நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/12. ‘ஐ வாண்ட் அநதர் ஒன்!’

12. ‘ஐ வாண்ட் அநதர் ஒன்!’

“தூணிலே தலையைச் சாய்ச்சி நில்லுங்கன்னு சகாதேவின்கிட்டே சொன்ன பாவம், ‘நான் டைரக்டரா, நீ டைரக்டரா?ன்னு பிரகாஷ் என்னைக் கேட்டா, நான் என்ன சொல்வேன்?...’ அய்யா, நீங்கதான் டைரக்டருங்கிறதிலே எனக்குக் கொஞ்சங்கூடச் சந்தேகமே கிடையாது; உங்களுக்கு அதிலே ஏன் சந்தேகம் வந்தது?”ன்னு திருப்பிக் கேட்டேன். “அப்படியா சமாசாரம் ? நான் உன்னைக் கவனிச்சுக்கிற விதத்திலே கவனிச்சுக்கிறேன்’னு அவர் கருவினார். எனக்குத்தான் இதெல்லாம் தண்ணிபட்ட பாடாச்சே, சரி, கவனிச்சுக்குங்கன்னு சொல்லி, அதோடே அதை நான் விட்டுட்டேன்.”

“அவர்.. ?”

“விடுவாரா?... அந்த நாளிலே டைரக்டருங்க கையிலே தானே எல்லாம் இருந்தது... ?”

“இந்தக் காலத்து ஹீரோக்கள் சிலருடைய கையில் எல்லாம் இருப்பது போலவா ?" “ஆமாம், இந்தக் காலத்து ஹீரோக்கள் வெறும் ஹீரோக்களா மட்டும் இல்லையே? படாதிபதிகளாவும் “பைனான்ஷியர் களாகவும் கூட இருக்காங்களே! அதனாலே இலுங்க வைச்சது சட்டமாயிருக்கு அந்தக் காலத்து ஹரோக்களுக்கு அந்த வசதியெல்லாம் ஏது ? புரொட்யூசருக்கே கிடையாதே!”

“அப்போது ஒரு படத்தை எடுத்து முடிக்க என்ன செலவாகும்?”

“ஏறக்குறைய முப்பதாயிரம் ரூபாய் செலவாகும். அதையே முழுக்கப் போட்டு முடிக்க முடியாம அடுத்த படத்துக்கு ‘அட்வான்ஸ்’ வாங்கிப் போட்டுத்தான் முடிப்பாங்க!”

“ஹீரோ, வில்லனுக்கெல்லாம் என்ன சம்பளம் கிடைக்கும்?”

“ஓகோன்னு ஓடின ‘அம்பிகாபதியிலே நடிச்ச பாகவதருக்கே எழுநூற்றைம்பது ரூபாய் தான் கொடுத்தாங்கன்னா, எங்களுக்கெல்லாம் என்ன கொடுத்திருப்பாங்கன்னு நீங்களே தீர்மானம் பண்ணிக்குங்க.”

“அப்படியென்றால் டைரக்டருக்குத்தான் அப்போது எல்லாரைக் காட்டிலும் சம்பளம் அதிகமாக இருந்திருக்கும்....”

“சம்பளம் மட்டும் இல்லே, அதிகாரமும் அவருக்குத்தான் அதிகம்!”

“கடைசியில் அவர் உங்களை என்னதான் செய்தார்!”

“ரேஸ் கோர்ஸிலிருந்து ‘ராமா'ன்னு ஒரு முரட்டுக் குதிரையை வரவழைச்சார். அந்தக் குதிரைமேலே என்னை ஏத்தி, ஜிம்கானா மைதானத்தைச் சுத்திச் சுத்தி வரச் சொல்லி, ‘ரிஹர்சல்’ பார்த்தார்...”

“எனக்கு ஒரு சந்தேகம்..." "என்ன... ?”

“கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?”

“மாட்டேன், கேளுங்க...?”

“குதிரையின்மேல் நீங்களே ஏறி உட்கார்ந்தீர்களா ? அல்லது, அதற்குப் பக்கத்தில் ஸ்டுல், கீல் போட்டு யாராவது ஏறி, உங்களைத் தூக்கி அதன்மேல் உட்கார வைத்தார்களா?”

