப் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சம்பவத்தையும் கோர்வையாகக் கூறுவதற்குரிய எண்ணத்தில் எடுக்கப்பட்ட புகைப் படங்களாக உள்ளன.

உலகம் சுற்றும் நாயுடுவாக அவர் பல தடவைகள் சென்ற நேரங்களில், பல நாட்டின் முக்கிய தலைவர்களை எல்லாம் படம் பிடித்துள்ளார். குறிப்பாக, பண்டித ஜவகர்லால் நேருவையும் - அவரது துணைவியார் கமலா நேருவையும் சுவிட்சர்லாந்து நாட்டில் படமெடுத்துள்ளார்.

ஜெர்மனி சென்றிருந்த திரு. நாயுடு அவர்கள், அங்கே இட்லர், முசோலினி, கோயபல்ஸ், சுபாஷ் சந்திர போஸ், எட்டாம் எட்வர்டு மன்னர் போன்ற மேலும் பல முக்கியத் தலைவர்களை எல்லாம் புகைப்படம் எடுத்துள்ளார்.

உலகத்தைப் பல தடவை வலம் வந்த மேதை நாயுடு அவர்கள், மகாத்மா காந்தியடிகளைப் போல எளிமையான ஆடைகளிலேயே காட்சி அளித்தாரே ஒழிய, பணம்-பத்தெட்டும் செய்யும் என்ற பகட்டும், படாடோபமுமான காட்சிகளைத் தனது வாழ்க்கையில் உருவாக்கிக் கொண்ட வரல்லர்.

ஒரு நான்கு முழம் வேட்டி, ஓர் அரைக் கை சட்டை, சில நேரங்களில் முகம் துடைக்கும் தோள் துண்டு ஆகியவற்றைத் தான் அவர் அணிந்து கொள்வார். அவரை பணக்காரர், செல்வச் சீமான், கொடை வள்ளல், கோமான், கோவை கோடீஸ்வரன் என்றெல்லாம் கூறிக் கொண்டவர்கள் எதிரிலே-திரு. நாயுடு காட்சிக்கு எளியராகவே வாழ்ந்து காட்டினார்.

திரு ஜி.டி.நாயுடு வாழ்க்கைத் துணை நலம் பெயர் செல்லம்மாள் துரைசாமி நாயுடு. அவர் கிருஷ்ணம்மாள், சரோஜினி என்ற இரு மாதரசிகளின் மாதாவாக வாழ்ந்தவர்.

மற்றொரு மனைவியாரை நாயுடு மணந்து கொண்டார். அந்த இல்லத்தரசி ஈன்றெடுத்த ஒரே மகனுக்குத் தனது தந்தையார் நினைவாகக் கோபால்சாமி என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.

தனது மகள் சரோஜினி திருமணத்தை 1944-ஆம் ஆண்டில் சென்னை ஆளுநர் சர். ஹார்தர் ஹோப் தலைமையில், மிகவும் சிக்கனமாக மோதிரமும் - மாலையும் மாற்றித் திருமணம் செய்து வைத்து தேநீர் விருந்தும் கொடுத்தார் ஜி.டி.நாயுடு.

அவர் நடத்திய அந்தத் திருமணத்தில் புரோகிதம் இல்லை என்பதுடன், மிகச் சிக்கனமானத் திருமணத்தை நடத்தி, மற்றவர்களும் திருமணத்துக்காக இலட்சக் கணக்கில்,பணம் செலவு செய்வதைத் தடுக்கும் அளவுக்கு ஒரு வழி காட்டியாக நடந்தார்.

தொழிலியல் வளர்ச்சிகளை மக்கள் அறிந்து அறிவு பெறவேண்டும் என்ற ஆவலில், 1949-ஆம் ஆண்டில் கோவை மாநகரில் ஒரு தொழிலியல் கண்காட்சியை, பல இலட்சம் மக்கள் திரண்டு வந்து தொழிலறிவு பெறுவதற்கான வகையில் ஜி.டி.நாயுடு நடத்திக் காட்டினார்!

இதைவிடச் சிறப்பு என்ன வென்றால், ஜி.டி.நாயுடு அவர்கள் உருவாக்கியுள்ள 'கோபால் பாக்' என்ற கட்டடமே ஓர் அழகான அருங்காட்சியகமாக இன்றும் இயங்கிக் கொண்டிருப்பதைக் கோவை மாநகர் செல்லும் பொது மக்கள் காணலாம்.

அந்தக் கட்டடத்தின் எல்லா பகுதிகளும் பூமிக்கு அடியில் மின்சாரக் கம்பிகளின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்தில் இருப்போருடன் மின்சாரக் கருவி மூலமே தொடர்பு கொள்ளலாம்.

கட்டிடத்தின் மையப் பகுதியில் உள்ள நடு மண்டபம் 370 அடி நீளமும்,75 அடி அகலமும் கொண்ட பகுதியாகும். அங்கு எந்த வித எதிரொலியும் கேட்காது. காற்றோட்டம் சுகமாக வந்து கொண்டே இருக்கும். வெளிச்சம் வெள்ளொளியாக எதிரொலிக்கும். காலையானாலும் சரி, மாலையானாலும் சரி, எந்த நேரமும் நமது நிழலே அங்கு விழாது.

அந்தக் கட்டடத்திற்குள் வானவூர்தி, ரோல்சுராய்ஸ் மோட்டார்கார் போன்ற விலையுயர்ந்த கார்களின் கருவிகள் எல்லாம் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.

அவற்றின் இடையே உள்ள சிறு பொம்மை மோட்டார் கார், பார்ப்பவர்கள் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கும் காட்சிப் பொருளாக இருக்கிறது.

கோபால் பாக் உணவுக் கூடம் உள்ளே உள்ள சுவரில் வெந்நீர்-தண்ணீர்க் குழாய்கள் உள்ளன. ஒரு பக்கம் சுவர்மீது மனிதர்க்கு வேண்டிய சராசரி உணவுப் பொருள்கள்.உணவுச் சத்து பற்றிய விளக்கப் பலகைகள் இருக்கின்றன.

ஜி.டி.நாயுடு அவர்கள் ஒரு சிறந்த தொழிலியல் துறை விஞ்ஞானியாதலால், அவரிடம் மேற்கு ஜெர்மனி போன்ற வெளிநாட்டு மாணவர்கள் வந்து தொழில் பயிற்சி பெற்றுச் செல்லும் இடமும் அங்கே இருக்கின்றது.

நான்காம் முறை
உலகப் பயணம்:

இதற்கு முன்பு மூன்று முறைகள் உலகச் சுற்றுப் பயணம் செய்த அனுபவம் உள்ளவர் நாயுடு. அதனால் அவருக்கு உலகச் சுற்றுப் பயணம் செய்வதென்றால்,கோவை மாநகரைச் சுற்றி வருவதைப் போன்ற ஆர்வமும் எண்ணமும் உடையவர். 1950 -ஆம் ஆண்டில் நான்காம் தடவையாக மே மாதம் 7-ஆம் நாளன்று வெளி நாட்டுப் பயணம் புறப்பட்டார்.

இங்கிலாந்து, நார்வே, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்றார்.

சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் என்ற இடத்தில் நடந்த உலக விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அமெரிக்க நாட்டிலே உள்ள கலிபோர்னியா விவசாயப் பண்ணைகளைப் பார்வையிட்டார். அங்கு நடைபெறும் விவசாயப் பயிர்களின் முன்னேற்றங்களை உணர்ந்தார்.

நான்காவது முறையாக 1950-ஆம் ஆண்டில் மட்டுமன்று, ஐந்தாவது முறையாக 1958-ஆம் ஆண்டிலும் 1959-ஆம் ஆண்டில் ஆறாவது முறையாகவும், 1961-ஆம் ஆண்டில் ஏழாம் முறையாகவும் உலகம் சுற்றும் வாலிபனாக ஜி.டி. நாயுடு திகழ்ந்தார்.

மேதினியை நாயுடு வலம் வந்தது, தமிழ்க் கடவுளான முருகப் பெருமானைப் போல ஒரு மாம்பழத்திற்காக அன்று:அல்லது தற்கால மக்களாட்சியின் சட்டமன்றம், நாடாளு மன்றங்களின் மக்கள் பிரதிநிதியாக, மத்திய அரசு மாநில அரசுகளின் செலவுத் தொகையில் உலகம் சுற்றியவர் அல்லர். தனது சொந்தப் பணத்தில் தந்தை பெரியார் அயல் நாட்டுப் பயணம் சென்று வந்ததைப் போல, கோவை கொடை வள்ளலான ஜி.டி.நாயுடு அவர்கள். தொழிலியல் துறையில் விஞ்ஞானியாகும் ஆர்வத்தால், அறிவியல் உலகம் சுற்றும் வாலிபனாக அவர் வலம் வந்தார் என்றால், இது என்ன வேடிக்கை ஊர்வலம் பவனியா?