“நான் அந்த மாதிரி ஹீரோவுமில்லே, வில்லனுமில்லே. எதுக்கும் ‘டூப்'பைத் தேடறதும் என் வழக்கமுமில்லே. நானேதான் ஏறி உட்கார்ந்து சவாரி சேஞ்சேன். அதிலே நான் தவறிக்கிவறிக் கீழே விழுந்து, கையைக் காலை உடைச்சுக்குவேன்னு டைரக்டர் எதிர்பார்த்தாரோ என்னவோ, அப்படி ஒண்னும் நடக்கல்லே...”

“நேருக்கு நேராக எதிர்த்து நின்று தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாத கோழைகள் இப்படித்தான் ஏதாவது செய்வார்கள் போல் இருக்கிறது ?”

“கோழைங்க மட்டுமில்லே, படிச்சவங்களும் அப்படித்தான் செய்யறாங்க. படிக்காதவனுக்குச் சட்டம் தெரியறதில்லே, படிச்சவனுக்குச் சட்டம் தெரியுது. அதாலே படிக்காதவன் எந்தத் தப்பைச் சேஞ்சாலும் சட்டத்துக்கு விரோதமாச் சேஞ்சிட்டு மாட்டிக்கிறான். படிச்சவன் செய்ய வேண்டிய அயோககியத்தனங்களையெல்லாம் சட்டப்படியே சேஞ்சிட்டு, எண்ணிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துக்கிட்டிருக்கான்!”

“இப்போதுள்ள பெரிய மனிதர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். அப்போதே அவர்கள் அப்படித்தான் இருந்தார்களாக்கும்?”

“அந்த அளவுக்குப் பெரிய மனுஷனுமில்லே இந்தப் பிரகாஷ்! பெரிய மனுஷன் வீட்டுப் பிள்ளை, அவ்வளவுதான் ... இந்தக் காலத்திலே ஸ்டார்ட், கட்டுன்னு ரெண்டு வார்த்தை சொல்லத் தெரிஞ்சிக்கிட்டுப் பிடிக்கிறவங்களைப் பிடிச்சா யார் வேணுமானாலும் டைரக்டராயிடலாம். அந்தக் காலத்திலே அது முடியாது. டைரக்டர்னா ‘ஸ்க்ரீன்பிளே'யிலேருந்து ‘ரீரிகார்டிங்’ வரையிலே தெரிஞ்சிருக்கணும். அதெல்லாம் பிரகாஷ-க்குக் கொஞ்சம் தெரிஞ்சிருந்தது என்னவோ உண்மைதான். ஆனா, அதை வைச்சுக்கிட்டு அவர் பண்ண அட்டகாசம்...”

“ஆமாம், அந்த நாளிலே அளவுக்கு மீறித் தண்ணி போடுபவரைத்தான் பெரிய ‘ஜீனியஸ் என்று நினைப்பார் களாமே, அது உண்மைதானா ?”

“அந்த நாளிலே மட்டுமென்ன, இந்த நாளிலுந்தான் அப்படிச் சிலர் நினைக்கிறாங்க!”

“அப்படியென்றால் ஆகஸ்ட் முப்பதாந்தேதிக்கு மேலே ஏகப்பட்ட ‘ஜீனியஸ்'கள் ரோடிலேயே நடமாட ஆரம்பித்துவிடுவார்கள்.”

“உலகம் பல விதம். சில பேர் நெற்றியிலே பட்டை அடிச்சி ஏமாத்தறான்; சில பேர் கழுத்திலே கொட்டை கட்டி ஏமாத்தறான்; சில பேர் ‘தண்ணி’ போட்டு ஏமாத்தறான். இங்கே ஏமாறவன் இருக்கிற வரையிலே ஏமாத்தறவனும் இருந்துகிட்டுத்தான் இருப்பான். அதை விடுங்க... ‘ஹார்ஸ் ரைடிங் ரிஹர்சல் நடந்து முடிஞ்சதும் ‘ஷூட்டிங்’ ஆரம்பமாச்சி...”

“அவுட்டோரா?”

“ஆமாம். அந்தக் காலத்திலே ஒரு படத்துக்கு நாலு நாள் ‘இன்டோர் ஷூட்டிங்’ நடந்தாலே அதிகம்; மற்ற ஷூட்டிங்கெல்லாம் அவுட்டோரிலேதான் நடக்கும்.”