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரிலே ஜி.டி.நாயுடு ஒரு தடவை தங்கியிருந்த போது, ஒரு விருந்து நடத்தினார். அப்போது நமது தமிழ் நாட்டின் சிற்றுண்டி வகைகளில் ஒன்றான "உப்புமா'வைச் செய்து விருந்துக்கு பரிமாறினார்!

உப்புமாவை இரசித்து உருசியோடு சுவைத்து உண்ட வெள்ளையரின் பெண்மணிகளுக்கு, உப்புமாவை எப்படிச் செய்வது என்பதையும் கற்றுக் கொடுத்தார் ஜி.டி.நாயுடு. தமிழ்நாட்டு உணவுக்குரிய சுவைக்குப் பெருமை தேடித் தந்தது மட்டுமன்று, தமிழர் தம் அறுசுவை உண்டிக்கும் புகழை உருவாக்கியவர் திரு.நாயுடு.

திரு. ஜி.டி.நாயுடு வெளிநாடு போவதும் - வருவதும் ஒரு கர்ப்பிணியின் பிரசவம் போல, அவர் எப்போது வெளிநாடு போவார் - எப்போது வருவார் என்பது எப்போது மழை வரும், எப்போது குழந்தை பிறக்கும் என்பதைப் போன்றதே! எவருக்கும் முன் கூட்டியே தெரியாது.

திரு. ஜி.டி.நாயுடு அவர்கள், தனது சொந்தப் பணத்தில் உலகத்தைப் பல தடவைகள் சுற்றிச் சுற்றி, தாம் கண்ட அறிவில் அறிவை வெளிப்படுத்தியும். அவர் பார்த்து மகிழ்ந்த விஞ்ஞான விந்தைகளை, கண்டு பிடித்து உலகுக்கு அளித்த புதிய புதியக் கண்டு பிடிப்புக் கருவிகளை, அப்போதைய மத்திய அரசும், மாநில அரசும் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளாததைக் கண்டு அவர் மனம் வேதனை எரிமலை ஆனது!

நாயுடு பெருமகனார் கண்டு பிடித்த விஞ்ஞானக் கருவிகளை உற்பத்தி செய்திட - இந்திய அரசும் சரி, மாநில அரசும் சரி, அனுமதி கூட அளிக்காததைக் கண்டு அவருடைய மனம் பூகம்பமானது:

எனவே, திரு.ஜி.டி.நாயுடு தனது, எண்ண எரிமலை வெடிப்பையும், மன பூகம்பத்தின் வெறுப்புக்களையும் இந்திய மக்களுக்கு அறிவிக்க விரும்பி, சென்னையில் ஒரு பெரிய தொழிலியல் துறைக் கண்காட்சியை எஸ்.ஐ.ஏ.ஏ.திடல் என்று நினைக்கிறேன். அங்கே, மக்கள் பார்வைக்காக நடத்திக் காட்டினார்:

அந்தக் கண் காட்சியைப் பற்றிய விவரங்களை இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலே படித்தீர்கள். மறுபடியும் நினைவுக்காக, இந்தியாவின் விஞ்ஞானி ஒருவரது மன எரிமலை வேதனைக் குமுறல்களது குழம்புகளின் வெறுப்பு எரிச்சலை உணர்வதற்காக, ஒரு தமிழனின் விஞ்ஞான விந்தைகளைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாத தமிழ் ஆட்சியின் தமிழர்களது மன அழுக்காறுகளைப் புரிந்து கொள்வதற்காக,அவருடைய மனம் பாதித்த பூகம்ப பாதிப்பு வெடிப்புக்களை, அதாவது, "ஆக்கம் அழிவுக்கே" என்ற அவருடைய மனப் புயலை உணர்வதற்கு மீண்டும் ஒரு முறை வாசகர்களைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! அவ்வளவுதான்!

அதற்குமேல் எதையும் எழுத, நம்முடைய தமிழ்நெஞ்சம் விரும்பவில்லை என்பதால், தமிழ் இன உணர்வே. இனியாகிலும், 'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற நாமக்கல் கவிஞரின் தமிழ் இன உணர்வுப் பற்றை, தன்மானத்தை, தலை நிமிர வைப்பாயா? என்று கண்ணிரைக் காணிக்கையாக்கி; கெஞ்சுகிறது- தமிழ் ஆட்சிகளை!