“அப்படி நடக்கும்போது குதிரையின் மேல் உங்களை ஏற்றி, உங்களையும் குதிரையையும் லாரியில் ஏற்றி, அந்த லாரியை ஓடவிட்டு, நீங்கள் குதிரை சவாரி செய்வது போல் லாரியை மறைத்துப் படம் எடுப்பார்களா ?”

“அப்படி எடுத்தா குதிரை ஓடற சத்தமா கேட்கும்? லாரி ஓடற சத்தமில்லே கேட்கும்?" “அந்தச் சத்தத்தை இப்போது யார் . ரிகார்ட் செய்கிறார்கள் ? அதற்குப் பதிலாகத்தான் குதிரை ஓடுவது போல் கொட்டாங்கச்சியைக் கீழே தட்டி ரீரிகார்டிங்’ செய்து விடுகிறார்களே!”

“இப்போது குதிரைக்குப் பதிலா லாரி என்ன, கழுதைகூட ஓடும். அப்போ குதிரைன்னா குதிரைதான் ஓடும்.”

“எல்லாம் ‘ஹீரோக்க'ளாக நடிப்பவர்களின் தைரியத்தைப் பொறுத்தது, இல்லையா?”

“என்னைப் பொறுத்த வரையிலே நான் என் தைரியத்தை லாரியை ஓட்டிக் காட்டல்லே, குதிரையை ஓட்டியே காட்டினேன். பூந்தமல்லியிலே குருடர் செவிடர் ஊமைப் பள்ளியிருக்கே, அங்கேதான் ஷூட்டிங் நடந்தது. நான் குதிரை மேலே வந்து அந்தப் பள்ளிக்கூடத்து வாசலிலே நிற்கணும். நின்னு. மாடிக்கு ‘ஜம்ப்’ பண்ணனும். பண்ணி, அங்கே இருக்கிற ஹீரோவோடும் அவன் ஆட்களோடும் கத்திச் சண்டை போடணும்...”

“கத்தி நிஜக்கத்தியா, அட்டைக்கத்தியா?”

“நிஜக் கத்திதான். அங்கே சண்டை போட்டுட்டுக் குதிரை மேலே குதிக்கணும். அது வரையிலே ஒரு காட்சி. அந்தக் காட்சி முதல் “டேக்"கிலேயே நல்லா வந்துடிச்சின்னு காமிராமேன் சொன்னார்; சவுண்ட் என்ஜினியர் சொன்னார், டைரக்டர் அவங்க சொன்னதை ஒப்புக்கல்லே, ரீடேக் எடுக்கணும்னு சொன்னார். ‘இருபது முப்பது அடி உயரத்திலேயிருந்து குதிரை மேலே குதிக்கிறது அவ்வளவு லேசில்லே, எடுத்தது போதும்’னு எல்லாரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாங்க. ‘நோ நோ, பிலிம் ஒடறப்போ குருடன் ஒருத்தன் குறுக்கே வந்துவிட்டான், ஐ வாண்ட். அநதர் ஒன்னுன்னு அவர் அடம் பிடிச்சார். ‘குருடன் குறுக்கே வந்திருந்தா எனக்குத் தெரிஞ்சிருக்குமே, நானே ‘கட்’ பண்ணிட்டு ‘அநதர் ஒன்'னுன்னு சொல்லியிருப் பேனே ‘ன்னார். காமிரா மேன், ‘ஐ சே, யு டேக், கமான், ரெடி’ ன்னு கத்தினார் டைரக்டர். பய வஞ்சம் தீர்க்கப் பார்க்கிறான்னு எனக்குப் புரிஞ்சிப் போச்சு. ஆனாலும் நான் அஞ்சலே. ‘கமான், ரெடி’ ன்னு குதிரை மேலே தாவி ஏறினேன். அதன் மேலேயிருந்து மறுபடியும் மாடிக்கு ‘ஜம்ப்’ பண்ணி, அங்கே இருந்த ஆட்களோடு மறுபடியும் சண்டை போட்டுட்டு, மறுபடியும் குதிரை மேலே குதிச்சேன், அவ்வளவு தான் எனக்குத் தெரியும்; அதுக்கு மேலே அன்னிக்கு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. நாலைந்து நாட்களுக்கு அப்புறம் கண் விழிச்சிப் பார்த்தப்போ, கால் ஒடிஞ்சி நான் ஆஸ்பத்திரியிலே இருப்பது தான் தெரிஞ்சது!"